பக்கங்கள்

09 ஜூலை 2012

வேலணை வைத்தியசாலை மருத்துவ மாது மரணம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அழைப்பாணை.

வேலணை பிராந்திய வைத்தியசாலையில் 2010 ஆம் ஆண்டு கைதடியைச் சேர்ந்த குடும்பநல மருத்துவமாது கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.சம்பவம் நடந்து நாளை இரண்டு வருடங்கள் நிறைவுறும் நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாததனாலேயே மன்றில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கைதடி தெற்கு கைதடியைச் சேர்ந்த செல்வி சரவணை தர்சிகா (வயது 27) என்ற குடும்பநல மருத்துவ மாதே சீருடையில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 2010 ஜூலை 10 ஆம் திகதி அவர் தங்கும் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். யுவதியின் கைத்தொலைபேசி மற்றும் பிற தடயப் பொருள்களைக் கைப்பற்றிய பொலிஸார் அது தொடர்பான விசாரணையை அடுத்து ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவுக்கமைய வேலணை பிராந்திய வைத்தியசாலையின் அக்காலப் பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பிரியந்த செனவிரத்னவைக் கைது செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அவர் சட்டத்தரணி மூலமாக நீதிமன்றில் சரணடைந்தார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைதடியில் அடக்கம் செய்யும் தினத்தன்று ஏ 9 வீதியில் கைதடிச் சந்தியில் நீதி கேட்டு பெரும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது. மருத்துவ மாதுக்கள் தொழிற்சங்கம், பொதுச் சுகாதார சேவைகள் சங்கம் என்பன திணைக்கள மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சுகாதாரப் பணிமனைக்கு மனுக் கையளித்திருந்தன. 2010 ஜூலை 13 ஆம் திகதியன்று சுகாதாரத் திணைக்களத்துக்கு முன்பாக அவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்திய வண்ணம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர். சந்தேகநபரான வைத்தியரை பிணையில் விடும்படி யாழ். மேல் நீதிமன்றில் மனுச் செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த அப்போதைய நீதிபதி எஸ்.பரமராஜா பிணையில் விடுவித்தார். இரத்தினபுரியைச் சேர்ந்த சந்தேகநபரின் தாயின் சகோதரிகள் பிணை எடுத்துச் சென்றனர். சடலத்தைத் தோண்டி எடுத்து கொழும்புக்கு அனுப்பிப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரியதை அடுத்து மன்று அதற்கு அனுமதித்தது. மருத்துவ மாது வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான வேளையில் சடலத்தில் சில உடற்பாகங்கள் காணாமல் போயிருந்தமை கொழும்பில் தெரியவந்தது. அதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பணிபுரியும் 2 சிற்றூழியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதன் படி கொட்டடி மீன் சந்தைக்கு அருகிலுள்ள புதைகுழி ஒன்றிலிருந்து துணியில் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த உடல் உறுப்புக்கள் மீட்கப்பட்டன. கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட தர்சிகாவின் சடலம் மீண்டும் 30.07.2012 அன்று கைதடிக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட உடல் உறுப்புகள் 02.8.2012 அன்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பிக்கும்படி அப்போதைய நீதிவான் இ.வசந்தசேனன் உத்தரவிட்டார். சம்பவம் நடைபெற்று 2 வருடங்களாகும் நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தர்சிகாவின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் பி.குகனேஸ்வரன், கே.சுகாஷ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். விசாரணையின் பின்னர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தார் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.