யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலை கண்டித்து மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு மற்றும் கண்டன கூட்டம் ஆர்ப்பாட்டங்களென இன்று போராட்டங்களில் குதித்தனர்.
இதனால் பல்கலைக்கழக இயல்பு வாழ்க்கை முற்றாக குழம்பிப்போனது. வழமை போல இன்றும் பல்கலைக்கழகத்திற்கென வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலில் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொதுமண்டபத்தினில் ஒன்று கூடினர்.
மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலிற்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டுமென அங்கு உரையாற்றிய பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவ்வாறு மாணவ ஒன்றிய தலைவர்கள்; மீது தாக்குதல்கள் நடப்பதும் அச்சுறுத்தல்கள் விடுப்பதும் எங்களுக்கு பழகிப்போனவொன்று எனத் தெரிவித்த மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் நாம் வீழ்வோமென அவர்கள் நினைத்தால் அது நடக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக யுத்தம் முடிந்து விட்டதாக கூறிக்கொள்ளும் இந்த அரசு இனி எதைக்கண்டு பயப்படுகின்றதென மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழர்கள் எல்லாம் முடிந்து போய்விட்டதென்று முடங்கியிருக்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்கே புரிந்திருக்கிறது. அதனால் தான் எடுத்ததற்கெல்லாம் அவர்கள் பயப்படுகிறார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கண்டன கூட்டத்தினை முடித்துக்கொண்டு மாணவர்கள் பின்னர் வீதிக்கு இறங்கி ஆhப்பாட்டத்தினில் குதித்தனர். அவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு யாழ்.பல்கலைக்கழக உள்ளக வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர். திடீரென எவரும் எதிர்பார்க்காத வகையினில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே வீதிக்கு வந்த அவர்கள் முன்றலில் உள்ள பொது வீதியையும் வழிமறித்து போராட்டங்;களில் ஈடுபட்டனர்.
வீதிக்குக்குறுக்காக ரயர்களை போட்டு எரித்து தடைகளை ஏற்படுத்தினர். இதையடுத்து வன்முறைகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு பெருமளவினில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டனர். எனினும் மாணவர்கள் அமைதியாக மற்றைய நுழைவாயிலூடாக உள்ளே சென்று கொண்டனர்.. இதனால் குழப்பமான நிலைவரம் முடிவுக்கு வந்தது. தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கூடி ஆராயவுள்ளதாக பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.