பக்கங்கள்

27 ஜூன் 2012

தீவகத்திற்கு மின்சாரம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்!

மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள தீவகப் பகுதியின் அனைத்து இடங்களுக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மின் விநியோகம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையினர் உறுதியளித்துள்ளனர். தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பிரதேசசபை மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீவுப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்க மின்சார சபையினர் பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினார்கள். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கைஎனவும், அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை விடுத்து உங்கள் விருப்பப்படி செயலாற்ற முடியாது எனவும் மின்சார சபை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன் பணம் செலுத்தியவர்களுக்கு முன்பதாக மீளக்குடியமர்ந்த மக்களுக்கான இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் தற்போது மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் எப்போது மின் விநியோகம் வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்குமாறும் அவர்களிடம் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மின்கம்பங்கள் நடப்பட்ட இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார சபை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.