பக்கங்கள்

30 ஜூன் 2011

தமிழக மீனவர்களை விரட்டியடித்தது சிங்கள கடற்படை.

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த 3,500 ‌த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்களை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீ‌ண்டு‌ம் அடி‌த்து ‌விர‌ட்டியு‌ள்ள சம்பவம் ‌மீனவ‌ர்க‌ள் இடையே பெரு‌ம் வேதனையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,
த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து 700 படகுக‌ளி‌ல் 3500 ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு ‌மீ‌ன்ப‌ிடி‌க்க செ‌ன்‌றிரு‌ந்தன‌ர். இ‌ன்று காலை க‌‌ச்ச‌த்‌தீவு பகு‌தி‌யி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது அ‌ங்கு 2 பட‌குக‌ளி‌ல் இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் வ‌ந்தன‌ர்.
அவ‌ர்க‌ள் த‌மிழக ‌மீனவ‌ர்களை எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து அவ‌ர்களை ‌விர‌ட்டி அடி‌த்தன‌ர். உ‌யி‌ர் ‌பிழை‌த்தா‌ல் போது‌ம் எ‌ன்ற பய‌த்த‌ி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் கரை ‌திரு‌ம்‌பின‌ர்.
இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ரி‌ன் இ‌ந்த செயலா‌ல் வெறு‌ங்கையுட‌ன் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் கரை‌க்கு வ‌ந்தன‌ர். ஒரே வார‌த்‌தி‌ல் 3வது முறையாக த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌‌த்த‌க்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸ புரிந்த தமிழ் படுகொலைகள்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான நூலில் வடபகுதியின் சில பிரதேச செயலர் பிரிவுகளின் பெயர்கள் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளன.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2010 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையும் தொலைநோக்கும் என்ற அபிவிருத்தியின் முன்னோடி நூலில் காணப்படும் வரைபடங்களிலேயே இந்த படுபாதகத் தமிழ்க் கொலைகள் இடம் பெற்றுள்ளன.
இதோ அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் விவரம் வருமாறு: சங்கநாய் (சங்கானை), சந்திரிப்பாய் (சண்டிலிப்பாய்), கந்தாவல (கண்டா வளை), பச்சில (பச்சிலைப்பள்ளி), நந்தான (நானாட் டான்), மாது (மடு).

29 ஜூன் 2011

மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று அடையாள அணிவகுப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் கடந்த திங்கள் கிழமை 17 வயது டைய இரு பாடசாலை மாணவிகள் வீதியில் வைத்துகடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுஇது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவரை கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான மாணவிகள் இருவரும் அடையாளம் காட்டினர்.
குறித்த மாணவியும் மற்றப் பெண்ணும் மட்டக்களப்பு நகருக்கு சென்று காத்தான்குடிக்கு திரும்பிய வேளை வீதியில் வைத்து ஆட்டோ ஒன்றில் சிலரால் 17 ம் திகதி கடத்தப்பட்டு வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே பள்ளிவாசல்கள் சம்மேளனத்திடம் அந் நபர்களினால் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும் இந்த சம்பவத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பார்க்கக் கூடாத படங்களை இவ் இருவரும் இணையத்தளங்களில் பார்வையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே அந் நபர்களினால் மாணவிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைதான பெண் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வரை விளக்கமறியலில் அடையாள அணிவகுப்பிற்காக வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பலவந்தமாக ஆட்டோவில் கடத்தி வீடொன்றில் தடுத்து வைத்து கைகளாலும் தும்புத்தடியினாலும் தடிகளினாலும் தாக்கி காயம் விளைவித்ததாகவும், அவமானப் படுத்தியதாகவும் குற்றவியல் கோவைச் சட்டத்தின் கீழ சந்தேக நபருக்கு எதிரான மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் குறித்த இருவராலும் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து ரூபா ஒரு லட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அப்துல்லா எதிர்வரும் 8 ம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்னின் கணவன் உட்பட மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 ஜூன் 2011

புத்தூரில் இளைஞன் மரணம்!சீ.ஐ.டியினர் மீது சந்தேகம்.

புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று உடற் கூற்றுப் பரிசோதனையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை.
எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இருந்தார் என்று சி.பாலச்சந்திரன் தெரிவித்தார்.மயிலிட்டியைச் சேர்ந்த இவரும் மகனான சற்குணநாதன் (வயது30) என்பவரும் இடம் பெயர்ந்து அச்சுவேலி தோப்புக் காட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, புத்தூர் கிழக்கு, எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் கால்கள் நிலத்தில் முட்ட, கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் சற்குணநாதன் சடலமாக மீட்கப்பட்டார்.இறந்த இளைஞனின் உடற் கூற்று மருத்துவப் பரிசோதனை நேற்று நடந்தது. பிரஸ்தாப இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியங்களே அதிகம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்த சி.பாலச்சந்திரன் தனது மகன் கொலை செய்யப்பட்டிருப்பார் என்றே தான் சந்தேகிக்கிறார் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
எனது மகன் கடந்த நான்கு வருடங்களாக கொழும்பில் தொழில் செய்து வந்தார். இந்த வருடம் ஜனவரியில் இருந்து யாழ்ப்பாணத்தில் என்னுடன்தான் வேலையில்லாமல் தங்கியிருந்தார்.கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் முஸ்லிம் பெண் ஒருவரைக் காதலித்திருந்தார். ஆனால் யாழ்ப்பாணம் வந்த பின்னர் அவருக்கு வேறு பெண்ணை நான் பதிவுத் திருமணம் செய்து வைத்தேன்.
இதன் பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் குறித்த பெண்ணின் உறவினரான அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. எனது மகனையும் மருமகளையும் கொன்று விடுவேன் என்று சி.ஐ.டி. ஆள் மிரட்டினார்.
இந்த மிரட்டல்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாரிடம் முறையிடச் சென்றபோது, அவர்கள் எனது முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டார்கள். இந்த மிரட்டல்களால் எனது மகனைப் பதிவுத் திருமணத் செய்திருந்த பெண்ணும் விவாகரத்துப் பெற்று விட்டார்.கொழும்பில் இருந்த போது எனது மகன் அந்த முஸ்லிம் பெண்ணுடன் இணைந்து (Joint Account) வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் மகனைக் கொழும்புக்கு அழைத்த குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காகக் கையொப்பம் வாங்கினர்.
அந்தக் கணக்கிலிருந்த எனது மகனின் பங்குப் பணத்தை தருவதாகத் தவணை சொல்லி வந்தனர். கடைசியாகக் கடந்த மே, 31 ஆம் திகதி எனது மகன் கொழும்பு சென்று வந்தார். அப்போது அவர்கள், பணம் பெற இந்த மாதம் 13ஆம் திகதி வருமாறு சொல்லியிருந்தார்கள். ஆனால் அவனைப் போகவேண்டாம் என்று நான் தடுத்து விட்டேன்.சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னர் எனது மகன் தன்னுடைய சிங்கள நண்பர்கள் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்து நிலாவரை இராணுவ முகாம் பகுதியில் நிற்கின்றனர் என்று கூறிவிட்டு சென்றார். இரவு 9.30 மணிவரை அவர் வீடு திரும்பவில்லை. கைத்தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தபோது அது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்தின் பின்னர் மகன் வீடு வந்து சேர்ந்தான். தாமதம் குறித்துக் கேட்டபோது யாழ்.நகரில் உள்ள இராணுவ முகாமுக்குத் தன்னை அழைத்துச் சென்றிருந்தனர் என்று சொன்னார். இதன் பின்னர் மூன்று நாள்களாக மனச்சோர்வுடன் காணப்பட்டார்.
இவ்வாறானதொரு நிலையிலையே, கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கின்றார். அவர் வீட்டை விட்டு புறப்படும்போது நான் இல்லை. மறுநாள் காலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடக்கிறார் என்று அயலவர்கள் வந்து சொன்னார்கள். தற்கொலை செய்வதானால் வீட்டி லேயே செய்திருக்க முடியும். இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்து தற்கொலை செய்யத் தேவையில்லை என்றார் பாலச்சந்திரன்.
இதேவேளை, புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன் தினம் மீட்கப்பட்ட சடலம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது என சடலத்தை பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த சடலத்தை கழுத்து நெரித்துக் கொலை செய்ததுடன் கையிலும் கால்களிலும் உரசல் காயங்கள் காணப்படுவதாகவும் உடலில் இரத்தக் கசிவு காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கால் தரையில் ஊன்றிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாகவும், கயிறு இறுக்கி தற்கொலை செய்யப்படவில்லையெனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஜூன் 2011

ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதான திருட்டுப் பெண்கள்.

4 பெண்கள் கொண்ட கொள்ளைக் கோஷ்டி ஒன்று காரைநகர் சிவன் கோவிலில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சாதாரண பெண்களைப் போன்று வேடமணிந்து கோவிலுக்கு வந்திருந்த பெண்களிடம் இருந்து 18 தங்கச் சங்கிலிகளை அபகரித்திருக்கிறார்கள். புத்தளம் பிரதேச வாசிகளான இந்த 4 பெண்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண் கொள்ளைக் கோஷ்டி வடக்கில் மாத்திரமன்றி கிழக்கின் இந்து மற்றும் பெளத்த விகாரைகளுக்கும் சென்று பக்தர்கள் குழுமியிருக்கும் இடங்களில் நடமாடி பெண்களின் தங்கச் சங்கிலிகளை தந்திரமாக அபகரிக்கும் கொள்ளைத் தொழிலை புரிந்து வந்ததாக பொலிசார் கூறினார்கள்.
சாதாரண பெண்களைப் போன்று ஆலயங்கள் மற்றும் விகாரைகளுக்குள் நுழையும் இவர்கள் ஒரு சிறிய கத்தரிக்கோலை பயன்படுத்தி பெண்களின் கழுத்திலுள்ள தங்கச் சங்கிலிகளை வெட்டி களவாடுகிறார்கள். இவர்கள் கொள்ளையிட்ட 18 தங்கச் சங்கிலிகளின் நிறை 50 தங்க சவரின்களாகுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்ற மற்றைய இரு பெண்களையும் பொலிசார் நாடெங்கிலும் தேடி வலைவிரித்துள்ளார்கள். ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி கயான் பிரசன்னவும், குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சில்வாவும் இது சம்பந்தமான விசாரணைகளை இப்போது மேற்கொண்டு வருகிறார்கள்.

அளவெட்டிச்சம்பவம் விஷேட குழு எதுவும் இல்லையென்கிறது பொலிஸ்.

அளவெட்டியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்று நேற்றுடன் பத்துநாள்கள் கடந்துள்ள நிலையிலும் எவரும் கைதாக வில்லை. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது என குடாநாட்டுப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார். இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேட்டபோது, கொழும்பிலிருந்து எந்தவொரு பொலிஸ் குழுவும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாழ். செல்லவில்லை என்றார். அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்துக்கு சீருடையில் வந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 ஜூன் 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அரசுக்கு நம்பிக்கையில்லையாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் நடத்திவரும் பேச்சுக்களின் மூலம், தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று அரசதரப்பு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
"அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட 7 சுற்றுப் பேச்சுக்களின் பின்னரும் அதிகாரப் பகிர்வு குறித்து இணக்கம் இது வரை எட்டப்படவில்லை. எதிர்காலத்திலும் எட்டப்படும் என்ற நம்பிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது" என்று அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
"எனவே மாற்றீடாக மாகாண சபைத் தேர்தலை நடத்தித் தமிழ் மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது என்று அரசு ஆலோசித்து வருகின்றது'' எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக 5 விடயங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
* இடம்பெயர்ந்த மக்களை முழு அளவில் மீளக் குடியமர்த்தல்.
* பொது மன்னிப்பு வழங்கி, புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் அனைவரையும் விடுதலை செய்தல்.
* கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தல்.
*மீளக்குடியமர்த்த முடியாத நிலையில் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
* 2010ஆம் ஆண்டுக்கான தேர்தல் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
ஆகிய விடயங்களையே உடனடியாகச் செயற்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.வடமாகாணத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக இவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று அரச வட்டாரம் தெரிவித்தது.தனியார் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சித்த போது நாடு முழுவதும் அதற்கு உறுதியான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை அறிவிப்பதற்கு அரசு தயங்குகிறது என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுப்பதாக சுஷ்மா உறுதி.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரும் பிஜேபியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது.பின்னர் சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக வெற்றிபெற்றதற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்தது.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது பற்றி பேசினோம்.இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகவும், தமிழக மீனவர் பிரச்னைக்காகவும் நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் நகலை அனுப்புமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டேன். இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
அதேவேளை இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்ற மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் இடம்பெயர் மக்கள் குறித்து பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம் செய்திருந்த போது இடம் பெயர் மக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த சந்திப்பின் போது ராஜபக்ஸ இடம்பெயர் மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதாக உறுதிமொழி வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

25 ஜூன் 2011

அமெரிக்காவில் நடைபெறும் தலைமைத்துவ மாநாட்டிற்கு செல்லும் தமிழ் மாணவிகள்.

உலகின் 30 நாடு களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
2012 செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு' ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. வழமையாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.
அடுத்த தலைமுறையினருக்கு மிக அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பினைப் பெற்ற 33 பேரில் ராகா ரகுநாதன், லக்ஷ்மி சரவணபவன் ஆகிய இரண்டு தமிழ் மாணவர் தலைவர்களும் அடங்குவர்.
நிஷாத் கரீம், அஹில் ரிபாய், ஷிம்மர் மில்பர், ஷெரீன் அக்பர் அலி, மான்ஷா அப் துல்லா, அஹ்லா மிஸ்வர் ஆகிய முஸ்லிம் மாணவத் தலைவர்கள் மற்றும் 24 சிங்கள மாணவத் தலைவர்களும் அடங்குகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 550 இலங்கையைச் சேர்ந்த 16-19 வயதுக்குட்பட்ட மாணவத் தலைவர்களுக்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது.
இவர்களில் 470 பேர்வரையில் யேல், ஹவார்ட், ஸ்ரான் போர்ட், ஒக்ஸ்போட் உள் ளிட்ட பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. 1956 இல் ஸ்தாபிக் கப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் நிதியத்தின் ஏற்பாட்டில் "மக்களிடமிருந்து மக்களுக்கான தலைவர்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடபகுதியிலிருந்து பெண்களை எவருடனும் தனியே அனுப்ப வேண்டாம்.

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் வடபகுதியிலிருந்து யுவதிகளை கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே எக்காரணம் கொண்டும் தொழில் மற்றும் ஏனைய உறுதி மொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வட பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட யுவதிகள் சிலர் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையிலேயே அதன் தலைவி இந்த கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். இவ்வாறு தொழில் பெற்றுத்தருவதாகவும் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளதால் இந்த விடயத்தில் பெற்றோரும் பெரியோரும் கவனமாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

24 ஜூன் 2011

ஸ்ரீலங்கா பாராளுமன்றில் தடுமாறும் அஸ்வர்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளித்த சந்தர்ப்பத்தில் தனது கேள்விக்குத்தான் பதிலளித்ததாக நினைத்த ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் பிறிதொரு உறுப்பினரின் கேள்விக்குப் பதி லளித்த அமைச்சருக்கு நன்றி தெவித்தார்.இதனால் சபையில் சிப்பொலி எழுந்தது.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது இடம்பெற்ற வாய்மூல விடைக் கான கேள்வி நேரத்தில் கேள்விகளை கேட்பதற்காக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உறுப்பினர்களின் பெயர்களை அழைத்துக் கொண்டிருந்தார்.
ஒழுங்கு பத்திரத்தின் பிரகாரம் அஸ்வர் எம்.பி.யின் கேள்வி ஆறாவது இடத்தில் அமைந்திருந்தது. இதன்போது அஸ்வர் எம்.பி.யின் பெயர் சபாநாயகனரால் அழைக்கப்பட்டது.
ஆனாலும், அஸ்வர் எம்.பி. பிறிதொரு எம்.பி.யுடன் பேசிக் கொண்டிருந்தார். சபாநாயகர் இரண்டாவது தடவையாகவும் அஸ்வன் பெயரை அழைத்தார். எனினும் அஸ்வர் எம்.பி.க்கு அது விளங்காமையால் சபாநாயகர் அடுத்த கேள்விக்குயவரான ரவி கருணாநாயக்க எம்.பி.யின் பெயரை அழைக்கவே அவரது கேள்விக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளித்து கொண்டிருந்தார்.
இதன்போது அஸ்வர் எம்.பி.க்கு அருகில் சென்ற அமைச்சர் டிலான் பெரேரா அவடரிம் ஏதோ கூற அஸ்வர் எம்.பி.யும் எழுந்து நின்று தான் கேள்வியைக் கேட்பதாகக் கூறினார்.

கிளிநொச்சியில் காணாமல் போயுள்ள இளம் தாயும்,மகனும்.

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 8ஆம் திகதி தொடக்கம் இளம் தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் பாடசாலை வீதியைச் சேர்ந்த மதன் அனுசியா (வயது 18) அவரது மகன் பவிராஜ் (வயது 02) ஆகியோரே காணாமல் போனவர்கள் ஆவார்.
கிளிநொச்சி நகரிலுள்ள உணவகம் ஒன்றிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பிரஸ்தாப பெண்ணும் அவரது மகனும் தனது அம்மம்மாவான கணபதி மணி (வயது 65) என்பவரின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தனர்.
சொந்த தேவையின் நிமிர்த்தம் கொழும்பு சென்ற இவர்களில் குறித்த பெண்ணும் அவரது மகனும் மட்டும் கொழும்பில் இருந்து திரும்பி வந்தனர்.வீட்டிக்கு வந்த குறித்த பெண் தான் பிள்ளையுடன் கிளிநொச்சி நகருக்கு செல்வதாக அயலவருக்கு கூறிவிட்டு சென்றார்.
நகருக்கு சென்றவர் வீடு திரும்பாமையால் உறவினர்கள் கிளிநொச்சி காவல்துறையினருக்கு முறைப்பாட்டை கொடுக்க சென்ற போது அவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பவம் நடைபெற்று 13 நாட்கள் கடந்த பின்னரே காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் யுத்தத்தில் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஜூன் 2011

கனிமொழியின் உடலில் வீக்கம்,கொப்புளங்கள் கருணாநிதிக்கு புழுக்கம்.

ஜாமீன் மறுக்கப்பட்ட கனிமொழி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை புதன் கிழமை சிறையில் சந்தித்துப் பேசிய கருணாநிதி இரவு சென்னை திரும்பினார். அவர் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும் போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே தில்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமாரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில்தான் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அந்தத் தவறான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதை தனது கடமையாகக் கருதி சி.பி.ஐ. செயல்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் முதல்வராக இருந்தாலும் அதுதொடர்பான விசாரணை வரம்புக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவந்துள்ளோம். லோக்பால் சட்ட மசோதா விவகாரத்திலும் எங்களது நிலைப்பாடு அதுதான். ஊழலுக்கு எதிரான நல்ல முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், உள்நோக்கத்துடன் நடக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ் உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ் பெண்கள் மீது தொடரும் அடாவடிகள்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது.
இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
16 வயதுடைய சிறுமி ஒருவருக்கு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போது குறித்த சிறுமி தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து ஏனைய பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

22 ஜூன் 2011

பருத்தித்துறையை சேர்ந்தவருக்கு பிரான்ஸ் அரசின் செவாலியர் விருது.

யாழ்,பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு "செவாலியர்" என்னும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது.
இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில் திரு. வேலுப்பிள்ளை பம்பாயில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார். சட்டத்தரணியான அவர் பாரிஸில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் என்னும் துறையில் பட்டப்பின் கற்கைநெறியில் தகைமை பெற்றார். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும் இந்தியாவில் முதலீடு செய்யவும் விழைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு அவர் சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்கினார்.
பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான அவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான அவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டு முதலீடு ஏற்றுமதி - இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள் இந்த நூல் கணணிவழி விற்பனை நிறுவனமான "அமேசன்" நிறுவனத்தின் சிறந்த விற்பனைப்பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010ஆம் ஆண்டில் மாற்றீடு செய்யப்பட்டபின்னரும்இ புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இன்றும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்தல் வர்த்தகம் செய்தல் என்னும் விடயங்கள் தொடர்பில் அவர் பாரிஸில் பல கலந்துரையாடல்களிலும் கூட்டங்களிலும் பங்குபற்றி பிரெஞ்சுமொழியில் உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
அவரது இச்சேவைகளைப் பாராட்டுமுகமாக பிரெஞ்சு அரசாங்கம் "செவாலியர்" என்னும் விருதை அவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் கொழும்பில் ஜூன் மாதம் 27ஆந் தேதி மாலை நடைபெறவுள்ளது.
தாய்மொழியான தமிழுடன் திரு. வேலுப்பிள்ளை ஆங்கிலம் பிரெஞ்சு சிங்களம் இந்தி என்னும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.
திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன் திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார். காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் செயற்பாடுகளால் பேச்சுக்களிலிருந்து விலகும் நிலை ஏற்படலாம்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படாது எனவும், கால நேரம் வீண் விரயமாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் தெரிவுக் குழுக்களின் பரிந்துரைகளின் மூலம் பல்வேறு தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன திம்பு பேச்சுவார்த்தைகளையும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொழும்பில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மங்கள முனசிங்க ஆணைக்குழுவினை நிறுவியதாகவும், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனையை முன்வைத்ததாகவும், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சிப் பேரவை பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து குழுக்களும் வடக்கு கிழக்கு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து ஒவ்வொரு மாதிரியான தீர்வுத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.
அநேகமான குழுக்களில் பெரும்பான்மையாக சிங்களப் பிரதிநிதிகள் அங்கம் வகித்த போதிலும் சில முற்போக்கான யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையில் தயாரிக்கப்பட்ட சர்வகட்சிப் பேரவை அறிக்கை பரிந்துரைகளை அநேகமான அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சிப் பேரவையில் பல சாதகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சிப் பேரவையில் அங்கம் வகிக்காத போதிலும், சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகள் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் ஏன் புதிதாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை அமைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவினை அமைக்குமாறு யார் கோரினார், யாரின் தேவைக்காக இது அமைக்கப்படுகின்றது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த பெப்பரவரி மாதம் முதல் இதுவரையில் ஆறு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 850 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என சில முக்கிய யோசனைகளை கட்சி சமர்ப்பித்த போதிலும் அவற்றை அரசாங்கம் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் தேவையற்ற விடயங்கள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடடுள்ளார்.
அரசாங்கம் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை எனவும் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும் என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரங்கள் குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இராணுவத்தினர் தமது கட்சி மீது நடத்திய தாக்குதல்களின் பின்னரும் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

21 ஜூன் 2011

கந்தரோடையில் புராதன குடியிருப்பு நகரம் இருந்துள்ளமை உறுதி.

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, தென்னிந்தியப் பண்பாட்டை ஒத்த மக்கள் கந்தரோடையில் வாழ்ந்துள்ளனர் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி தெரணியகல தெரிவித்தார்.
'கந்தரோடையில் புராதன குடியிருப்பு நகரம் இருந்ததுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையின் ஏனைய இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கந்தரோடையிலும் மக்கள் வாழ ஆரம்பித்துள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. கந்தரோடையில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெரணியகல தெரிவித்துள்ளார். தொல்லியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் காலநிதி நிமல் பெரேரா உள்ளிட்ட தெற்குக் குழுவினருடன் கலாநிதி தெரணியகல நேற்று கந்தரோடைக்கு வந்திருந்தார். யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணமும் அவர்களுடன் இணைந்திருந்தார்.
யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறையும் இலங்கைத் தொல்லியல் திணைக்களமும் இணைந்து கந்தரோடையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. இரண்டு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவை தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இந்த ஆய்வுகளிலிருந்து, கந்தரோடையில் புராதன குடியிருப்பு மட்டுமின்றி அந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சி அண்மைக்காலம் வரை அந்தப் பிரதேசத்தில் காணப்பட்டமையும் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் குறித்து, கலாநிதி தெரணியகல கந்தரோடையில் வைத்து ஊடகங்களுக்கு விளக்கினார்.
அகழ்வாராய்ச்சியின் போது, மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், மணிகள், ரோமன் கால மட்பாண்டங்கள், தென்னிந்திய புராதன நாணயங்கள், வடஇந்தியாவின் கங்கைப் பகுதிக்குரிய கறுப்பு நிறத்தினாலான பளபளப்பான மணிகள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.தென்னிந்தியப் பொதுப் பண்பாட்டுக்கான சான்றுகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கிருந்துள்ள மக்கள் ரோம் போன்ற நாடுகளுடன் அந்தக் காலத்திலேயே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள் என்பதனையும் அறிய முடிகிறது.
இந்த ஆதாரங்கள் மூலம் கந்தரோடையில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆய்வின் போது, காலத்தைத் திட்டவட்டமாகக் கணிப்பிடக்கூடிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றை மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் உறுதியான முடிவுகள் கிடைக்கும். அதற்காக அவற்றை அமெரிக்காவிலுள்ள சர்வதேச தொல்லியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பவுள்ளோம். ஆறு மாத காலத்தில் அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரணியகல கூறியுள்ளார்.

உலக நாடுகளின் செயற்பாடுகளால் மனித உரிமை மீறல்கள் கேள்விக்குள்ளாகியுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உலக நாடுகளின் நடவடிக்கைகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2009ம் ஆண்டில் குச்னர் மற்றும் மில்லிபான்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் உலக சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முறைப்பாடுகள் வெறுமனே கிடப்பில் போடப்படுவதில் அர்த்தமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

20 ஜூன் 2011

தமக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக தொடரப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் பெண்களின் உரிமைகளை மதிக்கக் கோரியும் பெண்களினால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலையில் நடாத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கறுத்தத் துணிகளினால் வாய்கள் கட்டப்பட்டு தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி கோசமிட்டனர்.

இசைப்பிரியாவும் விடுதலை புலிதான் என்கிறது ஸ்ரீலங்கா.

விடுதலைப் புலிகள் இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தையே அமைச்சு வெளியிட்டு, இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளது.
1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைப்பிரியாவுக்கு லெப்டினன்ட் கேணல் என்ற தகுதி நிலையும் வழங்கப்பட்டிருந்தது. இவர் கடற்புலி படையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவரை மணம் செய்திருந்தார். அவரும் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்துவிட்டார்.என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஜூன் 2011

கருணாவையும் விசாரணை செய்யவேண்டும் என்கிறது அல்ஜசீரா.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் கருணா மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. தற்போது, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையை மகிந்த நிராகரித்தார்.

அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

18 ஜூன் 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது கோத்தபாய சீற்றம்.

நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா கடுமையான ஆத்திரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் என்ன நடைபெற்றாலும் சிலர் முதலில் அமெரிக்க தூதரகத்தில் சென்றே முறையிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையில் முறையிடுவதை தவிர்த்துள்ள சிலர் அமெரிக்க தூதரகத்தில் சென்று முறையிட்டுள்ளனர் என நுகெகொட பகுதியில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசிய கோத்தபாயா தெரிவித்துள்ளார்.
தற்போது எம்மை அமெரிக்க தூதரகமே முதலில் விசாரணை செய்கின்றது. அண்மையில் கட்டுநாயக்கா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் ஜேர்மன் தூதரகம் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் கோத்தாவின் இந்த குற்றச்சாட்டை தமிழத் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது.
தெல்லிப்பளையில் உள்ள சிறீலங்கா காவல்துறையில் தான் முதலில் தாம் முறைப்பாட்டை மேற்கொண்டதாகவும். தமது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அமெரிக்க தூதரகத்தில் சென்று முறையிடவில்லை எனவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈழப்பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டதால் காங்கிரஸ் தோற்றது.

லயோலா கல்லூரி சார்பாக கடந்த சில நாட்களாக 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதில், திமுக அணியில் மிகப்பெரிய அங்கமாகிய காங்கிரஸைப் பொருத்த வரையில், ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கட்சி போட்டுவரும் இரட்டை வேடம் அதன் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக மிகப் பெரும்பாலோரால் (61.5) முன்வைக்கப்படுகிறது. உள்கட்சிப் பிரச்சனை என 20.3 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

17 ஜூன் 2011

சிங்களவர்கள் இலங்கையின் வந்தேறு குடிகளாவர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் இன்றைய சிங்களவர்கள் என்று கூறுகின்றார் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.
இந்தோ ஆசிய தொல்பொருள் ஆய்வு மையம் சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வரலாற்று ஆய்வாளர் முத்தையா இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு மேலும் பேசுகையில் முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய அரசர்கள் சேர நாட்டில் இருந்து கூலிப் படைகளை வரவழைத்து இருந்தனர்.
இக்கூலிப் படைகளை சேர்ந்தவர்கள் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து நிரந்தரமாக தங்கி விட்டனர், இன்றைய சிங்களவர்கள் இக்கூலிப் படைகளின் வாரிசுகளாகத்தான் இருக்க வேண்டும், இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன, சேர நாடு என்பது தற்போதைய கேரளா, தூத்துக்குடி மற்றும் நாகர் கோவில் ஆகிய இடங்களை கொண்டு இருந்தது என்றார்.

கொலை,கொள்ளை,பாலியல் வல்லுறவு இவற்றையும் மகாவம்சத்தில் இணைத்தால் நல்லது.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், அடிதடி, அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளும், இலங்கையின் புனித பௌத்த நூலான மகாவம்சத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி விவகாரத்தில் நேற்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சரத்பொன்சேக பின்னர், சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், இலங்கை நாடானது பல உன்னதமான கலாச்சார பண்புகளை கொண்டிருப்பதாக பௌத்தமத நிகழ்வுகளில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய உன்னதமான கலாச்சார பண்புகளில், இலங்கையில் தற்போது நிலவும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், அடிதடி, அரசியல் பழிவாங்கல் பண்புகளையும், மகாவம்சத்தில் உள்ளடக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற பொன்சேகவின் வெள்ளைக்கொடி வழக்கின் போது தாரூஸ்மன்(நிபுணர் குழு அறிக்கையை சிங்களம் இப்படித்தான் சொல்கிறது)அறிக்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி தொடர்பாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா மனித உரிமைகள், இருதரப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான வெளிவிவகார் ஆமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.எச்.எம் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

16 ஜூன் 2011

குற்றச்செயல்களை தடுக்கவே பதிவு நடவடிக்கை என்கிறார் கத்துருசிங்க.

மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கையின்போது முறையான விதிமுறைகளைப் பின்பற்றும்படியே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு நடவடிக்கையை முற்றாக இடைநிறுத்துமாறு உத்தரவிடவில்லை.
யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எந்தவித சூழ்ச்சியும் இல்லை.இவ்வாறு யாழ். மாவட்ட படைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்
கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று யாழ். குடாநாட்டில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், புகைப்படமும் எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் மனக் கிலேசம் ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் எதற்கென்று ஒரு சாராரும், இதனை ஏன் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர் என்று மற்றைய தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.இது தொடர்பாக யாழ்.மாவட்ட படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளதாவது.
யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது எமது கடமையாகும். அது மட்டுமின்றி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, இங்கு பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டியுள்ளது.
யாழ். குடாநாட்டில் இடம் பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது மக்களின் நலனுக்காகவே. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் பதிவு நடவடிக்கையை முற்றாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதை முறையான விதிமுறைகளைப் பின்பற்றி செய்யும்படியே உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதேவேளை, கோப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் நேற்றும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று மக்களைப் பதிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இராணுவத்தினர் குழுக்களாக வீடுகளுக்குச் சென்று மக்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின்போது உங்களில் யாராவது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்துள்ளீர்களா? என்றும், நீங்கள் இடம் பெயர்ந்தவர்களா? எனவும், உங்கள் குடும்பத்தில் எவராவது இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? எனவும் பொதுமக்களிடம் இராணுவத்தினர் வினவுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இராணுவப் பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தும், ஏன் மீண்டும் புகைப்படம் எடுத்து பதிவு செய்கிறீர்கள்? என்று இராணுவத்தினரிடம் பொதுமக்களில் யாராவது வினவினால், இராணுவத்தினர் கடுந்தொனியில் அவர்களை மிரட்டுகின்றனராம்.

மானிப்பாயில் இளம் பெண் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒரவரது சடலம் மானிப்பாய் லோட்டஸ் வீதியிலுள்ள வீட்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தும் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றிய செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. பொலீஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

15 ஜூன் 2011

தமிழ் வாகன ஓட்டுனரை தாக்கிய சிங்களப்படைகள்.

சிங்கள சாரதிகும் தமிழ் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக சிங்கள சாரதியுடன் இணைந்து இராணுவத்தினர் தமிழ் சாரதியை தாக்கியதில் தமிழ் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்த பேரூந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சிங்கள சாரதி ஒருவர் சாவகச்சேரியில் யாழ் நோக்கி செல்வதற்காக காத்திருந்த பயணியொருவரை ஏற்ற முற்பட்ட போது பயணிகளை ஏற்ற வேண்டாம் என யாழ் கொடிகாம பேரூந்துச் சேவையில் ஈடுபடும் தமிழ் வாகனச் சாரதி கூறியுள்ளார். இதன் போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை அவதானித்த இராணுவத்தினர் சிங்கள சாரதியுடன் இணைந்து தமிழ்ச் சாரதியை பொல்லுகள், இரும்புகளைக்கொண்டு தாக்கியுள்ளனர். குறிப்பிட்ட சாரதி உடல்,உள காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதில் பயணித்த பயணிகள் இராணுவத்தினரின் பக்க சார்பான நிலையை எண்ணி மனம் வருந்திச் சென்றனர்.
யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடுபவர்கள் இடையில் மக்களை ஏற்றி உள்ளுர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்!சனல் போர் ஆதாரம்!

புலம்யெர்ந்த தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘இலங்கையின் படுகொலைக்களங்கள்’ என்ற ஒரு மணிநேரக் காணொளிப் பதிவை பிரித்தானியாவின் Channel-4 தொலைக்காட்சி நேற்றிரவு (14-06-2011) 11:00 மணிக்கு ஒளிபரப்பியுள்ளது.
பலரது கடின உழைப்பில் வெளியான இந்தக் காட்சிப் பதிவு, நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களிற்கு கிடைத்த மற்றொரு அரிய சாட்சிப் பதிவாகும்.
இந்த விவரணக் காணொளிப் பதிவில் வன்னியின் இறுதிப் போர் காலத்தில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்த கோர்டன் வைஸ், கிளிநொச்சியில் பணியாற்றி, அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்ட மனிதநேய பணியாளர். போரில் படுகாயமடைந்த மக்களிற்கு மருத்துவ உதவி புரிந்திருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி, அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி, அனைத்துலக மனித உரிமைகள் சட்டவாளர் வில்லியம் மற்றும் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மூவர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், வன்னியின் இறுதிப் போரில் தமிழர் தரப்பால் எடுக்கப்பட்ட காணொளிகள், சிறீலங்கா படையினரால் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்ட காணொளிகள், மற்றும் சிறீலங்கா படையினர் போர்க்குற்றம் புரிந்தபோது கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட காணொளிகள் என்பன இதில் அடங்கியிருந்தன.
வன்னியில் பொதுமக்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மட்டுமன்றி, பெண் போராளி ஒருவர் உட்பட மூன்று போராளிகள் அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப்படும் புதிய போர்க்குற்ற சாட்சி ஒன்றும் இந்தப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் படுகொலை, மற்றும் தற்பொழுது இலங்கைக்கு வெளியே உள்ள அவரது மனைவி அவரது உடலை அடையாளம் காட்டியதால், அது போர்க்குற்றமாக நிருபணமானதும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் படையினரது சம்மதத்துடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிழற்படங்களும் காண்பிக்கப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்து தாம் வெளியிட்டுள்ள இந்த ஆதாரங்கள் நிச்சயம் போர்க்குற்றம், மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்களாக அமைந்துள்ள என வாதிடும் சனல்-4 தொலைக்காட்சி, குற்றங்கள் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்களாகவும் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.
இறுதிப் போரில் ஈடுபட்ட இருதரப்பும் போர்க்குற்றம் புரிந்திருப்பதாக இந்தத் தொலைக்காட்சி கூறுகின்ற போதிலும் சிறிலங்கா படையினர் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களையே அதிகம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்தளமாகவும், கிறிகெட் விளையாடும் இடமாகவும் இருக்கும் இலங்கைத்தீவிற்கு இன்னொரு முகமும் இருக்கின்றது என ஆரம்பிக்கும் விவரணப்படம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்பு படைத்துறை நிருவாகம் என வர்ணிக்க முற்படுகின்றது.
ஆனாலும், அங்கு காவல்துறை, நீதித்துறை, வைப்பகம் என்பன இருந்தன என்றும், 2008ஆம் ஆண்டு ஐ.நா உட்பட வெளிநாட்டு மனிதநேய அமைப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா அரசாங்கம் பணித்தபோது, மக்கள் கதறி அழுததையும் காண்பிக்கும் இந்தத் தொகுப்பு, இதுவே ஐ.நா செய்த முதல் தவறு என நிரூபிக்கின்றது. ஐ.நா அங்கு இருந்திருந்தால் பொதுமக்களின் இழப்பைக் குறைத்து, உண்மையைக் கண்டறிந்திருக்கலாம் என வாதிடப்படுகின்றது.
படைத்துறை தவிர்ந்த பொதுக்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினர் எனத் தெரிவிக்கும் சனல்-4 தொலைக்காட்சி, பாதுகாப்பு வலயத்தில் மருத்துவமனைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளது.சிங்களம் புரிந்த படுகொலைக் களத்தை காண கீழே உள்ள இணையத்தை அழுத்தவும்.
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields

14 ஜூன் 2011

போர்க் குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர்(அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத்தீவின் அண்மைய அரசியல் நிலை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மையார் ஆற்றிய உரை என்பன பற்றி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் இடையான பகுதியில் சிறீலங்கா அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவை போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லும் எனவும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்பதுடன், அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் சொந்த விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை பற்றி பரந்துபட்ட கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள 2011 நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த அறிக்கை ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் அவசியம்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப ஒரேயொரு வழி, உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மட்டுமே.
இவ்வாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் (அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

சனல் போர் வெளியிடவுள்ள விவரணத்தை பார்க்குமாறு மாயா தனது இரசிகர்களுக்கு கோரிக்கை.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி இன்று (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மாயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
http://twitter.com/#!/_M_I_A_

ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது இரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல-4 (Channel-4) தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்கின்றார்.
கரும்புலிகள் உட்பட விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்கள் உயீரீகம் தொடர்பாவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்துப் பாடிவரும் மாயா பல இன்னல்களை அதனால் அனுபவித்திருந்தார்.
பொப் பாடகரான அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ள போதிலும், மாயாவிற்கும், அவரின் தாயாருக்கும் அமெரிக்கா செல்ல அந்த நாட்டின் அரசாங்கம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டதக்கது. ஆனால் இவை ஒன்றிற்கும் அஞ்சாத மாயா தமிழ் மக்களிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் மற்றொரு தமிழனும் உலக மட்டத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒஸ்கார் உட்பட பல பன்னாட்டு விருதுகளுக்கு பரிந்துரைத்துப் போட்டியிடும் பணிகளிற்கு முன்னின்று உதவியதால், ஒஸ்கார் விரதைப் பெறும்போது ரஹ்மான் மயாவிற்கு நன்றி கூறியது பலருக்கு நினைவிருக்கலாம்.
முற்று முழுதான வேறுபட்ட சூழலில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும், தனது இனத்தையும், மொழியையும், நாட்டுப்பற்றையும் மறக்காத மயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

13 ஜூன் 2011

ஊர்காவற்றுறையில் உள்ள ஈ.பி.டி.பி.உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதம் மீட்பு.

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவ புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
இத்தேடுதலின்போது கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய 60 தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேடுதல் நடந்தவேளையில் குமரன் குறித்த விட்டில் இருக்கவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை தற்சமயம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பரந்தனில் மீட்கப்பட்ட பொலிஸ்காரரின் சடலத்தில் அடிகாயங்கள்.

பரந்தன் உமையாள்புரத்தில் நேற்றுக் காலை அடிகாயங்களுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆனந்த சமரக்கோன் (வயது-41) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரஸ்தாப பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

12 ஜூன் 2011

சீமானால் ரொம்ப நொந்து போய்ட்டான்களோ..?

நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில் சீமான் மிகவும் தெளிவான தனது பதில்களை அளித்துள்ள நிலையிலும், தொடர்ந்து அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் வெகு வேகமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
குறிப்பாக மதுரையில் திடீரென சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வரை யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு அமைப்பாக இருக்கும் ' இந்திய தேசிய மாணவர் பேரவை" என்ற பெயரில் பா.பால்பாண்டி என்பவர் பெயர் மற்றும் கைபேசி எண் ( 76761 23835 ) என்ற விபரங்களுடன் இந்த சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
சீமான் சென்னையில் தன்னைப்பற்றி வந்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் தலைமறைவானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறிப்பாக ஒரு தினசரி, "சீமான் இந்த புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதாக" தனக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை தான் பெரிய அளவில் சுவரொட்டி வடிவில் அச்சடித்து இந்த பால்பாண்டி என்பவர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். விஜயலட்சுமியின் புகாரையும், அதை தொடர்ந்து இயல்பாக பொலீசார் தங்களது பணிவரம்புக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் செய்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அரசுடன் சீமானுக்கு விரோதம் ஏற்படுத்தும் நோக்கில், இந்த சுவரொட்டியில் "பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி" தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் குறித்து பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, "இந்த போஸ்டர்கள் அப்பட்டமாக சீமானின் மீதுள்ள தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையை குலைக்க திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள வேலை. தற்போது மக்கள் இது போன்ற கோயாபல்ஸ் பிரச்சாரங்களை எல்லாம் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இது நிச்சயமாக இந்த தேர்தலில் பாதிப்புக்குள்ளானவர்களின் வேலையாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.
மேலும் சிலர் " தமிழகத்தில் ஒரு நிமிடத்திற்கு எத்தனையோ பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சுவரொட்டி ஒட்ட முன்வராத பால்பாண்டிகள் விஜயலட்சுமிக்கு மட்டும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். " சீமானால ரொம்பத்தான் நொந்து போய்ட்டாங்களோ..? " என இன்னொருத்தர் கேலியாககத் தெரிவித்தார்.
இவை இவ்வாறிருக்க வழக்கம் போல் இந்த சுவரொட்டி குறித்தும் பொலீசார் விசாரித்து வருகின்றனர் என்பதே நமக்கு கிடைத்த தகவல்.மானங்கெட்டவர்கள் சீமானுக்கு எதிராக என்ன சதிச்செயல்களில் ஈடுபட்டாலும்,மக்களை சீமானிடமிருந்து பிரிக்க முடியாதென்பதே உண்மை.

கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால் தப்பினார் கோத்தபாய.

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்யவிருந்த உலங்குவானூர்தியில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்த விடயம் கடைசிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கிளிநொச்சி சென்றிருந்தார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தெற்காசியாவில் மிக உயரமான இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரம் அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா அரச தொலைக்காட்சி, வானொலிச் சேவைகளைத் தரமுயர்த்தவும் இது பயன்படுத்தப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் இதனை வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது.
இந்தக் கோபுரத் திறப்பு விழாவுக்கு சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் புறப்பட முன்னரே ரணில் விக்கிரமசிங்கவின் தயார் நளினி விக்கிரமசிங்கவின் மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.
மாலையில் இறுதிநிகழ்வுகள் நடைபெறவிருந்ததால் சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் அவசரமாக கொழும்பு திரும்ப முயன்றனர்.
அவர்களை ஏற்றிச் செல்ல முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு உலங்குவானூர்திகள் கிளிநொச்சியில் காத்திருந்தன.
அவற்றில் ஒன்றில் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் மாலை 5 மணியளவில் கொழும்பு திரும்பி நளினி விக்கிரமசிங்கவின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தினார். ஆனால் கோத்தாபய ராஜபக்ச வரவில்லை.
அவரும் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும் பயணம் செய்வதற்காக உலங்குவானூர்தியில் ஏறி அமர்ந்திருந்த நிலையில்- அதில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுபிடித்தார்.
இதனால் அதில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று விமானி கூறியதால், வேறொரு நிரந்தர இறக்கை விமானம் மூலம் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு வர நேரிட்டது.
உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு கடைசிநேரத்தில் கண்டிபிடிக்கப்படாது போயிருந்தால், நடுவானில் பாரிய விபத்து ஒன்றை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என்று சிறிலங்கா விமான்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

11 ஜூன் 2011

வாணிப நிலையம் தீப்பற்றியதில் உரிமையாளரும் தீயில் கருகினார்!

வவுனியா சுந்தரபுரம் புதிய குடியிருப்பில் வாணிப நிலையமொன்றில் இரவுவேளை திடீரென தீப்பற்றியதில் உரிமையாளர் தீயில் கருகி மரணமானார்.
கடந்த வியாழன் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சுந்தரபுரத்தைச் சேர்ந்த வேலு பன்னீர்ச்செல்வம் (வயது 44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மின்சாரம் தடைப்பட்டதனால், மெழுகுதிரி வெளிச்சத்தில் பெட்ரோலை அளந்து போத்தலில் ஊற்றிக்கொண்டிருந்த வேளை தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீடீரென வாணிப நிலையத்தில் தீப்பற்றியதையடுத்து, அவரது அவலக்குரலைக் கேட்டு விரைந்த அயலவர்கள் அவரை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.
சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாணிப நிலைய சுவரை உடைத்து கருகிய நிலையில் இருந்த அவரது சடலத்தை மீட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எரிந்த சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன அழிப்பிற்கு தமிழ் பெண்களை குறிவைக்கிறது ஸ்ரீலங்கா அரசு!

பொஸ்னியாவில் இடம்பெற்ற போரின் போது ஒரு இனத்தின் அடையாளங்களையும், அவர்களின் தாயகத்தையும் சிதைப்பதற்கு பெண்களைத் தான் அரச படையினர் குறிவைத்து அவர்களின் கலாச்சாரத்தை அழித்தனர். அதேபோன்ற ஒரு நடவடிக்கையையே சிறீலங்கா அரசு வடக்கில் மேற்கொண்டு வருகின்றது என கோல்டன் அமைதி ஆதரவுக் குழுவின் ஊடகத்திற்கு எழுதிய பத்தியில் போல் நியூமான் தெரிவித்துள்ளார்.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளை அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுக்காதபோதும், பொதுமக்களை குறிப்பாக பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறீலங்கா அரசு தவறிவருவதாக ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் நிபுணர் குழு தொடர்பில் மறுதலையான கருத்துக்களை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும் முகமாக அது தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், அறிக்கையில் பொய்யான தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துவருகின்றது.
சிறீலங்காவில் காணாமல்போனவர்களில் பெருமளவானனோர் சிறீலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள். சிறீலங்கா அரசின் போரினால் பாதிப்படைந்துள்ள பெண்கள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது. 80 விகிதமான பெண்கள் குழந்தைகளை உடையவர்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள 8 பேரில் ஒருவர் பெண் என்பது மட்டுமே அதற்குள்ள தகமை. போரில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளவர்களிடம் எந்த உணர்வுகளைளும் காணப்படவில்லை. சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உறுதிகள் அளிக்கப்படவில்லை. அதன் முழு நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மை அற்றவை.
போரின் இறுதி நாட்களில் பெண்கள் மீதான வன்முறைகளும், பாலியல் துன்புறத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. காணொளி ஆதாரங்களில் காணப்படும் பெருமளவான பெண்களின் உடைகள் அகற்றப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த முகாம்களிலும் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரிந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும்; கணவர்களை இழந்த 90,000 பெண்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உதவிகள் அற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள பெண்கள் மிகவும் கடினமான பணிகளை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பலர் கண்ணிவெடி அகற்றும் தொழிலையும் மேற்கொள்கின்றனர். தமது பிள்ளைகளுக்கு உணவு அளிப்பதற்காக அவர்கள் இந்த தொழிலை மேற்கொள்கின்றனர். மீன்பிடித்தல், விவசாயம், கைத்தொழில் என்பன சிறீலங்கா அரசின் தடைகளால் வடக்கில் பாதிப்படைந்துள்ளன.
குறைந்த ஊதியம், அடிமைபோல நடத்துதல் போன்ற காரணிகளால் பெண்களையே சிறீலங்கா அரச நிர்வாகம் வடக்கு – கிழக்கில் பணிகளில் அமர்த்தி வருகின்றது. ஆண்களுக்கு மதுவையும், போதை பொருட்களையும் கொடுத்து செயற்திறனற்றதாக அது மாற்றி வருகின்றது. இவை அனைத்தும் சிறீலங்கா அரசின் இன அழிப்பின் வடிவங்கள்.
தம்மை திருமணம் செய்யுமாறு வடக்கில் பணியாற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் தமிழ் பெண்களை பலவந்தப்படுத்தி வருகின்றனர். சிப்பாய்கள் வடக்கில் பணியாற்றும் வரையிலுமே இந்த திருமணம் தொடரும்.
வடக்கை சிங்களமயப்படுத்தும் திட்டதிற்கு அமைவாக தமிழ் பெண்களை திருமணம் செய்யுமாறு சிறீலங்கா அரசு தனது படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. ஓரு இனத்தின் தாயகப் பகுதியை அழிக்கும் இந்த நடவடிக்கையே பொஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது.
போரில் வெற்றிபெற்ற சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விடுதிகளையும் சிறீலங்கா அரசு வடக்கில் அமைத்து வருகின்றது. உல்லாசப்பணிகளை கவர்வதற்காக வடக்கை தாய்லாந்து போல மாற்றவும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமலையை சிங்களமயப்படுத்தியது போல வடக்கிலும் சிங்களவர்களை குடியமர்த்துவதற்காக சிறீலங்கா அரசு வீடுகளை அமைத்து வருகின்றது.
1881 ஆம் ஆண்டு திருமலையில் சிங்களவர்கள் 3.3 விகிதமும், தமிழ் மக்கள் 66 விகிதமும் வாழ்ந்தனர். ஆனால் தற்போது இரு இனத்தவர்களும் அங்கு 33 விகிதங்களாகும்.
முன்னாள் போராளிகள் மீது சிறீலங்கா படையினர் தொடர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதேசங்களில் படை அதிகாரிகள் மாற்றப்படும்போது, முன்னாள் போராளிகள் மீது சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் துன்புறுத்தல்களை மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்றனர்.
தமது பாலியல் தேவைகளுக்கும் சிறீலங்கா படையினர் முன்னாள் பெண் போரளிகளையே பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளில் உள்ள பெண்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் சிறீலங்கா இராணுவத்தினர் ஆண்களை பலவந்தமாக தடுப்புக்காவலிலும் வைத்து வருகின்றனர்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகளுடன் மட்டும் அனைத்துலக சமூகம் நின்றுவிடாது, அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்கள் முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஜூன் 2011

தமிழகத்தில் அமையப்போகும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி.(எச்சரிக்கை:படம் கோரமானது)

இறுதியுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த இலங்கை தமிழர்களுக்காகவும், போராளிகளுக்காகவும் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் நினைவு தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50 தொன் எடையுடைய பாரிய கிரனைட் கல் ஒன்றில், நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் ஒன்றிணைந்து செதுக்கவுள்ள இந்நினைவு தூபிக்கு முள்ளியவாய்க்கால் நினைவு முற்றம் என பெயரிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த சிற்பம் இந்தியாவின் மிகப்பெரிய நினைவு தூபிகளில் ஒன்றாக திகழும் எனவும், அடுத்தடுத்த தலைமுறையும், முள்ளியவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய நினைவுகளை கொண்டுசெல்லும் ஊடகமாக இது திகழும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளையும், யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பொதுமக்கள், இறுதிவரை போராடி மண்ணில் வீழ்ந்த போராளிகளது தகவகளும் இந்த நினைவு தூபியில் பதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மாகியப்பிட்டியை சேர்ந்த பாடசாலை மாணவன் காணாமற் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் பாடசாலைச் சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் காலைமுதல் காணாமற்போயுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மாகியம்பிட்டியைச் சேர்ந்த 12 வயதுடைய பரமநாதன் ரஜிராம் என்ற சிறுவனே காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகியம்பிட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலைக்கு நேற்று முன்தினம் காலை 7..30 மணியளவில் புறப்பட்டுச் சென்றபோது, குறித்த சிறுவன் காணாமற்போயுள்ளதாகவும் இதுவரை எந்தவித தகவலும் இல்லாதிருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

09 ஜூன் 2011

ஜோர்தானில் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் இலங்கைப் பெண்கள்.

ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழில் சாலைகளில் வேலைக்குச் சேர்கின்ற தென்னாசிய பெண்கள் குறிப்பாக இலங்கை யுவதிகள் மேலதிகாரிகளால் மோசமான முறையில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படுகின்ற தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான் சர்வதேச நிறுவனம் ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்கள், யுவதிகள் ஆகியோரில் ஒரு தொகையினரின் பேட்டிகளை தொகுத்து தந்து உள்ளது.
இந்த அறிக்கையின்படி கிளாசிக் பஷன் என்கிற பிரபல தையல் தொழில்சாலையில்தான் இப்பாலியல் வன்முறைகள் கால காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றன. பாலியல் துஷ்பிரயோகங்கள், தொடர்ச்சியான கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் மிகவும் மோசமாக இடம்பெற்று வருகின்றன. அதிகாரிகளின் காம வெறியை தீர்க்கின்றமைக்கு இணங்காமல் அடம் பிடிக்கின்ற யுவதிகள் சித்திரவதைகள் செய்யப்பட்டு நாட்டுக்கு பலாத்காரமாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதிகாரிகளின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்க்கு பலியாகின்ற யுவதிகள் கர்ப்பம் அடைகின்றபோது கட்டாயப்படுத்தி நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். தையல் தொழில்சாலையின் பொது முகாமையாளர் அனில் சாந்த. இங்கு வேலை பார்க்கின்ற யுவதிக்களை இவர் தொடர்ச்சியாக கற்பழித்து வருகின்றார். ஒவ்வொரு விடுமுறை நாட்களின்போது வான் ஒன்றை அனுப்பி நான்கு அல்லது ஐந்து யுவதிகளை ஹோட்டலுக்கு வருவிக்கின்றார்.
அங்கு கற்பழிக்கின்றார். சாந்தவுக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நீடித்த வெற்றியை கொடுக்கவில்லை. குறைந்தது 2007 ஆம் ஆண்டில் இருந்து கிளாசிக் தையல் தொழில்சாலையில் பாலியல் வன்முறை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இலங்கை அரசுக்கு இவ்வன்முறைகள் குறித்து தெரியாத நிலைதான் இருந்து வருகின்றது.

அரசுக்கும்,படைகளுக்கும் புகழாரம் சூட்டிய இமெல்டா.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை அடிக்கடி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வருகைதந்து பார்வையிடுகின்றார். இதேவேளை குடாநாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் படைத்தரப்பு தொடர்ந்து தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. படையினர் நேரடியாக மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் வீடு கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்து வருவதாக மீண்டும் அரச விசுவாசத்தைக் காட்டியுள்ளார் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார்.
குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய நாட்டினது மேல் சபையின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று சென்றிருந்தது. உச்சகட்ட பாதுகாப்புடன் விமானப்படை ஹெலிகொப்ரர் மூலம் யாழ் நகரப்பகுதிக்கு சென்றிருந்தனர். இந்தக் குழு குடாநாட்டில் புதிய தொழில் முயற்சியில் அவுஸ்திரேலியாவின் முதலீடு தொடர்பாக ஆராய்ந்திருந்தது. மின்சார விநியோகம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தக்குழு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முற்பட்டது. குறிப்பாக காணிகளை அடையாளங்காணல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தக்குழு ஆர்வம் காட்டியபோதும் அரச அதிபர் இதற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை.
மாறாக இலங்கை அரசின் புகழ்பாடும் ஒரு நடவடிக்கையாக
அவர்களுக்கு தனது பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டிருந்தார். ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் உரையொன்றை ஆற்றியிருந்த இமெல்டா சுகுமாருக்கு எதிராக யாழ் குடாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இதனால் மனக்கவலை அடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர் உள்ளுர்
ஊடகங்களுக்கு தனது மறுப்பை வெளியிட்டிருந்தார்.
அரசியல் நோக்கம் கருதியே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தமது சுயநல அரசியலுக்கு தன்னைப் பகடைக்காயாக்குவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அரச அதிபர் அரச முகவர் என்றும் அவர்கள் அரசின் உந்துகோலாக இருக்கக்கூடாது எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும் நேற்றையதினம் மீண்டும் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியப் பிரதிநிதிகளிடம் அரச அதிபர் தனது அரச விசுவாசத்தையும்
படைத்தரப்பின் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

08 ஜூன் 2011

கொக்குவிலில் மாணவியை கடத்த முயற்சி,வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய மாணவனை காணவில்லை!

வெள்ளை வானில் மாணவியொருவரை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை 7.30 மணியளவில் கொக்குவில் அம்மன் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது இருவர் இந்த மாணவியை பின் தொடர்ந்துள்ளனர்.
இவர்களின் பின் வெள்ளை வான் ஒன்று இருபக்க கதவுகளையும் திறந்த நிலையில் பின் தொடர்ந்து வந்துள்ளது. குறித்த நபர்களின் நோக்கத்தையறிந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அருகிலிருந்த பாடசாலையொன்றிற்கு சென்று அதிபர், ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பாடசாலையின் அதிபர் ஊடாக குறித்த மாணவி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்று வரும் மாணவி ஒருவரையே இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை யாழ். வேலணை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் அம்மாணவனின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் அனுஷ்டன் (வயது 16) என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவன் கடந்த 30ஆம் திகதி யாழ். வேலணையிலுள்ள தனது வீட்டிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளாரென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்மாணவனைத் தேடும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தீயில் எரிந்த இலங்கை தொழிலதிபர் குடும்பம்,மூவர் பலி!

சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரனும் (வயது 55) அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சென்னை, சேத்துப்பட்டு ஸ்பர்டேங்க் வீதியில் உள்ள லாமக் அவென்யூவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரன் (வயது 55) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியேறியுள்ளார்.
இந்த அடுக்குமாடி வீட்டில் தொழிலதிபரின் 50 வயது மனைவியான ஜெயா மற்றும் 3 மகள்மார்கள் இருந்துள்ளனர். இலங்கை தமிழர்களான இவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ளனர். சம்பவ தினமான நேற்றிரவு தொழிலதிபர் ஞானச்சந்திரன் வீட்டில் இருந்து பயங்கர புகை கிளம்பியதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தபோதும் தொழிலதிபரின் மனைவியையும், இரு மகள்களையும் தீயில் எரிந்த நிலையில் சடலமாகவே மீட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேத்துப்பட்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

07 ஜூன் 2011

இன்றர்போலால் தேடப்படும் கருணா குழு உறுப்பினர்.

கருணா குழுவின் முக்கியஸ்தரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ. மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரப்போல் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேல் மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கருணாவுடன் இவர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்ததும் கருணா குழுவினர் வடிவேல் மகேந்திரன் தமது கட்சியின் முக்கியஸ்தர் என்று அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

போராளிகளை விடுதலை செய்வதாக ஏமாற்றிய ஸ்ரீலங்கா அரசு.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 900 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய பிரச்சாரங்கள் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. அது மட்டும் அல்லாது 900 முன்னாள் உறுப்பினர்களின் உறவினர்களுக்கு விடுவிப்புக் குறித்த தகவல்களும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வாயிலாக அனுப்பப்பட்டன.
இதன் அடிப்படையில் தமது உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தூர இடங்களில் இருந்தெல்லாம் மக்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் வவுனியாவில் குவிந்தார்கள்.
இந்த விடுவிப்பு நிகழ்வுக்காக அரசாங்கம் வவுனியாவில் பெரும் கழியாட்ட நிகழ்வொன்றையும் கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் ஒழுங்கு செய்திருந்தது. அதில் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட 900 முன்னாள் போராளிகளும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தமது உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டனர்.
இதனோடு கிரிக்கட் திருவிழா ஒன்றும் அரங்கேறியது. உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக காதில் போட்டிருந்த தோட்டை அடகுவைத்து வவுனியா வந்த முன்னாள் போராளிகளின் மனைவிமார், கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகளை விற்று தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தாய்மார் எல்லோரும் கொடும் வெய்யிலில் அமைச்சர்கள் ஆடிய கிரிக்கட்டை பார்த்தார்கள். மாலைவரை 4 அணிகள் ஆடிய கிரிக்கட் மட்டை ஆட்டத்தை பார்த்தார்கள்.
முன்னாள் போராளிகள் அணி, இளைஞர் சேவை மன்றம் அணியுடன் மோதியது. இளைஞர் சேவை மன்றம் அணி வெற்றி பெற்றது. மறுபுறம் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் அணி புனர் வாழ்வு அமைச்சர் சந்திரசிறீ கஜவீர தலைமையிலான அணியுடன் மோதியது. அதில் டளஸ் அழகப்பெரும அணி வென்றது.
பின்னர் 4 அணியில் இருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இரு அணிகளாக சினேகபூர்வ ஆட்டத்தில் ஆடினர். இதில் டளஸ் அழகப்பெருமவின் அணி வெற்றி பெற்றதோடு மான் ஒவ் த மச் ஆக டளஸ அழகப்பெரும தெரிவானார்.
இவற்றை எல்லாம் தோட்டையும் சங்கிலியையும் அடகு வைத்து சென்றவர்கள் பார்த்தார்கள். கிரிக்கட் முடிய இரவு இசைப் பெருவிழா. ஆடல் பாடல் கொண்டாட்டம். அதனையும் பார்த்தார்கள். காரணம் காலையில் 5ஆம் திகதி தம்மவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில்.
ஆனால் நடந்ததோ வேறு. விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட 900 பேரில் 357பேர் மட்டும் விடுதலையானார்கள். மிகுதிப்பேர் விடுவிக்கப்படவில்லை. ஆற்றாமையால் மக்கள் அழுதார்கள். ஓவென்று அலறினார்கள். கடுமையான விரக்த்தியில் கோசம் எழுப்பினார்கள். அதனைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?
ஆற்றாமையினால் அரச அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள், ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்ணாள் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஸோர் என அனைவருடனும் பேசினர். கிடைத்த பதில் விடுதலை செய்வதற்கான பத்திரங்கள் பதியப்படும் வேலைகள் முடியவில்லை. முடிந்தவுடன் விடுதலை செய்யப்படுவர் என்பதாக அமைந்தது. 2 வருடங்களாகியும் முடியவில்லையா என மக்கள் அழுது புலம்பினார்கள். இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பெரும்பான்மையின அரச அதிகாரிகளுக்குக் கூட தாங்கமுடியாத வேதனை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

06 ஜூன் 2011

மாணவிகளின் முன் அசிங்கமாக நடந்து கொண்ட படைகள்.

சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில் இராணுவப் பயிற்சிகளை வழங்கிவரும் சிறீலங்கா அரசு, படை முகாம்களில் வைத்து அவர்களுக்கு ஆபாச உணர்வுகளை ஊட்டிவருவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (04) இரவு மின்னினேரியா இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு முன் பெண் இராணுவச் சிப்பாய்கள் அரை மற்றும் முழு நிர்வாண அணிவகுப்புக்களை நடத்தியதால் மாணவர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் தலைவர்களாக வரவேண்டும் என்றால் இவ்வாறு நீங்களும் நடந்துகொள்ள வேண்டும் என பெண் மாணவர்களுக்கு இராணுவச் சிப்பாய்கள் கூறியதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

05 ஜூன் 2011

உண்மைகளை மூடி மறைக்கும் இமெல்டா,-சிவாஜிலிங்கம் கண்டனம்.

இனப் படுகொலை செய்பவர்களை விட அதனை மூடி மறைப்பவர்களையும் அதனை நியாயப்படுத்து பவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ் சாட்டியுள்ளார்
யாழ் அரச அதிபரினால் கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சிவாஜிலிங்கம் தனது காத்திரமான குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருக்கின்றார். அரசாங்க அதிபர் என்பவர் இலங்கைஅரசின் முகவராகவே மட்டும் இருக்க வேண்டுமேயன்றி உந்துகோலாக இருக்கக்கூடாது என சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். வன்னி அவலங்களை மூடி மறைக்கும் வகையிலேயே அரச அதிபரது அண்மைய உரை அமைந்துள்ளது.
வன்னியிலுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை
தொடர்பாக இந்திய, இலங்கை அரசாங்கங்கள் முரண்பாடான தகவல்களை யுத்த நேரத்தில் வெளியிட்டிருந்தன. எண்பது ஆயிரம்பேர் சிக்குண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முல்லைத்தீவின் மேலதிக அரசாங்க அதிபர் மட்டும்
3 இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களைச் கொண்ட 70 ஆயிரம் குடும்பங்கள் வரை அப்பகுதியில் சிக்குண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அந்தவேளை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரோ மௌனம் காத்து வந்தார். அந்த மௌனத்தின் அர்த்தம் இப்போது புரிகின்றது. 70 ஆயிரம் மக்களுக்கு மட்டுமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே மௌனம் காத்திருந்தார் இமெல்டா சுகுமார் என்பது இப்போது
அம்பலமாகின்றது. இன்று எவ்வாறு அவர் மனச்சாட்சியின்றி பேசுகின்றார் என்பதன் முழு அர்த்தம் புரிகின்றது.
3 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சிக்குண்டிருந்த நிலையில் 14 ஆயிரம் மக்கள் படுகாயமடைந்திருந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இயற்கைச் சீற்றத்தாலோ அல்லது இயற்கை மரணத்தாலோ உயிரிழந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அப்பட்டமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலை செய்யப்பட்ட அனைவருமே வன்னி மக்கள். பாதிக்கப்பட்ட வன்னி மக்களுடனேயே நீண்டகாலம் வாழ்ந்த அரச அதிபர் இமெல்டா சுகுமாரால் எவ்வாறு உண்மைகளை மூடி மறைக்க முடிகின்றது என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்புகின்றார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுகின்ற குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே இவர் முற்படுகின்றார். இனப்படுகொலை செய்பவர்களை விட அதனை மூடி மறைப்பவர்களையும் அதனை நியாயப்படுத்துபவர்களையும் வரலாறு மன்னிக்காது என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
(சிங்களப்படைகளின் செல் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இமெல்டா காணப்படும் படமே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.)