பக்கங்கள்

09 ஜூன் 2011

அரசுக்கும்,படைகளுக்கும் புகழாரம் சூட்டிய இமெல்டா.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை அடிக்கடி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வருகைதந்து பார்வையிடுகின்றார். இதேவேளை குடாநாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் படைத்தரப்பு தொடர்ந்து தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. படையினர் நேரடியாக மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் வீடு கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்து வருவதாக மீண்டும் அரச விசுவாசத்தைக் காட்டியுள்ளார் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார்.
குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய நாட்டினது மேல் சபையின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று சென்றிருந்தது. உச்சகட்ட பாதுகாப்புடன் விமானப்படை ஹெலிகொப்ரர் மூலம் யாழ் நகரப்பகுதிக்கு சென்றிருந்தனர். இந்தக் குழு குடாநாட்டில் புதிய தொழில் முயற்சியில் அவுஸ்திரேலியாவின் முதலீடு தொடர்பாக ஆராய்ந்திருந்தது. மின்சார விநியோகம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தக்குழு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முற்பட்டது. குறிப்பாக காணிகளை அடையாளங்காணல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தக்குழு ஆர்வம் காட்டியபோதும் அரச அதிபர் இதற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை.
மாறாக இலங்கை அரசின் புகழ்பாடும் ஒரு நடவடிக்கையாக
அவர்களுக்கு தனது பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டிருந்தார். ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் உரையொன்றை ஆற்றியிருந்த இமெல்டா சுகுமாருக்கு எதிராக யாழ் குடாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இதனால் மனக்கவலை அடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர் உள்ளுர்
ஊடகங்களுக்கு தனது மறுப்பை வெளியிட்டிருந்தார்.
அரசியல் நோக்கம் கருதியே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தமது சுயநல அரசியலுக்கு தன்னைப் பகடைக்காயாக்குவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அரச அதிபர் அரச முகவர் என்றும் அவர்கள் அரசின் உந்துகோலாக இருக்கக்கூடாது எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும் நேற்றையதினம் மீண்டும் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியப் பிரதிநிதிகளிடம் அரச அதிபர் தனது அரச விசுவாசத்தையும்
படைத்தரப்பின் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.