பக்கங்கள்

19 அக்டோபர் 2011

சர்வதேச மட்டத்தில் புலிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பு என்கிறார் பீரிஸ்!

சர்வதேச மட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக ஐரோப்பிய பொலிஸார் இலங்கைக்கு எச்சரித்திருப்பதாகவும் அண்மைக்காலங்களில் 21 புலி உறுப்பினர்களை பரிஸ் நீதிமன்றம் சிறை வைத்திருப்பதாகவும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஆதலால் ஜனாதிபதிக்கான பாதுகாப்பை இத்தகைய சூழ்நிலைகளில் அரசாங்கத்தினால் தளர்த்த முடியாது என்று தெரிவித்தார்.
2010 ஐ.நா. அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற அரசாங்க தூதுக்குழுவிற்கு ஏற்பட்ட செலவீனம் குறித்து குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைத் தூதுக்குழுவுடன் ஐ.நா.விற்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கான செலவினத் தொகை பற்றியும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பயணத்தில் 30 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 49 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எவ்வாறாயினும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாது என்று பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டிற்கு வெளியே புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது பற்றி ஐரோப்பிய பொலிஸார் இன்று எச்சரித்துள்ளனர். உள்நாட்டில் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிராக அவர்கள் கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். ஆதலால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் குறைப்பது சாத்தியமானதல்ல என்று பீரிஸ் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை தூதுக்குழுவிற்கான செலவீனம் தொடர்பாக மட்டுமே தான் அறிந்து கொள்ள விரும்பியதாக தயாசிறி அமைச்சர் பீரிஸிடம் கூறினார். மாநாட்டுக்குச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கான செலவீனம் குறித்தே கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ தூதுக்குழுவிற்கான பயணத்தின் அங்கமான வழமையான அதிகாரிகளை விட வேறுபட்டதாகவே பாதுகாப்பு அதிகாரிகள் சென்றதாக பீரிஸ் பதிலளித்தார். ஆதலால் மேலதிக செலவீனம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் சரியான தொகையை வெளியிட்டிருக்கவில்லை.
இது இவ்வாறிருக்க பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இராஜிநாமா தொடர்பாக மற்றொரு ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இலங்கைக்கு லியாம் பொக்ஸ் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்புபடுத்தி அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவது குறித்தும் ரவி கருணாநாயக்க அச்சமயம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்தக் கேள்வி முற்றிலும் பொருத்தமற்றது என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.