பக்கங்கள்

10 அக்டோபர் 2010

எனது கணவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜே.ஆரிடம் ஒரு போதும் கேட்கவில்லை-சந்திரிகா.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவிடம் தனது கணவர் விஜயகுமாரதுங்கவுக்கு மன்னிப்பு அளிக்குமாறு தான் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை எனவும் சட்டரீதியான தீர்வையே தான் நாடியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ச,கெஹலியரம்புக்வெல தெரிவித்திருந்ததற்கு முரணான விதத்தில் சந்திரிகாவின் கருத்து அமைந்துள்ளது.நான் மன்னிப்புக் கேட்டதாக அமைச்சர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டமை அப்பட்டமான பொய் என்று திருமதி குமாரதுங்க கூறியதாக டெய்லிமிரர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச,முன்னாள் இராணுவத்தளபதியின் பாரியாரான அனோமா பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது கணவனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்க வேண்டும் என்றும் ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் அவரை ஏமாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது கணவன் விஜயகுமாரதுங்கவுக்காக திருமதி குமாரதுங்க மன்னிப்பு வழங்குமாறு கேட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஐ.தே.க. ஆட்சியின்போது நக்ஸலைட் குற்றச்சாட்டுகளுக்காக குமாரதுங்க சிறைவைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாகவே திருமதி குமாரதுங்க மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.