பக்கங்கள்

01 ஜூன் 2011

தமிழீழப் போராளிகள் தப்பிச்செல்லாமல் கருணா குழு காவல் காத்ததாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது என இலங்கையின் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய இராணுவ அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் சாகி கலகே. அத்துடன் வன்னிப் போரில் சிறப்புப் படையணியை வழி நடத்திச் சென்றவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சர்வதேச செயலமர்வின் இரண்டாம் நாள் இன்று. மேஜர் ஜெனரல் கலகே இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது இந்திய இராணுவ உயரதிகாரிகள் குழுவால் போரில் கருணா குழுவின் பங்களிப்பு தொடர்பாக கேட்கப்பட்டது. இக்கேள்விக்குப் பதில் அளித்தபோதே கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது, ஆனால் இக்குழுவினர் மோதலில் நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை, வேறு விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர் என்றார்.
இவர் தொடர்ந்து கூறுகையில் கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டனர். இம்மாவட்டத்தை விட்டு புலிகள் தப்பிச் சென்று விடாமல் பார்த்தனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.