பக்கங்கள்

12 பிப்ரவரி 2014

ஜெனீவாவில் அனந்தி எழிலன்!

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் சந்திப்புக்களிலும் கலந்து கொள்ள உள்ளார்.இதேவேளை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள், முதலமைச்சரின் அனுமதி, மாகாண சபைத் தீர்மானம் என்பன யாவும் உறுதியாகி இருந்த போதும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளால் எனது பயணம் குறித்து முன்னதாகவே கருத்து கூறுவதனை நான் தவிர்த்து வந்தேன். ஏறத்தாள நான் போகவில்லை என்ற தொனியிலான கருத்துக்களை கூறிவந்தேன். ஆனால் சில ஊடகங்கள் நான் மகிந்தவுக்கு கூஜாதூக்கப் போகிறேன் என்றுகூட செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். நானும் என்போன்ற பல செயற்பாட்டாளர்களும் எத்தகைய நெருக்குதல்களுக்கு மத்தியில் பணியாற்றுகிறோம் என்பதனை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என அனந்தி சசிதரன் தெரிவித்தார். இதனிடையே ஜெனீவாவிற்கு தான் பயணமாகமாட்டேன் என வடமாகாண வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நோர்வே தூதுவருடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை அவர் தெரிவித்தார்.அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவாக் கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் செல்வவேண்டிய அவசியமுமில்லை நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள் அவர்கள் செல்வார்கள் பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி:குளோபல் செய்திகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.