பக்கங்கள்

14 அக்டோபர் 2010

பொஸ்பரஸ் எரி குண்டின் கொடூரத் தாக்கம்! உடலே விகாரமாக மாறிப் போனவரின் இன்றைய நிலை!

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த இறுதி யுத்தத்தில் அரச படையினரால் பயன்படுத்தப்பட்ட பொஸ்பரஸ் இரசாயன எரிகுண்டின் கோர விளைவுகளிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கிறார் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து வரதராஜன்(வயது43) .
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் மீள்குடியேற்றக் கிராமத்தில் தற்போது வசிக்கின்றார்.
இவரின் உடல் முழுவதும் இரசாயன எரிகுண்டால் ஏற்பட்ட வடுக்களும், காயங்களும் காட்சி தருகின்றன. இரசாயன எரிகுண்டுத் தாக்குதலில் மட்டுமன்றி கிளைமோர் தாக்குதலில் கூட சிக்கி இருக்கின்றார்.
இவற்றால் கைகளிலும், கால்களிலும் கூடுதலான பாதிப்புக்கள். சொந்தமாக எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
இரணைப் பாலை என்கிற இடத்தில் 18-12-2008 அன்று இடம்பெற்ற எறிகணை வீச்சில் இவரின் மனைவி செல்வமலர் (வயது 37 ) கண் முன்னே இறந்தார். வரதராஜா கடந்த கால யுத்தத்தால் உடல் ரீதியாக மட்டுமன்றி உளரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்பது வெளிப்படை. சொந்தமாக வேலை செய்ய முடியாத தகப்பன். தாயோ இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுமோ சிறுவர்கள். வசிகரன் (வயது-14), தானோஜா (வயது-13), ஜயசுதன் (வயது-09).
இக்குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை மிகவும் துன்பங்கள் நிறைந்தது. பிள்ளைகளின் எதிர்காலம் வெறும் சூனியமாகவே இது வரை தெரிகின்றது.
அரசோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ்விதமான உதவியையும் இதுவரை செய்யவில்லை என்று கவலையுடன் கூறுகின்றார் வரதராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.