பக்கங்கள்

23 பிப்ரவரி 2014

நோ பயர் சோன் தடைக்கு இலங்கை உறவே காரணம்!

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது. இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கலம் மெக்ரே பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கலம் மெக்ரே கூறினார்.'இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, உண்மை நிலவரம் ஒன்றை மக்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைக்கின்ற நடவடிக்கை' என்றும் அவர் தெரிவித்தார். 'இது நிச்சயமாக இந்தியாவுக்கு பிரச்சனைக்குரிய, அசௌகரியத்துக்குரிய நிலைமை தான். நீதி கிடைப்பதற்கு உண்மையை நிலைநாட்டுவது அவசியம். அந்த நீதி தான் அரசியல் தீர்வொன்றையும் அமைதியான சூழலையும் எட்டுவதற்கு அடிப்படை ஆதாரமாக அமையமுடியும். இப்படி இந்தப் படம் மக்களை சென்றடைவதைத் தடுப்பதன் மூலம் இந்தியா தவறிழைக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது' என்றும் கூறினார் இயக்குநர் கலம் மெக்ரே. 'ஆனால், நோ பயர் சோன் படத்தில் வருகின்ற அனேகமான காட்சிகள் மனதை பெருமளவில் பாதிக்கக்கூடியவை என்று இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இன்னொரு காரணத்தையும் கூறியிருக்கிறதே' என்று தமிழோசை அவரிடம் சுட்டிக்காட்டியது.'போர்க்குற்றங்கள் என்பது மனதைப் பாதிக்கக்கூடிய, விரும்பமுடியாத சம்பவங்கள் தான். அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் அப்படியாகத் தான் இருக்கமுடியும். அந்தப் படம் பிரித்தானிய தொலைக்காட்சிகள் காட்டப்படுவது தடுக்கப்படவில்லை. இவை துயரகரமான உண்மைகள். அவற்றுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டியிருக்கிறது' என்று பதிலளித்தார் கெலம் மெக்ரே. மனதைப் பாதிக்கக்கூடிய காட்சிகள் என்பது ஒரு சாக்குபோக்கு காரணமே என்றும் இலங்கையுடனான உறவுகளை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்தியாவிலும் தடை ஏற்படக்கூடும் என்று கருதப்படும் மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் எல்லா மக்களும் இலகுவாக பார்க்கக்கூடிய விதத்தில் இணையத்தில் படம் வெளியிடப்படுவதாகவும் இயக்குநர் மேலும் கூறினார். மலேசியாவில் இந்தப் படத்தைக் காண்பித்தக் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை செல்லக்கூடிய வழக்கொன்றை உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் மெக்ரே தெரிவித்தார்.தமது படம் திரையிடப்படுகின்றமை தடுக்கப்படுகின்ற சம்பவங்களின் பின்னணியில் இலங்கை அரசாங்
கமே உள்ளதாகவும் நோ பயர் சோன் இயக்குநர் தெரிவித்தார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் கலம் மெக்ரே ஈடுபட்டுவருவதாகவும் அவரது படங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பண உதவி அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து கெலம் மெக்ரே தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்தார்.

நன்றி:பி.பி.சி தமிழோசை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.