பக்கங்கள்

29 ஜூன் 2012

தமிழ்க்கைதிகள் சிறைப்பிடித்த காவலர்கள் மீட்கப்பட்டுள்ளனராம்!

வவுனியா சிறைச்சாலையில், அரசியல் கைதிகளால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறைக் காவலர்கள் மூவரையும் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர், காவற்றுறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் நேற்று கைதிகளுக்கு பலாத்காரமாக உணவை வழங்க முற்பட்டதோடு கைதிகளையும் தாக்கியுள்ளனர். இதன்போது சிறைக் காவலர்கள் மூவரை தமிழ்க் கைதிகள் முற்றுகைக்குள் வைத்திருந்தனர். கைதிகளிடமிருந்து அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்காத காரணத்தால், இன்று காலை கலகம் அடக்கும் காவற்றுறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சிறை அதிகாரிகள் அழைக்கப்பட்டும், கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் நீர்பாய்ச்சி அடிக்கும் வாகனங்கள் சகிதம் வவுனியா சிறைச்சாலை சுற்றி வளைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் இராணுவம், அதிரடிப்படையினர் மற்றும் காவற்றுறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சிறைக்காவலர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.