பக்கங்கள்

14 அக்டோபர் 2010

கட்சியிலிருந்து ஏன் விலக்கக்கூடாது?

கட்சி நிலைப்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள நீங்கள் ஏன் கட்சியிலிருந்து விலக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்கும்படி கேட்டு ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனால் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்சி கட்டுப்பாட்டை மீறி சொந்த முடிவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பிரபா கணேசனின் கட்சி அங்கத்துவம் அன்றைய தினமே கட்சித் தலைவர் மனோ கணேசனினால் இடை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கூடிய முன்னணியின் அரசியற்குழு கட்சித் தலைவரின் முடிவை ஏகமனதாக அங்கீகரித்ததுடன், கட்சியில் வகித்துவந்த பதவியிலிருந்தும் பிரபா கணேசனை நீக்கியது. இது தொடர்பில் பிரபா கணேசனுக்கு எழுத்து மூலமாக கட்சி பொதுச்செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பதிவு தபால் கடிதத்திற்கு இதுவரையில் பிரபா கணேசன் பதில் அளிக்கவில்லை. அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்ததைபோல் அவர் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியேற வில்லை. மாறாக 18ம் திருத்தத்திற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டு சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரபா கணேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,
ஐதேக தனது கட்சியிலிருந்து அரசு தரப்பிற்கு தாவியுள்ள அல்லது இனிமேலும் செல்வதற்கு இருக்கின்ற தமது உறுப்பினர்கள் தொடர்பிலே, எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது தொடர்பில் இதுவரையில் தெளிவில்லை. எமது கட்சியிலிருந்து அரசிற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கட்சி மாற்றம் நடைபெற்ற தினத்திலேயே நாம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே இது தொடர்பாக ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்மை கேட்டுக்கொண்டார் என்பதைவிட, இது எமது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாகும்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்றக்கட்சி எமது கட்சியாகும். இது கொழும்பில் நடைபெற்ற மாநகரசபை, மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்களில் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எமது கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரபா கணேசன் எம்பி கட்சியின் நிலைப்பாட்டை மீறி வெற்றிலைச் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துடன் தன்னிச்சையாக இந்த இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், தன்னை வளர்த்துவிட்ட கட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் இன்று ஈடுபட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டுள்ளார்கள். ஆளுகின்ற அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு இக்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடுகளை நாம் ஒரு கட்சி என்ற முறையிலே எதிர்கின்றோம். ஆனால் கட்சிகள் என்ற முறையில் தங்களது தீர்மானங்களை எடுப்பதற்கு இக்கட்சிகளுக்கு இருக்கின்ற உரிமைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளையில் எமது கட்சியிலிருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும், ஐதேகவிலிருந்தும் அரசுடன் இணைந்துகொண்டவர்கள் தங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய கட்சிகளின் முடிவுகளுக்கு மாறாகவே நடந்துகொண்டுள்ளார்கள். அத்துடன் அரசுடன் இணைந்துகொண்டுள்ள தங்களது கட்சித்தாவல்களை நியாயப்படுத்துவதற்காக தங்களை வளர்த்துவிட்ட கட்சிகளுக்கும், கட்சித் தலைமைகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என நான் நம்புகின்றேன்.
எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும். இந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள் மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.