பக்கங்கள்

08 ஜூன் 2011

தீயில் எரிந்த இலங்கை தொழிலதிபர் குடும்பம்,மூவர் பலி!

சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரனும் (வயது 55) அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சென்னை, சேத்துப்பட்டு ஸ்பர்டேங்க் வீதியில் உள்ள லாமக் அவென்யூவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரன் (வயது 55) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியேறியுள்ளார்.
இந்த அடுக்குமாடி வீட்டில் தொழிலதிபரின் 50 வயது மனைவியான ஜெயா மற்றும் 3 மகள்மார்கள் இருந்துள்ளனர். இலங்கை தமிழர்களான இவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ளனர். சம்பவ தினமான நேற்றிரவு தொழிலதிபர் ஞானச்சந்திரன் வீட்டில் இருந்து பயங்கர புகை கிளம்பியதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தபோதும் தொழிலதிபரின் மனைவியையும், இரு மகள்களையும் தீயில் எரிந்த நிலையில் சடலமாகவே மீட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேத்துப்பட்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.