சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோரி காந்தினி விசித்ரா ராஜபக்ச நேற்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கொழும்பு மலர் சாலைக்கு மஹிந்த தனது சகோதரியின் உடலை ஒரு கையால் தூக்கிச் சென்றார். ஒரே இரத்தத்தில் பிறந்த சகோதரியின் உடலை ஒரு கையில் தூக்கி சென்ற அண்ணன் என ஊடகங்களில் செய்தி வெளியியாகியுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
09 மே 2017
04 மே 2017
இலங்கையின் புகழ்பூத்த அறிவிப்பாளர் சற்சொரூபவதி காலமானார்!
இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
முதலில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றிய பின்னர் தனது ஒலிபரப்புத்துறை வாழ்க்கையை ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.
இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராக அவர் இறுதிவரை திகழ்ந்தார்.
ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத்தலைவராக இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார் என பிபிசி தமிழோசை குறிப்பிட்டுள்ளது.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பல தலை சிறந்த அறிவிப்பாளர்களையும் கலைஞர்களையும் தந்த வானொலி என்பது குறிப்பிடத்தக்கது.புகழ்பூத்த அறிவிப்பாளர் சற்சொரூபவதி அவர்களின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்கு பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.24 ஏப்ரல் 2017
ஊர்காவற்றுறையில் யுவதி மீது மயக்க மருந்து தூவிய மட்டக்களப்பு நபர்!
ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து தூவி வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த போது, அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.எனினும் சுதாகரித்துக்கொண்ட கொண்ட யுவதி கூக்குரல் இட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு திரண்ட அயலவர்கள், சந்தேக நபரை மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த சந்தேக நபர் (35 வயது) பொலிஸில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த குறித்த நபர், தற்போது ஊர்காவற்றுறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.இவ்வாறு இணையமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.22 ஏப்ரல் 2017
கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவி கோரப்படுகிறது!
கிளிநொச்சியில் 15 வயதுடைய தர்சினா என்ற சிறுமி மோட்டார் சைக்கிளில் வந்த பலரால் கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி 20.04.2017 காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இக் கொடுரம் நிகழ்ந்துள்ளது.
இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை.
இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவிடிக்கையும் எடுக்காதது கவலைக்குரியது. இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலையில் எம் சிறுமிகள், பெண்கள் எப்படி நடமாடுவது?
இவரின் குடும்பத்தினர் செய்வதறியாது மக்கள் உதவியை நாடியுள்ளனர். இந்த செய்தியை முடிந்த வரை அனைவருக்கும் தெரியப் படுத்துவதோடு சிறுமியை கண்டு பிடித்து பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிடுங்கள்.
விபரம் தெரிந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 0775376875 செல்வி (தாயார்)
0776436034 கவிராஜ் (சகோதரன்)03 ஏப்ரல் 2017
வேலணையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!
வேலணை துறையூரை சேர்ந்த மாணவி ஒருவர் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டினர் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்த வேளை,தனிமையில் இருந்த மாணவி வீட்டின் அறையினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பல்கலைக்கழகம் சென்று வீடு திரும்பிய சகோதரி ஒருவர் மூலமாக குறிப்பிட்ட மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்தது.எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.கல்விப் பொது தராதர பரீட்சை பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த மாணவி பதினாறு வயதுடைய அருட்பிரகாசம் ரேணுகா என அறியவந்திருக்கின்றது.இவர் 1A 7B 1S என்ற பெறுபேற்றை பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.01 ஏப்ரல் 2017
தமிழ் எழுத்தை கணினியில் தந்த விஜயகுமார் கனடாவில் மறைவு!
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டன. கம்யூட்டர் தமிழில் 'ரெமிங்ரன்' முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கணினியில் உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்களாவர்.கணினி எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் கலாநிதி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அக வணக்கத்தை செலுத்திக்கொள்கின்றது.25 மார்ச் 2017
இலங்கைப் பயணம் இரத்து:ரஜனிகாந்த்
அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய பயணத்தை ரத்து செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.இதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று நான் இந்த பயணத்தை ரத்து செய்கிறேன்.எனினும் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. அதை நான் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அரசியல்வாதி அல்ல, கலைஞர். நண்பர் திருமாவளவன் கூறியதை போல கலைஞர்களுக்கு எல்லை இல்லை.வருங்காலத்தில் இலங்கை செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை அரசியலாக்கி தடுத்து விட வேண்டாம். புனித போர் நிகழ்ந்த பூமியை காண ஆவலுடன் உள்ளேன். தமிழக மீனவர்கள் ஒரு ஜான் வயிற்றுக்காக கடலில் செல்லும் மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று இலங்கை அதிபர் சீறிசேனாவிடம் கோரிக்கை விடுக்க நேரம் கேட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.10 மார்ச் 2017
சர்மிளா மரணத்தால் சோகத்தில் மூழ்கியது கூடலூர்!

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் தனது தாயாரின் சுகயீனம் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் புளியங்கூடல் சென்றிருந்தார்.நேற்றைய தினம் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து புளியங்கூடல் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் விஜயரூபனின் தந்தை திரு வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
07 மார்ச் 2017
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்வதாக அமெரிக்கா அறிக்கை!
இலங்கையில் மோசமான மனித உரிமை சம்பவங்களிலும், சித்திரவதையில் ஈடுபட்ட படையினர் தண்டனையிலிருந்து விலக்குப்பெறும் கலாச்சாரம் தொடர்ந்தும் நிலவுவதனால் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனர்வாழ்வுக்குள்ளான முன்னாள் போராளிகள் பலர் படையினரதும், பொலிசாரினதும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஈனத்தனமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. புனர்வாழ்வுக்கு முகம்கொடுத்து விடுதலையான பல முன்னாள் போராளிகள் குறித்து சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு ஸ்ரீலங்காவில் உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் நம்பிக்கைத்தன்மைமிக்க ஆதாரங்கள் பலவற்றினை வழங்கியிருப்பதனையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாகப் போர்க்காலத்திலும், அதன்பின்னரும் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பிலும் தண்டனையிலிருந்து விலக்குப் பெறும் கலாச்சாரம் இன்னமும் தொடருவதாகத் தெரித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்ட அரச படையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, எதேச்சையான கைதுகள், நீண்டகாலம் தடுத்துவைத்தல், புலனாய்வு நடவடிக்கைகள், சிவில் அமைப்பு ஆர்வலர்கள் மீதும், ஊடகவியலாளர் மீதும், சிறுபான்மைச் சமயத்தவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுவோர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன மிகவும் கரிசனைக்குறிய மனித உரிமைப் பிரச்சனைகளாக இருப்பதாகவும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
எதேச்சையாகக் கைது செய்யப்படுவதும், அதன் பின்னர் தடுத்துவைக்கப்படுவதும் சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறைந்திருக்கின்றபோதும், அவை இன்னமும் தொடரப்படுவதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, இராணுவம் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இராணுவம் அங்கே இராணுவச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.26 பிப்ரவரி 2017
தமிழர் நெஞ்சங்களில் இருந்து பிரிக்க முடியாத சாந்தன் எனும் மாமனிதன்!
தனது மதுரக் குரலால் புரட்சித் தீயை உலகத்தமிழர் மத்தியில் பாய விட்ட ஒரு வீரப்போருக்கு உரம் பாய்ச்சிய மகத்தான மாமனிதன் இன்று நம் மத்தியில் இருந்து விடைபெற்றார் என்பது அறிந்து தமிழுலகம் கண்ணீர் மழையில் மூழ்கி கிடக்கிறது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் பரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார். தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் பரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார். தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
19 பிப்ரவரி 2017
சோபிகா கொலையுடன் தொடர்புடையவர் சுவிசில் கைது!
ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என அறியவருகிறது.16 பிப்ரவரி 2017
ஜெர்மனியில் ஈழப்பெண் படுகொலை!
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது குடியிருப்பு பகுதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பெண் தொடர்பில் பொலிஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டி உதவிகோரியிருந்த போதிலும், அவர்கள் தாமதமாகவே அந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நைஜீரிய நாட்டு அகதி ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் சோபிகா ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து சேவை செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.11 பிப்ரவரி 2017
எழுவைதீவில் முதலாவது கலப்பு மின் உற்பத்தித்திட்டம்!
இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம் எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கதக்க சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 187 மில்லியன் ரூபா செலவில் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு மின்சாரத்தை 9 ரூபா 14 சதத்திற்கு உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.09 பிப்ரவரி 2017
புளியங்கூடலில் உதவி மருத்துவமனை அமைக்க உதவி கோரப்படுகின்றது!
32 பரப்பு நிலம் 12 இலட்சம் ரூபா கொள்வனவில், உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமைய உள்ளது.அதற்கான உங்கள் ஆதரவுக் கரம்பற்ற இப்பதிவை வரைகின்றோம்.
அன்பு உள்ளம் கொண்ட புளியங்கூடல் மண்ணின் உறவுகளே!புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் ஊரின் மீது அதீத பற்றுக்கொண்ட நம் உறவுகளே! உங்கள் அனுசரணை மூலம் பல சிறந்த விடயங்கள் நம் ஊரில் நடந்தேறியது அனைவரும் அறிந்த விடயமே. முன்பள்ளியின் சொந்தக் கட்டடம் முதல் ஆரம்பிக்க இருக்கும் அடுத்த பகுதிநேர வகுப்புக்களுக்கான ஓர் நிலையம், கட்டணம் இன்றிய பகுதிநேர வகுப்புக்கள் அனைத்தும் உங்கள் அனுசரணையில் நடைபெற்றுவருவதும், ஊர் உறவுகள் அனைவரும் அறிந்தவிடயமே!! பெருமை கொள்ளவேண்டிய விடயமும் கூட.
அதுபோல் இந்தப் பதிவும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஊர் மீது பற்றுவைத்த அனைவரின் மீதும் நம்பிக்கைவைத்து மேற்கொண்ட ஓர் சிறந்த விடயமே.
உங்கள் அனுசரணையை நாடிவரும் ஓர் பதிவே.
அனைவரும் ஊர் வளர்ச்சிக்காகவும், ஊர் மாணவர் கல்வி வளர்ச்சிக்காகவும் செய்யும் எந்த அனுசரணையும் வீணடிக்கப் படவில்லை. உங்கள் பங்களிப்பின் பலன்கள் சிறிது தாமதமானாலும் நடந்தேறும், பலன்பெறும் என்பதை நாம் உறுதியளிக்கின்றோம்.
தற்போது ஊர்காவற்றுறை அரச செயலகமும் அதன் அதிபரும் எங்கள் ஊரில் ஓர் உதவி வைத்திய நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான காணியை ஊர் வளர்ச்சியில் உழைக்கும் புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்திடம் காணியை தரும்படி கேட்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் அவசரமாக காணியை வேண்ட வேண்டியதாகிவிட்டது.
காணி தரும் பட்சத்தில் உதவி வைத்தியசாலையை எங்கள் ஊரில் அமைப்பதாக உறுதி அளித்துள்ளார். முன்பு நாம் வாங்கிய காணியுடன் வேல் கோவில் ஐயாவின் அன்பளிப்பு காணியையும் சேர்த்து ஓர் நூல் நிலையம், மழலைகளுக்கான முன் பள்ளிக் கட்டிடமும்
அமைத்துள்ளமை அனைவரையும் மகிழவைக்கும் விடயமே.
ஒர் உதவி வைத்திய நிலையம் நம் ஊரில் அமைக்க அரச செயலகம் திட்டமிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.அதற்காக புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் ஐரோப்பிய நிர்வாக உறுப்பினர்கள், சில ஊர் நலன்விரும்பிகள் சிலர் சிந்தனைகளின் முயற்சிகளில் வேல் கோவில், நூல்நிலையத்தின் பின் பகுதியில் உள்ள 32 பரப்புக் காணியை 12,00,000(12இலட்சம் ரூபாய்) ரூபாய்களுக்கு வேண்டி உதவி வைத்தியசாலைக்கு 7 பரப்புக் காணியை அரச பணிமனைக்கு எழுத்து மூலம் கொடுத்துவிட்டனர். உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமையும் என்பது நம்பிக்கை.
அது போன்று நாம் கொள்வனவு செய்த இந்த மிகுதி நிலப்பரப்பால்
அம்மன் கோவில் பிள்ளையார் கோவில்களுக்கு இடையாக செல்லும் பாதையும் பல காலமாக இடையூறாக வாகனப் போக்கு வரத்து தடையாக உள்ளதும் அனைவரும் அறிந்த விடயமே. இதையையும் இணைக்கமுடியும், அதைவிட சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம்( சிறுவர் பூங்கா) , ஓர் சிறந்த விளையாட்டு மைதானம், போதிய அளவிலான பகுதிநேர, கணணி வகுப்புக்களுக்கான கட்டிடங்கள் என்பனவற்றை இந்த நிலப்பரப்பில் உருவாக்க முடியும் உங்கள் அனுசரனையுடன். வேறு செயற்திட்டங்களுக்கும்
பயன்படுத்த முடியும்.
இப்போ இந்த நிலப்பரப்பை ஓர் உறவின் பணக் கடன் தொகையாக 7 இலட்சம் ரூபாய்களை பெற்று, அதை முற்பணமாக காணி உரிமையாளரிடம் கொடுத்து சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் பெயரில் உறுதி எழுதப்பட்டுள்ளது.
மிகுதிப் பணம் 5 இலட்சம் ரூபாய்களும் 2 அல்லது 3 மாதங்களில் தருவதாக உறுதியளித்துள்ளோம்.
நம் ஊர் உறவுகள், ஊர் பிரிந்து வாழும் நம் உறவுகள் மீது கொண்ட திடமான நம்பிக்கையிலேயே இந்தத் தொகை பணத்தை கடனுதவி, கடன் நம்பிக்கை மூலம் இத்தகைய பிரமாண்டமான நிலப்பரப்பை கொள்முதல் செய்துள்ளோம்.
புளியங்கூடல் மண் பிறந்த, உருண்டு விளையாடிய, ஊர் காற்
றை உள் உணர்வாக சுவாசிக்கும் உறவுகளே. வாருங்கள் உங்கள் கடின உழைப்பின் ஓர் சிறு பகுதியை ஊருக்கும் கொடுத்து, ஊரையும் அந்த நம் உறவுகளையும் சிறப்பாக்குவோம்.
இந்த நிலப்பரப்பின் 12,00,000
உறுதி எழுத்துக்கூலி. 40,000ரூபா
மொத்தமாக 12,40,000ரூபாய்களை (12 இலட்சத்து 40ஆயிரம்)உறவுகளிடமிருந்து ஒன்றுசேர்க்க வேண்டுகின்றோம்.
அதே போன்று யாராவது மழலைகள் விளையாட்டு முற்றத்தை ( சிறுவர் பூங்கா) உங்கள் மறைந்த உறவுகள் நினைவாகவோ அல்லது உங்கள் பெயரின் அன்பளிப்பாகவோ அமைத்து வைக்கலாம். மழலைகள் மனதை சந்தோசப்படுத்த யாரும் முன்வரலாம்.தொடர்புகளுக்கு:
சுவீஸ்:- தலைவர் திரு அ. தியாகராஜா
உப தலைவர் திரு பொ. சாந்தலிங்கம்
செயலாளர் திரு கோ. வசந்தராஜா
பொருளாளர் திரு கோ. தர்மசீலன்
ஐரோப்பிய இணைப்பாளர்கள்:
திரு கு.பாலசுப்பிரமணியம்
திரு சு.பேரின்பநாதன்
நன்றி:முருகேசு விஜயன்
(புளியங்கூடல் மாணவர் வளாகம்)
06 பிப்ரவரி 2017
விபத்தில் வேலணையை சேர்ந்த புது மாப்பிள்ளை மரணம்!
29 ஜனவரி 2017
கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் மற்றயவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்ப ட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.28 ஜனவரி 2017
ஊர்காவற்றுறையில் மனிதச்சங்கிலி போராட்டம்!
ஊர்காவற்றுறை பகுதியில் 7 மாத கர்ப்பிணிப்பெண் நாகேந்திரன் கம்சிகா அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தின் நிறைவில் அப்பகுதி மக்களினால் ஊர்காவற்றுறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று பொது மக்கள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், இணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வர்த்தகர்கள் கடைகளை மூடி மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும், பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றுள்ளது.போராட்டத்தின் இறுதியில், மதகுருமார்களினால் ஊர்காவற்றுறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது..jpg)
.jpg)
26 ஜனவரி 2017
வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் நிலை மோசமடைகிறது!
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள காலவரையறையற்ற உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 பேரில் நால்வரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஏனைய காணாமல் போனோரின் உறவுகள், வவுனியா இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து உணவுத் தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இளைஞர்கள் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் தமது சங்கத்தில் இருந்து நகரத்தின் ஊடாக போராட்டம் இடம்பெறும் பகுதி வரை பேரணியாக செல்லவுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்றைய தினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.24 ஜனவரி 2017
சுருவிலில் இளம்தாய் வெட்டிக்கொலை!
ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாகேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டினை ஊர்காவற்றுறை நீதிவான் வை.எம்.எம்.ரியால் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பெண்ணை வீட்டு அறையினுள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதுடன் வீட்டிலிருந்த கத்தியை பயன்படுத்தி வெட்டியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த இரத்த கறைகளையும் சந்தேக நபர்கள் கழுவிய நிலையில் பெண்ணை வீட்டு முற்றத்திற்குள் இழுத்து வந்து தடியினால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் கொலைச் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணையும் முச்சக்கர வண்டி சாரதியையும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.23 ஜனவரி 2017
தமிழகத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் வன்முறை!
அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடு தெருவில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)