பக்கங்கள்

03 மே 2012

மாவை பகிரங்க மன்னிப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடியேற்றியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது புலிகளின்குரல் வானொலியின் செய்திப் பொறுப்பாசிரியர் இறைவன் (தி.தவபாலன்) மற்றும் போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி உட்பட்டவர்களது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட்டவர்கள் சுடர்களை ஏற்றி மாலைகளை அணிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கோபாலரட்ணம், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தில்லைநாதன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரபாகன், உதயன், சுடரொளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.