பக்கங்கள்

24 அக்டோபர் 2012

பிரித்தானியாவிலிருந்து 48இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்தனர். தமிழர்கள் சிங்களவர்கள் உட்பட சுமார் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இறுதி நேரத்தில் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ததாக பிரித்தானியாவின் முன்னணி ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

23 அக்டோபர் 2012

இளையராஜாவின் இசை நிகழ்வை புறக்கணிக்குமாறு கனடா தமிழர்கள் வேண்டுகோள்!

கனடாவில் இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனடா தமிழர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்று வதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான். எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது - ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ!

News Serviceதந்தையை யுத்தத்தால் இழந்து ,தாயாரை வறுமை காரணமாக பிரிந்து அம்மம்மா மற்றும் சிறியதாயாருடன் கிளிநொச்சியில் வசிக்கின்ற இந்த தமிழினி , தங்கை தமிழ் நிலா ( இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ) அவர்களை லண்டனில் வசிக்கும் ஒரு கருணை உள்ளம் கொண்ட தொழில் அதிபர் சமூக சேவை ஆவலர் ஒருவர் பொறுப்பு எடுத்துள்ளார். (வலம் கொடுப்பதை இடம் அறியக்கூடாது என்பது போல அவர் தனது பெயரை கூறி விளம்பரப்படுத்த விருப்பமில்லை) இவர் இந்த குடும்பத்திற்கான முழு பொறுப்பையும் எடுத்து தானாக மனமுவந்து உதவிகளை தொடங்கி விட்டார். இந்த தொடர்பினை கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்[KILIPEOPLE.ORG-UK] ( கிளிநொச்சியில் உள்ள தொண்டர்கள் IBC நேரலை ஊடாக நேரடியாக ஒழுங்கமைத்து கொடுத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் இந்த தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பிடம் தினமும் இப்படியான உதவி கோரல்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன நாமும் எம்மாலான வற்றை முன்னுரிமை அடிப்படையில் செய்து வருகின்றோம். கருணை உள்ளம் கொண்டவர்கள் எம்மிடம் அணுகினால் இந்த தமிழினி குடும்பத்தை போல நிறைய குடும்பங்களை உங்களுடன் நேரடியாக தொடர்பு படுத்திவிடுவோம். இப்படியான உதவிகள் தேவைபடுபவர்கள் மனம் திறந்து உரிமையுடன் எம்மிடம் அணுகுங்கள் . கேளுங்கள் தரப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் ,தேடுங்கள் கிடைக்கும் என்கிறார்கள் இந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர்(KILIPEOPLE.ORG- UK) மேலதிக தொடர்புகளுக்கு: kilipeople2011@gmail.com / /07979767485/07536436916/ 07957122472.

வன்னியில் ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா?

சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டார். அவரும், குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து, 9 மாதங்களாகியும் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாதுள்ளது. "இலங்கை இறுதிப் போரின்போது, ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சார்ள்ஸ் பெற்றி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா? எனவும் அது கேள்வியெழுப்பியுள்ளது. இதனிடையே, இந்த அறிக்கையைத் தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

22 அக்டோபர் 2012

டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார். புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுவதாகத் தெரிகிறது. 13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தான இந்திய மத்திய அரசின் கோரிக்கை, வடபகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது போன்ற விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் ஆராய்வார் என்று உயர்மட்ட இந்திய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.எதிர்வரும் புதன்கிழமையளவில் கோத்தபாய இந்தியா செல்வாரென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது.

News Serviceஇலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் மெய்யாகவே விரும்பினால், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென விரும்பினால், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலகுவில் தீர்வினை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இதுவரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் யதார்த்தமான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன் பத்மநாதன் வடக்கு கிழக்கில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொண்டு வருவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு எவரேனும் உதவிகளை வழங்கினால் அதனை விமர்சனம் செய்யும் அவசியம் கிடையாது என சுரேன் சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 அக்டோபர் 2012

ஜனநாயக மக்கள் முன்னணியின் பதவி நிலைகள் மற்றும் புதிய நிர்வாகிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் புதிய பதவிகளுக்கான தெரிவுகளும், நடப்பு பதவி நிலைகளும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன. அதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட நிர்வாகிகளாக பின்வருவோர் கடமையாற்றுவார்கள். தலைவர் மற்றும் பொதுசெயலாளர் மனோ கணேசன், பிரதி தலைவர் நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன், தவிசாளர் பி. ஜெயபாலன், உப தலைவர் முரளி ரகுநாதன், உப தவிசாளர் முரளி வேலாயுதன், நிதி செயலாளர் கே. கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, உதவி பொது செயலாளர் எஸ். குகவரதன், ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா, பிரச்சார செயலாளர் கே.டி. குருசாமி, தலைமையக செயலாளர் லோரன்ஸ் பெர்னாண்டோ, உதவி நிர்வாக செயலாளர் வேலு குமார், உதவி பிரச்சார செயலாளர் ஏ. கே. ராஜ்குமார், உதவி தலைமையக செயலாளர் எம். நாகலிங்கம் ராஜா, சமூக நலவுரிமை விவகார குழு தலைவர் ஜெரோம் விக்னேஸ்வரன்-உப தலைவர் பிரதீப் ராஜகுமாரன், வாக்குரிமை விவகார குழு தலைவர் த. மனோகரன், கல்வி விவகார குழு தலைவர் லயன் எஸ்.மனோகரன்-உப தலைவி எஸ். மஞ்சுளா, மகளிர் விவகார குழு தலைவி நந்தினி விஜயரத்தினம், இளைஞர் விவகார குழு தலைவர் எம். நவாஸ், கலாச்சார விவகார குழு தலைவர் கே. செந்தில்குமார், இடர் நிவாரண குழு தலைவர் வேலணை வேணியன்-உப தலைவர் எஸ். பாஸ்கரா.
-ஜனநாயக மக்கள் முன்னணி-

அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினராம்!

அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினர் , என அவுஸ்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி.

வடமாகாணசபையின் அரச முதலமைச்சர் வேட்பாளர் கே.பியாம்?

அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனை ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக தற்போதிருந்தே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு கே.பிக்கு கிளிநொச்சியிலுள்ள தமிழ்ச்செல்வனின் வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. தமிழ்ச் செல்வனின் இந்த வீட்டிலிருந்தே கே.பி தனது வடமாகாண அரசியல் மற்றும் வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முனெடுக்கவுள்ளார் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

20 அக்டோபர் 2012

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள்!


12இலங்கையர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுக்காக நிதி திரட்டியவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். உலகத் தமிழர் அமைப்பில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். கனேடிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு திணைக்களத்துடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் குறித்த இலங்கையர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரிட்ஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, கியூபிக் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்தமை மற்றும் நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு;ள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடும் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

புலம்பெயர் தமிழருடன் பேசப்போகிறதாம் சிறீலங்கா!

புலம்பெயர் தமிழ் மக்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிக நீண்ட காலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 அக்டோபர் 2012

டக்ளஸ் ஆஜராகித்தான் ஆக வேண்டும்!

சென்னை இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
வழக்கு என்ன?
தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர். பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மீண்டும் சூடுபிடித்த வழக்கு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.

படையினரை கொன்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல்!

வில்பத்து வனத்தின் கொட்டகச்சி என்ற பிரதேசத்தில் சாலியபுர இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி  லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரை கைக்குண்டு வீசி தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த இரண்டு விடுதலைப்புலிகள்  சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில், புலிகளின் முக்கிய உறுப்பினர்களான எஸ்.ஜே. என்ற உதயன், ஐயன் அல்லது சிவலிங்கம் என அழைக்கப்படும் சிவபிரகாஷ் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு  எதிராக 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், தாம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளிகள் அல்ல என சந்தேக நபர்கள் தெரிவித்தனர். 2007 மார்ச் 09 திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், வில்பத்து தேசிய வன பகுதியில் கடமையின் நிமித்தம் ஜீப் வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர, மேஜர் விஜேரத்ன, இராணுவப் சிப்பாய்களான கபில குமார, சுரங்க ஆகியோர் கொட்டக்கச்சி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி கசுன் பொன்னப்பெரு ஆஜராகியிருந்தார். மேற்படி சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

18 அக்டோபர் 2012

கடற்படையினர் மாதகலிலிருந்து 20ஆம் திகதி வெளியேறுவர்: மு.சந்திரகுமார்

மாதகல் மேற்கு பிரதேசத்தில் அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் புதன்கிழமை தெரிவித்தார். குறித்த பகுதியை எதிர்வரும் 20ஆம் திகதி கடற்படையினரிடமிருந்து விடுவிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 250 குடும்பங்கள் இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பிரதேசங்களுக்கான ஏனைய உட்கட்டுமாணம் மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அந்த பிரதேசங்களுக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டு தேவைகள் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் குறிப்பிட்டார். அத்துடன் மாதகல் மேற்கில் வசித்த வந்த மக்கள் சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக் மாதகல் மேற்கு மக்கள் சார்பாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை.

தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தினர் கையெழுத்து, உங்கள் உறவினர் - அயலவர் - நண்பர்களின் கையெழுத்துகள் மட்டுமன்றி, இன மதங்களுக்கு அப்பாற்பட்டதாக உங்களுக்கு அறிமுகமான, உங்களுடன் பணிபுரிகின்ற ஒவ்வொருவரின் கையெழுத்தையும் இதற்காகப் பெறுங்கள் என்று உங்களை உரிமையுடன் கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகின்றது.

ஒன்று பத்தாகி; பத்துகள் நூறாகி; நூறுகள் ஆயிரமாகி ஆயிரங்கள் லட்சங்களாகி ஒரு கோடியாக எட்டட்டும்! !
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 416-830-7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca

17 அக்டோபர் 2012

பல்கலைக்கழக மாணவர்ளுக்கு மீண்டும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி?

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் ஒன்பதாயிரம் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சவுதியில் எஜமானை கொன்ற இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது தொழில் தருணரை கொலை செய்துவிட்டு, தொழில் தருணரின் மனைவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழில் தருணரையும், அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து தொழில் தருணரை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது காவற்துறையினர் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தெரிவுக்குழு பொய்யானது; நிரூபித்தது கோத்தா கூற்று –ஐ.தே.க

“தீர்வு விடயத்தில் அரசின் உள்மனதில் இருக்கும் நிலைப்பாட்டையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். எனவே 13 ஆவது திருத்தத்தையே வழங்கத் தயாரில்லாத இந்த அரசை நம்பி கூட்டமைப்பும், நாமும் எந்த அடிப்படையில் தெரிவுக்குழுவுக்குச் செல்வது?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல. 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்கவேண்டும் என பாதுகாப்புச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு: 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை முன்வைக்கத் தயார் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமும், ஐ.நா.செயலாளரிடமும் அரசு உறுதியளித்துள்ளது. அத்துடன், 13 பிளஸ் என இந்தியாவிடமும் அது கூறியுள்ளது. ஆனால், அரச அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷ 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும எனக் கூறுகின்றார். தமிழர் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு எதுவும் இல்லை என்பதையே அவரின் கூற்று பிரதிபலிக்கின்றது. தீர்வு விடயத்தில் அரசின் உள் மனதில் உள்ள நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரச அதிகாரியாக இருந்துகொண்டு வரம்பு மீறி செயற்பட்டாலும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலைமையே நாட்டில் உள்ளது. ராஜபக்ஷ குடும்பம் என்ற அதிகாரம் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. அதேவேளை, அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எட்டப்படும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் பிரதான எதிர்க்கட்சியினராகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளோம். எனினும், தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசு தெரிவுக்குழு கைங்கரியத்தைக் கையாள்கின்றது. கோட்டாவின் கூற்று இதையே அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அத்துடன், தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையும் இதன்மூலம் அற்றுள்ளது. எனவே, 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் தீர்வை வழங்கவே தயாரில்லாத இந்த அரசை நம்பி நாம் எப்படித் தெரிவுக்குழுவுக்குச் செல்வது? கூட்டமைப்பும் எந்த அடிப்படையில் கலந்துகொள்ளும்? என்றார்.

16 அக்டோபர் 2012

அடிதடியில் இறங்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் வர்த்தக நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை சதாம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள விமானசேவை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து அதன் உரிமையாளரை இந்த குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12.00 கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உரிமையாளரான இ.சுரேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வானில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா தலைமையில் சிவில் உடையில் வந்தவர்களே நிறுவன உரிமையாளரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையும் வடமாகாண ஆளுளர் சந்திரசிறியின் செயலாளரான மேஜர் சுனில் ஜயக்கொடி தலைமையிலான பத்து பேர் கொண்ட இரர்ணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்து நிறுவனத்தினை சேதப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது வர்த்தக நிலையமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோதும் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். தாம் அந்த கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவரும் போது அதனை அச்சுறுத்தி அபகரிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா முயல்வதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டிய ஒருவர் இவ்வாறு இராணுவத்தினருடன் இணைந்து மாபியா கும்பல்போல் செயற்பட்டு வருவது தொடர்பில் தரப்பினர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இல்லாது போனால் மனித உரிமை ஆணைக்குழுவை நாடப்போவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோத்தபாயவுக்கு எதிராக, மாதகல் மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாதகல் மேற்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள், நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மோகான் பாலேந்திரா ஊடாக தங்கள் சார்பிலும் அந்தப் பகுதிப் பொது மக்களின் நலன் சார்பிலும் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெட்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியவர்களை அவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர். வடபகுதியில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 1992ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வடக்கில் 2009ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்கு வந்தபோதிலும் தமது சொந்தக் காணிகளுக்கு குடும்பங்களுடன் தங்களால் திரும்பமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பி அங்கு வசிப்பது நல்லிணக்கப்பாட்டுக்கான ஒரு முக்கிய அம்சமாகும். எனவே போர் 2009ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டதால் இது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். வலிகாமம் பகுதியில் அந்தப் பகுதி மக்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று அந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் ஏற்கனவே கட்டளையொன்றை பிறப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்குத் திரும்பவோ தமது காணிகளில் குடியேறவோ அனுமதிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு அவர்கள் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் மேற்கொண்டும் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தமது காணிகள் இருக்கும் பகுதியானது உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறும் சட்டமோ ஒழுங்கு விதிகளோ ஒருபோதும் இருந்ததில்லை. மற்றும் 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவசரகால நிலைமை நீக்கப்பட்டதை அடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என்று இலங்கையில் எந்தப் பகுதியும் பிரகடனப்படுத்தப்படுவதற்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன் தங்களையோ வேறு அப்பகுதி மக்களையோ மீளக் குடியமர்வதிலிருந்து தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் செல்லுபடியாகும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசமைப்பின் கீழ் தங்களுக்குள்ள உரிமையின்படி மீளவும் தங்கள் காணிகளில் சென்று குடியமர்வதற்கேற்ற தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டித் தீர்ப்பொன்றை வழங்கும்படி மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.

15 அக்டோபர் 2012

20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன்!

20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன் – முதியோரின் கண்ணீர் சம்பவம்கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார். ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார். ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது. இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர். பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

மட்டக்களப்பில் தமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம்!

மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கல்முனையில் ஆடைவிற்பனை நிலையம் ஒன்றில் வேலைசெய்யும் தமிழ் இளம் பெண் ஒருவரை அக்கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள போதிலும் காவல்துறையினர் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கல்முனை அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தமிழ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்களின் வறுமை காரணமாக இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்!

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும், களப்பலியான முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும், நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தனர். திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தமது உரையில் பெரும் தோல்வியில் முடிவுற்ற நோர்வேயின் சமாதான ஓப்பந்தத்தில் அனுசரணையாளராகவிருந்த எரிக் சூல்கெய்ம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகளையிட்டான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன், எத்தகைய அழுத்தங்கள் வரினும் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார். தேசிய செயற்பாட்டளார் கவிஞர் திரு. கந்தையா இராஜமனோகரன் அவர்கள் பேதுரு சகாயசீலி என்ற இயற்பெயர் கொண்ட 2ம் லெப்ரினன்ற் மாலதி அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்ததுடன், இந்திய அரசு காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த அநீதிகள் பற்றியும் விளக்கினார். லண்டனில் இம்முறை மாவீரர்நாள் நிகழ்ச்சி வழமைபோல் எக்செல் மண்டபத்தில் நடைபெறவிருப்பதனையும் அறிவித்தார். திருமதி சுகி கோபிரத்னம் அவர்கள் சமகால நிகழ்வுகள் பற்றி தனது பார்வை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தியதுடன். ஈழத்தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எமது அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்காமல் எமது அரசியல் அபிலாசைகளை அடைவதை நோக்காக் கொண்டு செயற்படவேண்டும் என வலிறுத்திக் கூறினார். மேற்கு லண்டன் பெண்கள் அமைப்பினரின் வில்லுப்பாட்டு உட்பட பல கலைநிகழ்சிகளும் நடைபெற்றன.

திவிநேகும சட்டத்திற்கு எதிராக மூன்று வெவ்வேறு வழக்குகள்!

திவிநெகுமவிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்வாழ்வின் எழுச்சி என்ற திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்தின, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சி தலைவர்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர். பிரபல மனித உரிமை சட்டத்தரணி கிரிசாந்த வெலியாமுன்ன இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 18 ம் திகதி வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெறும்.

14 அக்டோபர் 2012

மஞ்சுள திலகரட்ன தாக்குதலின் பின்னணியில் புலிகள் என்கிறார் விமல்!

நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி, மோதல்களை ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களும் புலிகளுமே உள்ளனர் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனை அரசாங்கம் கொலை செய்தது ௭ன்றே அப்போது ௭திர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். ஆனால், தற்போது உண்மை வெளிவந்துள்ளது. ௭னவே சர்வதேசமும் ஐ. நா.வும் இலங்கைக்கு ௭திராக தீர்மானங்களை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள போது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் வகையில் செயற்பட அரசாங்கம் முனையாது ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லை, ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழ்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுயாதீன நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டமை தொடர்பில் ௭திர்க்கட்சிகள், அரசாங்கம் மீது விரலை நீட்டுவது மட்டுமன்றி சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுக்கும் புலிகளுக்கும் தேவையான சூழலை உள்நாட்டில் ஏற்படுத்தவே முயற்சிக்கின்றன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர போதப் பொருட்களுக்கு அடிமையான ஒருவரை அரசு சந்தேக நபராக சுட்டிக் காட்டக் கூடும் ௭ன்று கூறியிருந்தார். மங்கள சமரவீர ௭ம். பி. கூறிய இக் கருத்துக் குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்த வேண்டும். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள புலிகள் நாட்டின் முக்கிய துறைகளிடையே மோதல்களை ஏற்படுத்த சூழ்ச்சிகளை செய்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. விரிவுரையாளர்களின் போராட்டம் மற்றும் தொழிற்சங்க போராட்டம் ௭ன்று அனை த்து போராட்டங்களின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிகளே காணப்படுகின்றது. ௭னவே நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகளுக்கு துணை போய் சரத்பொன்சேகா ௭திர்கொண்ட நிலைக்கு உள்ளாக ௭திர்க்கட்சியினர் முயற்சிக்கக் கூடாது ௭ன்றார்.

யேர்மனியில் நடைபெற்ற அகதிகள் உரிமைக்கான மாபெரும் போராட்டம்.

யேர்மனியில் மற்றும் ஏனைய நாடுகளில் தமது உயிர்களை பாதுகாக்க அகதி தஞ்சம் கோரும் வெளிநாட்டவர்களை மனிதநேயத்துடன் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி யேர்மன் தலைநகரத்தில் மாபெரும் கண்டனப் பேரணி நேற்று (13-10-12)சனிக்கிழமை நடைபெற்றது . இப் பேரணியில் யேர்மன் தழுவி பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யேர்மன் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகள் கலந்துகொண்டனர்.இப் பேரணியில் கலந்து கொண்ட அகதிகள் கடந்த நாட்களாக Wurzburg நகரத்தில் இருந்து 600 KM தூரத்தை கடந்து Berlin நோக்கி தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் . பலத்த பாதுகாப்பு மத்தியில் இப் பேரணி நடைபெற்றாலும் ,இப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு ஒரு சில யேர்மன் இனவெறியர்கள் தாக்க முயற்சித்த சம்பவங்கள் நடந்தது . யேர்மனியில் கடந்த காலங்களில் அகதிகள் மிக மோசமாக கையாளப்படுவதாலும் அத்தோடு சில அகதிகள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் காரணமாகவே இப் பேரணி மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . இப் பேரணியில் கலந்துகொண்ட அகதிகள் தம்மை யேர்மன் அரசு நாடுகடத்த வேண்டாம் என்றும் தமது நாடுகளில் அரசாங்கத்தால் மற்றும் வேறு காரணங்களால் உயிராபத்து இருப்பதால் அகதிதஞ்சம் தருமாறும் வலியுறுத்தினர் . பல்லின மனிதவுரிமை அமைப்புகள் கலந்துகொண்ட இப் பேரணியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் கலந்துகொண்டு ஈழத்தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுத்தது .

நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

13 அக்டோபர் 2012

தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜமரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் எல்லாமே தெரியவரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈழமொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன்தினம் அந்நாட்டின் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது இந்திய முக்கியஸ்தர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் இலங்கையிலுள்ள சிங்கள அமைப்புகளினிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், "சுடர் ஒளி'யிடம் கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச சமரசேகர கூறியவை வருமாறு: இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு அந்நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றன. அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் மேற்கூறப்பட்ட நாடுகளின் எதிர்பார்ப்பாகும். கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர். தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார்.

12 அக்டோபர் 2012

மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய படைகள்!

மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும்பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதற்கு அங்கு சென்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறித்த பகுதியில் காலபோகச் செய்கைக்கான ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த விவசாயிகளை, தமக்கு குறித்த காணி ஒதுக்கப்பட்டதாகக் கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர் படையினர். இதனையடுத்துக் குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து குறித்த நிலங்களை விட்டுப் படையினர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 1988 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாகப் பயிர்செய்கை மேற்கொண்டு வந்ததுடன், 2004 ஆம் ஆண்டு குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.தற்போது சுமார் 544 குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் இவர்களுக்கு விவசாய உள்ளீடுகள், உரமானியம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நோர்வே சிறுவர் நல காப்பகத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார் சிறுவர் நல விவகார அமைச்சர்.

நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று முன்நாள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ளதையடுத்து தற்போது இவ்விவகாரம் நோர்வே அரசாங்கத்திற்கு நெருவாரங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.இந்நிலையிலேயே நோர்வே நாட்டின் சிறுவர் விவகார அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருப்பதாக அப்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிறுவர் காப்பகத்தில் பொறுப்பேற்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிறுவர்கள் தொடர்பில் அமைச்சின் கவனம் திரும்பியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இது இவ்வாறிருக்க நோர்வே அரச மட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள் மத்தியிலும் நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் மற்றும் டொம் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் ஆகிய விடயங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

11 அக்டோபர் 2012

கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

newsகனடா, ரொறண்டோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கனடா கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து கனடாவில் செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழீழ ஈகர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில், கனடா நாட்டில் ரொறண்டோ நகரில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்களாகிய நாம் கட்டாயம் புறக்கணிப்போம். தமிழர்களுக்கான களியாட்ட காலம் ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட மே மாதம். மற்றும் எங்களின் மானம் காக்க, தம் உயிரை இழந்த மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை மாதம் தவிர்ந்த மாதங்களிலேயே களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டுகிறோம். எனவே அடுத்தமாதம் நடைபெறும் தமிழ் திரைப்படவிழாவை நாம் புறக்கணித்தாக வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை படையினர் கையகப்படுத்தியுள்ளனர்

கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை  படையினா கையகப்படுத்தியுள்ளனர்  :கிளிநொச்சி மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருவதுடன், பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அங்கு வரக் கூடாது எனக் கூறி விரட்டியடித்துள்ளதாக தெரியவருகிறது. மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர். ஆனால் அவர்களை வயல் நிலங்களுக்குச் செல்ல விடாமல் இராணுவம் துரத்தி அடித்து வருகின்றது. எங்களது சொந்த வயல் நிலங்களில் படையினர் குவிந்திருக்கின்றனர். எங்களையும் அவர்கள் விரட்டி அடித்தனர் என விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். நாம் இந்த நிலத்தில் 29 வருடங்களுக்கும் மேலாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றோம். நேற்று வந்த இராணுவம் இது உங்கள் நிலம் இல்லை என்று கூறி எங்களைக் கலைக்கிறது என அவர் கூறியுள்ளார். கடந்த வருடமும் கால போக செய்கையில் இங்கு தமிழ் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். வழமைபோல தற்போதும் மழைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற போது விவசாயிகளுக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. எவரும் இனி இப் பகுதிக்கு வரக் கூடாது எனவும் இராணுவத்தினர் அச்சுறுத்தினர். எனவே உரிய அதிகாரிகள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி எமது நிலங்களை மீட்டுத் தரவேண்டும் என அந்த விவசாயி கூறியுள்ளார். இதேவேளை, தமது நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதை கிருஷ்ணபுரம் விவசாய சங்கத் தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் கிராம சேவையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர் எனவும் இன்று பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கூறினார்.

திவிநெகுமவிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்.

திவிநெகுமவிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்க செயலாளர் சாமர மத்துமகளுகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவர் திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். மீண்டும் திவிநெகும சட்டமூலம் குறித்து ஆராயுமாறு அவர் இரண்டாவது மனுவில் கூறியுள்ளார். இதற்கு முன்னர் சமர்பித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திவிநெகும சட்டமூலத்திற்கு அனைத்து மாகாண சபைகளிலும் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது. வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் சட்டமூலத்தில் உள்ள ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது எனவும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அதனை நிறைவேற்ற முடியாது என உத்தரவிடும்படி சாமர மத்துமகளுகே தனது இரண்டாவது மனுவில் கோரியுள்ளார்.

10 அக்டோபர் 2012

ஒஸ்லோவில் இலங்கை தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

ஒஸ்லோவில் இலங்கை தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுநோர்வேயின் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோரிடம் டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து இந்த உண்ணாவிரப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளது. இதேவேளை உண்ணாவிரதம் நடைபெற்ற தேவாலயத்திற்கு சென்ற இலங்கை தூதுவர் குறித்த தாய்மாருடனும் ஆலய நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளவதற்காக சாகும்வரை மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தேவாலய நிர்வாகத்தின் உத்தரவாதத்தின் மூலம் வெற்றியடைந்திருப்பதாக சம்பந்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

09 அக்டோபர் 2012

இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்! முள்ளிவாய்க்காலில் சம்பவம்!

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வெள்ளாம் முள்ளிவாய்க்கால் (முள்ளிவாய்க்கால் கிழக்கு) பகுதியில் தமது பொருட்களை மீட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் எண்மர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதன் போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட மக்கள் இருவரை ஏனைய மக்கள் மீட்ட பரபரப்புச் சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முள்ளிவாய்க்கால் கிழக்கின் நந்திக்கடல் பக்கமான விடத்தல் காட்டுப் பகுதியில் போர்க்காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிகமாக குடியமர்ந்திருந்தனர். போர் தீவிரம் பெற்று இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலை ஏற்பட்டபோது அங்கிருந்த மக்கள் தமது பொருட்களை தாம் இருந்த பகுதிகளிலேயே புதைத்துவிட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு மக்கள் செல்வதற்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதன் அடிப்படையில் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தமது பொருட்களை மீட்டு வருகின்றனர். அதேவேளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் இரும்பு சேகரித்து அவற்றினை தென்னிலங்கையில் இருந்து அங்கு செல்கின்ற முஸ்லிம் மற்றும் சிங்கள வியாபாரிகளிற்கு விற்றும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதிக்குச் செல்லவேண்டாம் என்று இராணுவத்தினர் திடீரென மறித்துள்ளதுடன் அங்கிருக்கும் பொருட்களை தமக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதித்திருக்கின்றனர். இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும் மக்கள் பொருட்களை எடுக்க முற்பட்டே வருகின்றனர். இந் நிலையில் நேற்று  முற்பகல் அந்தப் பகுதியில் மக்கள் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த போது, இராணுவத்தினர் எண்மர் கைகளில் இரும்புகள், கொட்டன் தடிகளுடன் அங்கு சென்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அவ்வாறு தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மக்கள் சிதறி ஓடியிருக்கின்றனர். இருப்பினும் அவர்களில் இருவரை மடக்கிப்பிடித்த இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் கட்டிவைத்துத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் அபயக்குரல் எழுப்பியிருக்கின்றனர். அதன் போது அங்கு நின்றிருந்த வயோதிபப் பெண் ஒருவர், நீங்கள் ஆம்பிளையள் இல்லையா? அந்தப் பிள்ளைகளை இராணுவம் அடித்துக் கொல்லப்போகின்றது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கிடைத்த பொருட்களுடன் இராணுவத்தினரை நோக்கிச் சென்றிருக்கின்றனர். அவர்களின் பின்னால் பெண்கள், சிறுவர்களும் திரண்டிருக்கின்றனர். பலநூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இராணுவத்தினர் மீது துணிகரமாகத் தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரால் கட்டப்பட்டு தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இருவரையும் மீட்டுச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னர் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் அங்கு இரும்பு கொள்வனவிற்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்களைத் தாக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

08 அக்டோபர் 2012

உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒன்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர்

இராமேஸ்வரத்திலிலுந்து 20 மைல் தொலைவில் இருப்பவர்களும் சரி சென்னையிலிருந்து 8 ஆயிரம் மைல் தொலைவில் ரொறன்ரோவில் இருப்பவர்களும் எமது உயிரிலும் மேலான உறவுகளே என்பதை உணர்த்தவே நான் எனது திரைப்பட குறுவட்டு வெளியீட்டை ரொறன்ரோவில் நடத்துகிறேன் என இயக்குனர் அமீர் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார். கனடாவில் முதன்முறையாக இடம்பெற்ற தமிழ்த் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட ஆதிபகவன் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா கனடியப் பல்கலாச்சார வானொலியின், வானொலி (CMR) அனுசரணையில் நேற்றைய தினம் சனிக்கிழமை ரொறன்றோ மாநகரில் இடம்பெற்றது. இந்தியாவிலிருந்து வந்திருந்த 28 கலையுலகைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட உள்ளுர் கலைஞர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற இப் பாடல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றில் கனடியக் தமிழ்க் கலைஞர் ஒருவரின் பாடலும் இடம் இடம்பெற்றிருந்தது . கவிஞர் சிநேகன், இயக்குனர் கரு.பழணியப்பன், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் அமீரின் தமிழுணர்வுக்கு உரமேற்ற ஏறக்குறைய விழா தமிழுணர்வு விழாவாகவே இடம்பெற்றது. இவ்விழாவில் என்னை எனது உறவுகளிடமிருந்து பிரிக்க நிறையவே முயற்சிக்கிறார்கள், ஆனால் அது என்றுமே நடைபெறாது என பலத்த கைத்தட்டல்களிற்கு மத்தியில் அமீர் தெரிவித்தார். வழமையான சினிமாப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடைபெற்ற திரைப்படப் பாடல் குறுவட்டு வெளியீட்டில் அனைத்துப் பாடல்களுமே ஒலிக்கவிடப்பட்டு அப் பாடல்களிற்கு வேறு இன கலைஞர்கள் நடனமாடினர். கவிஞர் சிநேகன் உணர்வு பூர்வமான பல்லவியொன்றை மேடையில் பாடிக் காட்டினார் , இயக்குனர் கரு. பழணியப்பன் கடந்த சில தினங்களாகவே தான் இனிய, தூய தமிழை கேட்டு மகிழ்வதாகவும் இனித் தமிழ் சாகாது என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என கனடியத் தமிழர்களை புகழாரம் சூட்டினார். புலம்பெயர்ந்த தமிழ் இனம் எவ்வளவு விரைவாக உலகை ஆள முற்படுகிறது என்பதை தமிழ்ப் பெண் ஒருவரைப் பாராளுமன்ற உறுப்பிராக்கியதன் மூலம் கனடியத் தமிழர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள் என்று இயக்குனர் அமீர் நேயர்களுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டிருநதார்.

07 அக்டோபர் 2012

தமிழர்கள் ஏந்த வேண்டிய ஆயுதத்தை சர்வதேசமே தீர்மானிக்கப்போகின்றது!

தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாராக இல்லை என நேற்று யாழ்ப்பாணம் சென்ற ஐ.நா.துணைச் செயலாளர் அஜய் சிப்பரிடம் யாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அபிவிருத்தியூடாக நிரந்தரத் தீர்வை அடைய முடியாது. நிரந்தர தீர்வின் மூலமே அபிவிருத்தியை அடைய முடியும். வீதிகள் திருத்தப்படுகின்றன. கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவை யெல்லாம் உங்களின் பார்வைக்கு அபிவிருத்தியாகத் தெரியும். வீதியிலிருந்து இறங்கி உள்ளே சென்று பார்த்தால் உண்மை நிலைமை தெரியும் என்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கு குறிப்பிட்டனர். போரின் பின்னரான காலப் பகுதியில், போருக்குள் அகப்பட்ட மக்களுக்குச் சிவில் சமூகப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளபோதும், இலங்கை அரசு அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இலங்கை அரசு தொடர்ந்தும் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இன அழிப்பு பல்வேறு பட்ட வடிவங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பெருமளவு நிலங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப் பரம்பல் மாற்றியமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் மொழியுரிமை புறக்கணிக்கப்படுகின்றது. நீதி நிர்வாகங்களில் அதிகரித்த அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. நாம் இனி எமது சொந்தக் காலில் நடக்க முயற்சிக்கின்றோம். சேகுவாரா, நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான் என்றார். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனி எந்த ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை தமிழர்கள் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் வரவேற்கின்றோம். கொழும்பு, பெரதெனியா பல்கலைக் கழகங்களில் உள்ளதைப் போன்று மனித உரிமைக் கற்கை நெறி யாழ்ப்பாணத்திலும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனயாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இறுதியாக கருத்துத் தெரிவித்த ஐ.நா. துணைச் செயலாளர் நாயகம், போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டேன். இதனை ஐ.நாவுக்குச் சமர்ப்பிப்பேன். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் இலங்கை வந்த போது, போரை வெற்றி கொள்வது சுலபம், சமாதானத்தை வெல்வது கடினம் என்று இலங்கை அரசிடம் தெரிவித்திருந்தேன். அதை மீளவும் அரசுக்கு நினைவூட்டவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையை ஓங்கவைக்க கனடியத் தமிழ்ச் சமூகத்துடனான அமீரின் சந்திப்பு!

தற்போது ஆதிபகவன் திரைப்பட இசை வெளியீட்டிற்காக  கனடா வந்துள்ள இயக்குனரும், தமிழ்ப் பற்றாளரும், ஈழத் தமிழர்களிற்காக சிறை சென்றவருமான அமீர் சுல்தான் அவர்கள், கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினர், தமிழார்வ அமைப்புக்கள் மற்றும் தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்களை சந்தித்துப் பேசும் நிகழ்வு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணிக்கு ரொறன்ரோவில் ஏற்பாடு செய்துள்ளார். குறுகிய கால ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இச் சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே ஒற்றுமைக்கான தேவை குறித்த கருத்துப் பகிர்வுகளை இயக்குனர் அமீர் மேற்கொள்ளவுள்ளார். ஸ்காபரோ நகரில் இலக்கம் 3840 பிஞ்ச் வீதி கிழக்கில் அமைந்துள்ள மெற்றோபொலிரன் சந்திப்பில் இன்று மாலை 1 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு ஏற்பாடகியுள்ளது.
இந்தச் சந்திப்புப் பற்றிய மேலதிக விபரங்கள் வேண்டியவர்கள் 905 903 7227 அல்லது 416 500 4545 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

06 அக்டோபர் 2012

நல்லூர் பிரதேச சபைக் காணியை படையினர் கைப்பற்றியுள்ளனர்!

திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை அண்மையில் கூடி விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய நிலையில் நேற்றுக்காலை படையினர் இந்த காணியை கைப்பற்றியுள்ளனர். நேற்றுக்காலை அங்கு சென்ற படையினர் அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு காணியின் வாசல் கேற்றை மூடிப் பூட்டுப் போட்டதுடன் அதற்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கினர். பிரதேச சபையின் காணி என்று ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த போதும் நேற்றுக்காலை படையினர் அத்துமீறி அங்கு வந்து அதனைக் கையகப்படுத்தியதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். பாற்பண்ணைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த 5.5 பரப்புக் காணியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு சபை தீர்மானித்தது. இதனையடுத்து அங்கு பூங்கன்றுகளும் நாட்டப்பட்டன. அத்துடன் நல்லூர் பிரதேச சபைக்கு இந்தக் காணி சொந்தமானது எனத் தெரிவிக்கும் அடையாளப் பலகையும் போடப்பட்டிருந்தது. சிறுவர் பூங்காவுக்கான விளையாட்டு சாதனங்களும் அடுத்த சில தினங்களில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றுக் காலை 9.15 மணியளவில் அங்கு சென்ற 5 இராணுவத்தினர் காவலாளியைத் துரத்திவிட்டு தாங்கள் கொண்டு சென்ற பூட்டினால் கேற்றைப் பூட்டி இராணுவப் பாதுகாப்பும் போட்டனர். இதுகுறித்துக் காவலாளி நல்லூர் பிரதேச சபைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தலைவரும், உத்தியோகத்தர்களும் அங்கு நின்ற படையினரிடம், இது பிரதேச சபைக்குச் சொந்தமான காணி என்பதை விளங்கப்படுத்தினர். எனினும் படையினர் அதனைக் கேட்கவில்லை. ஊரெழுப் படைமுகாமில் இருந்து திருநெல்வேலி முகாம் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் பிரதேச சபைத் தலைவரிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து கோப்பாய் காவற்துறை நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்றைத் தான் பதிவு செய்யச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறையினர், சம்பந்தப் பட்ட காணி இராணுவத்துக்கு உரியது என அரச அதிபரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் இதுகுறித்து அரச அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியதாக தலைவர் வசந்தகுமார் கூறியுள்ளார். இந்தக் காணி யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபையால் 2003 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்துத் தான் அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பலாலிப் படைத்தலைமையக ஊடகத் தொடர்பாளர் மேஜர் மல்லவராய்ச்சி, அது இராணுவத்துக்கு உரிய காணி. பிரதேச சபைக்குச் சொந்தமானது அல்ல. அதனால்தான் இராணுவத்தினர் நேற்று அங்கு சென்றனர் என தெரிவித்துள்ளார். இந்தக் காணி அரச அதிபரால் இராணுவத்துக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இது தொடர்பில் அரச அதிபருடன்தான் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியிட்ட யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் காணியை அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

பி.பி.சி ஊடகவியலாளரின் குற்றச்சாட்டை இலங்கைப்படை மறுக்கிறது!

பி.பி.சீ (BBC) சர்வதேச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளரினால் சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.வன்னிப் போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பி.பி.சீ ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் பிரன்சஸ் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வன்னி வைத்தியசாலையில் கடயைமாற்றிய நிரோஸ் என்ற வைத்தியரே தமக்கு தகவல்களை வழங்கியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். எனினும், போர் இடம்பெற்ற காலத்தில் வன்னிப் பகுதியில் இவ்வாறான பெயரைக் கொண்ட எந்தவொரு வைத்தியரும் கடமையாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரன்சஸ் ஹரிசன் இலங்கையை விட்டு செல்வதற்கு முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் விருந்துபசாரம் வழங்கியதாகவும், அதற்கு புலித்தேவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

05 அக்டோபர் 2012

கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு!

Canada Tamils Want Ilayaraja Postpone இசைஞானி இளையராஜா கனடாவில் நவம்பர் 3ம் தேதி நடத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர். வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவில் இசைஞானி இளையாராஜாவின் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் பிரச்சனை என்னவென்றால், நவம்பர் மாதம் முழுவதும் கனடா வாழ் தமிழர்கள் ஈழத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்வர். அதுமட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நவம்பர் 2 தேதி வருகிறது. இதற்கும் கனடா தமிழர்கள் பெருந்திரளாக கூடி நினைவு கூர்வர். இவ்வாறு தமிழர்களின் பேரெழுச்சி மாதமாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவாக நவம்பர் மாதம் அனுசரிக்கப் படுகிறது. இந்த எழுச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை எப்படியாவது திசைத் திருப்ப வேண்டும், மழுங்கடிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவை கனடாவில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம் மற்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் பெயர் ட்ரினிடி ஈவன்ட்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக கனடாவில் இளையராஜாவும் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களும் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர் . இந்த சந்திப்பில் ஒரு புதுமை என்னெவென்றால், இளையராஜாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட அதிக பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமத்கப்பட்டனர். இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று இளையராஜாவிற்கு எடுத்துச் சொல்ல தமிழர் பிரதிநிதிகள் பலர் முயன்றும் இளையராஜாவை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இயக்குனர் பாரதிராஜாவை அவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவர்களது விளக்கத்தைக் கேட்ட பாரதிராஜா தான் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விட்டாராம். இப்போது ஈழத் தமிழர்கள் கவலை எல்லாம், இந்த இசைக் கச்சேரி தமிழர்களின் ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் என்பது தான் . இளைராஜாவை பெரிதும் நேசிக்கும் ஈழ மக்கள் இன்று இந்த இசை நிகழ்ச்சியால் அவரை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இளையராஜாவிற்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இளையராஜா இந்நிகழ்வை நவம்பர் மாதத்தில் நடத்தாமல் டிசம்பர் மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ நடத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் இளையராஜாவிற்கு இதற்கான கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வைத்துள்ளார். அமீர் முதலான இயக்குனர்கள் கூட இது தொடர்பாக இளையராஜாவை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக தமிழர்களும் கட்சிகளும், இயக்கங்களும் இளையராஜாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இந்த இசை கச்சேரியை நவம்பர் மாதத்தில் நடத்தாதபடி செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர்!

வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இலங் கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகா மி லி ருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட் டுள்ளார். இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்கு டியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத் தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றி யுள் ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபிலவு – சூரியபுரம் காட்டுப் பகுதிக்குள் நிர்க்கதியாக்கப்பட்ட தமி ழர்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு அமை ச் சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ இலங்கையில் இடம்பெய ர்ந்தோர் ௭வ ருமில்லை ௭னத் தெரிவித்துள்ளமை தொ டர்பாகக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்மக்கள், வலி.வடக்குப் பிரதேச த்தில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இரு ந்து கட ந்த 25 வருடங்களாக இடம் பெயர்ந்து முகா ம்களிலும் உறவினர், நண்ப ர்கள் வீடு களிலும் தங்கியுள்ளனர். இம் மக்கள் தங்கி யுள்ள முகாம்கள் தனியா ருடைய காணிகளி லுள்ளன. இந்த காணி களை விட்டு வெளி யேறுமாறு காணி உரி மை யாளர்கள் உத்தரவு பிறப்பித்து ள்ளனர். இத்தகைய நிலையில் இடம்பெயர் ந் தோருக்கு செல்வதற்கு இடமில்லை. ஏறக் குறைய 47 ஆயிரம் மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு தத்தமது பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகி ன்றன. இம் மக்களில் பலர் இந்தியாவில் இரு க்கிறார்கள். இவர்கள் தமது இடங்க ளிலிருந்து இராணுவம் வெளியேறினால் தம் மால் மீளக்குடியமர முடியும் ௭னத் தெரி வித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூ ரி லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ம க் கள் முகாம்களில் இருக்கின்றனர். இவர் கள் கடந்த 6 வருடங்களாகச் சொந்தக் காணி களுக்குச் செல்லமுடியாத நிலையில் இரா ணு வம் காணிகளை ஆக்கிரமித்துள்ளது. முல்லைத்தீவில் தற்போது கேப்பாபிலவு மக்களைக் காட்டுக்குள் வைத்திருக்கி ன் ற னர். இம் மக்களது குடியிருப்புக் காணி கள், வயல் காணிகள் ௭ன ௭ல்லாவற்றையும் இரா ணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வை த் துள்ளது. அதுபோல் கிளிநொச்சி நகரிலும் பரவிப் பாஞ்சான் கிராமம் முழுமையாக இராணு வப் பிரிகேட் பிரிவுக்காக அபகரிக்கப்பட் டுள் ளது. இங்குள்ள காணி நிலம், வீடுகளை மக்களிடம் ஒப்படைக்காது தமது கட்டுப்பா ட்டு க்குள் இராணுவத்தினர் வைத்திருக்கி ன்றனர். இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழ க்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந் தோர் சொந்த இடங்களிற்குத் திரும்பிச் செல்ல முடியாதநிலையில் இராணுவத்தினர் பொது மக்களுடைய காணிகள், நிலங்கள் வீடு களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது இப்படியிருக்க, பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மக் களை மீளக்குடியமர்த்திவிட்டோம் ௭னக் கூறுவது பொய்யாகும். பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் உலகத்திற்கு சொல் லும் இவ்விடயம் உலக நாடுகளை பிழை யான பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாகும். மெனிக்பாமை மூடி இதனை காண்பிக்க முயற்சிக்கின்றார். ஆனால் ௭மது மக்கள் இன்னமும் முகாம்களிலும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள்ளும்தான் இரு க் கின்றார்கள். இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் குறைக்கப்பட்டு விட் டது. இன்னும் 15 ஆயிரம் இராணுவத்தினர் தான் இங்கு இருக்கிறார்கள் ௭னக் கூற ப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு அமை ச்சின் தகவலுக்கமைய இலங்கையில் 2 இலட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இந்த இரண்டு இலட்சத்தில் வடக்கு மாகா ண த்தில் மாத்திரம் 15 டிவிசன்கள் இருக் கின்றன. ஒரு டிவிசனில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் இராணுவம் இருக்கின்றனர். ஆக 15 டிவிசன்களிலும் 1 இலட்சத்து 50 ஆயி ரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இதைவிட கிழக்கு மாகாணத்தில் இரண்டு டிவிசன்கள் உள்ளன. ஆகையால் அங்கே இரு பதாயிரம் இராணுவத்தினர் இருக்கி ன்றனர். ௭னவே வடக்கிலும் கிழக்கிலும் 1 இல ட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். ஏனைய பகுதியில் 3 டிவிசன்கள்தான் இருக்கின்றன. இதற் கமைய வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண் டிருக்க தென் பகுதியில் 30 ஆயிரம் இராணு வத்தினர் மட்டுமே இருக்கின்றனர். இதுதான் உண்மையான புள்ளி விபரம். இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல் லை த்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட ங்களுக்கு போவோரால் பார்க்கமுடியும். அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கூறியதால் இராணு வத் தைக் குறைத்து விட்டோம், இராணுவம் இல் லையென கூறுவது பொய்யாகும். இரா ணுவத்தினருக்கு வேலையில்லாததால் புலனாய்வுப் பிரிவுக்குள் இவர்களை இறக்கி விட்டுள்ளனர். இந்த புலனாய் வாளர்களுக்கு தாம் ௭ன்ன செய்யவேண்டும் ௭னத்தெரியாது. இதனால் புத்தக வெளியீடு, திருமண நிகழ்வு, இறந்த வீடு, பிறந்தநாள் நிகழ் வுகள் போன்றவற்றிற்கும் புலனாய்வா ளர்கள் போகிறார்கள். வீதியில் பத்துப் பேர் கூடினாலும் புலனாய்வுப் பிரிவினர் போய் நிற்கின்றார்கள். ஆகவே இங்கு சாதாரண சூழல் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். இதை த்தான் இராணுவம் இங்கு செய்து வைத் துள்ளது. இதனைச் செய்து விட்டு யாழ்ப் பாணத்தில் சாதாரண நிலை வந்து விட்டது. மக்களைச்சென்று பார்க்கலாம். ஜனநாயகச் சூழல் வந்து விட்டது ௭ன்று கூறுவது சுத்தப் பொய் யான உலகத்தை ஏமாற்றும் கருத் தாகும். ஆகவே சுமுகமான சூழல் இங்கு இல்லை ௭ன்பதே ௭னது கருத்தாகும்.

04 அக்டோபர் 2012

கேப்பாபுலவு மக்களுக்காக கூட்டமைப்பு பொருட்கள் சேகரிப்பு.

அநாதைகளாக சுடலைக்குள் தள்ளிவிட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகஅரச அதிபர் கூறுகிறார்மெனிக்பாமிற்கு மூடுவிழா நடத்தி சர்வதேசத்தை திருப்பதிபடுத்தும் நோக்கில் அங்கிருந்து கொண்டுபோய் அடிப்படை வசதிகளற்ற நிலையில் சூரிபுரத்தில் கைவிடப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு உதவுவதற்காக வவுனியாவில் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆரம்பித்துள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், சிவிசக்தி ஆனந்தன் உட்பட வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் வவுனியா நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் ஓரிரு நாட்களில் சூரிபுரத்தல் உள்ள கேப்பாபுலவு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் மக்களை எவரிடமும் மண்டியிட விடமாட்டோம்:- இரா. சம்பந்தன்

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று குற்றஞ்சாட்டினார். திவிநெகும சட்ட மூலத் திற்கு அங்கீகாரம் வழங்கி கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற் கண்டவாறு குறிப்பிட்ட சம் பந்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது. கிழக்கு மாகாணசபையில் நண்பகலுக்கு முன்னர்வரை "திவிநெகும' சட்டமூலத்தை விமர்சித்துப் பேசிவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண உறுப்பினர்கள் நண்பகலுக்குப் பின்னர் இதற்கு ஆதரவாகப் பேசத் துணிந்ததன் பின்னணி என்ன? மாகாணசபையில் விவாதத்தை சில தினங்களுக்காவது ஒத்திவைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கேட்டபோதும் அவை கணக்கில்கூட எடுக்கப்படவில்லை. ஒரு பிரேரணையை ஒத்திவைக்கக்கூட அனுமதிபெற முடியாத மு.கா. எப்படி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களை நம்பி வாக்களித்த மக்களை கைவிட்டாலும், நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களைக் கைவிடமாட்டோம். நாங்கள் எவரிடமும் விலைபோகமாட்டோம் மண்டியிடமாட்டோம் அடிபணியமாட்டோம். முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக பதவிகளுக்காக மண்டியிட்டாலும் உரிமைகளைப் பெறும் விடயத்தில் முஸ்லிம் மக்களை நாங்கள் எவரிடமும் மண்டியிடவிடமாட்டோம். முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்பதை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்தாலும், நாங்கள் முதுகெலும்புடன் இருந்து அந்த மக்களுக்காகப் பேசுவோம். முஸ்லிம் மக்களுடன் பேசுவதற்கு அவர்களுக்காகப் பேசுவதற்கு எமக்கு எவரினதும் அனுமதி தேவையில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது வழிமாறிப்போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் சரியான பாதைக்கு வருவார்கள். இவ்வாறு குறிப்பிட்டார் சம்பந்தன் எம்.பி.

03 அக்டோபர் 2012

அறங்காவலர் சிவஞானச்செல்வம் அவர்கள் காலமானார்!

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய் அன்று காலமானார்.
ஆலய ஸ்தாபக குடும்ப வழித்தோன்றலும்,அறங்காவலர் சபை தலைவருமான சிவஞானச்செல்வம் அவர்கள் சமயத்தொண்டையும் சமூகத்தொண்டையும் ஒருங்கே வழிநடத்தி சென்ற ஓர் அற்புத மனிதர்.
மாணவர்களுக்கான அறிவூட்டல் செயற்பாடுகளுக்கு ஆலய கட்டமைப்பு மூலம் பெரும் உதவி நல்கி வந்தவர்.அன்னதான சபையை நிறுவி அதன் மூலமாக ஏழை மக்களின் பசி போக்கி வந்தவர்.ஆலய திருவிழா காலங்களில் 
பொது அறிவுப்போட்டிகளை நடாத்தி திருவிழா முடிவு நாளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்து வந்தவர்.
பிரபல வில்லிசை வித்தகர்களான சின்னமணி,சதாசிவம்,உடப்பூர் சோமாஸ்கந்தன் உட்பட பலரின் வில்லிசை நிகழ்வுகள் ஆலயத்தில் இடம்பெற காரணகர்த்தாவாக இருந்தவர்.முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் கா.பொ.இரத்தினம் வரை பல அரசியல் தலைவர்களாலும்,தமிழகத்திலிருந்து ஆலய திருவிழா காலங்களில் வருகை புரியும் பல கல்விமான்களாலும் உலகிலேயே மிகவும் சிறந்த அறங்காவலர் என பாராட்டப்பெற்றவர்.அன்னாரது இழப்பானது முழுத் தமிழ்கூறு நல்லுலகிற்குமே பாரிய இழப்பாகும்.அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருடனும் மக்களுடனும் புளியங்கூடல்.கொம்மும் கதி கலங்கி நிற்கின்றது!
அன்னாருக்கு தலை வணங்கி அஞ்சலிக்கின்றோம்!

ஆதரவாக வாக்களித்த மாகாண சபை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!- நிசாம் காரியப்பர்

'தலைவர் சொல்லாதபோதிலும், தலைவர் நாட்டிலில்லாத சூழ்நிலையிலும், செயலாளர் நாயகத்தின் அங்கீகாரமின்றியும் கிழக்கு மாகாணசபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 'திவிநெகும' சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததன் மர்மம்தான் என்ன?' என கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வாக்களிக்க கால அவகாசம் கோரப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுத்திருந்த நிலையில், இந்த முடிவுக்கு மாறாகக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நடந்துகொண்டமையானது பாரிய துரோகமும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயற்பாடாகவுமே உள்ளது என்றும் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: மு.கா. செயலாளர் நாயகம் ஹஸனலியிடம் இச்சட்டமூலம் தொடர்பில் நாம் வினவினோம். 'கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. தலைவர் நாடு திரும்பியவுடன் உயர்பீடத்தைக் கூட்டி முடிவெடுக்கும்வரை இச்சட்டமூலம் தொடர்பில் வாக்களிக்க காலஅவகாசம் கோருமாறு நான் கிழக்கு மாகாணசபை மு.கா. குழுத் தலைவர் ஜெமிலிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்' என்று எமக்குப் பதிலளித்தார். ஆனால், கிழக்கு மாகாண அமைச்சரவையிலுள்ள எமது கட்சியின் இரு அமைச்சர்களும் அமைச்சரவையிலும் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். செயலாளர் நாயகத்தின் வேண்டுகோளாகவிருந்த 'காலஅவகாசம் கோரல்' என்ற விடயத்தை இவர்கள் முற்றாகப் புறக்கணித்து கட்சி விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டிருப்பதன் பின்னணியும், மர்மமும்தான் என்ன? கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக நடந்துகொண்ட இந்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கட்சியின் வேண்டுகோளைப் புறக்கணித்து 'திவிநெகும' சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததற்கான காரணத்தை இவர்களிடமிருந்து எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியவுடன் அவசரமாக உயர்பீடத்தைக் கூட்டி இது குறித்து ஆராயவேண்டும். அதியுயர்பீடத்தையும் மீறிய இவர்களின் செயற்பாடு பெரும் அதிர்ச்சியை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என மு.காவின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

02 அக்டோபர் 2012

குண்டு தொடர்பில் தகவல் வழங்கியது யார் என்று கண்டறியுங்கள்!

நான் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக மிகவும் சந்தோசத்துடன் வந்தேன். இந்நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் 119 மூலமாக ௭னது வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே, மனைவியிடம் கூறி வீட்டை திறக்க ஆவன செய்யுமாறும் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தொலைபேசியில் கோரி னர். இந்நிலையில் இதனை சிறப்புரிமையாக கருத்தில் ௭டுத்து ௭மது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் 119இற்கு தகவல் வழங்கியவர்கள் யார் ௭ன்பதை பொலிஸார் கண்டறிய தவிசாளர் நடவடிக்கை ௭டுக்க வேண்டுமெனக் கோருகின்றேம் ௭ன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது.அதன்போது அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நள்ளிரவு 12.30 மணியளவில் ௭ன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ௭னது வீட்டை திறக்க மனைவிக்கு உத்தரவிடுமாறு கோரினார்.௭னது தாயும் மனைவியும் அச்சத்துடனே@ய இருந்துள்ளனர். ௭னது 49ஆவது பிறந்த நாளான இன்று சபை அமர்வில் கலந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சியுடன் வந்தேன்.இந்நிலையில் ௭னது வீட்டில் ௭ன்ன நடக்கிறதோ ௭னக்குத் தெரியவில்லை. இவ்வாறான நிலைமை தொடரக்கூடாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ௭மக்கு பாதுகாப்பு வழங்க தவிசாளர் நடவடிக்கை ௭டுக்க வேண்டும்.முன்னாள் உப –தவிசாளராக இருந்த நீங்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.ஆகவே கடந்தகால அனுபவத்தைக்கொண்டு சபை ஒழுங்கு விதிகளுக்கு அமைய சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களென ௭திர்பார்க்கின்றோம். கிழக்கில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். அது ஆளும் கட்சியால் மாத்திரம் ஏற்படுத்த முடியாது. ௭திர்க்கட்சியினரின் பங்களிப்பும் அதற்கு இன்றியமையாததாகும். ௭னவே, கிழக்கு வாழ் அனைத்து மக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு பழைய முரண்பாடுகளை மறந்து ஆளும்கட்சி ௭திர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். சபையில் கொண்டுவரப்படும் நல்ல விடயங்களுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். அதேவேளை, ௭மது மக்களின் உரிமையை ப ாதிக்கும் நடவடிக்கைகளுக்கு ௭திர்ப்பைக் காட்டுவோம். ஆகவே, இன, மத மொழி வேறுபாடுகளை மறந்து ௭ல்லோரையும் ௭ங்களுடைய மக்களாக ஏற்று ஆட்சியமைக்க முன்வரவேண்டும். ௭திர்க்கட்சி ௭ன்பது ஜனநாயகத்தின் காவலன் ௭ன்பார்கள். அவ்வாறு செயற்பட்டு தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நாம் கண்காணிப்போம் ௭னவும் தெரிவித்தார்.

மீதமுள்ள புலிகளை அழிக்க ஒத்துழைப்பு கோருகிறார் கோத்தபாய!

நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் எஞ்சிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சீர் குலைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவிலான மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகரின் தூய்மை தொடர்பில் வெளிநாடுகள் புகழாரம் சூட்டுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

01 அக்டோபர் 2012

ஆனையிறவில் கோரவிபத்து! குடும்பஸ்தர் பலி!

இயக்கச்சிக்கும் ஆனையிறவிற்கும் இடையில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.50 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கிளி. கோணாவில் காந்தி கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இ.லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே டிப்பரினால் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.