பக்கங்கள்

10 மே 2012

சிங்கக்கொடி சம்பந்தன்,எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ்!


பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.சிங்கக்கொடி சம்பந்தன் என டக்ளஸ் தேவானந்தாவும் எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருவரையொருவர் விளித்துக்கொண்டதுடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பேச்சை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீண்டநேரம் அமைதியாகவிருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் தமது பேச்சில் அமைச்சர் டக்ளஸை சுட்டிக்காட்டவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் எனது அருமை நண்பர் டக்ளஸ் தேவானந்தா என்று மட்டும் ஒரு தடவை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையை ஆரம்பித்தவுடனேயே “மாவிட்டபுரத்திலுள்ள தனது வீட்டுக்குப்போக முடியவில்லை. அது அதியுயர் பாதுகாப்பு வலயமாகவுள்ளது. நானும் ஒரு அகதிதான்” என்று இங்கு குறிப்பிட்டார். அதுபொய். ஏனெனில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து அப்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அங்கிருந்த தனது வீட்டை மாவை சேனாதிராஜா எப்போதோ விற்று விட்டார் என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாவை சேனாதிராசா அமைச்சர் டக்ளஸுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். மாவை சேனாதிராஜாவுடன் தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து டக்ளஸுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர். இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்களும் கேள்விக்கணைகளும் பறந்தன. சிங்கக்கொடி சம்பந்தன் என்றும் எலும்புத்துண்டு டக்ளஸ் என்றும் கூட வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.
உங்களால் இந்தியாவுக்கு போக முடியுமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டக்ளஸுக்கு சவால் விட்டபோது, தாராளமாக செல்வேன். எனக்கு இந்தியாவில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு மட்டுமேயுள்ளது. கொலைக்குற்றச்சாட்டு இல்லை. உங்களின் தலைவர்கள் பிரபாகரன், உமாமகேஸ்வரன் இந்தியாவில் ஆயுதம் வைத்திருக்க வில்லையா? சுடுபடவில்லையா? நீங்கள் அத்தனைபேரும் ஆயுதம் வைத்திருந்தவர்கள் தானே? என்றார்.
அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏதோ கூற, நீங்கள் மண்டையன் குழுவின் தலைவர்தானே. நீங்கள் அப்போதும் TNA (தமிழ்த் தேசிய இராணுவம்) இப்போதும் TNA (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) என்றார் டக்ளஸ்.இதற்கு சுமந்திரன் எழுந்து நின்று ஏதோ கூற முற்பட்டபோது நீங்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கு வாதாடுபவர்தானே. உங்கள் விளையாட்டுக்கள் எங்களுக்கும் தெரியும் என்றார் டக்ளஸ்.
அப்போது சம்பந்தன் ஏதோ கூற முற்பட்டபோது அமைச்சர் டக்ளஸ் உரத்த குரலில் “அனைவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கோ சிங்கக்கொடி சம்பந்தன் ஐயா ஏதோ கூற முற்படுகின்றார் என்னவென்று கேட்போம் என்று” கூறியபோது சம்பந்தன் சிரித்தவாறு எதுவும் பேசாமல் இருந்தார். அமைச்சர் டக்ளஸ் தொடர்ந்தும் பலதடவைகள் சிங்கக்கொடி சம்பந்தன் என்று அழைத்துக் கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸுக்கும் நீண்ட நேரமாக கடும் தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சபைக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அவர் சபையை கட்டுப்படுத்த பலமுறை முயன்றபோதும் அது முடியவில்லை. இறுதியில் சம்பந்தனிடம் உங்கள் உறுப்பினர்களை தயவு செய்து கட்டுப்படுத்துங்கள் என்று வலியுறுத்திய அவர் அமைச்சர் டக்ளஸையும் உரையை மட்டும் நிகழ்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இருதரப்பும் தர்க்கத்தையே தொடர்ந்தன. மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியபோதும் அவை ஒழுங்குப்பிரச்சினையல்லவென சபைக்கு தலைமை தாங்கியவரால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் அமைச்சர் டக்ளஸ் உரையாற்றாமலே அவரது நேரம் முடிவடைந்தது. அதன் பின்னர் பொன் செல்வராசா பேசிய போதும் டக்ளஸ் அவர்களுடன் தனது தர்க்கத்தை தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் மாவை சேனாதிராஜா, தன்னை அகதியென்று கூறுவது தவறென அமைச்சர் டக்ளஸ் கூறிய போது அரச தரப்பின் தேசிய பட்டியல் எம்.பி.யான அஸ்வர் எந்த அகதி முகாமில் இருந்தவரென கேட்டார். இதற்கு சுமந்திரன் எம்.பி. தம்புள்ளயில் என்று கூறியதையடுத்து அஸ்வர் அமைதியாக இருந்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.