பக்கங்கள்

27 அக்டோபர் 2011

மூளைக்கோளாறு கொண்டோரும்,இனவாதிகளுமே கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கின்றனர்.

உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைக்காண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளை கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மேற்குலக பயணம் தொடர்பில் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கூட்டமைப்பின் எம்பிக்கள் அமெரிக்க அரசின் அழைப்பினை ஏற்று அங்கு சென்றுள்ளார்கள். இதை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதேபோல் அரசாங்கத்தில் இருக்கின்ற இன்னும் சில அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கூட்டமைப்பினர் உள்நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துவிட்டு வெளிநாடு செல்லவில்லை. அரசாங்கத்துடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு நடத்தியுள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளுக்கு எந்தவித பலாபலனும் கிடைத்தாக தெரியவில்லை. அரசியற்தீர்வு ஒருபுறமிருக்க, அன்றாட பிரச்சினைகளில்கூட தீர்வு காணப்படவில்லை. நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் தடுப்புக்காவல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக வடக்கில் தமிழ் சமூதாயத்தின் பல்வேறு தரப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. வடக்கின் குடிப்பரம்பலை மாற்றி, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் நிறுத்தப்படவில்லை. தமிழ் பகுதிகளில் இருக்கக்கூடிய இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன வெளிநாடு சென்று பேசத் தேவையில்லை. உள்நாட்டில் ஆறுமாதத்திலே பேசித்தீர்ப்போம் என வாக்குறுதி அளித்துள்ளார். யுத்தம் முடிந்து தீர்வு தருகின்றோம் என்று சொல்லி இன்று பல ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இன்னும் எத்தனை ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள்தான் இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர்களாகும். எனவே அரசியற்தீர்வை பெற்றுத்தரவேண்டிய கடப்பாடு இந்நாடுகளுக்கு இருக்கின்றது. இதுவும் கூட்டமைப்பினரின் வெளிநாடு பயணத்திற்கு வழியேற்படுத்தியுள்ள அடிப்படை காரணமாகும். இதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.