பக்கங்கள்

01 ஜூன் 2012

மேல் நீதிமன்ற உத்தரவால் நாடுகடத்துவது இடைநிறுத்தம்!

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 40 தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் நாடுகடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் லண்டனில் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் இவர்களின் நாடு கடத்தல் உத்தரவை நிராகரித்தமையை அடுத்து நாடு கடத்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. PVT 030 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவிருந்தனர். இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. இந்த சட்டநடவடிக்கையின்போது இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றவர்கள் அங்கு கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை கருத்திற்கொண்டே நீதிபதிகள் நாடு கடத்தல் உத்தரவை இடைநிறுத்தினர். இதேவேளை இந்த தீர்ப்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்றாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரித்தானிய பணிப்பாளர் டேவிட் மெப்ஹேம் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின்மூலம் பிரித்தானிய அரசாங்கம் விழிப்படைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த தீர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் என்று சட்டத்தரணிகளான நிசான் பரம்ஜோதி மற்றும் சிவானி ஜெகராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இரகசியமான முறையில் பல தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.