பக்கங்கள்

17 பிப்ரவரி 2014

காதல் தகராற்றில் மாணவன் வெட்டிக்கொலை!

திருச்சியில், காதல் தகராறில் இலங்கைத் தமிழரான கல்லூரி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். விதுகரன் காதலித்த மாணவியின் தங்கையை அதே கல்லூரியில் படிக்கும் திருச்சி தில்லைநகரை சேர்ந்த அரவிந்த் (20) காதலித்தார். விதுகரனுக்கு இது பிடிக்காததால் அரவிந்தை கண்டித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விதுகரன் வீட்டின் முன்பு அரவிந்த், சிலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த விதுகரனை, அரவிந்த்தும் அவருடன் வந்தவர்களும் அடித்து, உதைத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விதுகரனின் தாய் சிவனேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விதுகரனை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உறையூர் பகுதியை சேர்ந்த தினகரன் (20), ஜான்சன் (20) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தினகரன் போலீசாரிடம் கூறுகையில், காதல் தகராறில் அரவிந்த், கூலிப்படை உதவியுடன் விதுகரனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து, காரில் வைத்து குழுமணி, ஜீயபுரம், முக்கொம்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றினார். பின்னர் ஜீயபுரம் பகுதியில் உள்ள சின்னகருப்பூர் கொடிங்கால் வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு தென்னந்தோப்பில் விதுகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.பின்னர் பிணத்தை அருகில் உள்ள வடிகால் வாய்க்காலில் போட்டு வைக்கோல், தென்னங்கீற்று மட்டைகளை போட்டு மூடி வைத்தனர் என்றார். இதையடுத்து தினகரன், ஜான்சன் ஆகியோரை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விதுகரன் உடலை மறைத்து வைத்த இடத்தை போலீசாரிடம் தினகரன் காட்டினார். பின்னர் விதுகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றி தினகரன், ஜான்சனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்அரவிந்த் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விதுகரனின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் மற்றும் ஜனனி என்ற அக்காவும் உள்ளார். கல்லூரி மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.