பக்கங்கள்

01 ஜூன் 2011

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்பேன்.

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பியை நேற்று (31-05-2011) பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன.
தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய போல் மேர்பி, தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் மக்களின் விடயத்தை வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பு பற்றி கருத்துரைத்த பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் சண் சுதா, தமிழ் மக்கள் மீது மனித குல சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க எந்தெந்த வழிகளைப் பயன்படுத்த முடியுமோ அவற்றைப் பயன்படுத்துவோம் எனவும், நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியாகவும், சுமுகமாகவும் இடம்பெற்றிருந்தது எனத் தெரிவித்தார்.
இன்று (01-06-2011) பிரசல்சில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பற்றிய கருத்தரங்கில் போல் மேர்பி பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ள இருக்கின்றார். ஐரோப்பிய ஒருங்கிணைந்த இடதுசாரிகள் மற்றும் நோர்டிக் பச்சைக்கட்சி இடதுசாரிகள் அமைப்பு ஆகியன இணைந்து இன்றைய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கை, இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து பலர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களிற்காகக் குரல்கொடுத்துவரும் கூட்டிணைந்த தமிழ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.