பக்கங்கள்

04 பிப்ரவரி 2014

இன்று வடக்கில் கறுப்புக் கொடிகள்!

இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் பரவலாக யாழ்.குடாநாட்டினில் கறுப்பு கொடிகள் பொது இடங்களில் அதிகாலை பறக்கவிடப்பட்டிருந்தது.படையினரின் தீவிர கண்காணிப்பினை தாண்டி இக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.குறிப்பாக சனசமூக நிலையங்களிலேயே இத்தகைய கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளதாக உள்ளுர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கி மீது கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் இதனை அறிந்த இராணுவத்தினர் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டதாகவும்; அக்கொடி தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படையினரது எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டதென்பது உறுதியாகியுள்ளது. இன்று குடாநாhட்டின் பிரதான வீதிகள் நகரப்பகுதிகள் அரச திணைக்களங்களென முழத்திற்கொன்றாக குவிக்கப்பட்டுள்ள படையினர் கடந்த கால சுற்றிவளைப்புக்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்பதுடன் மக்களை அச்சத்துடன் வீடுகளினுள்ளும் முடக்கி வைத்துமுள்ளது. ஒரு புறம் ஆயுதம் தாங்கிய படையினரது ரோந்துகள் வீதிச்சோதனைகளென தொடர மறுபுறம் வடமாகாணசபையின் பேரவை மற்றும உள்ளுராட்சி மன்றங்களென கண்களினில் எண்ணெயினை விட்டவாறு படையினர் அலைந்து திரிந்தனர்.படைத்தரப்பின் கெடுபிடிகள் ஒருபுறம் மக்களிற்கு வேடிக்கையாகவும் மறுபுறம் அச்சமூட்டுவதாகவும் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மக்கள் நடமாட்டம் பெரும்பாலும் மட்டுப்பட்டதாகவும் வீதிகள் வெறிச்சோடியதாகவும் பரவலாக காணப்பட்டது.குறிப்பாக இவ்வளவு படையினர் எங்கு பதுங்கியிருந்தரென்ற கேள்வி மக்களிடையே எழுந்துமுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.