பக்கங்கள்

20 மே 2012

அகப்பட்டுக்கொண்ட திருட்டுப்பெண்கள்!

சாவகச்சேரி ஆலயத்தினுள் சங்கிலி திருடிய இரண்டு பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.. இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை சாவகச்சேரி வாரியப்பர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது. 
வியாழ மாற்றத்தை ஒட்டி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட யாகத்தில் கலந்து கொள்ள பெருமளவு பக்தர்கள் கூடியிருந்தனர். 
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அடியார்களுடன் நின்ற இரண்டு பெண்களும் கையில் சேலைத் தலைப்பை சுற்றி வைத்துக் கொண்டு நெரிசலைப் பயன்படுத்தி பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துள்ளனர். 
இதனை அவதானித்த சிறுவன் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்ணிடம் சம்பவத்தைக் கூற அடியார்கள் திரண்டு இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரி காவல்துறையினரிடம் கையளித்தனர்.. 
மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் காவல்துறையினர் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். இந்த இருவரையும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்..

யாழ்,பல்கலை மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும் மாணவர்களுக்குரிய பாதுகாப்பினை வலியுறுத்தியும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும் மாணவர்கள் காலவரையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற தமது வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்படுகையில்:
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பல்கலைக்கழத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில், கலைப்பீட 4ம் வருட மாணவனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2012ம் ஆண்டுக்கான செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டவருமான பரமலிங்கம் தர்சானந், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால், அதிக சனநடமாட்டம் கூடிய யாழ்ப்பாணம் கலட்டி சந்தியில் உள்ள இராணுவ காவலரன் அருகில் வைத்து கூரிய மற்றும் இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தலைப்பகுதியில் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான தாக்குதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்திற்கான யாழ். பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தொடர்ச்சியான தாக்குதல்களால், மாணவர்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கல்விச் செயற்பாடுகளில் சுமூகமான முறையில் ஈடுபடமுடியாமல் போகிகின்ற நிலை தோன்றியுள்ளது.
கடந்த காலத்தில் மேற்படி மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நடாத்திய கலந்தரையாடல் கூட்டத்தின் போது, மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாதவாறு பாதுகாப்பு வழங்கப்படும் என்கின்ற உத்தரவாதத்தினை மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது என்பது தமிழ்க் கல்விச் சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க அண்மைக் காலங்களில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளும் சூழலிலும் இராணுவ புலனாய்வாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் அதிகரித்திருக்கின்றது.
இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்திருந்தும் அதனை தடுத்து நிறுத்தவதற்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு மேற்படி மாணவர் மீதான தாக்குதல்கள் குறித்து அக்கறை கொள்ளாது அசமந்தப் போக்குடன் இருப்பதும் மாணவர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் காரணமாக மாணவர் மீதான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானதொன்றாகவே மாறியுள்ளது.
எனவே யாழ். பல்கலைக்கழக மாணவர் மீதான இத்தகைய கொலை மிரட்டல்கள், கொலை முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள் போன்றவற்றை மாணவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு தொடர்ச்சியான முறையில் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் மாணவர்களுக்குரிய பாதுகாப்பினை வலியுறுத்தியும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும் மாணவர்கள் காலவரையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மதியத்துடன் தமது விரிவுரைகளை பகிஸ்கரித்துள்ள மாணவர்கள் அன்றைய தினம் துணைவேந்தரது அலுவலகத்தை சுற்றி வளைத்ததுடன் அவரிற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.துணைவேந்தர் ஆளுந்தரப்பினது கட்சி பிரதிநிதி போன்று செயற்படுவதாகும் அரச ஆதரவு தமிழ் கட்சியிற்கு பயந்து செயற்படுவதாகவும் மாணவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். 

19 மே 2012

புளியங்கூடல் இந்தன்முத்துவிநாயகர் தேர்த்திருவிழா!



புளியங்கூடல் மண்ணில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற
இந்தன் முத்து விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்களின்
பக்தி பிராவகத்தினூடே விநாயகப்பெருமான் தேரேறி அனைத்து
அடியார்களுக்கும் அருள் புரிந்தார்.கற்பூரச்சட்டி ஏந்தியும்,அங்கப்பிரதிஷ்டை செய்தும்,
காவடி எடுத்தும் அடியார்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.
நாளை தீர்த்தோற்ஷபம் நடைபெறுவதுடன் விநாயகப்பெருமான் சப்பறத்தேர் ஏறி
வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்!


இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரம் தொடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்ரன், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு நினைவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புக்களின் போது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பற்றி வலியுறுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை சந்திப்பதற்கு முன்னதாக சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளுக்காக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சுயாதீனமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணைகளின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை வழங்க முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

18 மே 2012

பரந்தன் காட்டுப்பகுதியில் குண்டுச்சத்தங்கள்!


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!


இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை சிறிலங்கா அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது சந்தேகப்படவைக்கத்தக்க விடயங்களே. இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.
தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகியோரும் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர். (இருவரும் ஒன்றாக சென்றனர்) லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார். அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார். இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் குறித்த விபரங்கள் வருமாறு,
மணலாறு கட்டளைபணியகத்தளபதிகளில் ஒருவரான செல்வராசா
மணலாறு கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்
இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்
தளபதி லோறன்ஸ்
தளபதி குமரன்
விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன்
மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா
தமிழீழ அரசியல் துறைதுணைப்பொறுப்பாளர் சோ.தங்கன்
வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்
நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு
தமிழீழ வைப்பகப்பொறுப்பாளர் வீரத்தேவன்
தமிழீழ விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் கி.பாப்பா
தமிழீழ விளையாட்டுத்துறை துணைப்பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.
தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்
தமிழீழ கல்விக்கழகப்பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்
தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப்பணிப்பாளர் சொ.நரேன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்
தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்
தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்
தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி
தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை
திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் எழிலன்
யாழ்.மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி
அரசியல்துறைநிர்வாகப்பொறுப்பாளர் விஜிதரன்
தளபதிகளில் ஒருவரான வீமன்
வனவளபாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்
சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி
முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சஞ்சை
நீதிநிர்வாகப்பொறுப்பாளர் பரா
சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி
ராதா வான்காப்புப்படையணிபொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்
தமிழீழ மருத்துவப்பிரிவுப்பொறுப்பாளர் ரேகா
மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்
மாலதி படையணித்தளபதிகளில் ஒருவரான சுகி
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்
மருத்துவப்பிரிவைச்சேர்ந்த மனோஜ்
நிதித்துறையைச்சேர்ந்த லோறன்ஸ் உட்பட்டவர்களின் நிலை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

17 மே 2012

மடுமாதா ஆலயத்தை காத்தவர்கள் புலிகளே!


மன்னாரில் உள்ள பழமைவாய்ந்த மடு மாதா சிலையை பல முறை அழிவில் இருந்து காப்பாற்றியது விடுதலைப் புலிகள் தான் எனப் பிரையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 1920ம் ஆண்டு வத்திக்கானில் உள்ள போப்பிடன் அனுமதிபெற்று, மடுவில் ரோமன் கத்தோலிக்கர்கள் புனித மாதா சிலையை நிறுவினர்.
மிகவும் பழமைவாய்ந்த இச் சிலையின் அருகில் இயேசுவின் திருவுருவமும் உள்ளது. 1988ம் ஆண்டு முதல் இலங்கைப் படையினர், மடு மாதா அலயம் மீது தாக்குதலை நடத்திவந்தனர் என்றும் 1999ம் ஆண்டு காலப்பகுதியிலும் 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம் மன்னாரை முற்றுகையிட்டபோதும் விடுதலைப் புலிகளே மாதா சிலையை காப்பாறினர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை, தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே பிரையன் செனிவிரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர்!-ஜொலண்டா


ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர் என்று ஜொலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். ஜொலண்டா போஸ்டர் அவர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புரொன் லைன் கஃபே எனப்படும், முன்னணி ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நேற்றைய தினம் நடத்தியிருந்தது. இதனை பி.பி.சி காட் டோக் என்னும் நிகழ்ச்சியை நடத்தும் ஸ்டீபன் ஸக்கர் நெறிப்படுத்தினார். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பில் இருந்து ஜனனி கலந்துகொண்டார்.
மகிந்தரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயரட்ன, கொலைக்களங்களின் தயாரிப்பாளர் காலம் மக்ரே, சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜொலண்டா மற்றும் இலங்கை அரசியல் வாதி என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் அருன் தம்பிமுத்துவும் கலந்துகொண்டார். இதில் பேசிய ஜொலண்டா, தம்மை இலங்கை அரசின் அதிகாரிகள் ஜெனீவாவில் வைத்து கேலிசெய்ததாகத் தெரிவித்தார். 78 பேர் அடங்கிய இலங்கை அரசின் குழு, தம்மையும் தமது அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களையும் அணுகி, இலங்கை அரசின் நிலை தொடர்பாக விளக்க முற்பட்டதாகவும், அதனை ஏற்க்க மறுத்த தம்மை, அவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.

16 மே 2012

திருடர்களை பாதுகாத்த சிங்களப்படைகள்!


இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை மடக்கிபிடித்த பொது மக்களை படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கொள்ளையர்களையும் பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் நுணூவில் மாணாங்குளம் பிள்ளையார் கோவிலடியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வீடென்றில் திருட்டில் ஈடுபட்ட வேளையில் இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாகியும் பொலிஸார் வரவில்லை.
இந்நிலையில், திருடர்களை கால்நடையாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இருந்த இராணுவக் காவலரணில் நின்றிருந்த படையினர், சிங்களத்தில் கொள்ளையர்களுடன் உரையாடியாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் கொள்ளையர்களை பிடித்த பொது மக்களை தாக்கி விரட்டிவிட்டு கொள்ளையர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். படையினரது இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

யாழில்,சிப்பாயை கடித்தெழுப்பிய நாகபாம்பு!


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள படைமுகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த படைச்சிப்பாய் ஒருவருக்கு நேற்று செவ்வாய் மாலை நாகபாம்பு தீண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த படைச் சிப்பாய் காவல் கடமையில் இருக்கும் போது இவர் தூங்கியதாகவும் அருகில் பற்றை ஒன்றிற்குள் இருந்த நாகபாம்பு இவருக்கு கையில் கடித்துச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்புத்துறை இராணுவ அதிகாரி பண்டாராசேனா தெரிவித்துள்ளார்.
தென்பகுதியான மகியங்கனையைச் சேந்த ஜெகத் நந்தகுமார (வயது 26) என்ற இராணுவச் சிப்பாயே நாகபாம்புக் கடிக்கு இலக்கானவராவர்.

15 மே 2012

குமுதினி படுகொலையின் நினைவுநாள்!


யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட  நாள்.
 நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.
இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இதே நாள் இப்படகு படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது.
இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு.
ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.
27வருடங்கள் கடந்தாலும் அரச பயங்கரவாதத்தின் இரத்தசாட்சியம் இந்த குமுதினி படகு படுகொலை.

யாழ்,பல்கலைக்கழகத்தில் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான சுவரொட்டிகள்!

05பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்று இரவு யாழ் பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றது.வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது : “முள்ளிவாய்கால் முடிவல்ல”,”வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்”,”உரிமைக்காய் குரல் கொடுப்போம் நீதிக்காய் போராடுவோம் ” என தமது விடுதலை வேணவாவை உயிரூட்டும்  முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர் .
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்  போராட்டம்  மௌனிக்கப்பட்டதின் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர்   ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும்  பரப்புரையின் காரணமாக  புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன்  அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய  உரிமை உண்டு, விடுதலை வேண்டும்  என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள் .
அத்தோடு  புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து  தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை  யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.

14 மே 2012

யாழில்,மகிந்த படத்தை ஏந்தி கூச்சலிட்டவருக்கு தர்ம அடி!


யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கருத்தரங்கில் மகிந்தவின் படத்தை தூக்கி வைத்துக் கொண்டு; “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு” என்று கூச்சலிட்டவர் மக்களினால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்பாடு செய்த ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வோம் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் அரசியல் கலந்துரையாடலில் முதன்மை விருந்திராக அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் போல் காடர், அவரது பாரியார் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொது மக்கள் என்ற போர்வையில் அரச புலனாய்வுப்பிரிவுனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்
இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கும் போராட்டத்தில் உயிர்நித்த போராளிகளுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
13 வது அரசியல் திருத்தச்சட்டம் தொடர்பாக சட்ட விரிவுரையாளர் குருபரன் முக்கிய உரையாற்றினர் அதனைத் தெடர்ந்து கேள்வி கேட்குமாறு சபையோர் கேட்கப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய குறித்த நபர் ஒலிவாங்கியை கையில் எடுத்து மகிந்த ராஜபக்ஸவின் படத்தைக் கையில் ஏந்தி “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு என போராடிய மண்ணில் அந்நியரை வைத்து கூட்டமா?” என ஆவேசமாக பேச கூட்டத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டு கூச்சலிட்டனர்.
உடனே ஒலிவாங்கியை கொடுத்து வெளியேறிய அவரை மக்கள் சூழ்ந்து தாக்கத் தெடங்கினர் மண்டபத்தை விட்டு வெளியேறிய நபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தலைமறைவானார்.

13 மே 2012

விடுதலையான பெண் மீண்டும் சிறைக்கே அனுப்பபட்ட பரிதாபம்!


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது. 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

12 மே 2012

கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரத் தீர்மானம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் நேற்றையதினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தல் போன்ற பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தெரிவித்துள்ளார்... 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதியுயர் சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் மாவட்ட குழுக்களும், ஏனைய பிரதேச கிராமிய குழுக்களும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.. 
மேற்படி கருத்துக்கள் யாவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த பல கட்சிகள் விரும்பினாலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அடுத்த சந்திப்பில் கலந்துரையாட வேண்டுமென சம்பந்தன் கூற அது ஏற்கப்பட்டு அடுத்த வாரமளவில் மீண்டும் சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இளைஞர் மீது சூடு நடத்திய சிப்பாய்களை விசாரிக்க உத்தரவு!


விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்திவரும் காவற்துறையினர், சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவத்தினர் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றிடம் நேற்று அனுமதி கோரினர்.
அதற்கு அனுமதி வழங்கிய கிளிநொச்சி நீதிமன்றம், இராணுவத்தினர் மூவரதும் துப்பாக்கிகளையும் காவற்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அந்தப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த அன்றே விசாரணை நடத்தச் சென்ற சமயம், இது இராணுவத்தினர் தொடர்புபட்டது என்ற காரணத்தால் இராணுவ நீதிமன்றமே விசாரணை செய்யும் என்று கூறிய இராணுவ அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தத் தமக்கு அனுமதி மறுத்துவிட்டார் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதனை அடுத்தே, சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பகுதியில் இருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவக் கோப்ரலையும் மற்றும் இரு சிப்பாய்களையும் கைது செய்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை காவற்துறையினர் கோரினர்
இதேவேளை, காட்டுக்குள்ளேயே சம்பவம் இடம்பெற்றதாகவும் இராணுவத்தினரே தம்மைச் சுட்டார்கள் என்றும் சம்பவத்தில் தப்பிய இளைஞர் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலேயே காவற்துறையினர், தற்போது இராணுவத்தினரிடம் விசாரணை நடத்த நீதிமன்றின் அனுமதியை நாடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான எஸ்.கிருஷ்ணகுமார் அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பன்றி வேட்டைக்கு அல்லது இருப்பு தேட இந்த இளைஞர்கள் சென்ற சமயத்தில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று அயலவர்கள் கூறியுள்ளனர். எனினும் என்ன காரணத்தால் இளைஞர்கள் சுடப்பட்டார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. 

11 மே 2012

சிங்க கொடியை இனியும் ஏற்றுவேன்!-இரா.சம்பந்தன்


sampanthan - raniசிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.
ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.
தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.
தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.
அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.
நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.
கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.
நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.
விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நன்றி – தினக்கதிர்

10 மே 2012

சிங்கக்கொடி சம்பந்தன்,எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ்!


பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.சிங்கக்கொடி சம்பந்தன் என டக்ளஸ் தேவானந்தாவும் எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருவரையொருவர் விளித்துக்கொண்டதுடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பேச்சை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீண்டநேரம் அமைதியாகவிருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் தமது பேச்சில் அமைச்சர் டக்ளஸை சுட்டிக்காட்டவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் எனது அருமை நண்பர் டக்ளஸ் தேவானந்தா என்று மட்டும் ஒரு தடவை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையை ஆரம்பித்தவுடனேயே “மாவிட்டபுரத்திலுள்ள தனது வீட்டுக்குப்போக முடியவில்லை. அது அதியுயர் பாதுகாப்பு வலயமாகவுள்ளது. நானும் ஒரு அகதிதான்” என்று இங்கு குறிப்பிட்டார். அதுபொய். ஏனெனில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து அப்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அங்கிருந்த தனது வீட்டை மாவை சேனாதிராஜா எப்போதோ விற்று விட்டார் என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாவை சேனாதிராசா அமைச்சர் டக்ளஸுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். மாவை சேனாதிராஜாவுடன் தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து டக்ளஸுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர். இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்களும் கேள்விக்கணைகளும் பறந்தன. சிங்கக்கொடி சம்பந்தன் என்றும் எலும்புத்துண்டு டக்ளஸ் என்றும் கூட வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.
உங்களால் இந்தியாவுக்கு போக முடியுமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டக்ளஸுக்கு சவால் விட்டபோது, தாராளமாக செல்வேன். எனக்கு இந்தியாவில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு மட்டுமேயுள்ளது. கொலைக்குற்றச்சாட்டு இல்லை. உங்களின் தலைவர்கள் பிரபாகரன், உமாமகேஸ்வரன் இந்தியாவில் ஆயுதம் வைத்திருக்க வில்லையா? சுடுபடவில்லையா? நீங்கள் அத்தனைபேரும் ஆயுதம் வைத்திருந்தவர்கள் தானே? என்றார்.
அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏதோ கூற, நீங்கள் மண்டையன் குழுவின் தலைவர்தானே. நீங்கள் அப்போதும் TNA (தமிழ்த் தேசிய இராணுவம்) இப்போதும் TNA (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) என்றார் டக்ளஸ்.இதற்கு சுமந்திரன் எழுந்து நின்று ஏதோ கூற முற்பட்டபோது நீங்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கு வாதாடுபவர்தானே. உங்கள் விளையாட்டுக்கள் எங்களுக்கும் தெரியும் என்றார் டக்ளஸ்.
அப்போது சம்பந்தன் ஏதோ கூற முற்பட்டபோது அமைச்சர் டக்ளஸ் உரத்த குரலில் “அனைவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கோ சிங்கக்கொடி சம்பந்தன் ஐயா ஏதோ கூற முற்படுகின்றார் என்னவென்று கேட்போம் என்று” கூறியபோது சம்பந்தன் சிரித்தவாறு எதுவும் பேசாமல் இருந்தார். அமைச்சர் டக்ளஸ் தொடர்ந்தும் பலதடவைகள் சிங்கக்கொடி சம்பந்தன் என்று அழைத்துக் கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸுக்கும் நீண்ட நேரமாக கடும் தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சபைக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அவர் சபையை கட்டுப்படுத்த பலமுறை முயன்றபோதும் அது முடியவில்லை. இறுதியில் சம்பந்தனிடம் உங்கள் உறுப்பினர்களை தயவு செய்து கட்டுப்படுத்துங்கள் என்று வலியுறுத்திய அவர் அமைச்சர் டக்ளஸையும் உரையை மட்டும் நிகழ்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இருதரப்பும் தர்க்கத்தையே தொடர்ந்தன. மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியபோதும் அவை ஒழுங்குப்பிரச்சினையல்லவென சபைக்கு தலைமை தாங்கியவரால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் அமைச்சர் டக்ளஸ் உரையாற்றாமலே அவரது நேரம் முடிவடைந்தது. அதன் பின்னர் பொன் செல்வராசா பேசிய போதும் டக்ளஸ் அவர்களுடன் தனது தர்க்கத்தை தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் மாவை சேனாதிராஜா, தன்னை அகதியென்று கூறுவது தவறென அமைச்சர் டக்ளஸ் கூறிய போது அரச தரப்பின் தேசிய பட்டியல் எம்.பி.யான அஸ்வர் எந்த அகதி முகாமில் இருந்தவரென கேட்டார். இதற்கு சுமந்திரன் எம்.பி. தம்புள்ளயில் என்று கூறியதையடுத்து அஸ்வர் அமைதியாக இருந்து விட்டார்.

09 மே 2012

உடுவிலை சேர்ந்தவர்கள் வாகன விபத்தில் கனடாவில் பலி!


கனடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். மார்க்கம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் மோதுண்டே இவர்கள் இறந்ததாக ஒன்ராரியோ மாகாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பயணிகளுடன் சென்ற வாகனமொன்று ரயர் மாற்றுவதற்காக வீதியின் ஓரத்தில் தள்ளிச் செல்லப்பட்டபோது வாகனத்தைப் பார்ப்பதற்காக அதிலிருந்து கணவனும் மனைவியும் இறங்கியுள்ளனர்.
அச் சமயம் டொயோட்டோ பிக்கப் வாகனமொன்று அவர்களை மோதியுள்ளது. ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றவர் ஆஸ்பத்திரியில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த மற்றைய இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளனர். தற்போது அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக ரொறன்ரோ சி.ரி.வி. கனடா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பிக்கப் ரக்கின் பெண் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் பலியான ஜோர்ஜ் தேவராஜா (வயது 59), வாமா தேவராஜா (வயது 57 ) ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரிட்டனில் வசித்து வந்தவர்கள் என்றும், கனடாவுக்குச் சென்ற தருணத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக கொழும்பிலுள்ள அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 

08 மே 2012

நல்லூரில் பட்டப்பகலில் அடிதடி! கொள்ளை!


நல்லூர் பின் வீதியில் உள்ள பாரதியார் சிலை சந்திப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகலில் நுழைந்த ரவுடிகள் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருள்களையும் அடித்து நொருக்கி விட்டு தங்கச் சங்கிலி ஒன்றையும் அறுத்துச் சென்றுள்ளனர்.இதன் போது காயமடைந்த வீரையா ஜெகசோதி (வயது 56) என்பவர் தலையில் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வீட்டார்  தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை எமது வீட்டு நாய் குறுக்கே பாய்ந்ததால் தமது மோட்டார் சைக்கிள் சேதமடைந்து விட்டதாகவும், எனவே அதனை திருத்தித் தருமாறும் இருவர் எங்கள் வீட்டில் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றனர்.
நாங்களும் அதன்படி மோட்டார் சைக்கிளைத் திருத்தி வைத்திருந்தோம். இன்று காலை (நேற்று) மீண்டும் வந்த அவர்கள் தமது மோட்டார் சைக்கிள் சரிவரத் திருத்தப்படவில்லை என்று கூறி இரண்டரை லட்சம் ரூபா பணம் தரவேண்டும் அல்லது நாயையும் வீட்டில் உள்ளவர்களையும் வெட்டுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
சொன்னபடியே மாலையில் கொட்டன்கள், பொல்லுகளுடன் வந்த ரவுடிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு வீட்டின் யன்னல் கண்ணாடிகள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோ, வீட்டுக்குள் தொங்க விடப்பட்டிருந்த படங்கள் என்பவற்றை அடித்து நொருக்கி எங்களையும் கடுமையாகத் தாக்கினர் என்று தெரிவித்தனர்.
 அத்தோடு வீட்டில் இருந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நேற்றிரவு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
நாய் குறுக்கே பாய்ந்ததில் சேதமடைந்ததாக குறிப்பிடப்படும் மோட்டார் சைக்கிளை (EP VN 0125) நேற்றிரவு அந்த ரவுடிகள் உருட்டிச் சென்று அயலில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை அங்கு வந்த பொலிஸார் எடுத்துச்சென்றனர்.

07 மே 2012

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஆராய இன்னொரு ஆணைக்குழு!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமூல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான மற்றுமொரு விசேட ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. 
அதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைககளில் கூறப்பட்டவற்றில் எவற்றினை நாட்டில் அமூல்படுத்த முடியும் என்பது குறித்தும் இந்த புதிய ஆணைக்குழு ஆராய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ள இருக்கின்ற பணிகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
அத்துடன் இந்தக் குழுவில் தலைமை வகிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆணைக்குழுவிற்குரிய ஏனைய உறுப்பினர்களை நியமிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இருப்பினும் மிக விரைவில் இந்த ஆணைக்குழு தமது பணிகளை ஆரம்பிக்கும் என கூறியுள்ளார். இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நாட்டில் அமூல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

06 மே 2012

சிறீலங்காவை அமெரிக்கா உளவு பார்த்ததாம்!

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் உளவு பர்த்ததாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ரகசியமாக கண்காணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் விடுத்த செய்தியை அது சுட்டிக்காட்டியுள்ளது. 
அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் ஹிலரி கிளின்ரன், குறித்த உளவுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

05 மே 2012

சிங்கக்கொடியை விரும்பியே ஏந்தினேன்!


sampanthan - raniஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை (சிங்கக்கொடியை) ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கக்கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை(சிங்கக்கொடியை) ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்கள் மே தின ஊர்வலத்தின் போது விரும்பியே ஏந்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.அத்தோடு எதிர் கட்சிகள் திட்டமிட்டே சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்களின் கையில் கொடுத்ததாக மாவை சேனாதி ராஜா அவர்கள் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தமையும் அரியநேத்திரன் ரணில் விக்கிம சிங்க மீது குற்றம் சுமத்தியதும் அபாண்டமான பொய்களென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

04 மே 2012

தச்சந்தோப்பில் இளைஞர் சடலமாக மீட்பு!


தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு பகுதியினில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.
எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.  மிக அண்மைக் காலங்களினில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும் ஒன்றாகும்.
துப்பாக்கிதாரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக துப்பாக்கியை நுழைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எனினும் அவ்வேளை குறித்த அறையினுள் எவரும் இருந்திராமையால் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை.
ஏற்கனவே இதே பகுதியில் இளம் யுவதியொருத்தி கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மாடு மேய்க்கவென சென்றவரென நம்பப்படும் பொதுமகன் ஓருவர் இதே பகுதியை அண்மித்த பகுதியில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் குறைந்த இப்பகுதியில் வெறுமனே உள்ளாடைகளுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட கொலையொன்றாக இதுவிருக்கலாமென நம்பப்படும் நிலையினில் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில்,படையினர் இருவர் சுட்டுக்கொலை!


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் திரையரங்கிற்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இராணுவத்தினர் இருவரும் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதுவரையில் அந்தப் பகுதியிலேயே இருவரது சடலங்களும் காணப்படுவதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

03 மே 2012

மாவை பகிரங்க மன்னிப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடியேற்றியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது புலிகளின்குரல் வானொலியின் செய்திப் பொறுப்பாசிரியர் இறைவன் (தி.தவபாலன்) மற்றும் போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி உட்பட்டவர்களது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட்டவர்கள் சுடர்களை ஏற்றி மாலைகளை அணிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கோபாலரட்ணம், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தில்லைநாதன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரபாகன், உதயன், சுடரொளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இன்று உலக ஊடக சுதந்திர நாள்!


prakeerthகடத்தப்பட்டு காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தமது பார்வையின் ஒரு பகுதியாக எக்னெலிகொட விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா முதன்மைப்படுத்தவுள்ளது.
உலக ஊடக சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே சிறிலங்காவில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட தொடர்பான வழக்கில் நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதகாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

02 மே 2012

மே தின ஊர்வலத்தில் புலிக்கொடி!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்துள்ளார்.
ஊர்வலத்தை படமெடுத்த வீடியோ கமராக்கள் இவற்றையும் படமெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்து, மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்னுமொருவர் தமிழீழ படம் பொறிக்கப்பட்டுள்ள உள்சட்டையை அணிந்து அதன்மேல் வேறொரு சட்டையை அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, குறிப்பிட்ட நேரத்தின் பின்  தனது மேற்சட்டையை கழட்டி தமிழீழத்தைக் காட்டியவாறு ஓடியுள்ளார்.
குறித்த நபர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும், அவர்களது நோக்கம் என்ன என்பதும், அவர்கள் யார் என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

01 மே 2012

தம்புள்ளை காளியம்மன் ஆலயத்திற்கு பூரண பாதுகாப்பு!

தம்புள்ளையில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.. 
தம்புள்ளை புனித பூமி என அவர்கள் கூறும் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக இனவாத பௌத்த பிக்குகள் கூறிவருகின்றனர். 
அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று போராட்டம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் காவல்துறை அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு, ஜனாதிபதி கடுமையாக உத்தரவிட்டுள்ளார். 
சிரேஷ்ட ஜோதிடர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி மகிந்த கலந்துரையாடிய பின்னர், காவல்துறை மா அதிபருக்கு அவசரமாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.. 
தம்புள்ளை காளி கோயிலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது ஜனாதிபதியை வெகுவாக பாதிக்கும் எனவும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், மே 09ஆம் திகதி இடம்பெறும் குரு பெயர்ச்சியினால் ஜனாதிபதிக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் ஜோதிடர், எச்சரித்துள்ளார்.  
இதனால் கிரக மாற்றத்தின்போது நாட்டில் இருக்க வேண்டாம் எனவும் அவருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியுள்ளார்.. இதன்பின்னரே தம்புள்ளை காளி கோயிலுக்கு முழுமையான பாதிப்பை வழங்குமாறு ஜனாதிபதி, காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இதனையடுத்து அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து காளி கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர். 
அத்துடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புப் பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் சுவரொட்டிகள்!


யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் ‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’ என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் ‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’, ‘தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்’, ‘மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டு பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

30 ஏப்ரல் 2012

.நெடுந்தீவு கழுதைத்தீவாம்"தேரரின் நக்கல்!


நெடுந்தீவைக் ‘கழுதைத் தீவு’ எனக் கிண்டலடித்துள்ளார் மகிபால ஹேரத்!நெடுந்தீவைக் ‘கழுதைத்தீவு‘ என்று கிண்டலடித்துள்ளார் சிறிலங்காவின் சப்பிரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத்.
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக, இம்முறை தமது மே நாள் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சப்பிரகமுக மாகாண முதல்வர் மகிபால ஹேரத்,
“‘கழுதைத் தீவான‘ நெடுந்தீவில் போய் ஐதேக மே நாள் பேரணியை நடத்தட்டும். அங்கு தான் அதிகளவு கழுதைகள் உள்ளன.
அங்கு அவர்களின் ஆதரவாளர்களை ஏற்றிச் செல்ல போதிய கழுதைகள் இருப்பதால் அவர்களுக்குப் போக்குவரத்துப் பிரச்சினை இருக்காது.
அல்லது கழுதைகளுக்குப் பெயர் பெற்ற இன்னொரு இடமான புத்தளத்தில் பேரணியை நடத்தலாம்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

29 ஏப்ரல் 2012

யாழில் நடந்த கொலைகள் இதுவரை எவரும் கைதாகவில்லை!


யாழ். மாவட்டத்தில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் “சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களின் பெயர்கள், முகவரிகள், கொல்லப்பட்ட திகதிகள் போன்ற அனைத்து விவரங்களையும் உதயன் பெற்றுள்ளது. இவற்றுக்கு மேலாக இதேகாலப் பகுதியில் விடுதலைப் புலிகள் எனக் கருதப்படும் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் பதவி வகிக்கும் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியிலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் பல கொலைகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பது பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. இந்தக் காலப்பகுதியில் யாழ். குடாநாடு முழுவதும் இராணுவ ஊடரங்குச் சட்டத்துக்குள் இருந்தபோதும் கொலைகளுக்கான காரணங்களோ அவை தொடர்பான விசாரணைகளோ பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான எந்தவொரு சம்பவத்திலும் கொலையாளி எவரும் இனங்காணப்படவும் இல்லை.
இந்த மூன்று வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு இராணுவத்தினரும் துணைப்படைகளுமே காரணம் என்று சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அரசும் இராணுவமும் முற்றாக மறுத்து வருகின்றன.
சர்வதேச சமூகம் இறுதிப் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று விசனம் தெரிவிக்கும் யாழ்ப்பாணத்தின் புலமையாளர்கள், இங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கான அழுத்தங்களையும் சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இதேவேளை, “இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது” என்று 2007ஆம் ஆண்டில் கொழும்புக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக், வாஷிங்ரனுக்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆவணத்தை விக்கி லீக்ஸ் தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுக்கிறார். அத்தகைய தகவல் பொய்யானது போலியானது என்று அவர் கூறுகிறார்.
“ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்துவிட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்களிலில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பிவிடுவார்கள்” என்று பிளேக்கின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

28 ஏப்ரல் 2012

தமிழன் மண்ணை தமிழனுக்கே விற்கும் சிங்களவன்!

யாழ்ப்பாணத்தானுக்கு ஆப்படிக்கும் சிங்களவர்கள்!யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வீதிகளின் புனர் நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் சிங்கள ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வீதிகளை அகலமாக்கும் போது அங்கிருந்த மண் முதலில் வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் குறித்த இடத்தில் கிறசர் மண் பரவப்படுகின்றது.
குறித்த இடங்களில் வெட்டி எடுக்கப்படும் மண் அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே நயவஞ்சகமாகப் பேசி விற்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இந்த மண் வியாபாரமானது அங்கு கொடி கட்டிப் பறப்பதாக யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக வெட்டப்படும் மண் 3500 ரூபாயில் இருந்து 4500 ரூபாய் வரை பேசி விற்கப்படுகின்றது.
சிங்கள ஒப்பந்தக் காரர்களின் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தவிர, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏராளமான ஒழுங்கைகள், வீதிகள் போன்றவை குண்டும் குழியுமாக இருப்பதனால் மழை காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டாக்காலி பிள்ளைகள்!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமைக்கு பெற்றோரின் கவனமின்மையே முக்கிய காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவால் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது. பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலிகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமையாகும். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

27 ஏப்ரல் 2012

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வமில்லை!

UNHCRநாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2012 முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.

கடந்த ஆண்டு முதல் கொழும்பு – தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது.
பெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.
இதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை அகதிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் இருந்து திரும்புகின்றனர் எினும் இவர்களது தொகை ஏனைய மாவட்டங்களை விட குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
இறுதியாக 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாத இந்திய அரசின் கணிப்பீட்டின் படி தமிழ்நாட்டிலுள்ள 112 முகாமில் 68,049 இலங்கை அகதிகள் உள்ளனர்.
இத்துடன் அகதி முகாம்களை தவிர்த்து இந்தியாவில் 32,467 இலங்கையர்கள் வாழ்கின்றனர்.
இலங்கையர்கள் 65 நாடுகளில் 141,000 இற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாக யுஎன்எச்சிஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

lalith kukan_CIகாணாமற் போன லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ் மாவட்ட நீதவானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமற்போன இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லலித், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் இடம் தொடர்பாக அரசு எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 ஏப்ரல் 2012

2006 யுத்த காலத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை!

கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதிகளில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்களது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் இந்த தகவலை தெரிவித்தார்..
இது குறித்து அவர் விபரிக்கையில் : 2006, 2007, 2008 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அந்தக் காலகட்டத்தில், காணாமற் போனவர்களது உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எம்மிடம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இவர்களின் உறவினர்களை அழைத்து இரண்டாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்..
2006 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போதே அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றோம். முறைப்பாடுகளில் இருக்கின்ற ஆவணக் குறைபாடுகளைச் சீர்செய்வதுடன், காவல்துறை முறைப்பாடு தொடர்பிலும் ஆவணங்களைப் பெற்று வருகின்றோம்.
இந்த விசாரணைகள் ஒரு வார காலத்துக்கு எமது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. இதன் பின்னர் கொழும்பிலிருந்து எமது தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

25 ஏப்ரல் 2012

பிஞ்சுகளை பறித்தெடுத்த கொடூர வெடி பொருள்!

கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.(எப்படித் தாங்குமோ பெற்ற மனங்கள்?)

24 ஏப்ரல் 2012

திருமலையில் விநாயகர் ஆலயத்திற்கு அச்சுறுத்தல்!

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றன.
இதனால், தமிழ் மக்கள் கடும் அதிருப்தியடைந்து பொங்கி யெழுந்துள்ளனர். தமிழர் கலை, கலாசாரங்களையும், சமய விழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது என்றும் அவர்கள் விசனமடைந்துள்ளனர்.

23 ஏப்ரல் 2012

கனத்தையில் இரகசியமாக சடலங்கள் எரிப்பு!

பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது -
வழக்கத்தில் கனத்தை மயானத்தில் மாலை 7 மணிக்குப் பின்னர் சடலங்களை எரிக்கும் பணிகள் இடம்பெறுவதில்லை.
நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் பணி இடம்பெற்றபோது மயானப் பகுதியில் இரண்டு ஜீப் வண்டிகளும், வெள்ளைவான்களும் நின்றதாக அயலில் உள்ள ஒருவர் பொறளை காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.
இதுபற்றித் தாம் 1.40 மணியளவில் பொறளை காவல்துறையிடம் முறையிட்டதாகவும், ஆனால், அந்த ஜீப்கள் மற்றும் வெள்ளைவான்கள் அகன்று செல்லும் வரை சிறிலங்கா காவல்துறையினர் அங்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கனத்தையில் காணப்பட்டவர்கள் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சிறிலங்காப் படையினரைப் போன்று காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொறளை காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேற்பார்வையில் இயங்கும் கனத்தை மயானம், இரவு 7 மணிக்குப் பின்னர் இயங்குவதில்லை என்றும், அதன்பின்னர் மயானத்தின் சாவி பிரதம பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கனத்தையில் நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது பற்றி எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
1988,89 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர உள்ளிட்ட ஏராளமானோரின் சடலங்கள் நள்ளிரவு நேரங்களில் இரகசியமாக கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

22 ஏப்ரல் 2012

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்களாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார்.
“எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான்.
எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான்.
சிலகாலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை.
அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான்.
அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்" என்று ரங்கராஜன் கூறினார்.
அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார்.
"போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.
முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள்.
இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா. சம்பந்தன்.
இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்த்து எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான்.
அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான்." என்றார்.
"அதை நீங்கள் அறிவீர்களா?" என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச.
அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

21 ஏப்ரல் 2012

ஜெயலலிதா,கருணாநிதி போன்றோரால் எம்மை அசைக்க முடியாது!

mervin muderஇலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.

அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம். கருணாநிதி ஐயாவும், ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மை இந்திய தேசத்தால் அசைக்க முடியாது.
இலங்கை வந்துள்ள இந்தியக் குழு இங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன் வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின் சில்வா.

20 ஏப்ரல் 2012

ஐ.நா.குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும்"சீமான் வேண்டுகோள்.

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் அக்கறையற்ற முறையில் பயணம் மேற்கொண்டு வருவதால் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய எம்.பிக்கள் குழுத் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது.

வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்களிடம் நாடாளு மன்றக் குழுவினர் பேசிய போது, அவர்கள் ஒரு அச்சத்துடனேயே தங்களிடம் பேசியதாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற 2 உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தங்களோடு பேசிய அம்மக்களின் கண்களில் அச்சம் தெரிந்தது என்று மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் மக்களிடம் பேசியபோது அங்கு ஏராளமான இராணுவத்தினரும், சாதாரண உடையில் உளவுப்பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இராணுவத்தின் கெடுபிடி ஏதும் இருப்பதாக எந்தத் தமிழரும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்று கூறப்பட்ட கருத்துக்கள் உண்மையாகியுள்ளன. இன்றளவும் தமிழர்கள் கடத்தப்படுகின்றனர். தமிழ்ச் சிறுமிகளை இராணுவத்தினர் கடத்தி கற்பழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் பகுதிக்கான அரசு முகவர் இமால்டா சுகுமார் கூறியிருக்கிறாரே, ஏன் அப்படிப்பட்ட நிலை இருக்கிறது? என்பதை விசாரித்து அறியாமலேயே இந்த உண்மைக் கண்டறியும் குழு பயணம் செய்துக் கொண்டிருக்கிறது.
எனவே இப்படிப்பட்ட குழுவின் பயணத்தால் துயரத்திலும், அவலத்திலும், வாழும் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேம்போக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, உண்மையை மறைப்பதாகவும், இலங்கை அரசைக் காப்பதாகவுமே இருக்கும் என்பதற்கு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்றாகும்.
எனவே இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட பன்னாட்டுக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.