பக்கங்கள்

31 அக்டோபர் 2011

நவாலியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நவாலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கள் கிழமை பகல் ஒரு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெய்வேந்திரம் பாமினி (வயது 37) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த மானிப்பாய் பொலிஸார் இவர் மனநோயினால் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தும் இவரது மரணம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எழுநூறாவது கோடி குழந்தைகளில் இரண்டு இலங்கையிலும் பிறந்ததாம்!

நேற்று நள்ளிரவு 12 மணியுடன் உலக சனத்தொகை 700 கோடியை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்குப் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என அழைக்கப்படுகிறது.
இந்த 700வது கோடி குழந்தையை உலகிற்கு வரவேற்க உலகம் முழுவதும் உள்ள குழந்தை மகப்பேற்று வைத்தியசாலைகளில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அக்குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. 2100ம் ஆண்டில் உலகின் சனத்தொகை 10 பில்லியனை தாண்டும் என ஐநா அறிவித்துள்ளது.

30 அக்டோபர் 2011

தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போன அமெரிக்கா இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் என்பது வெறும் பம்மாத்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெக்ரிகாவுக்கு மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து பேசுவது, உண்மைகளை வெளிக்கொண்டு வருவது சிறந்தது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், அரசியல் கட்சிகளிடம், சக அமைப்புக்களிடம், ஊடகங்களிடம் பேச வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே ஏதாவது நன்மைகள் விளையக்கூடும். ஏனெனில் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லாஉதவிகளையும் செய்தது அமெரிக்கா என்பதை விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
அமெரிக்க அரசுக்குத் தேவையானது தமிழ் மக்களை பாதுகாப்பதல்ல, அவர்களை நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக்கி, அவர்கள் பொருள் காணி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு தனது மூலதனத்தை விஸ்தரித்து பன்னாட்டு நிறுவனங்களை இங்கு அமைப்பதே. இந்த நிலையில் அமெரிக்க அரசை மட்டும் நம்பியிருப்பதால் த.தே.கூ.யினர் அடையப் போகும் நன்மை ஒன்றும் இல்லை. அமெரிக்க அரசின் மூலமாக மட்டும் சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடாது. தமிழ் மக்களைக் கொன்றொழிக்க உதவிய அமெரிக்க அரசினதும் இலங்கை அரசினதும் உறவுகள் சுகமாகவே இருக்கின்றன. அமெரிக்கா இலங்கை மீது சில நிர்ப்பந்தங்களை விதிப்பதாகக் காட்டுவது வெறும் பம்மாத்து.
சர்வதேச சதிக்கு த.தே. கூட்டமைப்பினர் துணை போகின்றார்கள் என அரசு புலம்கிறது. இவர்களுடைய சதி வெளியே தெரிந்துவிடப் போகின்றதே என்ற அச்சமே இதற்கு காரணம். இலங்கை அரசிடம்தான் சதி இருக்கின்றதே தவிர சர்வதேசத்தில் எங்கும் சதி இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதால் இலங்கை அரசு அஞ்சவில்லை . ஏனையவர்களுடன் பேசி உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமே அரசுக்கு உள்ளது எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.

எனது மகனை கண்டு பிடித்து தராவிடில் தற்கொலை செய்வேன்"யாழில் தாயார் உருக்கம்!

2007ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனை இன்னும் ஒரு மாதத்துக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீட்டுத் தரத் தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று குருநகரைச் சேர்ந்த தாய் நேற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
அதிகாரிகள் முன்பாக இதனை அவர் கூறும்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். நகரில் உள்ள விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாய் ஒருவர் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கடந்த நான்கு வருடங்களாகத் தனது மகனைத் தேடி அலைந்தும் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தும் எந்தப்பதிலும் கிடைக்காத நிலையில் தான் விரக்தி அடைந்திருக்கிறார் என்று அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு எனது மகனை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜனாதிபதி செயலகம், 4ஆம் மாடி, பூஸா தடுப்பு முகாம் என அனைத்து இடங்களுக்கும் அலைந்து விட்டேன் ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அண்மையில் பத்திரிகை ஒன்றில் எனது மகன் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம் பிரசுரமாகி இருந்தது. எனவே எனது மகன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். ஒரு மாத காலத்துக்குள் எனது மகனைக் கண்டுபிடித்துத் தராவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றார் அந்தத் தாயார்.
1996ஆம் ஆண்டு எனது மகனைப் பட்டப்பகலில் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றார்கள். யாழ். நகர் சின்னக்கடையடிச் சந்தியில் இருந்து படையினரே எனது மகனைக் கைது செய்தார்கள். ஆனால் பின்னர் எனது மகனைக் கைது செய்யவில்லை என்று மறுத்துவிட்டார்கள். எனவே எனது மகனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்”’ என்று நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு தாயார் கூறினார்.
வடக்கு கிழக்கில் போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் இலங்கையில் பல ஆயிரக்கணக்கானோர் காணாமற் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. 1998-99காலப் பகுதியில் மட்டும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த சுமார் 800 பேர் காணாமற்போனார்கள் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல இடங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி இன்னமும் தெரியவரவில்லை.
இவர்களில் ஒரு தொகுதியினர் கொலை செய்யப்பட்டு செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர் என்று, கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவக் கோப்ரல் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் செம்மணிப் புதைகுழி எனப் புகழ்பெற்ற இந்த வழக்கில் காணாமற்போனவர்களின் சில உடல்களின் எச்சங்கள் செம்மணி வயல்வெளிகளில் இருந்து மீட்கப்பட்டன. எஞ்சியவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரையில் தெரியவில்லை.
இதன் பின்னர் 2005-2009ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்குகிழக்குப் பகுதிகளில் மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போனார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் இல்லை. இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் தமது கண்முன்னால் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் காணாமறபோயுள்ளனர் என்று, ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிடம் பல நூற்றுக்கணக்கானவர்கள் முறையி ட்டுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டறியும் முயற்சிகள் நடவடிக்கைகள் எவையும் அரசால் இதுவரை மேற் கொள்ளப்படவும் இல்லை.
1999ஆம் ஆண்டு ஐ.நா. மேற்கொண்ட ஆய்வில், காணாமற்போனவர்களின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பது தெரியவந்தது. இலங்கைப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை 12,000 என்று அது பட்டியலிட்டது. காணாமற்போனோர் குறித்துத் தனக்குக் கிடைத்த 20,000 முறைப்பாடுகளில் 11,000 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று 2003இல் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்திருந்தது. அதன் பின்னர் காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இன்னமும் திரட்டப்பட்டு வருகின்றன.

29 அக்டோபர் 2011

படைப்பிரிவை அதிகரிக்கிறது ஸ்ரீலங்கா,

சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவில் உள்ள பற்றாலியன்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும், கடந்தகாலத்தில் ஏற்பட்டது போன்ற சூழல் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்குமே இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
“ பலமானதும் உறுதித்தன்மை கொண்டதுமான புலனாய்வு வலையமைப்பை நாம் கொண்டிருந்தால், உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதில்லை.
எவரிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தாலும், எமது வலைமையப்பு பலமாக இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
புலம்பெயர் சமூகத்தின் சில சக்திகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.
கடந்தகாலத்தில் எதிர்கொண்டது போன்ற சூழலை நாம் விரும்பவில்லை.
இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு றெஜிமென்ட் தளபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியாக பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களை நிறுத்தியுள்ளோம்.
புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களின் ஆட்பலம் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூவர் தூக்கு தொடர்பில் ஜெயலலிதா திடீர் பல்டி!ராமதாஸ் கடும் தாக்கு.

மூவர் தூக்குத் தண்டனை தொடர்பாக ஜெயலலிதா திடீர் பல்டியடித்திருப்பது தமிழார்வலர்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்துசெய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 3 பேரின் தூக்கு தண்டனையும் இரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் "கருத்துகூற விரும்பவில்லை' என்பதே தமிழக அரசின் பதிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால்கூட பரவாயில்லை. பதில்மனுவின் கடைசி பகுதியில், தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அதாவது இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. மூவரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதுஅதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்தது. அவர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். முதலில் தயங்கினாலும் பின்னர் எங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதன்மூலம் மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் தமிழக முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடாது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய முதலமைச்சர், அதில் உறுதியாக இருக்கவேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இதே போன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, 3 உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொண்டாடும். இல்லாவிட்டால் தமிழர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்படும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

28 அக்டோபர் 2011

மகிந்த சிறையில் இருக்க வேண்டியவர்,அவர் திரும்பிபோக அனுமதிக்கக் கூடாது!அவுஸ்ரேலியாவில் தமிழர்கள் போர்க்கொடி.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் கோரியதாக ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவுக்கு அவுஸ்ரேலியாவில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது- ஆனால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற யோகன் தர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் அல்ல- முள்ளுக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர் என்று போராட்டத்தில் அவர் முழக்கமிட்டதாக ஏஏபி குறிப்பிட்டுள்ளது.
தயவுசெய்து அவுஸ்ரேலியா அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் திரும்பிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 79பேரை இழந்துள்ளதாகவும் யோகன் தர்மா கூறியுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்ற அஜந்தி என்ற பெண், சிறிலங்காவில் பெருமெடுப்பில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவை கொமன்வெல்த்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு எமக்குத் தேவை அவுஸ்ரேலியாவின் ஆதரவே, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பேர்த் நகரில் வாழும் 60 இற்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றதாகவும் ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் கலாச்சார சீரழிவிற்கு இடம் கொடுத்த விடுதி மீது இனந்தெரியாத இளைஞர் குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் கொழும்புதுறை வீதியில் இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது குறிப்பிட்ட விடுதியின் உரிமையாளரும் காயமடைந்துள்ளார். இந்த விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டு வந்த நிலையிலேயே திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.கொழும்புத்துறையில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கும் விடுதி ஒன்றில் யாழ். இளைஞர் யுவதிகளின் தேவைகளுக்கும் அறைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த விடுதியின் சுற்று வட்டார மக்கள் தமது எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் விடுதியின் உரிமையாளர் எதனையும் கருத்தில் கொள்ளாத நிலையில் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சிலரே இவர் மீதும் விடுதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்..இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த விடுதி உரிமையாளர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை யாழில் இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதே கதி தான் என எச்சரிக்கை விடுத்துச் சென்றதாக யாழ் செய்திகள் தெரிவித்தன.

27 அக்டோபர் 2011

மூளைக்கோளாறு கொண்டோரும்,இனவாதிகளுமே கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கின்றனர்.

உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைக்காண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளை கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மேற்குலக பயணம் தொடர்பில் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கூட்டமைப்பின் எம்பிக்கள் அமெரிக்க அரசின் அழைப்பினை ஏற்று அங்கு சென்றுள்ளார்கள். இதை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதேபோல் அரசாங்கத்தில் இருக்கின்ற இன்னும் சில அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கூட்டமைப்பினர் உள்நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துவிட்டு வெளிநாடு செல்லவில்லை. அரசாங்கத்துடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு நடத்தியுள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளுக்கு எந்தவித பலாபலனும் கிடைத்தாக தெரியவில்லை. அரசியற்தீர்வு ஒருபுறமிருக்க, அன்றாட பிரச்சினைகளில்கூட தீர்வு காணப்படவில்லை. நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் தடுப்புக்காவல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக வடக்கில் தமிழ் சமூதாயத்தின் பல்வேறு தரப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. வடக்கின் குடிப்பரம்பலை மாற்றி, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் நிறுத்தப்படவில்லை. தமிழ் பகுதிகளில் இருக்கக்கூடிய இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன வெளிநாடு சென்று பேசத் தேவையில்லை. உள்நாட்டில் ஆறுமாதத்திலே பேசித்தீர்ப்போம் என வாக்குறுதி அளித்துள்ளார். யுத்தம் முடிந்து தீர்வு தருகின்றோம் என்று சொல்லி இன்று பல ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இன்னும் எத்தனை ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள்தான் இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர்களாகும். எனவே அரசியற்தீர்வை பெற்றுத்தரவேண்டிய கடப்பாடு இந்நாடுகளுக்கு இருக்கின்றது. இதுவும் கூட்டமைப்பினரின் வெளிநாடு பயணத்திற்கு வழியேற்படுத்தியுள்ள அடிப்படை காரணமாகும். இதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

புங்குடுதீவில் அவலம்!ஊஞ்சால் கயிறு இறுக்கி சிறுவன் பரிதாப மரணம்!

சாறியினால் ஊஞ்சல் கட்டி அதிலிருந்து சுழன்று ஆடிக்கொண்டிருந்த சிறுவன், சாறியினால் கழுத்துப் பகுதி சுற்றப்பட்டு இறுகி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் புங்குடுதீவு 3 ஆம்வட்டாரத்தில் நேற்றுக் காலை 7 மணியளவில் இடம் பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நிர்மலன்(வயது11) என்ற சிறுவனே உயிரிழந்தான் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாகவே அயலவர்களால் ஓட்டோ மூலம் புங் குடுதீவு வைத்தியசாலைக்கு அவன் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு வைத்தியர் இல்லை. அதைத் தொடர்ந்து வேலணை வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பரிசோதனை செய்தபோது ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என்பது தெரியவந்தது.
பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய்மகிழ்மகாதேவா மரண விசாரணை மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இந்தச் சிறுவனுக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர் என்று தெரிய வருகின்றது.

26 அக்டோபர் 2011

அவுஸ்திரேலிய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்தது தமக்குப் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாரபட்சமாக நாம் நடத்தப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தால் அது அனைத்துலக சட்டங்களை மீறியதாகி விடும் என்று அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் மக் கிளெல்லன்ட் கூறியிருப்பது தவறானது என்று முன்னாள் அவுஸ்ரேலிய இராஜதந்திரியான புரூஸ் ஹை ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவுஸ்ரேலிய சட்டம் பற்றியோ அனைத்துலக சட்டம் பற்றியோ அவர் பார்க்கவில்லை. கொமன்வெல்த் மாநாட்டின் சூழ்நிலை கருதி அவர் அரசியல் ரீதியாகவே முடிவெடுத்துள்ளார்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரைக் காப்பாற்ற அவுஸ்ரேலிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அங்கு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தையை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு தயாராக இருந்த குழந்தை மரணம்!

தந்தை யார் என்பதை அறிவதற்காக மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்த 6 மாதக் குழந்தை ஒன்று திடீரென யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதடி அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தையின் தந் தையை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. எனப்படும் மரபணுச் சோதனைக்கான கலங்கள் குழந்தையிடம் இருந்தும் சந்தேக நபரிடம் இருந்தும் நேற்று திங்கட்கிழமை எடுக்கப்பட இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது.
அச்சுவேலியைச் சேர்ந்த 21 வயது திருமணமாகாத இளம் பெண் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
எனினும் அவர் அக்குழந்தையைப் பராமரிப்பதற்கு விரும்பம் தெரிவிக்காததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை கைதடி அரசினர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணியாற்றும் நபர் ஒருவரே இந்தக் குழந்தையின் தந்தை என்று அதன் தாய் கூறுகிறார். ஆனால், குறித்த சிற்றூழியர் அதனை அடியோடு மறுக்கிறார். இதனை அடுத்தே சந்தேகநபர் குழந்தையின் தந்தையா? என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காதலித்து, கர்ப்பமாக்கிய பின்னர் ஏமாற்றிக் கைவிட்டார் என்று சந்தேகநபருக்கு எதிராக நன்னடத்தை அதிகாரிகளின் உதவியுடன் அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திடீரென நோய் வாய்ப்பட்டு எப்படி இறந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குழந்தையின் சடலம் போதனா வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு முன்னர் விசாரணைகளை வைத்திய சாலை சட்ட மருத்துவ அதிகாரி மேற் கொண்டு வருகிறார்.

25 அக்டோபர் 2011

யாழ்,பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!காடையர்களின் அடாவடி தொடர்கிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படைப்புலனாய்வாளர்களது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நேற்று மாலை பரந்தன்-பூநகரிப்பகுதியில் வைத்த தாக்கப்பட்ட மற்றொரு பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளான். பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்தவரான ராஜவரோதயன் கவிராஜன்(27 வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளார். அவர் யாழ.பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் ஆண்டு மாணவராவார். இவருடன் கூடச்சென்றதாக கூறப்படும் மற்றொரு மாணவன் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். பரந்தன்-பூநகரி வீதியூடாக பயணித்த இவர்களது மோட்டார் சைக்கிளை வழி மறித்த ஆயுததாரிகள் சிலரே கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலன் மீதான தாக்கதலை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினில் முன்னின்று செயற்பட்டவர்கள் இலக்கு வைக்கப்படுவதாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.குறிப்பாக அன்றைய ஆர்ப்பாட்டத்தினில் பங்கெடுத்தவர்கள் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு அடையாளங்காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.கூரிய கற்கள் இவரது முகத்தை கிழித்துள்ள நிலையில் முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக இன்று யாழ்.போதாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதே வேளை மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்,பல்கலை துணை வேந்தருக்கும் படைத்தளபதி கத்துரு சிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றமையும்,மாணவர்கள் அச்சமின்றி கல்வியை தொடரலாம் என கத்துரு சிங்க உறுதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

24 அக்டோபர் 2011

லண்டனில் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

லண்டனில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு குரொய்டன் பகுதியில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றிக்கு அவர் சென்றிருந்த வேளை இச் சம்பவம் நடந்துள்ளது. விழா நடந்த மண்டபத்துக்கு வெளியே நின்ற சில ஆபிரிக்க நாட்டவர்கள் கற்களை வீசியதால் வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்ற குறித்த நபரை ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அதிக ரத்தப்பெருக்கால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் கந்தசாமி அகிலகுமார் என்று அறியப்படுகிறது. யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலகுமார் 9மாதக் குழந்தையின் தந்தையாவார்.
29 வயதாகும் அகிலகுமாரை ஏன் அவர்கள் கத்தியால் குத்தினார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை குரொய்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவருபவருமான சோஃபியன் மக்டொனா தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு என்றும் குற்றவாளிகளை பொலிசார் விரைவில் கைதுசெய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இச் சம்பவம் குறித்து தமிழ் மக்களுடன் தான் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் மற்றும் நடந்த இச் சம்பவம் குறித்து மேலும் ஆரயவும் அவர் வரும் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டம் குரொய்டனில் நடைபெறவுள்ளது என்றும் நடைபெறும் இடத்தை தாம் பின்னர் அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொலைசெய்யப்பட்ட அகிலகுமார் ஆத்மசாந்திக்கு எமது இணையமும் வாசகர்களும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.

ரெலோவை கைகளுவுகிறதா கூட்டமைப்பு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயத்தின் போது கூட்டணி கட்சியான ரெலோவை சேர்ந்த எந்தவொரு உறுப்பினருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டணிக்குள் அதிருப்தி நிலை உருவாகி உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செல்வம் அடைக்கலநாதன், விநோதரலிங்கம் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ரெலோ முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றனர்.
அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்கா செல்லும் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அமெரிக்க ராஜாங்கச் செயலளார் ஹிலரி கிளின்ரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை தமது நிகழ்ச்சி நிரலில் உருத்திரகுமாரனை சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சிறைக்கைதி ஒருவர் சாவடைந்துள்ளார்!

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். வாழைச்சேனையைச் சேர்ந்த 34 வயதுடைய கைதியே சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த கைதி சுகவீனமடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கைக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின்னர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த கைதி ஒரு ஆசிரியர் ஆவாரென்பது குறிப்பிடத்தக்கது.

23 அக்டோபர் 2011

அவுஸ்திரேலியாவில் மகிந்தவை சிக்கலுக்குள் உள்ளாக்க திட்டம்"புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள் தள்ளி விடும் நடவடிக்கையில், அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரித்துள்ளன.
விடுதலைப் புலிகளின் கடும் பரப்புரை முயற்சிகள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த அச்சுறுத்தல்கள் இருந்தாலும், பேர்த் மாநாட்டில் பங்கேற்பதில் சிறிலங்கா அதிபர் உறுதியாக இருப்பதாக கொழும்பு வார இதழ் ஒன்று கூறியுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டின் போது எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த உலகத் தமிழர் பேரவை திட்டமிட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும், சிறிலங்கா அதிபரை பேர்த் மாநாட்டில் நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் நோக்கிலேயே ஏபிசி தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியுள்ளதாகவும், சிறிலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றங்களை நேரில் கண்ட சாட்சியாக ஏபிசி தொலைக்காட்சி குறிப்பிடும் கிருஸ்ணமூர்த்தி நவரஞ்சிமீனா அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற சிறிலங்காவில் பிறந்த தமிழராவார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்றும் ஈழநதி என்றே புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
1982இல் வல்வெட்டித்துறையில் பிறந்த இவர் அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு கல்வி கற்றதாகவும், 2004இல் ஆய்வுப் படிப்புக்காக
விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குச் சென்றதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“மூன்றாண்டுகள் கழித்து- 2007இல் இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி ஒருவரான குபேரனைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றவர் என்றும் 2009 மே வரையில் மாலதி படையணியில் இருந்தவர்.
சனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியமளித்த சிறிலங்காவில் பிறந்து பிரித்தானிய குடியுரிமை பெற்றவரான வாணி குமாரும் இவரும் நண்பிகள் என்றும் நம்பப்படுகிறது.
இவர்கள் இருவரும் போரின் இறுதிவரை வன்னியில் தங்கியிருந்தவர்கள் என்று தாம் நம்புவதாகவும்“ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந் ஜுன் மாதம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பப்பட்ட 40 நிமிட ஆவணப்படத்தின் பின்னால் பிரித்தானிய அரசே இருந்தாகவும் அந்த அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்துலக ஊடகங்களும் மனிதஉரிமை அமைப்புகளும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை தமது பரப்புரைகளுக்குப் பயன்படுத்தி வருவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
“தென்னாபிரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் கேணல் ரமேசின் மனைவியுமான வத்சலாதேவி, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவில் வழங்குத் தாக்கல் செய்துள்ளார்.
புலிகளின் இன்னொரு முக்கிய பெண் செயற்பாட்டாளர் சாம்பவி அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் முக்கியமான ஒருவராக செயற்பட்டு வருகிறார். கிறீன் கட்சியுடனான சந்திப்பில் இவரே அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச, பாலித கொகன்ன, அட்மிரல் திசார சமரசிங்க, போன்றோருக்கு எதிராக அவுஸ்ரேலிய ஊடகங்கள் மீனாவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன“ என்றும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
இராசரத்தினம் தயாகரன் என்ற குபேரனின் மனைவியே மீனா என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு இனம்கண்டுள்ளது.
“இவர் 1992இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இம்ரான் பாண்டியன் படைப்பிரிவில் பணியாற்றியுள்ளார்.
மீனாவும், வேறு தெரிவுசெய்யப்பட்ட போராளிகளும் சட்டத்துறை சார்ந்த பயிற்சிக்காக தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
மீனாவின் கணவரான தயாகரன் தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க்கிற்கு 2003 நவம்பரில் புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டு டிசம்பரில் திரும்பியிருந்தார்.
மாலதி படையணியில் பணியாற்றிய மீனா நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவர் என்பதால், காஸ்ரோவின் தலைமையிலான அனைத்துலக பிரிவுடனும் செயற்பட்டு வந்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் வவுனியாவுக்குத் தப்பிச் சென்ற இவர் இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்தார்.
இவரது கணவரான குபேரன் என்ற விடுதலைப் புலிகளின முக்கிய உறுப்பினர் 2009 மே 16ம் நாள் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் இராணுவப் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

பூநகரியில் சடலத்தின் எச்சமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது!

பூநகரி வாடியடி வில்லடிக்குளம் என்ற பகுதியிலிருந்து இராணுச் சிப்பாயொருவருடையது என நம்பப்படும் சடலமொன்றை விவசாயியொருவர் கொடுத்த தகவலினையடுத்து கடந்த வியாழன் பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த விவசாயி 1991ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதே தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்காக பண்படுத்தியபோது இதனுள் மண் அணையொன்று காணபட்டுள்ளது
அதனை துப்புரவு செய்தபோது, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசத்துடன் சடல எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பில் குறித்த விவசாயி கிராமசேவகருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்றுக் காலை சென்ற சட்டவைத்திய அதிகாரி மற்றும், மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், உள்ளிட்டோர் மேலதிக ஆய்வுகளுக்காக சடல எச்சங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
எனினும் இது பூநகரிப் பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட படை சிப்பாயினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்லவராயன்கட்டில் திருடிய படைப்புலனாய்வாளர்கள்!

கிளிநொச்சி, பல்லவராயன்கட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிய குழு வீடொன்றில் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறு பேர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என தெரியப்படுத்தி “உங்கள் வீட்டில் விடுதலைப்புலி அமைப்பில் இருந்தவர்கள் உள்ளனர்.
அவர்களை விசாரிக்க வேண்டும்” எனக் கூறி மிரட்டி விட்டு அந்த வீட்டுப் பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் சங்கிலி மற்றும் இரண்டு கைத் தொலைபேசிகள் என்பவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 அக்டோபர் 2011

கடாபி கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது!

லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கடாபியின் சொந்த இடமான சேர்ட்டில், கிளர்ச்சியாளர்களால் அவர் உயிருடன் பிடிக்கப்பட்ட போதிலும், பின்னர் இரத்தக்கறைகளுடனான அவரது சடலமே ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களின் போது கடாபி கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் பிடிக்கப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவசியமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடாபியின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகள் முரணானவையாக இருப்பதாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முஅம்மர் கடாபியின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக லிபியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடாபியின் மரணம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே அடக்கம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லிபியாவில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த வருட ஆரம்பத்தில் மனித உரிமைகள் பேரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, கடாபியின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் இந்தக் கொலை தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மனித உரிமைகள் பேரவைக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 அக்டோபர் 2011

நயினாதீவை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடற்படையால் கைது!

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைக் கடல் ஊடாக கடல் அட்டைகளைக் கடத்தி வந்த நயினாதீவைச் சேர்ந்த ஜந்து மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான ஜந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த வாரமும் இந்தியாவில் இருந்து கடல் அட்டைகளைக் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட போது 5 இலட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அல்லைப்பிட்டியில் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!

அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரததைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச் சம்பவம் நேற்று விழாயக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருமணமாகி மூன்று மாதங்களேயான இக் குடும்பஸ்தர் குடும்பப்பிரச்சினை காரணமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளம் குடும்பஸ்தர் மண்டைதீவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 அக்டோபர் 2011

படம் பிடித்தவர்கள் படத்தில் சிக்கினார்கள்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தவபாலன் அவர்கள் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடுத்த நாள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. உயர்பட்டப்படிப்பு பீடத்துக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் புகைப்படங்களை எடுத்தனர். பின்னர் அவர்களை இவ்விரு புலனாய்வுப் பிரிவினரும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். இவர்கள் மாணவர்களுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் (அதிர்வு இணையத்திற்கு)கிடைக்கப்பெற்றுள்ளது. புலனாய்வுப் பிரிவால் மட்டும் தானா புகைப்படம் எடுக்க முடியும் எம்மாலும் அவர்களை எடுக்கமுடியும் என்பதுபோல இது அமைந்துள்ளது.
புகைப்படத்தில் காணப்படும் இவ்விருவரும் இராணுவத்திற்காக யாழில் வேலைசெய்பர்கள் ஆவர். இவர்கள் போல பலர் இருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிங்களவராகிய இவ்விருவரும் நன்றாகத் தமிழ் கதைப்பார்கள் என்பதும் நன்கு அறியப்பட்ட விடையமாகும். மக்களுடன் கலந்து வேலைசெய்து அவர்களிடம் இருந்து தகவல்களை அறிந்து இராணுவத்துக்கு கொடுப்பதும் சில அடிதடிகளில் ஈடுபடுவதும் இவர்கள் தலையாய கடமையாகும். இவர்களை யாழ் மக்கள் பார்த்து வைத்திருப்பது நல்லது.

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்து!

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று "சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளை' கோரியுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக கான்பெராவுக்கான இலங்கைத் தூதர் திசாரா சமரசிங்கவை விசாரிக்க ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் தயாராகி வரும் நிலையில் மேற்கண்ட கோரிக்கை எழுந்துள்ளது.
மனித உரிமைகள் விஷயத்தில் காமன்வெல்த்துக்கு ஏதேனும் அக்கறை இருக்குமெனில், அது தன் உறுப்பு நாடுகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் ஜான் டவுட் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இம்மாதம் 28 முதல் 30-ம் தேதிவரை பெர்த்தில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் கூட்டத்திலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
ஐ.நா.வின் நிபுணர் குழு பரிந்துரைகளின்படியோ அல்லது போர்க்குற்ற டிரிப்யூனல் கூறியுள்ளதற்கு ஏற்பவோ இலங்கை தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வரை அந்நாட்டை காமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.
இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும் என்று ஜான் டவுட் கூறினார். காமன்வெல்த் அமைப்பில் இலங்கை உள்பட 54 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதனிடையே, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இரண்டாம்நிலை இலங்கைத் தூதரான ஜகத் டயஸ் மீது வந்துள்ள போர்க்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப் போவதாக சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளவும் மருத்துவமனைகளை பீரங்கிகளால் தகர்க்கவும் உத்தரவிட்டதாக டயஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொழும்புவுக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.

19 அக்டோபர் 2011

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை..ஆட்டம் கண்ட மகிந்த ராஜபக்ஸ!

அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு போயிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
அதில் முக்கியமானவர் வத்சலாதேவி. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ரமேஷின் மனைவி இவர். 'என் கணவரின் கொலைக்குக் காரணமான ராஜபக்சவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான அழைப்பாணையை ராஜபக்ச வாங்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர், 'என் உறவினர்களை சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்ச உத்தரவுப்படி அவரது இராணுவத்தினர் கொன்று குவித்து இருக்கிறார்கள். அதனால், அவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.’ என்று அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அது தொடர்பாக, ராஜபக்சவுக்கு நீதிமன்றம் மூலமாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அதிபர் தரப்பு அழைப்பாணையை வாங்காமல் திருப்பிவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரூஸ் பெயின், நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவு அனுப்பினாலும், அதை ராஜபக்ச அரசு மதிப்பதே கிடையாது. அந்த உத்தரவைப் பெற்றுக்கொள்வதும் கிடையாது.
அதனால், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணிப் பத்திரிகைகள் மற்றும் 'தமிழ்நெற்’ இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் இந்த நீதிமன்ற உத்தரவை வெளியிட உத்தரவிட வேண்டும். அதையே ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பாணையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
விசாரித்த நீதிபதி கோடெல்லி, ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பாணையை இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும், இணையத்தளத்திலும் வெளியிட உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த அறிவிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ராஜபக்ச மீது இது போன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அவருக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும், இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஓர் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.
இனி எல்லா வழக்குகளிலுமே இதையே முன் உதாரணமாகக் காட்டி ராஜபக்சவுக்கு பகிரங்கமாக அழைப்பாணை வெளியிடக் கோரப்போகிறோம். அவற்றுக்கு ராஜபக்ச பதில் சொல்லியே ஆக வேண்டும்!'' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்க நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு, ராஜபக்சவின் பதவிக்கே ஆப்பு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
ஜூனியர் விகடன்

இணையத்திற்கு செய்தி வழங்குபவரை தேடிச்சென்ற சிங்கள புலனாய்வுப்பிரிவு!

இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தகவல்களை வெளியிட்டு வரும் இணையத்தளம் ஒன்றுக்கு செய்திகளை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தி, ஒருவரை கைதுசெய்ய, குற்றப்புலனாய்வு பிரிவினர், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிடியாணையுடன், பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். குறித்த நபர், நேற்று முன்தினம் (17) அதிகாலை பிரான்ஸ் பயணமானதாக அவரது உறவினர்கள், ஆவணங்களுடன் சாட்சியங்களை முன்வைத்துள்ளனர். இதன் பின்னர், அந்த நபர், பிரான்சில் தங்கியுள்ள இடத்தின் விலாசம் மற்றும் ஏனைய தகவல்கள் குறித்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து, பதிவேற்றப்படும் இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்கி வரும் நபர்கள் குறித்து கவனமாக அவதானித்து வருமாறு, பாதுகாப்புச் செயலாளர், விசேட அதிரடிப்படை மற்றும், புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

சர்வதேச மட்டத்தில் புலிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பு என்கிறார் பீரிஸ்!

சர்வதேச மட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக ஐரோப்பிய பொலிஸார் இலங்கைக்கு எச்சரித்திருப்பதாகவும் அண்மைக்காலங்களில் 21 புலி உறுப்பினர்களை பரிஸ் நீதிமன்றம் சிறை வைத்திருப்பதாகவும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஆதலால் ஜனாதிபதிக்கான பாதுகாப்பை இத்தகைய சூழ்நிலைகளில் அரசாங்கத்தினால் தளர்த்த முடியாது என்று தெரிவித்தார்.
2010 ஐ.நா. அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற அரசாங்க தூதுக்குழுவிற்கு ஏற்பட்ட செலவீனம் குறித்து குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைத் தூதுக்குழுவுடன் ஐ.நா.விற்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கான செலவினத் தொகை பற்றியும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பயணத்தில் 30 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 49 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எவ்வாறாயினும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாது என்று பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டிற்கு வெளியே புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது பற்றி ஐரோப்பிய பொலிஸார் இன்று எச்சரித்துள்ளனர். உள்நாட்டில் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிராக அவர்கள் கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். ஆதலால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் குறைப்பது சாத்தியமானதல்ல என்று பீரிஸ் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை தூதுக்குழுவிற்கான செலவீனம் தொடர்பாக மட்டுமே தான் அறிந்து கொள்ள விரும்பியதாக தயாசிறி அமைச்சர் பீரிஸிடம் கூறினார். மாநாட்டுக்குச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கான செலவீனம் குறித்தே கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ தூதுக்குழுவிற்கான பயணத்தின் அங்கமான வழமையான அதிகாரிகளை விட வேறுபட்டதாகவே பாதுகாப்பு அதிகாரிகள் சென்றதாக பீரிஸ் பதிலளித்தார். ஆதலால் மேலதிக செலவீனம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் சரியான தொகையை வெளியிட்டிருக்கவில்லை.
இது இவ்வாறிருக்க பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இராஜிநாமா தொடர்பாக மற்றொரு ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இலங்கைக்கு லியாம் பொக்ஸ் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்புபடுத்தி அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவது குறித்தும் ரவி கருணாநாயக்க அச்சமயம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்தக் கேள்வி முற்றிலும் பொருத்தமற்றது என்று அவர் கூறினார்.

18 அக்டோபர் 2011

கொக்குவிலில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம்!

யாழ். கொக்குவில் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் நாமகள் வீதியைச் சேர்ந்த அரியதாஸ் கிருஷாந்தன் என்ற 14 வயது மாணவனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார். மேற்படி நபர் நேற்று முன்னிரவு தனது அறைக்குச் சென்று நீண்ட நேரமாகிய பின்னர் குடும்பத்தார் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்து.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண காவற்றுறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

போர் மூண்டதற்கான காரணத்தை விளக்கி நோர்வே அறிக்கை!

இலங்கையின் அமைதி முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அரசு, அவற்றை விசேட அறிக்கையாக வெளியிடவுள்ள நிலையில், அதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக நோர்வே அரசுடன் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது.
நோர்வே அரசுடன் நேரடியாக தொடர்புபட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இந்த விடயங்கள் குறித்த ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தது என்றும், அந்த அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோர்வே சென்றுள்ள இலங்கைக் குழு அந்நாட்டு முக்கியஸ்தர்களுடன் பிரஸ்தாப அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அமைதிக்காக நோபல் பரிசு வழங்கும் நோர்வே நாடு உக்கிரமாக போர் நடைபெற்ற நாடுகளில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை என்றும், குறிப்பாக பலஸ்தீனம், இலங்கை போன்ற நாடுகளில் சமாதானத்தை ஏற்படுத்த அந்நாடு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டது என்றும் சர்வதேச விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு அமைதியை ஏற்படுத்த இலங்கையில் யுத்தகாலத்தில் தான் முன்னெடுத்த நடவடிக்கைகயை மீளாய்வுசெய்வதற்கு நோர்வே அரசு தீர்மானித்தது. இதற்கான பணிகளை அரசுடன் நேரடித் தொடர்புடைய தொண்டர் நிறுவனம் ஒன்றிடம் அரசு ஒப்படைத்தது.
இதற்கிணங்க பல்வேறு கோணங்களில் பல மாதகாலமாக ஆய்வுகளை முன்னெடுத்த குறித்த அரசசார்பற்ற நிறுவனம் ஆய்வறிக்கையை அந்நாட்டு அரசிடம் கையளித்துள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை,பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், யுத்தகாலத்தில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துக் காணப்படும் இந்தகாலகட்டத்தில் நோர்வே வெளியிடவுள்ள இந்த அறிக்கையானது மேலும் பல வழிகளில் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழுவும் பல்வேறு தரப்பினர்களிடம் சாட்சிகளைத் தயாரித்து இறுதிகட்ட யுத்தத்தில் நடைபெற்ற அவலங்களை அறிக்கையாக வடிவமைத்தது.
ஐ.நா செயலாளரிடம் கையளிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை அமெரிக்கா,பிரிட்டன் உட்பட மேற்கத்தேய நாடுகள் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைசெய்துள்ள சிபாரிசுகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும்,இறுதிகட்ட யுத்தத்தின்போது அரச படையால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றன.ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை,சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை,சனல்4 விடியோ என்பன இலங்கை அரசுக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் நோர்வே வெளியிடவுள்ள அறிக்கையானது மேலும் பல நெருக்கடிகளை இலங்கை அரசுக்கு கொடுக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு சிக்கல்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை இலங்கை ஆட்சிப் பீடம் முன்னெடுத்துள்ளது. இதன் ஓர் அங்கமாக நோர்வேயில் நடைபெறும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அந்நாட்டு அமைச்சர் ஹெரிக் சொல்ஹெய்முடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது,நோர்வேயின் அறிக்கை உடனடியாக வெளியிடப் படுமாயின் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அமைச்சர் நிமல் விளக்கமளித்துள்ளார்.எவ்வாறாயினும் இது தொடர்பாக எதுவித உறுதிமொழிகளையும் நோர்வே வழங்காதப்படாமையால் திட்டமிட்டப்படி உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

17 அக்டோபர் 2011

நெருங்குகிறது இலக்கு,கலங்குகிறது ஸ்ரீலங்கா!

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார்.
வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும்.
சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவளிக்கக் கோரும் மனுவில் 5000 பேர் கையொப்பமிட்டால், அதுபற்றி பரிசீலிக்கத் தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
5000 பேரின் கையொப்பங்களை இலக்கு வைத்து இதுதொடர்பான மனுவை, ஜிம் மக் டொனால்ட் வெள்ளைமாளிகை இணையத்தளத்தில் கடந்த மாத இறுதியில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தமனுவில் இன்று காலை 8.15 மணி வரை 4877 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இந்தமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இன்னமும் 123 பேரின் கையொப்பங்களே தேவைப்படுகின்றன.
கையொப்பமிடுவதற்கு ஒக்ரோபர் 29ம் நாள் வரை காலஅவகாசம் உள்ள போதும், இரண்டொரு நாட்களில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.
இதனால் அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் வெள்ளை மாளிகையினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.
இதனால் சிறிலங்கா அரசு கவலையடைந்துள்ளது. அத்துடன் இது தமக்குப் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று கொழும்பு கருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைகளுக்குப் பின்னால், போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றி, தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள மருத்துவர் ஒருவரும் இருப்பதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக் கோரும் வெள்ளைமாளிகைக்கான இணையதள மனுவில் ஒப்பமிட இந்த இணைப்பில் அழுத்தவும்.
https://wwws.whitehouse.gov/petitions/%21/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturl

சவேந்திர சில்வா அமெரிக்க நீதிமன்றில் மனு தாக்கல்!

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதி சவேந்திர சில்வா தமது இராஜதந்திர சிறப்புரிமைகளை சுட்டிக்காட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி கேர்ணல்
ரமேஷின் மனைவி, சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க தென்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாதம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து அவருக்கான அழைப்பாணை சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட வீட்டில் சேர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திரி அந்தஸ்தை வழங்கியது.இதனையடுத்து இராஜாங்க திணைக்களத்தின் இராஜதந்திர தன்மைக்கான அறிக்கையையும் இணைத்து சவேந்திர சில்வாவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எதிர்மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்,பல்கலைகழக மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர்!

யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலை கண்டித்து மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு மற்றும் கண்டன கூட்டம் ஆர்ப்பாட்டங்களென இன்று போராட்டங்களில் குதித்தனர்.
இதனால் பல்கலைக்கழக இயல்பு வாழ்க்கை முற்றாக குழம்பிப்போனது. வழமை போல இன்றும் பல்கலைக்கழகத்திற்கென வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலில் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொதுமண்டபத்தினில் ஒன்று கூடினர்.
மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலிற்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டுமென அங்கு உரையாற்றிய பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவ்வாறு மாணவ ஒன்றிய தலைவர்கள்; மீது தாக்குதல்கள் நடப்பதும் அச்சுறுத்தல்கள் விடுப்பதும் எங்களுக்கு பழகிப்போனவொன்று எனத் தெரிவித்த மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் நாம் வீழ்வோமென அவர்கள் நினைத்தால் அது நடக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக யுத்தம் முடிந்து விட்டதாக கூறிக்கொள்ளும் இந்த அரசு இனி எதைக்கண்டு பயப்படுகின்றதென மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழர்கள் எல்லாம் முடிந்து போய்விட்டதென்று முடங்கியிருக்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்கே புரிந்திருக்கிறது. அதனால் தான் எடுத்ததற்கெல்லாம் அவர்கள் பயப்படுகிறார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கண்டன கூட்டத்தினை முடித்துக்கொண்டு மாணவர்கள் பின்னர் வீதிக்கு இறங்கி ஆhப்பாட்டத்தினில் குதித்தனர். அவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு யாழ்.பல்கலைக்கழக உள்ளக வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர். திடீரென எவரும் எதிர்பார்க்காத வகையினில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே வீதிக்கு வந்த அவர்கள் முன்றலில் உள்ள பொது வீதியையும் வழிமறித்து போராட்டங்;களில் ஈடுபட்டனர்.
வீதிக்குக்குறுக்காக ரயர்களை போட்டு எரித்து தடைகளை ஏற்படுத்தினர். இதையடுத்து வன்முறைகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு பெருமளவினில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டனர். எனினும் மாணவர்கள் அமைதியாக மற்றைய நுழைவாயிலூடாக உள்ளே சென்று கொண்டனர்.. இதனால் குழப்பமான நிலைவரம் முடிவுக்கு வந்தது. தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கூடி ஆராயவுள்ளதாக பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

16 அக்டோபர் 2011

நயினாதீவு வேலணை பிரதேசசபை வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா!

நயினாதீவு வேலணை பிரதேச சபை அலுவலக வளாகத்தில் நேற்று இலவச ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இவ் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பிரதம விருந்தினராக சுதேச வைத்திய அமைச்சர் சலிந்த திசாநாயக்கவும் சிறப்பு விருந்தினராக வடமாகான ஆளுநர் ஜி . ஏ . சந்திரசிறியும் கலந்து கொண்டனர்.இக்கட்டடத்திற்கென 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் நயினாதீவு கிராம சேவகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் மீட்கப்பட்டார்!

திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற பெண்ணைக் கடலில் தள்ளி வீழ்த்திவிட்டு 25பவுண் நகைகளை அபகரித்துச் சென்றதாகக் கூறப்படும் நபரும் படகோட்டியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கடற் தொழிலாளர்களின் உதவியுடன் மீட்டு வந்த கடற் படையினர் நெடுந்தீவு பொலிஸாரிடம் நேற்று அதி காலை ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இணுவில் கந்தசாமி கோயிலடியைச் சேர்ந்த திருமணமான சுமார் 30 வயதுடைய பெண்ணும் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஆண் ஒருவரும் நெடுந்தீவு நோக்கிச் சென்றுள்ளனர் இவர்களை நெடுந்தீவைச் சேர்ந்த நபர் ஒருவரே படகில் ஏற்றிச் சென்றுள்ளார்.
கடலில் படகு பயணித்துக் கொண்டிருந்தவேளை குறிப்பிட்ட பெண்ணின் 25 பவுண் நகைகளையும் அபகரித்துக் கொண்டு அவரைக் கடலில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றனர் படகோட்டியும் மற்றைய நபரும், கடலில் நீந்தியபடி குறித்தபெண் நீண்டநேரம் தத்தளித்துள்ளார். இதனைக் கண்ட கடற்தொழிலாளர்கள் கடற்படைக்குத் தகவல் கொடுத்தனர் அதைத் தொடர்ந்து பெண் மீட்கப்பட்டு நெடுந்தீவுப் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
நெடுந்தீவுப் பொலிஸாருக்கு அந்தப் பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் 25 பவுண் நகையை அபகரித்துச் சென்ற நபரும் படகு செலுத்திச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எல்லாம் கலிகாலமப்பா)

ஜே.வி.பியின் அதிகாரம் கிளர்ச்சிக்குழு வசமாகிறது!

ஜே.வி.பியின் அதிகாரத்தில் தற்போது, 90 வீதத்தை தமது அணி கைப்பற்றியுள்ளதாக ஜே.வி.பியின் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோமவன்ஸ அமரசிங்க, ரில்வின் சில்வா, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மத்திய செயற்குழுவின் குறைந்தளவான எண்ணிக்கையினர் கையில் இருக்கும் ஜே.வி.பி அடுத்த சில தினங்களில் முற்றாக எதிரணியினரிடம் சென்று விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 5 கட்டங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தற்போது, அதில் நான்கு கட்டங்கள் பூர்த்தியாகி இருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமவன்ஸ, ரில்வின் சில்வா, அனுரகுமார திஸாநாயக்க, லால்காந்த உள்ளிட்டவர்கள் ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும், தாம் மேற்கொண்ட நான்கு கட்ட நடவடிக்கைகள் மூலம் அந்த பொய்கள் தோற்டிக்கப்பட்டு கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் தமது அணியினர் நன்மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.
கட்சியின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக கிளர்ச்சிக் குழுவினர் 5வது கட்டமாக கொழும்பில் பாரிய மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
உண்மையான இடதுசாரி அரசியல் கொள்கைகளை வேண்டி நிற்கும் ஜே.வி.பியின் உறுப்பினர்களின் பெருபான்மையானவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் எனவும் குறித்த பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

15 அக்டோபர் 2011

தொல்பொருளை சாட்டாக வைத்து சிங்களவர்கள் வாழ்ந்ததாக கூறமுடியாது!

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். அதற்காக முற்றுமுழுதாக அப்படி ஒரு விடயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் எனது சொந்த பிரதேசமான கந்தரோடையிலும் பௌத்த சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த பௌத்தர்கள் நிச்சயமாக சிங்களவர்கள் அல்ல.
சரித்திர ரீதியாகப் பார்க்கின்றபொழுது அவர்கள் தமிழர்கள். அந்தக் காலத்தில் பல தமிழர்கள் பௌத்தர்களாக இருந்திருக்கின்றனர். எனவே சிங்களவர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்று கூறுவதற்கு அதனை சான்றாகக் கொள்ளமுடியாது. இந்த ரீதியில் 400 இடங்களில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று பொய்கூறி உலகை நம்பவைப்பது பாரிய துரோகமாகும். இதன்மூலம் அந்த இடம் தமக்கு சொந்தம் என்றுகூறி இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி எம்மை மேலும் பலவீனமாக்கும் செயற்பாட்டையே இந்த அரசு மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு நிதி உதவி இல்லையென பஷில் தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்திக்கென நிதி எதுவும் வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுவிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன் போது பிரதேச அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாருக்,உங்கள் சபைகளின் அபிவிருத்திக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள். கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படமாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக கூறியிருக்கின்றார்.
இதனை அடுத்து கூட்டத்தில் இருந்த மக்கள், இது எந்த வகையில் நியாயம்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் ஆட்சேபம் வெளியிட்டிருக்கின்றனர். நிலைமை கட்டுக்கடங்காது சென்றதை அடுத்து, நிதிக்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் பின்னர் கூடி ஆராய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாருக் மக்களைச் சமாளித்துச் சென்றதாக நெடுங்கேணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 அக்டோபர் 2011

மண்டைதீவு,காரைநகர்,அராலி உள்ளடங்கலாக இறால் பண்ணைகள்.மக்கள் சந்தேகம்!

யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன.
மண்டைதீவு காரைநகர் மற்றும் அராலி பகுதிகளை உள்ளடக்கி இந்த இறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.கடற்கரைகளை உள்ளடக்கியே இவ்விறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அரச காணிகளென அதிகாரிகள் கூறிவருகின்றனர். அத்துடன் நிலத்தடி நீர் உவர் நீர் ஆகிவருவதை தடுக்கும் நடவடிக்கையாக உருவாக்கப்பட்டு வரும் மண் அணை தடுப்பே இறால் பண்ணைகள் அமையும் இடமெனவும் அவர்கள் மேலும் கூறிவருகின்றனர்.
எனினும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவே இறால் பண்ணைகள் அமைக்கப்படுவதான செய்திகளை உள்ளுர் வாசிகள் நம்புவதற்கு தயாராக இல்லை. இப்பண்ணைகள் தெற்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படலாமென மீனவ அமைப்புக்களும் சந்தேகம் கொண்டுள்ளன. ஏற்கனவே இறால் மற்றும் சங்கு பிடிக்கவென ஆயிரக்கணக்கான தெற்கு சிங்கள மீனவர்கள் வடக்கிற்கு படையெடுத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் இவ்விறால் பண்ணையும் தெற்கு சிங்கள மீனவர்களுக்கான பண்ணைகளாகலாமென உள்ளுர் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐ.நா.செல்கிறது கூட்டமைப்பு!

அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர். குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரி வித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர்.
இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது. தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு இடமளிக்கப்படாததுடன் நியாயம் பெறக் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று கருதும் கூட்டமைப்பு அதற்கு எதிராகவே ஐ.நாவை நாட உள்ளது.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அதற்கு எதிராகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதே ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் பணி.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் சார்பில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கையெழுத்திட்டுள்ளார்.
எனவே அந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு இலங்கை நடக்கவேண்டும். இந்த உடன்படிக்கையானது ஐ.நாவின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வரையறைகளைப் பாதுகாப்பது. இதில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு நாட்டின் குடிமகனோ அல்லது அரசுகளோ உடன்படிக்கையின் சரத்துக்கறை மீறினால் அதற்கு எதிராக முறையிடமுடியும்.
ராவய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் நல்லரத்தினம் சிங்கராஜர் என்ற நபருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும் ஏற்கனவே இந்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிடப்பட்டிருந்தது.
அதனை விசாரித்த குழு உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்புக்கள் தவறானவை என்று அறிவித்ததுடன் 3 மாதகாலத்துக்குள் அந்த வழக்குகளை விசாரித்து உடனடியாக சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் முடிவை இலங்கை செயற்படுத்தவில்லை. அதனைச் செயற்படுத்தாதமை குறித்து ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, குறித்த சர்வதேச உடன்படிக்கையில் தனிநபரான சந்திரிகா குமாரதுங்க கையெழுத்திட்டமை இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார். அவர் கையெழுத்திட்டதை ஏற்றுக்கொண்டு அந்த உடன்படிக்கையை இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே அது நாட்டுக்குள் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தமது மனு மீதான தீர்ப்பை எதிர்த்து ஐ.நா. மனித உரிமைகள் குழுவிடம் தமிழ்க் கூட்டமைப்பு முறையிட உள்ளது.

13 அக்டோபர் 2011

காணொளி காட்டப்போய் மூக்குடைபட்ட சிங்களம்!

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது.
இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது.
நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கே சென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர்.
இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.
இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதுரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர்.
அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பிக்களில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதிலும் அந்த 4 எம்.பிக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சாதுரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.
அவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது? என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.
அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார்.
தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள்.
அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.
இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர்.
அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பிக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர்.
4 எம்பிகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும்.
150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.

மிருகங்களை பலியெடுக்கும் நிகழ்வு தடுக்கப்பட்டது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் வருடா வருடம் நடைபெற்றுவந்த பலி பூசை எனப்படும் மிருகங்களை உயிர்ப்பலியிடும் நிகழ்வினை இம்முறை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்துக் கோயில்களில் மிருகங்களை உயிர்ப்பலியிடும் சம்பவங்களை கடுமையாக எதிர்த்து வரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலும் விவாதித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே முன்னேஸ்வரம் போன்ற பல ஆலயங்களில் உயிர்பலியிடுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உயிர்ப்பலியிடும் நிகழ்வுகளை தடுத்துவரும் யோகேஸ்வரன் அவர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக இம்முறை அவரது தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தில் மிருகங்களை உயிர்ப்பலியிடும் நிகழ்வைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதேநேரம் புதன்கிழமை இவ்வாலயத்தின் சடங்கு உற்சவத்தை திரு.சீ.யோகேஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கி நடத்தியதுடன் அன்றைய தினம் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகளில். பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், அன்றைய தினம் நடைபெற்ற யாகபூசை நிகழ்வில் பல இந்துக் குருமார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

12 அக்டோபர் 2011

சென்னை விமான நிலையத்திலிருந்து இம்மானுவல் அடிகளார் நாடு கடத்தப்பட்டார்!

உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே. இம்மானுவல் அடிகளார் சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) திருப்பி அனுப்பப்பட்டார்.உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்னைப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய ஆயர் பேரவை மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்களில் பேருரைகளும், நேர்காணலும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை அடிகளார் சென்னை விமான நிலையத்தில் சென்றடைந்த போது ஒலி பெருக்கிகள் மூலம் அவர் பெயர் அழைக்கப்பட்டு, குடிவரவு அதிகாரிகளால் விசாரிக்ப்பட்டுள்ளார்.
அடிகளார் தனது செயற்பாடுகள் அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன என்றும், மேலும் தனது பணிகளனைத்தும் மனித உரிமையையும் மனிதனின் முழுமையான விடுதலையையும் ஒட்டியதாகவே உள்ளதெனவும் எடுத்துரைத்த போதிலும் காரணம் எதுவும் கூறமுடியாத நிலையில் இது மேலிடத்து உத்தரவு எனக்கூறி, குடிவரவு அதிகாரிகள் ஒரிரு மணித்தியாலங்களில் நாட்டை விட்டு வெளியேறும்படி பணித்துள்ளார்கள்.
உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்ற ஆண்டும் இந்தியா சென்று பல்வேறு தரப்பட்ட நிலையில் உள்ளவர்களுடன் உரையாடல்களையும் நடத்தியுள்ளார்.
இந்தியாவின் திடீர் மாற்றம் ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில் இரட்டை வேடம் கொண்டுள்ளதா அல்லது சிறிலங்கா அரசை திருப்திப்படுத்த முனைகின்றதா என அரசியல் ஆய்வாளர்கள் அலசுகின்றனர்.

பிரித்தானியாவில் தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளுக்கு குறி வைக்கும் கும்பல்!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம்.
ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்கள். இவர்களையே தற்போது ஒரு கும்பல் குறிவைத்துள்ளது என நம்பப்படுகிறது.
தனியா வரும் தமிழ் பெண்களை இவர்கள் மிரட்டியும் மற்றும் அடித்தும் தாலிக்கொடியை அறுத்துச் செல்கிறார்கள். தமிழ்பெண்கள் வழமையாக அணியும் தாலிக்கொடியின் ஆகக்குறைந்த மதிப்பு சுமார் 3000 பவுன்சுகள் இருக்கும்.
எனவே திருடங்களுக்கும் இது போன்று திட்டமிட்டு செயல்படும் குழுக்களுக்கும் பெரும் பணம் கிடைக்கிறது. சமீபத்தில் வால்த்தம்ஸ்ரோ பகுதியில் குழந்தை ஒன்றை தள்ளுவண்டியில் தள்ளிவந்த தாய் ஒருவரை இக் கும்பல் குறிவைத்துள்ளது. திட்டமிட்ட ரீதியில் குழந்தையின் நகைகளை திருட முனைய அதனைத் தடுக்கும் நோக்கில் அவர் குனிந்தவேளை பின் புறத்தில் நின்றவர் தாயின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துள்ளார். இதன்போது ஏற்பட்ட போராட்டத்தில் அத் தமிழ் பெண் மீது இக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. ஈவிரக்கமற்ற வகையில் மூக்கு மற்றும் கண்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் சிந்த அப்பெண் நிலத்தில் வீழ்ந்திருக்கிறார்.
இதே போல மற்றுமொரு சம்பவம் என்பீல்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஆபிரிக்க நாட்டவர்கள் சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

11 அக்டோபர் 2011

புலிகளின் ஆட்சியில் பாலியல் வன்முறைகள் இடம்பெறவில்லை!

முல்லைத்தீவில் நான் அரச அதிபராக இருந்த போது அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக என்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரச மருத்துவமனை, பிரபல பெண்கள் விடுதி, கிராம அலுவலர் என பல நிறுவனங்களிலிருந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

10 அக்டோபர் 2011

காரைநகர் பாலாவோடையில் படைச்சிப்பாயின் சடலம் மீட்பு!

காரைநகர் பாலாவோடையில் இராணுவச் சிப்பாயின் சடலம் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
காரைநகர் பாலாவோடைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமிலிருந்தே இந்தச் சடலத்தை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிப்பாய் வெள்ளவாயப் பகுதியைச் சேர்ந்த எல்.புஸ்பகுமார (வயது-30) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் இருந்து அனலைதீவு சென்ற படகு கடலில் மூழ்கியது!

ஊர்காவற்றுறையிலிருந்து அனலைதீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகொன்று நடுக்கடலில் மூழ்கியபோதிலும், அப்படகில் பயணித்த 36 பொதுமக்களும் கடற்படையினரின் உதவியால் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் இடம்பெற்றது.
‘லோ லட்சுமி 2′ என்ற படகே நடுக்கடலில் மூழ்கியது. கடற்படையினரின் உதவி வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அனலைதீவுக்கு குறித்த படகு சென்றுகொண்டிருந்தபோதே பாறையொன்றில் மோதி மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலில் பொதுமக்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதை அவதானித்த கடற்படையினர், அதிவேகப் படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை காப்பாற்றினர்.
பொதுமக்களை கரைக்கு மீட்டு வந்து அவர்களுக்கு முதலுதவி வழங்கிய கடற்படையினர், குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் வீடுகளுக்கு பொதுமக்களை அனுப்பிவைத்தனர்.