பக்கங்கள்

06 ஜூலை 2012

நிமல ரூபனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? சிவசக்தி ஆனந்தன் விரிவான அறிக்கை!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் மரணமடைந்த நிமலரூபனின் மரணம் தொடர்பாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களின் நிலையை வெளியுலகிற்குக் கொண்டுவரும் நோக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளபோதும், அரசாங்கம் அதனைச் செவிமடுக்க மறுத்ததுடன், இறுதியில் சிறையில் வன்முறை இடம்பெறுவதற்கும் இடமளித்து விட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் நினைவிழந்துபோயுமுள்ளார். இனியாவது அரசாங்கம் துரிதகதியில் செயற்பட்டு அவர்களை விடுவிப்பதற்கு ஆவன செய்யுமா? என்பதே இன்று மனிதஉரிமைகளுக்காகக் குரல்கொடுப்பவர்கள் மத்தியிலும், ஜனநாயக சக்தியின் மத்தியிலும், மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி. அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தங்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டிருந்த காலவரையறையற்ற உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகவும், சர்வதேசத்தின் கவனத்தை அரசியல் கைதிகளின்பால் ஈர்க்கும் விதத்திலும் கடந்த மே மாதம் 24ஆம் திகதி வவுனியாவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதில் கட்சிபேதமின்றி அனைத்து ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் கலந்துகொண்டு தங்களது ஆதரவினைத் தெரிவித்திருந்தன. அதன்போது அமைச்சர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றமற்றவர்களை விடுதலை செய்வதற்கும், புனர்வாழ்வளிக்க வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தனர். அந்தக் காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அதாவது அரசாங்கம் தனது வாக்குறுதியை தானே மீண்டும் ஒருமுறை நிறைவேற்றாததுடன், நிலைமையை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில், வவுனியா சிறையில் இருந்த அரசியல் கைதிகள் மூவரை அனுராதபுரத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ள சிறையதிகாரிகள் விசாரணை முடிவடைந்தவுடன் அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்குக் கொண்டுவராமையால் ஏனைய அரசியல் கைதிகளிடையே பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது எந்தவொரு சிறைவாசிக்கும் ஏற்படுகின்ற சாதாரண மனநிலை. இந்த மனநிலைக்கு மருந்திடாமல் அவர்களது அச்சத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலேயே சிறைத்துறை நடந்துகொண்டுள்ளது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்கு வேறுவழி தெரியாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானது. சிறையிலிருந்து கொண்டு சென்றவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வாருங்கள் என்று கோரியே அவர்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அவர்களது கோரிக்கைக்கு உரிய பதிலை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகள் அதனைச் செய்யாமல் அவர்களது உண்ணாவிரதத்தை பலவந்தமாக முடிவிற்குக் கொண்டுவர எண்ணியுள்ளனர். அத்துடன் கைதிகளின் செல்களுக்குள்ளே பிரவேசித்து அவர்களை உண்ணும்படி வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி அவர்கள் சிறைக்காவலர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். இதன் பின்னராவது அவர்களது கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலித்திருக்கலாம். ஆனால் அனைத்து அடக்குமுறைகளையும் பிரயோகித்து 32 அரசியல் கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு பெரிய போர்க்களத்தையே தோற்றுவித்துள்ளது இந்த அரசாங்கம். சிறைச்சாலைக்குள் தண்ணீரைப்பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் அரசியல் கைதிகளை மயக்கமுரச் செய்து, சிறை அதிகாரிகளை மீட்டதுடன் நில்லாமல் அரசியல் கைதிகளை அனுராதபுரத்திற்கு ஏற்றிச்சென்று காவல்துறையினர் உள்ளிட்ட ஏனையோர் அங்கு அவர்களை மாறிமாறி அடித்து நொறுக்கியுள்ளனர். சில கைதிகளையும் ஏவிவிட்டு அடிக்கச் செய்ததாகவும் தெரியவருகிறது. காவல்துறையினர் சப்பாத்துக் கால்களை நக்கச்செய்து, அவ்வாறு நக்கும்போது அரசியல் கைதிகளின் முகத்தில் எச்சில்துப்பி சப்பாத்துக்கால்களால் உதைத்ததாகவும் அரசியல் கைதிகள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். அடித்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பகல் ஒருமணி முதல் இரவு பதினோரு மணிவரை இவ்வாறு அரசியல் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். அடித்துக் களைத்தவர்களுக்கு மாற்றீடாக அடுத்த அணியினர் வந்து அந்தப் பணியைத் தொடர்ந்துள்ளனர். கண்மூடித்தனமாக அடித்ததில் கிட்டத்தட்ட அனைவருமே கை கால் எலும்பு முறிந்த நிலையில் உள்ளனர். ஒருவருக்குத் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அனேகமானோருக்கு உடல்முழுவதிலும் இரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு அடித்துவிட்டு அவர்களுக்கு மாற்றுடைகூடக் கொடுக்காமலும் மருத்துவ உதவிகள் வழங்காமலும் குடிப்பதற்கு நீர்வழங்காமலும் மூன்று நாட்கள்வரை அவர்களைத் தவிக்கவிட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் பலத்த காயங்களுடன் மரணமடைந்துள்ளார். மற்றொரு அரசியல் கைதி நினைவிழந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நாங்கள் அவர்களைப் பார்த்தபொழுது முனகல் சத்தத்தை மட்டுமே கேட்கக்கூடியதாக இருந்தது. அரசாங்கம் தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டு, பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் கைதிகளை தேவையின்றி இடமாற்றி, பிரச்சினையை வேண்டுமென்றே பூதாகரமாக்கியுள்ளது. கைதிகளின் இடமாற்றத்தின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளிலும் அரசாங்கம் இந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையே மீறியுள்ளது. ஆகவே இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் என்று எப்படி நம்புவது? இனியும் காலம் தாழ்த்தாமல் சர்வதேச சமூகமும், மனிதஉரிமை ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புக்களும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுப்பதுடன், அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதே நேரத்தில் எவ்வித நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் இன்றுவரை ஏற்படுத்தாத அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலினால் வாழவேண்டிய இளைஞன் நிமலரூபனின் அகால மரணத்தால் அவரது வயது முதிர்ந்த தந்தையும் தாயும் சொல்லொனாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களது ஒரே மகனையும் பறிகொடுத்துவிட்டு புத்திரசோகத்தால் அவர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். தனது மகனை விடுவிப்பதறாக தள்ளாத வயதிலும் அவரது தாயார் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து தங்களது முதுமையையும் அவரது நீண்டநாள் சிறைவாசத்தையும் எடுத்துச் சொல்லி அவருக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டுமென்று பலத்த பொருளாதார கஷ்டத்தின் மத்தியிலும் முயற்சித்தார். எல்லாம் கைகூடி வருகையில், இன்று தனது மகனை அநியாயமாகக் கொன்றுவிட்டார்களே என்று அவர் படும் வேதனையை வார்த்தையில் வடிக்கமுடியாது. இந்தக் கண்ணீருக்கெல்லாம் இந்த அரசாங்கம் தர்மத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய இளைஞன் இன்று சடலமாகக் கிடப்பது கல் நெஞ்சையும் கரையவைக்கும். இன்னும் எத்தனைபேரைப் பலியெடுக்க இந்த அரசாங்கம் எண்ணியுள்ளது? எப்பொழுது தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்? அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்ற பல்வேறு சந்தேகங்களை அண்மைய அரசியல் கைதிகளின் மீதான தாக்குதல் சம்பவம் எழுப்புகின்றது. சிறைக்குள் இருப்பவர்களும் மனிதர்களே என்ற வாசகத்தை சிறைச்சாலையின் மதில்களில் எழுதிவைத்துவிட்டு அவர்கள்மீது மிருகத்தனமான தாக்குதலை இந்த அரசாங்கம் நடத்தியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் மீதான தாக்குதலைக் கூடடமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் இறந்துபோன நிமலரூபனின் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும் கூட்டமைபப்பின் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.