பக்கங்கள்

07 மார்ச் 2017

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்வதாக அமெரிக்கா அறிக்கை!

இலங்கையில் மோசமான மனித உரிமை சம்பவங்களிலும், சித்திரவதையில் ஈடுபட்ட படையினர் தண்டனையிலிருந்து விலக்குப்பெறும் கலாச்சாரம் தொடர்ந்தும் நிலவுவதனால் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனர்வாழ்வுக்குள்ளான முன்னாள் போராளிகள் பலர் படையினரதும், பொலிசாரினதும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஈனத்தனமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. புனர்வாழ்வுக்கு முகம்கொடுத்து விடுதலையான பல முன்னாள் போராளிகள் குறித்து சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு ஸ்ரீலங்காவில் உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் நம்பிக்கைத்தன்மைமிக்க ஆதாரங்கள் பலவற்றினை வழங்கியிருப்பதனையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாகப் போர்க்காலத்திலும், அதன்பின்னரும் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பிலும் தண்டனையிலிருந்து விலக்குப் பெறும் கலாச்சாரம் இன்னமும் தொடருவதாகத் தெரித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்ட அரச படையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, எதேச்சையான கைதுகள், நீண்டகாலம் தடுத்துவைத்தல், புலனாய்வு நடவடிக்கைகள், சிவில் அமைப்பு ஆர்வலர்கள் மீதும், ஊடகவியலாளர் மீதும், சிறுபான்மைச் சமயத்தவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுவோர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன மிகவும் கரிசனைக்குறிய மனித உரிமைப் பிரச்சனைகளாக இருப்பதாகவும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. எதேச்சையாகக் கைது செய்யப்படுவதும், அதன் பின்னர் தடுத்துவைக்கப்படுவதும் சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறைந்திருக்கின்றபோதும், அவை இன்னமும் தொடரப்படுவதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, இராணுவம் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இராணுவம் அங்கே இராணுவச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.