மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியும், விடுதலை புலிகளும் இந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். தமிழ் புலிகள் வட கிழக்கில் தனி ஒரு நாட்டை உருவாக்க முனைந்தார்கள். சிங்கள ஜேவிபியினர் முழுநாட்டையும் கைப்பற்ற முனைந்தார்கள். இரு சாராருமே ஆயுதம் தூக்கியவர்கள்தான். இருசாராருமே ஆட்சியை முழுதாகவோ, பகுதியாகவோ பிடிக்க ஆயுதம் தூக்கி போராடியவர்கள்தான். புலிகள் வட கிழக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு ஆட்சியில் வைத்திருந்தைபோல், ஜேவிபியினரும் தமது போராட்டத்தின் போது தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் பிடித்து வைத்து அங்கு ஆட்சி நடத்தியவர்கள்தான்.
எனவே இறந்துபோன ஜேவிபி போராளிகளை தெற்கில் நினைவுகூறும்போது, புலி போராளிகளையும் வடக்கில் நினைவுகூறுவது தவறாக முடியாது. அந்த அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சிறை பிடித்து, புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது ஏற்றுகொள்ள முடியாதது. இந்த நாட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது. இதனாலேயே யாழ் பல்கலைக்கழக மாணவர் வகுப்புகளை பகிஸ்கரித்து வருகிறார்கள். இதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
´அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்´ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நமது கட்சி ஒரு ஜனாநாயக கட்சி. நாம் நாட்டு பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகார பிரிவினையைதான் வலியுறுத்துகிறோம். அதேபோல் சட்டபூர்வ தேர்தல் மூலம் பதவிக்கு வரும் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்குவதையும் நாம் ஆதரிக்கவில்லை. தேர்தல் ஒழுங்காக நடக்கிறதா, தேர்தல் முடிவுகள் ஒழுங்காக வெளியிடப்படுகின்றனவா என்பவை தொடர்பில் இந்த அரசாங்கத்தை நாம் நம்பவில்லை. ஆனால் ஆயுத போராட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது.
ஆனால், ஆயுதம் தூக்கினர்கள் என்பதற்காக வடக்குக்கு ஒரு நியாயமும், தெற்குக்கு ஒரு நியாயமும் வழங்கப்படுவதை நாம் ஏற்க முடியாது. குறிப்பாக, மாண்டுபோனவர்களை நினைவு கூறுவதை தடுக்க முனைவதை நாம் ஏற்க முடியாது. இதை நாகரீக உலகமும் ஏற்காது.
தெற்கு போராட்டங்களில் போது அன்றைய தெற்கு போராளிகள் தாம் பிடித்து வைத்திருந்த பகுதிகளில் அந்நாட்களில் காட்டு நீதிமன்றங்களை நடத்தினார்கள். மாடு திருடியவருக்கும், கோழி திருடியவருக்கும் அந்நாட்களில் அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் பிரசித்தமானவை. அந்த போராட்டங்களில் காட்டு துப்பாக்கிகளை தூக்கி சுட்டு விளையாடியவர்கள் இன்று அரசாங்கத்துக்குள் இருக்கிறார்கள். அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு இது நன்கு தெரியும். இந்த காட்டுதுப்பாக்கி வரலாற்றை விமல் வீரவன்சவால் மறுக்க முடியுமா?
தனி நாட்டை புலிகள் கோரினார்கள் என்றால், இவர்கள் அதைவிட ஒருபடி மேலே போய் முழு நாட்டையுமே கோரினார்களே. இன்று இந்த தென்னிலங்கை போராளிகள்தான் இங்கே நினைவு கோரப்படுகிறார்கள். அதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால், வடக்கில் இல்லை.
இதன் பின்னால் உள்ள காரணம், ஒன்றே ஒன்றுதான். இவர்கள் சிங்களவர்கள். அவர்கள் தமிழர்கள். ஒரே காரியத்தை செய்யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வெவ்வேறு தண்டணைகள். இதனால்தான் யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து, திருடர்களை, மிருகங்களை பிடிப்பதை போல் பிடித்து இழுத்து சென்றுள்ளார்கள். இதை உலகம் ஒருபோதும் ஏற்காது.
இன்று சிறைகளில் ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்பு அல்லது பிணை வழங்குங்கள் என்று சொன்னோம். முடியாவிட்டால், ஐந்து முதல் பதினைந்து வருடங்கள் சிறை வாழ்க்கை வாழும் இவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி புனர்வாழ்வு பயிற்சி அளித்து பின்னர் அவர்களது குடும்பங்களுடன் அவர்களை சேர்த்துவிடுங்கள் என்று சொன்னோம். இதை செய்யாத இந்த அரசாங்கம், இன்று நாட்டிலே குடும்பங்களுடன் வாழ்ந்து வந்த மாணவர்களை பிடித்து வந்து புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணம் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகும்.
இந்த பாதுகாப்பு செயலாளர் நாளுக்கு நாள் புதுபுது அவதாரங்கள் எடுக்கிறார். நகர அபிவிருத்தி என்று சொல்லி இன்று இவர்தான் கொழும்பில் மாநகர ஆணையாளர். தற்போது இவர் புனர்வாழ்வு ஆணையாளராகவும் மாறியுள்ளார். எதிர்காலத்தில் இவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் அவதாரம் எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
புலி பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்த மாணவர்களை பிடித்து வந்துள்ளோம் என இவர் சொல்கிறார். இந்த நாட்டில் இன்று புலியும் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. தெற்கில் ஜேவிபி இருக்கிறது. பயங்கரவாதம் இல்லை. இருக்கும் ஒரே பயங்கரவாதம் அரச பயங்கரவாதம்தான். இது இன்று அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும், நீதிமன்றத்தையும் தாக்குகிறது. இந்த அரச பயங்கரவாதம்தான் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ அரசு அல்லாத பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்க போகிறது.
பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யாவிட்டால், அது தீ போல பரவி அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆக்கிரமிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
19 டிசம்பர் 2012
29ம் திகதி இலங்கையில் சிறு பூமியதிர்வு ஏற்படும்-இலங்கை விஞ்ஞானி
உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிலும் காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013 ஆம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரசாரமாகும். ஆனால், எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படாது. பூமியின் மீது 2013 இல் விண்கற்கள் விழும் என்று நான் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் எதிர்வு கூறினேன். அதன்பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறு துண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர்.
அதேபோன்று, 2004 ஆம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவு இலங்கையில் இடம்பெறும் என்று 2002 ஆம் ஆண்டிலேயே கூறினேன். அதற்கு அமைவாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி தாக்கின. இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முடிந்து விட்டன. எனவே 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது. 29 ஆம் திகதி இலங்கையில் பூமியதிர்வு ஏற்படும். இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். 2019 ஆம் அமெரிக்கா, ஆரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளை சந்திக்கும் எனக் கூறினார்.
18 டிசம்பர் 2012
பிறையன் செனிவிரத்னவை திருப்பி அனுப்பியது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கம்!
அவுஸ்ரேலியாவில் வதியும் மனிதஉரிமை செயற்பாட்டாளரான மருத்துவர் பிறையன் செனவிரத்னவை திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
மலேசியாவில் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் சிறிலங்கா அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக சிங்கப்பூர் வழியாகச் செல்லவிருந்த 81 வயதான மருத்துவர் பிறையன் செனிவிரத்னவை, சிங்கப்பூர் அதிகாரிகள் சிறியதொரு அறைக்குள் 5 மணிநேரம் அடைத்து வைத்திருந்ததுடன், அவருக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளைக் கூட வழங்க மறுத்திருந்தனர்.
இதுகுறித்த தகவல் அவுஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
“பெரும்பாலான நாடுகளைப் போலவே, சிங்கப்பூரிலும் ஒரு விருந்தினர் தன்னியக்க முறையில் உள்நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு நுழைவுச் சந்தர்ப்பத்திலும் அவரது தகுதியை நிரூபிக்கவேண்டும்.
அவர்கள் நுழைவதற்கு முன்னர் உள்நுழைவதற்கான எமது தேவைப்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும்.
தகுதியற்றவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும்.
மருத்துவர் பிறையன் செனிவிரத்ன தொடர்பான விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை விசாரணை நடத்திய போது, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில் உண்மையில்லை என்று கண்டறியப்பட்டது.
மருத்துவர் பிறையன் செனிவிரத்ன கடந்த 14ம் நாள் காலையில் சிங்கப்பூர் வந்தார். அவர் எமது குடிவரவுச் சாவடியில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கோரினார்.
அவர் நுழைவு அனுமதி பெறத்தகுதியற்றவராக இருந்தார்.
இந்த முடிவு கடமையில் இருந்த குடிவரவு அதிகாரியால் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இரண்டரை மணி நேரத்துக்குள் அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அவருக்கு உணவு. குடிநீர், கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு நேரம் இல்லை.
அவர் அவற்றைக் கோரியிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்.” என்று சிங்கப்பூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களமும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலிய குடிமகன் ஒருவர் திருப்பி அனுப்பட்ட தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்.
அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னதாக அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு அணுகவில்லை.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னாள் புலிகள் இன்னாள் EPDPயானாலும் கோத்தபாயவின் புனர்வாழ்வு வலையத்துள்!
விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இவர்களுள் அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்கனில் இணைந்தவர்களென பலரும் அடங்கியுள்ளமை அவ் உறுப்பினர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
யாழ்.குடநாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய போராளிகள் கடந்த சில தினங்களாக முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களது தற்போதைய வாழ்க்கை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரல் அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்னராக விடுதலைப் புலிகளது ஆதரவாளர்கள் மற்றும் போராளிகளில் ஒரு சிலர் இவ்வாறு அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியிலும் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்களிலும் இணைந்தும் பணியாற்றிவருகின்றனர். அவ்வாறானவர்களே தற்போது புதிய விசாரணை வளையத்தினுள் வந்துள்ளனர். எங்களைப்போன்றே அவர்களுக்கும் கவனிப்புக்கள் இருந்தன என்கின்றனர் போராளிகளில் ஒரு பிரிவினர்.
இதனிடையே குடாநாட்டின் பல இடங்களிலும் இவ்வாறு முன்னாள் போராளிகள் விசாரணைக்கென அழைக்கப்படுவது தொடரும் அதே வேளை சிலர் கடத்தப்பட்டு வருவது தொடர்பாகவும தகவல்கள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. எனினும் கடத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேரென்பது பற்றியோ அவர்களுள் எவ்வளவு பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது பற்றியோ தகவல்கள் இது வரை வெளியாகியிருக்கவில்லை.
17 டிசம்பர் 2012
கோத்தபாயவிற்கு முதலில் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்-விக்கிரமபாகு கருணாரட்ன
தனது பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் முதலில் புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அவர்தான் அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.அரச அதிகாரியான கோட்டாபய எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்தினாலும்,புனர்வாழ்வுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. கோத்தபாயவின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், மாணவர்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம். அன்று கல்வியில் பாகுபாடு காட்டியதால்தான் நாட்டில் போர் ஏற்பட்டது. எனவே, அரசு மாணவர் சமூகத்துடன் விளையாட முற்படக்கூடாது என தெரிவித்துள்ளார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
16 டிசம்பர் 2012
ஐ.நாவின் துரோகத்தினை அம்பலப்படுத்த ஒன்று கூடுவோம்- மே பதினேழு இயக்கம்.
தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய அரசின் செயல்பாட்டினையும் கண்டித்தும்.. ஐ. நாஇலங்கைக்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு மறுத்த சர்வதேச சுதந்திர விசாரணை, ஐ. நாவின் பொது வாக்கெடுப்பினை நடத்தக் கோரியும்.. நடைபெறும் டிசம்பர் 16ம் தேதி மாலையில் நடக்கும் எதிர்ப்பு ஒன்று கூடலில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
சர்வதேச்ச் சமூகமாய் விரிந்து நிற்கிற தமிழர்கள் ஐ. நாவின் உயர் அதிகாரிகள் தமிழினப்படுகொலையில் மெளனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளுக்கான நீதியை பெரும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச அரங்கம் இலங்கை அரசுடன் கூட்டிணைந்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய "இலங்கை மீதான சர்வதேச விசாரணை� மற்றும் � சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" என்கிற நிகழ்ச்சி நிரலை உடைத்து இருகிறார்கள்.
ஐ. நா நேர்மையற்று நடந்து கொண்டதை சர்வதேச மக்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமும், வரலாற்று கடமையும் நமக்கு இருக்கிறது. இதன் மூலமே நமக்கு நிகழ்ந்த அநீதியின் முழு பரிமாணத்தினை உணர்த்த இயலும். இதுவே நமக்கு இதுகாரும் மறுக்கப்பட்டு வந்துள்ள சர்வதேச அங்கீகரம் மீளப்பெருவதற்கான வாதத்தினை தமிழ்ச் சமூகம் முன்வைக்க இயலும். இதன் துவக்கமாய் மே பதினேழு இயக்கம் 16 டிசம்பர்2012 அன்று ஐ. நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாய் , அந்த அதிகாரிகளை விசாரிக்கவும், அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையும் திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழர்கள் சாதி,மதம், கட்சி கடந்து இணைந்து நிற்பதன் மூலம் ஐ. நாவிற்கு ஒரு நெருக்கடியை அளிக்க முடியும்.
இது துவக்க நிகழ்வாய் அமையும் அதே நேரம் சர்வதேச தமிழ்ச் சமூகத்திற்கு மே பதினேழு இயக்கம் ஐ,. நாவிற்கு எதிரான போராட்ட்த்தினை உலகெங்கும் நடத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற முருகதாசன் நினைவு நாள் அன்று உலகெங்கும் உள்ள ஐ. நா அலுவலகங்கள் முற்றுகை இடப்படவேண்டும் என்கிற வேலை திட்டத்தினை சர்வதேச தமிழ்ச் சமூகத்திடம் முன்வைக்கிறோம். இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் இனப்படுகொலையில் ஐ. நாவின் பங்கேற்பினை அறிந்து கொள்வதும், ஐ. நா திட்டமிட்டு போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்கிற பழியை தமிழர்கள் மீது சுமத்தியதை அம்பலப்படுத்த முடிவதுடன், ஐ.நா தடுத்து வைத்த இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய நீதிகளை பெற்றிட முடியும்.
சர்வதேசத்தின் அயோக்கியத்தனத்தினை உடைத்தெறிவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு என நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம். இந்த சனநாயக போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத் தமிழர்களாகிய நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.
காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த துரோகத்திற்கு பதில் கிடைக்காமல் விடமாட்டோம் என்ற உறுதி இருக்கிறது ! நமக்கு ஆதரவான சக்திகள் என எவரும்இல்லை. .வேறு ஒருவர் வந்து நமக்கான போராட்டத்தை நடத்தபோவதும் இல்லை. .ஐ.நா.வின் கொடூர முகத்தை தோலுரிப்பதே ஈழ விடுதலையின் அடுத்தகட்ட போராட்ட நகர்வு ! சாதி மிருகம் பிரிக்க நினைத்தாலும் இனத்தின் விடுதலையை விட்டுகொடுக்க தமிழர்கள் ஒரு போதும் தயாராக இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ! 2009ல் மவுனித்தோம். இன்னுமா மவுனிப்போம்.?
மாவீரன்.முத்துகுமாரின் நெருப்பு நம்மை ஒன்றிணைக்கட்டும். நாம் வெல்வோம்.
அனைவரும் கூடுவோம். மக்கள் திரள் ஒன்று கூடல்: டிசம்பர் 16, ஞாயிறு மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம்.
மே பதினேழு இயக்கம்-
மே பதினேழு இயக்கம்-
15 டிசம்பர் 2012
இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை
சிறுபான்மை இனம் கொழும்பில் பெரும்பான்மையாக மாறுவதற்கு புலிகளே காரணமாம்!
விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன.
இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின் நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. வன்னி இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன், புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன.
விடுதலைப்புலிகளின் நிறுவனங்கள் இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
14 டிசம்பர் 2012
இறுதி யுத்தத்தில் 1 லட்சத்து 06 ஆயிரம் பேரை காணவில்லை - பீபீசி ஊடகவியலாளர் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பொது மக்களை காணவில்லை என இலங்கைக்கான பீபீசியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை தவிர்த்து ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு விளக்கமளித்தே ஆக வேண்டும் என பிரான்சிஸ் ஹெரிசன் வலியுறுத்தியுள்ளார்.
2000 தொடக்கம் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பீபீசி செய்தித் தொடர்பாளராக தான் பணியாற்றியதாகவும் மத்திய வங்கியின் சனத்தொகை தகவலை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கண்டறிந்ததாகவும் தமிழ்நாட்டில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் சனத்தொகை தகவலில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் மக்கள் சனத்தொகை குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
´இன்னும் தொடரும் மரணங்கள்´ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இது குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகம் விரைவில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் அப்பிரதேசங்களில் வசித்த தாதி, ஆசிரியர், அருட்சகோதரி மற்றும் முன்னாள் போராளிகளின் அனுபவம் மற்றும் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களும் குறித்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தகாத செயற்பாடுகள் குறித்தும் புத்தகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழரின் திட்டுக்கு பயந்து சம்பந்தன் பேச்சுக்கு வரவில்லை போலும்-சொல்கிறார் மகிந்த
தமிழ்க் கூட்டமைப்பு முன்வந்தால் தீர்வுப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அண்மையில் கூட சம்பந்தன் வருவேன் என்று கூறியிருந்தார். காலையுணவு கூடத் தயார் செய்யப்பட்டு அவர் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லையே?''
என்றும் குறிப்பிட்டார். பத்திரிகை மற்றும் மின்னியல் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது ஜனாதிபதியிடம் அரசு கூட்டமைப்பு பேச்சு பற்றியும் கேட்கப்பட்டது. அப்போதே மேற்கண்ட பதிலை வழங்கிய ஜனாதிபதி, தமிழ்க் கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரவேண்டு மென்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
"சம்பந்தன் என்னுடன் பேச வருவதாக சொல்லியிருந்தார். அவர் வருவாரெனக் காலையுணவும் தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அவர் வரவில்லை. புலம்பெயர் தமிழர்கள் திட்டுவார்கள் என்று பயந்துவிட்டார் போலும்'' என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி.
சவேந்திர சில்வாவை தடுக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் பான் கீ மூன்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின் அமைதி காக்கும் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் தனக்கு கியைடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளே இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும், தாம் தனித்து இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவேந்திர சில்வா தற்போது லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை கண்காணிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு அறிக்கை தயாராகி விடுமெனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது பணிகளை உரிய முறையில் ஆற்றத் தவறியதாக பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட பெட்ரி குழு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
13 டிசம்பர் 2012
மாணவிகளையும் விசாரணைக்கு அழைக்கிறது சிங்களப் புலனாய்வுத்துறை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை, இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரட்ணம் தெரிவித்தார்.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இவர்களில் இருவரை மாத்திரமே நாளைய தினம் விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிவித்ததாக பேராசிரியர் புஷ்பரட்ணம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் ஆயருக்கு பக்கபலமாக இருக்குமாறு ஜயலத் ஜயவர்த்தன வேண்டுகோள்!
![]() |
| மன்னார் ஆயர் |
மன்னார் ஆயர் தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து ஜயலத் ஜயவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மௌனமாக கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிந்த தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில் முன்நின்றவராவார்.
கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி கஷ்டங்களை எதிர்கொண்டுவரும் இந்து மக்களுக்கும் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார், ஆற்றி வருகிறார்.
யுத்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அவர் அடைக்கலமாக இருந்தார். விசேடமாக அவரது ஆளுகையின் கீழுள்ள வன்னி மருதமடு தேவாலயத்தில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிட வசதிகளை அவர் வழங்கினார்.
இன்றைய காலகட்டத்திலிருந்த அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளின் நலன்களுக்காக மன்னார் ஆயர் இரவு, பகல் பாராது செயற்பட்டார். என்னுடன் ஆயர் பல சந்தர்ப்பங்கில் இக்கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகளுக்குச் வந்துள்ளார்
மன்னார் ஆயர் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதியுடன் பலமுறை சந்தித்து பேசியுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது பாதுகாப்பு உயரதிகாரிகளைச் சந்தித்தும் பேச்சு நடத்தினார்.
யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையிலும் ஆயர் தமது அதிக பங்களிப்பை நல்கினார். இவ்வாறு பல சேவைகளை செய்ததினால் ஆயர் பரிகாசங்கள், சவால்கள், பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
மன்னார் ஆயரிடம் பல முறை விசாரணைகள் நடத்தப்பட்டன என்பதை தனிப்பட்டமுறையில் நான் நன்கறிவேன். என்னுடன் தமிழ்க் கைதிகளை சந்திக்கச் சென்றவேளை ஆயருக்கு பல தடைகள் வந்தன. உண்மையான மனிதநேய செயற்பாட்டாளரான மன்னார் ஆயர் செய்கின்ற இந்த அளப்பரிய சேவைகளுக்காக நாம் அனைவரும் அவருக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது உணர்வு, கருத்தாகும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தன் வெளிநாடுகளுக்கு வரக்கூடாதென புலம்பெயர் தமிழர் தடை-திவயின
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுதலைப்புலிகள் குறித்து பேச கூடாது என அறிவுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் அவருக்கு புலிகள் பற்றி பேச தடைவிதித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் தம்மை தாமே அழித்து கொண்டனர் என சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையே இதற்கான காரணமாகும்.
அதேவேளை சம்பந்தனின் இந்த கருத்து தொடர்பில், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது பேச்சு காரணமாக அவர், வெளிநாடுகளுக்கு வர இடமளிக்க போவதில்லை என புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
12 டிசம்பர் 2012
மங்களவின் லண்டன் பயணத்தால் அச்சமடைந்துள்ள மகிந்த அரசு!
அவசரமாக இன்று லண்டன் நோக்கி பயணமான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் பயணம் குறித்து உடனடியாக ஆராய்நது விரிவான அறிக்கையை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர அண்மையில், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக செய்த முறைப்பாட்டை அடுத்து, மங்கள சமரவீர மீண்டும் அவசரமாக லண்டன் சென்றிருப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் திடீரென லண்டன் பயணமாகியிருப்பது அரசாங்கத்தை மேலும் உஷாரடைய செய்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் லண்டன் உட்பட ஐரோப்பாவின் சகல அரச நிறுவனங்களும் நத்தார் விடுடுறைக்காக மூடப்பட உள்ள நிலையில், மங்கள சமரவீர லண்டன் சென்றிருப்பது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.
அதேவேளை நேற்றிரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இதுவே அவரது பயணம் குறித்து அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்த காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் தனது நத்தார் விடுமுறையை ஸ்கொட்லாந்தில் கழிப்பதற்காகவே மங்கள சமரவீர இங்கிலாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பில் க.பொ.த சாதார தரப்பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவி நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 16 வயதுடைய ரி.வினோதினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை பரீட்சைக்குச் சென்று திரும்பிய வினோதினி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்க்கையிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை களவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 டிசம்பர் 2012
கோப்பாய் பகுதியில் துப்பாக்கி சூட்டுச்சத்தங்கள்!
இலங்கை நேரம் இன்று 12.12.2012 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடங்களிற்குமேல் தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கோப்பாய்ப் பக்கத்திலிருந்து கேட்கிறது சரியாக கணிக்க முடியவில்லை. இடையிடையே குண்டுச்சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து.. எதிர்பாருங்கள் ... என எமது யாழ் வாசகர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த தகவலைத் தந்தவர் முன்பும் உண்மையான பல தகவல்களை அங்கிருந்து உடனுக்குடன் பரிமாறியவர். அந்த வகையில் வாசகர்களுக்கு இந்த தகவலை மக்களின் தகவல் பரிமாற்றம் என்ற வகையில் தருகிறோம். மேலதிக தகவல் உறுதிப்படுத்தப்பட்டு வந்தால் உடன் தருகிறோம்.
நன்றி:குளோபல் தமிழ்
நன்றி:குளோபல் தமிழ்
நெடுந்தீவு துறைமுகத்தில் பொருள்கள் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி!
நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது.
உள்ளூரில் கல், மண் போன்ற பொருள்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. படகுகள் மூலம் எடுத்து வரப்படும் இந்தப் பொருள்களைத் தற்போது அமைக்கப்பட்டுள்ள துறைமுகப் பாலத்தில் இறக்கி ஏற்றுவது சிரமமாக உள்ளது.
பழைய துறைமுகப் பாலத்தில் இவற்றை இறக்கக் கூடியதாக உள்ள நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் ஏற்றுவதற்கும் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக எடுத்து வரும் பொருள்களையும் பழைய துறைமுகத்தில் இறக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என படகு ஊழியர்கள் கேட்கின்றனர்.
அதிக அளவிலான பொருள்களை எடுத்துவருவோர் உட்பட கட்டட ஒப்பந்ததாரர்களும் இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.
வடக்கில் போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை-கோத்தபாய
விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை.
தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் உஷாராக இருக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
திட்டமிட்ட சிலர் இராணுவம் மற்றும் காவற்துறையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் ரகசியமான முனைப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 டிசம்பர் 2012
பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய்! கிளிநொச்சியில் திரண்ட மக்கள்
09 டிசம்பர் 2012
யாழில் வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (9) காலை மீட்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆணினுடையது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நபர் மது போதையில் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் .போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
08 டிசம்பர் 2012
'புலி' அலரிமாளிகையிலேயே இருகின்றது: தம்மிக
புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார்.
யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டதன் காரணமாகவே மரணித்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியுமாயின் தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஏன்? தமிழர்கள் அஞ்சலி செலுத்தமுடியாது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பலரும் தற்போது கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடவேண்டிய தேவையில்லை. கருணா,கே.பி மற்றும் பிள்ளையான் போன்ற புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர்.
நீதியரசருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர குற்றச்சாட்டுகள் போதாது; பதவி விலகுமாறு மஹிந்த இறைஞ்சல்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளில் ஒருவரான கந்தையா நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதம நீதியரசரை, பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதே தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான குற்றச்சாட்டுக்களை வாசித்ததாகவும் இந்த குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு போதுமானது அல்ல எனவும் ஜனாதிபதி நீலகண்டனிடம் கூறியுள்ளார்.
எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பின்வாங்க முடியாது எனவும் இதனால், பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு கூறுங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதவி விலகினால், அவருக்கும், அவரது கணவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியும் எனவும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லையாம் அரசின் கால்களில் விழுந்த சம்பந்தன்!
தமிழ் மக்கள் அவர்களின் வாழ்க்கையில் போரை மறந்து விட தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என நாம் கூறுவதாக தவறான கருத்து ஒன்று நிலவுகிறது. அது தவறானது.
ஏனைய மாகாணங்களில் உள்ளதை போன்று இராணுவம் வடக்கு, கிழக்கிலும் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அழுத்தங்கள் ஏற்படாத வண்ணம் இராணுவம் அங்கு இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்காகவே இராணுவம் இருப்பதாக மக்கள் உணரும்படியாக இராணுவம் இருக்க வேண்டும். மக்களுக்கு தடையில்லாத வகையில் இராணுவம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
நாம் சட்டரீதியாக அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தோம். எனினும் 71 ஆம் 83 ஆம் ஆண்டுகளில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றெடுப்பதற்காக அமைதியான போராட்டங்களை நடத்தி அதனை பெற்றுக்கொள்ளும் தேவை எமக்குகிருந்தது. எனினும் இந்த நாட்டின் அரசாங்கங்களின் தவறுகள் காரணமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு உருவானது. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். எனினும் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. இதனால் அவர்கள் அழிவை தேடிக்கொண்டனர். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லாமல் போனது போன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அந்த பிரச்சினைக்கு தீர்வு தேட வேண்டும்.
அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ட அவர்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக் கூறுவதற்காகவே விளக்குகளை ஏற்றினர். அது அவர்களின் கடமை. கார்த்திகை தீபத் தினத்தில் முருகனை வணங்க அவர்களுக்கு உரிமை உள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யுங்கள்.
நான் வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கூறவில்லை. தற்போது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழ இடமளிக்க வேண்டும். எமக்கும் ஒரு கௌரவம் இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இவர்கள் மக்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடக்கு, கிழக்கு வாசிகள் என பதிவு செய்வதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை எனவும், அடுத்தடுத்து ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களே புலிகளை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் அமைப்பு உருவாகுவதற்கான காரணங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாம் கொல்லப்படாத காரணத்தினால் தம்மை புலிகளின் பிரதிநிதிகள் என சிலர் அழைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரியளவில் சர்வதேச ஆதரவினை திரட்டும் பணிகளில் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னணி வகித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யுத்தத்தின் பின்னரான வடக்கின் நிலைமைகளை பார்வையிட்டால் அவர் மிகவும் வருத்தமடைவார் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், மக்கள் அதிலிருந்து மீண்டு செல்ல வேண்டுமென விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை நிலைநிறுத்தக் கூடாது என தமிழர்கள் கருதுவதாக ஓர் நிலைப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த நிலைப்பாடு முற்றிலும் பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தேவையில்லை என தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக, தற்போது வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதனைப் போன்று இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களை விடவும் தமிழர் வித்தியாசமானர்கள் என்ற ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தற்போது வடக்கு கிழக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி கட்சி உயிர் நீத்தவர்களுக்காக நினைவு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது, அதனை எவரும் எதிர்ப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இறந்த மகனுக்காக, யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஓர் தீபமேற்றி நினைவு கூர்வதில் என்ன பிழையிருக்கின்றது என சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கில் 150000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவசியமற்றது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
07 டிசம்பர் 2012
பிரதம நீதியரசரின் வெளிநடப்பு நியாயமானதே! - சட்டத்தரணிகள்
பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இடைநடுவில் வெளிநடப்பு செய்தமை நியாயமான விடயம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இன்று (07) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ள சிலரது நடவடிக்கையால் பிரதம நீதியரசருக்கு அத்தெரிவுக்குழு முன் ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி பேசும் இந்த அரசின் பிரதிநிதிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் பிரதம நீதியரசரை நடத்தும் விதம் கவலைக்குரியது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷவின் கழிவுக் குவியலுக்குள் விமல்- ஜே.வி.பி கிணடல்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கழிவு குவியலுக்குள் விமல் வீரவன்ச விழுந்துள்ளதாகவும் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக வீரவன்சவுக்கு செய்ய முடியாதது ஒன்றுமில்லை எனவும் சில நேரம் நீதிமன்றத்திற்கும் அவர் சவால் விடுப்பதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் அந்த கழிவுக்குவியலில் விழுந்த பின்னால், அதன் நாற்றம் முழு நாட்டிலும் வீசுகிறது. எதிர்காலத்தில் இந்த நாற்றம் மேலும் அதிகரிக்கும். அவரது பயணம் வெகுதூரத்தில் இல்லை. இவை மக்களால் நிராகரிக்கப்படும் வேலைகள்.
கட்சி தலைவர் முதல் 60 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்ட போதிலும், ஜே.வி.பி என்ற கட்சி எப்போதும் வீழ்ச்சியடைந்ததில்லை. சாம்பலையும் தூசிகளையும் தட்டி விட்டு எழுந்து மீண்டும் மக்களுடன் எதிர்கால பயணத்தை மேற்கொள்ள ஜே.வி.பி தயாராக உள்ளது. வாக்குகளை வைத்து ஜே.வி.பியை அளவிட முடியாது. கடந்த காலம் முதல் சவால்களையும் தடைகளையும் ஜே.வி.பி எதிர்நோக்கி வந்துள்ளது.
தற்போது ஆட்சியில் இருப்பவர், மக்களுக்கு பொறுப்பு கூறும், மக்கள் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சியாளர் அல்ல. அவர் குடும்பத்தின் தேவைக்காக செயற்பட்டு வருகிறார். இதனை மக்கள் புரிந்து கொண்டால் மாத்திரமே நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உண்மையான தலைவர் ஒருவரின் கீழ் மக்கள் அணித்திரண்டு இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.
ராஜபக்ஷ அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்கிறார். தற்போது நீதிமன்றத்தில் தலையிட்டு அதனை அடக்க பார்க்கின்றார்.மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மதிப்பதில்லை. நாட்டில் உள்ள மத தலைவர்களின் அறிவுரைகளுக்கு செவிமடுப்பதில்லை. வெற்று காகிதங்களில் கையெழுத்திடும் நிலைமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே அரசாங்கம், பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்ப்பை நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் நியாயப்படுத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமித்துள்ளனர். தனக்கு அடிப்பணிந்த நீதிமன்றத்தை முன்னெடுத்து செல்லும் தேவையே ராஜபக்ஷவுக்கு உள்ளது. மக்கள் மத்தியில் மக்களை அணித்திரட்டுவதன் மூலம் அவற்றை தோற்கடிக்க முடியும் எனவும் சமந்த வித்தியாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
06 டிசம்பர் 2012
வைகோவின் கட்சியில் வடிவேலு?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட வைகை புயல் நடிகர் வடிவேலு, ம.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணியில் செயல்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதன் விளைவாக வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது.
இதற்கு பழிவாங்குவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஜெயலலிதாவை பற்றி வாய்பேசாத வடிவேலு, விஜயகாந்தை குடிகாரன் என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
வடிவேலுவின் இந்த தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், அந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு மங்கியது. இயக்குனர்களால் ஓரம் கட்டப்பட்டார் வடிவேலு.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமையலாம் என்றார். கருணாநிதிக்கு இது இனிப்பு செய்தியாக இருந்தாலும் வடிவேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தி.மு.க.வே கெதி என்று கிடந்த வடிவேலுக்கு தற்போது கிளி ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்துக் கொண்டால் தன்னுடைய நிலைமை அப்பேல் என்று கருதிய வடிவேலு தற்போது, வைகோவுடன் சரணடைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு அச்சாரமாக திருச்சியில் நாளை “நாடாளுமன்றத்தில் வைகோ” என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் வைகோ பங்கேற்கிறார். இதற்கான அழைப்பிதழில் வடிவேலு பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்த விழாவிலேயே வைகோ முன்னிலையில் ம.தி.மு.க.வில் வடிவேலு சேர்ந்து விடுவார் என்று தெரிகிறது. ஆனால் இதனை ம.தி.மு.க மேல்மட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.இன்னும் 10மாணவர்களை ஒப்படைக்குமாறு சிங்கள புலனாய்வுத்துறை கோரிக்கை!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் மேலும் பத்துப்பேரினை உடனடியாக ஒப்படைக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் தலைமை துணைவேந்தருக்கு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரினில் மூவர் தொடர்ந்தும் வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் வசம் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பத்துப்பேரது பெயர்ப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓப்படைக்கப்பட்ட பெயர் பட்டியலின் பிரகாரம் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் ஒவ்வொரு பீடங்களினதும் தலைவர்களுடன் மருத்துவ பீடத்தை சேர்ந்த ஐவரது பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.
எனினும் பெரும்பாலான மாணவ தலைவர்கள் சரண் அடைவது பற்றிய பேச்சிற்கே இடமில்லையென தெரிவித்துள்ளனர். தமக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிக்க வைக்கும் சதி முயற்சிகள் இருக்கக்கூடாதென மாணவர்கள் தரப்பினில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவ பீடமாணவர்களை கோப்பாய் பொலிஸிடம் ஒப்படைக்க மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் வைத்தியர்களான ரவிராஜ் மற்றும் முகுந்தன் ஆகியோர் முன்வந்து அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் பகிஸ்கரிப்பு போராட்டங்களை கைவிடுமாறு அவர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக மாணவ ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் மருத்துவ பீட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தே வருகின்றனர். இந்நிலையில் தெற்கிலிருந்து வருகை தந்து கற்கைகளினில் ஈடுபட்டு வரும் மருத்துவ பீட சிங்கள மாணவர்களை வைத்து போராட்ட முடிவு பற்றி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை விரட்டி விட்டு நட்சத்திர விடுதி அமைக்கிறது யாழ்,மாநகரசபை!
யாழில் மக்கள் குடியிருப்பு பகுதியில் 28 அரைநிரந்தர வீடுகளை அகற்றி நட்சத்திர ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்க இன்று (06) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆகியவை இணைந்து யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பண்ணைப் பகுதியிலேயே இந்த ஹோட்டலை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (06) காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நட்சத்திர ஹோட்டல் அமையவுள்ள பகுதியில் தாம் பலவருடங்களாக வசித்து வந்ததாகவும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக எழுப்பப்பட்டே இந்த நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படுவதாகவும் முன்னர் அங்கு வசித்த மக்கள் கவலை தெரிவித்தனர்.
அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டில் இருந்து இந்த பிரதேசத்தில் வசித்து வருகிறோம். அது அரச காணியாக இருந்த போதும் வீடமைப்பு அதிகார சபையினரால் எமக்கு வீடுகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 1991ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாழ் கோட்டை பிரச்சனை அதனை தொடர்ந்து 1995களில் ஏற்பட்ட இடப்பெயர்வுடன் எமக்கான வீடமைப்பு திட்டம் கிடைக்காமல் போய்விட்டது.
இதன்பின்னர் நாம் இந்த காணிகளில் மீள் குடியமர்ந்து எமது சொந்த பணத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவளித்து அரை நிரந்த வீடுகள் அமைத்து வசித்து வாழ்ந்தோம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்குவந்த சிலர் இந்த பகுதியில் ஹோட்டல் ஒன்று கட்டப்போறோம் நீங்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார்கள்.
நாம் எங்கே போவது என கேட்ட போது, இது அரச காணி நீங்கள் இங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளீர்கள், அதுவும் கடந்த ஒருவருடமாகவே இங்கே வசிக்கின்றீர்கள், எனவே நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார்கள்.
இங்கு வசிக்கும் மக்களுக்காக முத்தமிழ் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டும் இருக்கின்றது என்று கூறினோம். பின்னர் இந்த காணியில் இருந்து 500 மீற்றர் தூரத்துக்கு அப்பால் அரச காணி உள்ளது எனவும் நீங்கள் அங்கே போய் குடியேறுங்கள் என்றும் எம்மை அந்த காணியில் இருந்து அகற்றி விட்டார்கள்.
அவர்கள் காட்டிய காணியில் நாம் குடியேற போனால் இது என்னுடைய காணி என காணி உரிமையாளர் ஒருவர் காணி உறுதியுடன் வந்து எம்மை அங்கிருந்து விரட்டி விட்டார். இப்போது நாம் காணியும் இன்றி வீடும் இன்றி நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளோம் என அந்த காணியில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக யாழ் மாநகர சபை மேயரிடம் கேட்ட போது,
இக் காணி அரச காணியாகும். இங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களையே நாம் இங்கிருந்து வெளியேற்றி உள்ளோம். ஆனாலும் நாம் அவர்கள் குடியிருக்க வேறு ஒரு காணி வழங்கியுள்ளோம் என்றார்.
அவர்களுக்கு கொடுத்த காணி அரச காணி இல்லை. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என மக்கள் தெரிவித்ததாக ஊடகவியலாளர்கள் மேயரிடம் கேட்ட போது,
அப்படியா? அப்படியாயின் அந்த காணி தொடர்பாக பிரேதேச செயலரையே கேட்க வேணும் என்று கூறினார்.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் பற்றி கூறுகையில்,
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகரசபை ஆகியவை இணைந்தே யாழ்ப்பாணத்தில் இந்த ஹோட்டலை நிர்மானிப்பதாகவும் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் இந்த ஹோட்டலில் அரச ஊழியர்கள் குறைந்த செலவில் சேவையைப் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
05 டிசம்பர் 2012
நன்றாக இருக்கிறேன், விஷமிகளின் வதந்தியை நம்பாதீர் - கருணாநிதி வேண்டுகோள்
எனது உடல் நலம் குறித்து காலையிலிருந்தே விஷமிகள் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது கருணாநிதி கூறுகையில், இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கு குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, ஒரு மாநில அரசைப் பற்றி அவசரப்பட்டு நான் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. நீண்ட நாட்களாக நான், தமிழகமும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள், இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவன். எனவே உங்கள் கேள்வியின் மூலமாக தமிழக அரசையோ, கர்நாடக அரசையோ நான் இந்தப் பிரச்சினையில் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.
ஏற்கனவே காவிரி நதி பாய்கின்ற பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியது காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணைத்திற்கு கட்டுப்பட்டுத் தான் காவிரி பாய்கின்ற பகுதிகளிலே உள்ள மாநிலங்கள் எல்லாம் நடக்க வேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. அந்த முடிவினை தக்கக் காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக் கூடாது என்பது என்னுடைய கண்டிப்பான கருத்து என்றார் கருணாநிதி.
போலீஸ்காரரை மோதிக்கொன்று விட்டு தப்பிய தனியார் பேரூந்து!
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ-9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்,மாணவர்களுக்கு ஆதரவாக கனடிய பல்கலைக்கழகங்களிலும் போராட்டம்!
மாவீரர் நாளான கடந்த நவம்பர் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், விடுதலைக்காகத் தம்முயிரை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றியதைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மீது சிங்கள அரசும் அதன் படைகளும் அடக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றன. மாவீரர் நாளன்று பல்கலைக்கழகத்தினுள் புகுந்து காட்டுமிராண்டித்தனம் புரிந்த படைகள் அடுத்தநாள் அதனைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேரணியின்போதும் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து நேற்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாகம், ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகம், ஒட்டாவா - கார்ல்டன் பல்கலைக்கழகம், வோட்டலூ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இப்போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் மாணவர்களுடன் பெருந்தொகையான பிற இன மாணவர்களும் அவர்களின் மாணவர் அமைப்புகளும் இதிற் கலந்துகொண்டன.
யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைதான நான்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய், மாணவர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நிறுத்து, உடனடியாக யாழ். பல்கலைக்கழக சூழலிலுள்ள படையினரை மீளப்பெறு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அங்கு திரண்டிருந்த மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக தாம் இருப்போம் என்ற செய்தியினையும் தெரிவித்திருந்தனர்.
ஸ்காபுரோவிலுள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ் மாணவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தமது ஆதரவினைத் தெரிவித்தனர். இதில் ஸ்காபுரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கலந்துகொண்டிருந்தது. இம்மாணவர் ஒன்றியம் 11,000 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போதும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, தமிழ் மாணவர் மீதான அடக்குமுறைக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாக தமிழ் மாணவர் அமைப்பு அங்குள்ள மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மதியம் 2 மணியளவில் ஓர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விளக்குதல்கள் தமிழ் மாணவர்களால் ஏனைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்ற போராட்ட நிகழ்வுகளை மேலும் நடத்துவதற்கு இப்பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக நிகழ்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்திலும், மற்றும் வோட்டர்லூ நகரில் அமைந்துள்ள வோட்டர்லூ பல்கலைக்கழகத்திலும், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள றையர்சன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளால் ஏனைய இன மாணவர் அமைப்புகளை இணைந்து அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான எழுச்சிப் போராட்ங்கள் மாணவர்களாலும் தமிழ் சமூகத்தினாலும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன எனத் தெரியவருகின்றது. அவ்வகையில் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று றொரன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கு எழுச்சிப் பேரணி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

04 டிசம்பர் 2012
மாணவர்களுக்காக யாழில் அணிதிரண்ட தமிழ் தரப்புக்கள்!(காணொளி இணைப்பு)
03 டிசம்பர் 2012
தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை உணர்ந்தேன்
நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கிவிட்டிருக்கிறோம்.
26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.
மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.
தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..
மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி. என யாழ்,பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு சிங்கள மாணவி அவரது டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியது'
யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் எவரும் இன்று சமூமகளிக்காததனால், பல்க்லைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியிருப்பதாகப் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிங்கள மாணவர்களும் முன்னதாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, பல்கலைக்கழக சூழலில் பிரசன்னமாகியிருக்கின்ற படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டு, பல்கலைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்வைத்திருக்கின்றது.
யாழ் பல்ககக்கழகத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்லைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு, வவுனியா பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர் நேற்றும் இன்றும் சென்று பார்வையிட அனுமதித்திருந்ததாக மாணவர் ஒருவரின் பெற்றோர் தெரிவித்தனர்.
யாழ் பல்கலைக்கழக விவாகாரம் என்பது வர்த்தக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ரடிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுவதாகவும், அதனால் செயதியாளர்களிடம் தாங்கள் பேச விரும்பவில்லை என்றும் அந்தப் பெற்றார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் யாழ் பல்கலைக்கழகச் செயற்பாடுகளில் படையினர் தலையிடுவது என்பவற்றைக் கண்டித்து நாளை யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.நன்றி:பி.பி.சி
தீவகம் உட்பட பல இடங்களை படைக்கு தாரைவார்க்க டக்ளஸ் நடத்திய இரகசிய கூட்டம்!
யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கதைக்கப்படும் விடயங்கள் ஊடகங்களில் வரக்கூடாது. வரையறுக்கப்பட்டே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. என்றும் டக்ளஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் 179 இடங்களை படையினர் தமக்குத் தரும்படி கோரியுள்ளனர்.
கடந்த முறை படையினர் கோரியதையும் விட இந்த எண்ணிக்கை பரப்பளவில் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வேலணை13, மருதங்கேணி26, தெல்லிப்பழை26 நல்லூர்16, கோப்பாய்11, கரவெட்டி3, பருத்தித்துறை2 சண்டிலிப்பாய்2, நெடுந்தீவு7, சங்காணை6, யாழ்ப்பாணம்13, சாவகச்சேரி40 ,ஊர்காவற்றுறை9 என 179 இடங்கள் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் கடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டதை விட நேற்று அதிகளவான இடங்கள் கோரப்பட்டுள்ளமை பற்றியும் சபையில் கூறப்பட்டுள்ளது.
அரச காணிகள், தனியார் காணிகள், திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் படையினர் வசமுள்ள காணிகள் உள்ளடங்கலாக இந்த எண்ணிக்கை உள்ளது.
அமைச்சர் டக்ளஸ் இந்த விடயங்களை எடுத்துக்கூறிய போது அரச அதிகாரிகள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அந்த நேரம் எழுந்த வலி.தென்மேற்கு சபைத் தலைவர் அ.ஜெபநேசன் இந்தக் காணிகளுக்கான கோரிக்கைகள் தரவுகளா அல்லது உறுதிப்படுத்தப்பட்டவையை என்று டக்ளஸிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டக்ளஸ், உம்மை யார் இந்தக் கூட்டத்துக்கு அழைத்தது உங்களுக்கு அழைப்பிதல் அனுப்பவில்லையே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெபநேசன் "பொதுமக்கள் பிரதிநிதிகளான எமக்கு பொறுப்பு இருக்கிறது இது பற்றி எமக்குத் தெரிவிக்க வேண்டும். எமக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்.
மேலும் சபையின் செயலருக்கு சுகவீனம் ஆகையால் நான் வந்திருக்கிறேன்' என்று கூறினார்.
அதற்கு அமைச்சர் டக்ளஸ் இந்த விவரங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன் என்றார். ஜனாதிபதி விடயமாகவிருப்பதனால் முக்கிய விடயமாகவே இருக்கும் என்று கூறிய ஜெபநேசன் அங்கீகாரத்துக்காக கேட்கிறீர்களா என்று கேட்டார். அதற்கில்லை என்றார் அமைச்சர்.
நேற்றைய கூட்டத்தில் காணிப்பிரச்சினை தவிர இந்தியன் வீட்டுத்திட்டம், பொருளாதார அபிவிருத்தி வேலைகள் உட்பட பல விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
02 டிசம்பர் 2012
எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்
ஈழத்தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இன அழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக சமூகம் துணை போயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில், எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே ‘தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்’ என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பரிகாரமாக சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் இடம்பெற்றும் வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்ற அமர்வின் தொடக்க நாள் நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் ஆற்றிய தொடக்க நாள் உரையின் முழுவடிவத்தை இங்கே தருகின்றோம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவ அரசவை உறுப்பினர்களே! கௌரவ மேலவை உறுப்பினர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சிறப்பு விருந்தினர்களே! மற்றும் சபை அமர்வு நிகழ்வுகளைக் காண வந்துள்ள ஆர்வலர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலை வேட்கையினை அனைத்துலகமெங்கும் முரசறைந்தொலித்து, உலகப்பந்தில் தமிழீழத் தேசத்துக்கென்றொரு அடையாளத்தையே உருவாக்கி அதற்கான விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நம் மாவீரர்களை மனதிலிருத்தி இவர்களை வணங்கி எனது உரையை ஆரம்பிக்றேன்.
இன்று ஆரம்பமாகும் இந்த நேரடி அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு. இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் நமது மாவீர்களை உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்த நாம் மாவீரர் கனவை நனவாக்கும் வழிவகைகாண இன்றைய அமர்வில் கூடியுள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த நான்காவது அமர்வு முதற்தடவையாக இலண்டன் மாநகரில் நடைபெறுகிறது. இவ் அமர்வு இலண்டனில் நடைபெறுவது இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
முதலாவது, ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்கும் பிரித்தானியாவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்த மிக நெருக்கமான தொடர்பின் பாற்பட்டு எழுகிறது. ஈழத்தமிழர் தேசத்தின் இன்றைய அரசற்ற நிலைக்கும் காலனித்துவ ஆட்சிக்காலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.
ஈழத்தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் பிரித்தானியர்களால் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டமையும், காலனித்துவ முடிவின் போது நிர்ணயம் செய்யபட்ட நாடுகளின் எல்லைக் கோடுகளும் நமது தேசம் சிங்களத்தின் ஆதிக்கத்துக்கும் இன அழிப்புக்கும் உட்பட அடிப்படைக் காரணங்களாகின.
இதனால் ஈழத்தமிழர் தேசத்தை சிங்களத்தின் இன அழிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு பிரித்தானியாவுக்கு இருக்கிறது என ஈழத்தமிழ் மக்கள் கருதுகின்றனர். இதனால் இலண்டனில் கூடும் இந்த நான்காவது அமர்வு அனைத்துலச சமூகத்தின் ஊடாக நீதிகோரும் ஈழத்தமிழர் தேசத்தின் இன்றைய முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும்.
இரண்டாவது, அனைத்துலக ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டதில் இலண்டன் மாநகருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.
நமது பெருமதிப்புகுரிய தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களை நமது போராட்டத்துக்கு வழங்கியதும் இந்த இலண்டன் மாநகரம் தான். விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகச் செயலகம் தளபதி கிட்டு தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டதும் இந்த இலண்டன் மாநகரில் தான்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதற்தொட்டு; இன்றுவரை பிரித்தானியாவிலிருந்து வழங்கப்படும் போராட்டத்துக்கான பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறன. இந்த வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு இலண்டனில் நடைபெறுவது முக்கியம் பெறுகிறது.
இன்றைய இந்த அமர்வு இன்னொருவகையிலும் முக்கியம் பெறுகிறது. இந்த அமர்வில் நமது மதிப்புக்கும் வணக்கத்துக்குமுரிய இம்மானுவல் அடிகாளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தமது தோழமையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த அமர்வின் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருக்கிறார். அடிகளார் அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றியுடன் வரவேற்கிறேன்.
அடிகளாரின் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இவ்வருடம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாநகரில் கூடி சில விடயங்களில் ஒருங்கிணைந்து இயங்குவது என முடிவெடுத்துக் கொண்டமையினையும் நீங்கள் அறிவீர்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து இயங்கககூடிய விடயங்களில் தொடரந்து இணைந்து இயங்குவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிப்பாடு கொண்டுள்ளது.
இதனை விட, இந்த அமர்வுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை அமைக்கப்பட்ட பின்னர் அரசவை உறுப்பினர்களும் மேற்சபை உறுப்பினர்களும் இணைந்த வகையில் கலந்து கொள்ளும் முதலாவது அமர்வாக இது அமைகிறது.
இத்தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்பதோடு மேற்சபை அமைக்கப்பட்டுக் குறுகிய காலத்திலேயே இவர்கள் தமது செயற்பாடுகளைத் திறம்பட ஆற்ற ஆரம்பித்தமை கண்டு மகிழ்வடைவதோடு இவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஆரம்பமாகும் இந்த நான்காவது நேரடி அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் இறுதி நேரடி அமர்வாகவும் அமைய இருக்கிறது என்பதனையும் நான் உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆட்சிமைக் காலத்தை 3 வருடங்கள் என நிர்ணயம் செய்தமையினை நீங்கள் அறிவீர்கள்.
இதனால் புதிய அரசவைக்கான தேர்தல்கள் நடாத்தபட்டு, அதனூடாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட நேரடி அமர்வாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த நேரடி அமர்வு அமையும்.
இந்த வகையில் எதிர்வரும் மாதங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு முக்கியமான காலங்கள் ஆகும். இந்தக் காலப்பகுதிக்குள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நாம் வேகமாகவும் திறம்படவும் முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் அனைத்தலக அரங்கில் பெருமித்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையுமாறு நாம் நமது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு பெருமித்த தாக்கம் தரும் வழிவகை எனும் போது நமது முயற்சி பலமடங்கு பெருகிப் பலன்தரக்கூடிய மார்க்கங்களைக் கண்டறிந்து செயற்படும் வழிமுறைகளைக் குறித்து நிற்கிறது.
தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் அராஜகச் செயற்பாடுகளையும் உடனுக்குடன் அனைத்துலச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லுதலும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகைள மேற்கொள்ளலும் இதன்பாற்பட்டு அவசிய நடவடிக்கைகைளாகும்.
இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் மேலும் புரிந்து கொள்ள முயல்வோம்.
இவ்வருடத் தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
இது தொடர்பில் ஐ.நா பொதுச் செயலருக்கு நான் அனுப்பி வைத்த அவசர வேண்டுகோளில் சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளேன்.
இதன் முதற்படியாக கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் குழுவினை உடனடியாக விரைந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியதோடு யாழ் பல்கலைக்கழக பெண்கள் தங்குமிட விடுதிக்குள் உட்புகுந்த சிறிலங்கா படையினரின் அத்துமீறல் நடத்தை குறித்து அச்சத்தினையும் ஐ.நா பொதுச் செயலருக்கு தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் மீதான சிங்கள படைகளது பாலியல் துன்புறுத்தல்களையும் ஐ.நா பொதுச் செயலருக்கு சுட்டிக் காட்டியுள்ளேன்.
இவ்வேண்டுகோளின் தொடர் நடவடிக்கையாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையக அதிகாரிகளை நான் விரைவில் சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசுவதுடன் இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்ககான பாதுகாப்புக்கு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று தேவை எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் வலியுறுத்த உள்ளேன்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த இந்த நடவடிக்கை போல தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் அரசியல் அமைப்புக்கள் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புக்கள் போராட்ட அறிவித்தல்களை விடுத்துள்ளன. இவ்வாறு களத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்கள் வெவ்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அனைத்தின் திரட்சியும் இணைந்து பெருமித்த பெறுபேறினை அனைத்துலக அரங்கில் ஏற்படுத்தும் வாய்ப்புக்களைத் தரும்.
இத்தகைய பெருமித்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நாம் செயற்படுவதற்கு தமிழ் அமைப்புக்கள் மத்தியில் புரிந்தணர்வுடன் செயற்படும் மனப்பாங்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் வெவ்வேறு பாத்திரங்களை நாம் புரிந்து கொண்டு, அதனை அங்கீகரித்து நாம் செயற்பட வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஏனைய அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும். நாம் நமக்குள் தோழமையுணர்வுடன் இயங்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தனது தோழமையுணர்வை வெளிப்படுத்த இம்மானுவல் அடிகாளர் இன்றைய அமர்வில் கலந்து கொண்டுள்ளமை இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய அரசியல் அமைப்புக்களுடன் தோழமையுணர்வுடன் இயங்குகிறது. தொடர்ந்தும் அவ்வாறே இயங்கும். உதாரணமாக, இம்மாத ஆரம்பத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பங்குபற்றியிருந்தது.
இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கியிருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில் இத்தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். இந்த மாநாட்டிற்க்கு இந்தியாவிலிருந்து வருகை தந்தோருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடாத்திய தமிழருக்கான அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இம்மநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக பிரத்தானிய தமிழர் பேரவைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பானவர்களே,
நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறோம். ஈழத்தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இன அழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும். இங்கு பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே ‘தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்’ என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது.
அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழைகப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்.
இந்தப் பரிகாரம், இந்த நியாயம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும். நாம் இவ்வருடம் விடுத்த தேசிய மாவீர்நாள் செய்தியில் இதனை வலியுறுத்தியுள்ளேன்.
இன்றைய இம் அமர்வில் நாம் விவாதித்து முடிவு செய்ய வேண்டிய விடயங்கள் நமது இலக்குக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டுவதனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் தேசத்துக்குச் சாதகமான வகையில் அமையக்கூடிய முறையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு உரிய செயற்பாடுகளை நாம் கூரிய நுட்பத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
இன்றை அமர்வில் பின்வரும் விடயங்களை குறித்துக் கவனம் கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.
கடந்த அமர்வில் நாம் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக விவாதித்திருந்தோம். இங்கு தமிழீழ வெளியுறவுக் கொள்கை எனும் போது அதில் இரு அடுக்குகள் உள்ளன.
முதலாவது, தமிழீழத்தை அடைவதற்கான ஈழத்தமிழர் தேசத்தின் வெளியுறவுக் கொள்கை. இரண்டாவது அடுக்கு புதிதாய் உருவாகும் தமிழீழ நாட்டின் வெளியுறவுக் கொள்கை.
இந்த இரண்டு அடுக்குக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. முதலாவதின் அத்திவாரத்தில் இருந்தே இரண்டாவது கட்டப்படல் நடைமுறையில் சாத்தியப்படும்.
இதனால் நாம் இங்கு விவாதிக்கும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்கள் தமிழீழத்தை அடவைததற்கான வெளியுறவுக் கொள்கை என்பதனை நாம் மனதில் இருத்திக்; கொள்ள வேண்டும்.
இந்த வெளியுறவுக் கொள்கை தமிழீழத்தின் புவிசார் அரசியல் பரிமாணத்துடன் அனைத்துலக அரசியல் ஒழுங்கையும் இணைத்து விரிவாக விவாதிப்புதன் ஊடாகவே உருவாக்கப்படல் வேண்டும். இதனால்; இவ் விடயத்தை ஆழமாக விவாதிக்க நாம் மாநாடு ஒன்றினையும் ஏற்பாடு செய்ய உள்ளோம்.
எமது செயற்பாடுகளை முன்னெடுப்தற்கான வழிகாட்டிப்பாதைப் பரிந்தரையினை நமது மேலவை உறுப்பினர்கள் தயாரித்துள்ளனர். நாம் செல்லும் திக்கை நாம் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த வழிகாட்டிப்பாதை முக்கியம்.
நாம் எவ்வளவு விரைவாக பயணிக்கிறோம் என்பது முக்கியமானதுதான். ஆனால் அதனை விடச் சரியான திசையில் பயணித்தல் மிகவும் முக்கியமானதாகும்.
ஏனெனில் தவறான திசையில் எவ்வளவு வேகமாகப் பயணித்தாலும் பிழையான இடத்துக்கு விரைவாக போய்ச் சேருவோமயன்றி நாம் வந்தடைய இடத்தை தவற விட்டு விடுவோம். இதனால் நாம் பயணிக்கும் திசை குறித்த வழிகாட்டிப்பாதைப் பரிந்துரையினை இச்சபை ஆழமாக விவாதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விரைவில் தென் ஆபிரிக்கா சுதந்திரப் போரட்டக் காலத்தில் ஆபிரிக் தேசியக் காங்கிரஸினால் பிரகடனப்படுத்தபட்டது போன்ற சுதந்திரப் பட்டயம் (Freedom charter) ஒன்றினை பிரகனப்படுத் இருக்கிறது.
கௌரவ உறுப்பினர்களே,
ஈழத்தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல ஒடுக்குமறைக்கு எதிராகப் போராடும் ஏனைய தேசிய இனங்களுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த ரீதியில் அமைக்கபபட்டுள்ள ஒரு மக்கள் அரசாங்கம் என்ற ரீதியல் நாம் முன்னுதாரணமாக உள்ளோம்.
பல நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு புகலிட அரசாங்கத்துக்கும் நாடுகடந்த அரசாங்கத்துக்கம் இடையிலான வேறுபாடுகளைத் புரிந்து அவை குறித்து மேலும் அறிய முற்பட்டுள்ளனர். பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் தமது புலமைக் கண் கொண்டு எம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஓன்றின் ஆதரவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினையும் திபேத்திய புகலிட அரசாங்கத்தையும் ஒப்பு நோக்கி ஆய்வு ஒன்று தற்போது மேற்கொள்ளபடுகின்றமை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
நமது மக்கள் எம்மிடம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டவர்களாக உள்ளனர். நமது மக்கள் மட்டுமல்ல உலகில் விடுதலைக்காகப் போராடும் ஏனைய மக்களும் எம்மை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளனர்.
இத்தனைதொரு வரலாறு;றுச் சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழம் என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பை சாத்தியமாக்கி வென்றெடுக்க ஆதாரமாக அமைந்தது என வரலாறு பதிவு செய்யும் வண்ணம் நமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற அறைகூவலை விடுத்து இந்த நான்காவது அமர்வு சிறப்புற அமைய வாழ்த்தி எனதுரையினை நிறைவு செய்கிறேன் என உருத்திரகுமாரன் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்ற அமர்வு இன்று நிறைவடையவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் பல்கலை மாணவர்கள் போராட்ட அறிவிப்பு!
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தவுள்ளனர்.விரைவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன்,கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சஞ்சீவ பண்டார கூறினார்.
01 டிசம்பர் 2012
மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்று முற்பகல் செயிதியாளர் மாநாடொன்றை நடத்தியது.
இந்த மாநாட்டிலேயே தமிழ்தேசியக்கூட்டமைப்பு, இரண்டு கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறித்தது.
கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கோரமான முறையில் தாக்கியமையைக் கண்டிக்கும் முகமாகவும் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தாக்கப்பட்டமை, காரை நகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் அவர்களது வீடு எரிக்கப்பட்டைமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்.பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்பாட்டத்தை இரண்டு கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























