பக்கங்கள்

18 மார்ச் 2016

பொட்டம்மான் குறித்து எதுவும் தெரியாது என்கிறார் சரத்பொன்சேகா!

சரத்பொன்சேகா
இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி. கூறியே தெரிந்து கொண்டோம். பொட்டு அம்மான் குறித்து என்னிடம் உள்ள இறுதித் தகவல் இதுவே. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான 'பீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று அவர் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது "பொட்டு அம்மான் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளனவே" என எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பொட்டு அம்மான் இருக்க முடியாது. காரணம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் தேடப்படுபவர். வட கிழக்கு நந்திக்கடல் தாக்குதலில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதன்பின்னரே பிரபாகரனும், பொட்டு அம்மானும் தப்பிக்க முயன்றனர். பிரபாகரன் மீண்டும் யுத்த களத்துக்கு வந்தபோதும் பொட்டு வரவில்லை. அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது.அவர் உயிரிழந்திருக்கலாம்.இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

26 பிப்ரவரி 2016

புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் கேவலமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?


http://www.netrigun.com/wp-content/uploads/2016/02/pothu-amippu.jpgசர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலே அண்மைக்காலமாக ஜனநாயக அத்துமீறல்களும் தான்தோன்றித்தனமான தன்னதிகாரச் செயற்பாடுகள் வரன்முறைக்குட்பட்ட நிர்ணய நிலையியலுக்கு அப்பால் எல்லை மீறி தொல்லை கொடுக்கும் துயரச் சம்பவங்கள் தூபமிடுகின்றன.இவை சட்ட நிர்வாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை ஆட்டம் காண வைக்கிறது. மனித உரிமைகள் விவகாரம் சர்வதேச ரீதியாக தங்களை அச்சுறுத்துகின்ற நிலை காணப்படும் சூழலில் இவ்விதமான சம்பவங்கள் மேலும் தங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. ஜனநாயகத்தின் முதல் படியே சட்ட ஆட்சி அது இலங்கையில் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா எனும் விவகாரத்திற்குட்பட்ட கேள்வி பல தசாப்தத்தை தாண்டி எம்மத்தியில் உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கடந்த வருடத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்கொடுமை மரணம் நிகழ்ந்தது ஒரு வருடம் அண்மித்த நிலையில் உங்கள் சட்ட ஆட்சி அல்லது நல்ல ஆட்சி சாதித்தது என்ன? உங்கள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனும் வாக்குறுதி கானல் நீராகி கரையேறி விட்டதா? எனவே உங்கள் வாக்குறுதிகளை எதிர்காலத்தில் நாம் எப்படி நம்புவது? சிறுவர் துஸ்பிரயோகமும் பாலியல் வன் கொடுமைகளும் நாளொன்றுக்கு பல நூறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. வெளிவருபவை ஒரு சிலதே. இதை தடுக்க வேண்டிய சட்டம் இருட்டறையில் நித்திரை கொள்கிறதா? வித்தியாவின் வழக்கிற்கே இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாத உங்களின் சட்டக் கட்டமைப்பு சேயாவின் படுகொலையிலும் இதுவே தொடர்கிறது.ஹரிஸ்ணவியின் கொலையாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியாத அளவில் மிகப் பலவீனமான முறையிலா தங்களின் புலனாய்வுக் கட்டமைப்பு இயங்குகின்றது. இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு புதிதும் அல்ல, வேடிக்கையும் அல்ல. எத்தனை வழக்குகளையும் விசாரணைகளையும் ஆணைக்குழுக்களையும் சந்தித்து அலுத்துப்போனவர்கள்.எனவே அவசரமாக நடைமுறையில் உள்ள குற்றவியல் தடுப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இவ்விதமான சிறுவர் வன்கொடுமைக் கொலைகளிற்கு விரைவாக தண்டனை கிடைப்பதற்கு வழிவகுப்பதுடன் அத்தண்டனை வினோதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு வலுவேற்ற வேண்டும். ஆகவே அவ்விதமான அதி பயங்கரமான தண்டணை வழங்காவிட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே போய்விடும்.எனவே உங்களாலும் சில சர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள்; ஆராய வேண்டும். ஆகவே வழமைபோல் பாராமுகமாகவும் கேளாச் செவியாகவும் எமது நியாய பூர்வமான வேண்டுகோளை உதாசீனம் செய்பவர்களாக இருக்காதீகள். ராஜபக்ச ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பெரிய இடைவெளி இருப்பதாக எமக்கு தெரியவில்லை.எனவே எமது வேண்டுகோளை ஏற்றுணர்ந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில் எதிர்காலத்திலும் இன்னும் பல பெண்களிற்கு இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு மேலும் வழிவகுக்கப் போகின்றீர்கள் எனும் வாதத்தையும் முன்வைக்க விரும்புகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

22 பிப்ரவரி 2016

கலப்புத்திருமணம் செய்துகொண்டால் கலப்பு நீதிமன்றம் தேவைப்படாது!

யாழில் ரெஜினோல்ட் கூரே
தமிழ் இனத்தை முற்றாக துடைத்தழிக்கும் திட்டத்துடன்தான் செயற்படுகிறது இன்று நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் சிங்கள பேரினவாத அரசு.முன்னைய மகிந்த அரசு கூறிய கலப்புத்திருமணக் கதையையே இப்போதைய மைத்திரி அரசும் ரெஜினோல்ட் கூரே மூலம் யாழில் சொல்ல வைத்திருக்கிறது.தமிழர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வடக்கு கிழக்கு தொடங்கி மலையகம் வரை தமிழ் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடூரங்களே போதுமானது.மர்ம மரணங்கள் இன்னும் தொடர்கிறது.புலனாய்வாளர்கள் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாக காணாமல் போனோரின் உறவுகள் தெரிவிக்கிறார்கள்.கலப்பு நீதிமன்றத்தை எதிர்க்கும் சிங்கள இனவாதிகள் கலப்புத் திருமணம் பற்றிப்பேசி தமிழர் கலை கலாச்சாரங்கள் பண்பாட்டு விழுமியங்கள் யாவற்றையும் அழித்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.தந்திரச் செயற்பாடுகள் மூலம் உலக நாடுகளை ஏமாற்றி தாம் விரும்பும் திட்டங்களை நிறைவேற்றவே சிறீலங்கா அரசு முனைப்புக்காட்டி நிற்கிறது.மகிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்பதும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்பதும் இந்த பேரினவாதிகளிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.இவர்களுக்கு துணை நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

11 பிப்ரவரி 2016

சிங்கள சிப்பாய் நயினாதீவில் உபதேசம்!

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள். நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள். நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை. இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன. இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா? வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும். நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள். பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும். நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை. ஆனால் பிரபாகரன் உருவாக்கிய மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள். நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன். நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை சொல்லிக் கொடுங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

07 பிப்ரவரி 2016

வந்தார் பார்த்தார் நடக்கப்போவது என்ன?

பான் கீ மூன்
ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சைத் அல் ஹுசைன் இலங்கை வந்திருக்கிறார்.அவர் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து பேசி வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருக்கிறார்.இவரின் வருகை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது.வன்னி பெரு நிலப்பரப்பின் மீது அரச படைகள் கடும் கொடூரத்தாக்குதலை
சைத் அல் ஹுசைன்
நடத்திக்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்து ஐ.நா.வெளியேறியது.பின்னர் பான் கீ மூன் அவர்கள் இலங்கை வந்து உலங்கு வானூர்தியில் இருந்துகொண்டு சிதைந்து போன தமிழர் பகுதிகளை பார்வையிட்டதுடன் வவுனியா மருத்துவமனைக்கும் சென்று காயப்பட்டவர்களையும் பார்வையிட்டுச் சென்றார்.ஆனாலும் தமிழ் மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.ஐ.நா.மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை அவர்கள் இருந்தபோது பெரும் நம்பிக்கையோடு தமிழ் மக்கள் இருந்தார்கள்.அவருக்குப்பின் மனித உரிமை ஆணையாளராக பொறுப்பேற்ற சைத் அல் ஹுசைன் அவர்களும் நவநீதம்பிள்ளை அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வார் என்ற நம்பிக்கை மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இருந்தது.ஆனாலும் ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது.மனித குலத்திற்கு எதிரான பாரிய கொடூரங்களை புரிந்து கொலைத்தாண்டவம் ஆடிய சிறீலங்கா அரசே "உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொள்ளலாம்"என்ற அந்த தீர்மானம் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை செயலிழக்க வைத்தது.இப்போ இலங்கை வந்திருக்கும் ஆணையாளர் அவர்களால் என்ன மாற்றம்தான் நிகழ்ந்து விடப்போகிறது?அவர் ஏதாவது அழுத்தத்தை சிறீலங்கா அரசு மீது பிரயோகிப்பாரா?நீதி நிலை நாட்டப்படுமா?என்பதையெல்லாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

04 பிப்ரவரி 2016

கண்ணீர் விட்டாராம் சம்பந்தர்!!!

தமிழர்களை நெடுங்காலமாகவே ஏமாற்றி அரசியல் செய்து பழக்கப்பட்டு விட்ட சம்பந்தனுக்கு தனது இராஜதந்திரத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டதோ?!!!
செய்தி கீழே:
இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும். முதல் தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

02 பிப்ரவரி 2016

தனித்தேசக் கொள்கையினை கைவிடப்போவதில்லை-கஜேந்திரகுமார்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்போ,ஒத்துழைப்போ,தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் தெரிவித்து வருவதானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும், அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களின் பூகோள அரசியல் நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அன்றி, தமிழ் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுப்பதற்காவும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தை போலல்லாது, நடக்கும் எல்லா விடயங்களையும் மக்கள் விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம். தமிழர்களுக்கு தனித்தேசம் என்ற கொள்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைதுவிடாது. தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடுவதானது தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகும். இதன்காரணமாக நாம் ஒருபோதும் தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

31 ஜனவரி 2016

யோஷித்த ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை பெரும் நிதிமோசடிகள் தொடர்பான சிறப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிஎஸ்என் ஊடக நிறுவனத்தின் மூலம் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. யோஷித்த ராஜபக்ஷ கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷவின் தந்தை மகிந்த ராஜபக்ஷ, மூத்த சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் அங்கு சென்றிருந்தனர்.ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது இதனிடையே, சிஎஸ்என் நிறுவனத்தின் தலைவரான ரொஹான் வெலிவிட்ட மற்றும் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்கள் கூறுகின்றனர். மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை கைதுசெய்வதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 'நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் இருந்திருந்தால் நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்களோ ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ உருவாகியிருக்காது' என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

24 ஜனவரி 2016

மகா காவியம் படைக்கப்போகிறாராம் வைரமுத்து!!!

கிளிநொச்சியில் வைரமுத்து
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை - சரித்திரம் பெறும் கதைகளை - மகா காவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற உழவர் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான் தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வரும். முதல் முத்தம் பெறும்போது உயிருக்குள் பூப்பூக்கும். குழந்தைக்கு முதலில் இரத்தம் சொட்டும்போது தாயின் இதயம் துடிக்கும் துடிப்பு போன்றே இந்த மண்ணை நான் தொட்டபோது உணர்ந்தேன். தமிழனின் விவசாய அறிவு மற்றும் மரபு தொழில் நுட்பங்கள் எல்லாம் மறைக்கப்பட்டமைக்குக் காரணம் வேறு நாட்டவரின் நுட்பங்களை திணிக்கப்பதற்காகவே புகுத்தப்பட்டன. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, கிளிநொச்சி வவுனியா, போன்ற ஊர்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை சரித்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களாகவே இந்த உலகம் உணர்ந்திருக்கிறது.இவ்வாறு தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த பேரவலத்திற்கு கருணாநிதியும் துணை போனவர் என்பதையும்,தமிழர்களை திசை திருப்ப கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாடு எனும் நாடகத்தில் முக்கிய பங்காற்றியவர் வைரமுத்து என்பதையும் தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள்.

22 ஜனவரி 2016

வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி சிறிசேன ஜெனீவாவில் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாகவும் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் விதத்தில் அவர் பிபிசியிடம் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் (ஐடிஜேபி) கூறியுள்ளது.'இலங்கையில் உள்ளூர் விசாரணை பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் ஸூக்கா தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் இராணுவ வீரர்களின் பெயர் விபரங்களை ஐநா வெளியிடவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் ஸூக்காவின் அறிக்கை விமர்சித்துள்ளது. கடத்தல்களும் சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் புதிய ஆட்சியின் கீழும் தொடர்வதாக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் மறுத்திருந்தார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் 'விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து' வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.ஆனால், 2015ம் ஆண்டில் நடந்த அவ்வாறான 20 சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஃபிரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற அமைப்பும் அவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவுசெய்துள்ளதாகவும் ஐடிஜேபி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதியின் போக்கில் மாற்றம் வரும் என்று நம்புவதாகவும் யஸ்மின் ஸூக்கா கூறியுள்ளார். இதனிடையே, தனது ஆட்சியின் கீழ் கடத்தல்களும் சித்திரவதைகளும் நடக்கவில்லை என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் அமைப்பும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ்

14 ஜனவரி 2016

புலிகள் தடை செய்யப்பட்டமை தவறு-எரிக் சொல்கைம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது தவறானதொரு முடிவு என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதானது தவறானதொரு முடிவானதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான செயற்பாடானது புலிகளுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இது சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்தது. சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்காற்றியிருந்தார். கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே கருதுகின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வழியமைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

09 ஜனவரி 2016

ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையை வடக்கு முதல்வர் சந்தித்தார்!

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்களை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார். இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஆயர் மிக விரைவில் குணமடைவார். அதன் பின் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார், இதற்கு இறைவன் அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்த இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

07 ஜனவரி 2016

இலங்கை பெரும் அனர்த்தங்களை சந்திக்கும்!

இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது. எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 டிசம்பர் 2015

புரட்சித்தலைவர் நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!

 
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோரும்  மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் உலகத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

04 டிசம்பர் 2015

நடராஜா வித்தியாலய மாணவியை பலியெடுத்தது கடற்படை!


வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். 
காலை 8.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நாரந்தனையை சேர்ந்த உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

03 நவம்பர் 2015

சிசுவைக் காப்பாற்றிய கருணைகொண்ட நாய்!

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி:கிரு நியூஸ்

27 அக்டோபர் 2015

கருணையே இல்லாத சிங்களப் படைகளுக்கு கருணைச்சபை!

கருணையே இல்லாத தமது படைகளுக்கு கருணைச்சபை அமைக்கிறதாம் சிறீலங்கா அரசு.சிறீலங்கா மட்டுமல்ல ஆசிய நாடுகளுடன் கூட்டிணைந்து வல்லாதிக்க நாடுகளும் தமிழர்களுக்கு அநீதியே இளைத்து வருகின்றன.சாதாரண கல்வியறிவே அற்ற ஒருவனுக்கே நீதி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும்போது இந்த உலக அரசுகளுக்கு மட்டும் ஏன் புரியாமல் இருக்கிறது.உள்ளக பொறிமுறை மூலம் தாமே விசாரணையை மேற்கொள்வோம் என்று கூறும் சிறீலங்கா அரசு படையினரை பாதுகாப்போம் என்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரை காப்பாற்றி விட்டோம் என்றும் பகிரங்கமாகவே தம்பட்டம் அடிக்கிறது.அப்படியானால் இந்த விசாரணைப் பொறிமுறை எதற்காக?இது வெறும் ஏமாற்று வேலை என்பது தமிழ் மக்களுக்கு புரிகிறது.ஆனால் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்திருப்போருக்கு பதவி மட்டுமே தெரிகிறது.இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்த்தியது தமிழர்களின் சாபக்கேடு.தமிழர்கள் அனுபவித்த கொடூரங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற துன்பங்கள் கண்டு எவனுக்குமே கருணை வரவில்லை,ஆனால் மாபாதகர்கள் மீது மட்டும் கருணை வருகிறது.
எங்கே செல்லும் இந்தப்பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ?

-இது நீதி வேண்டும் ஒரு தமிழனின் ஆதங்கம்-

24 அக்டோபர் 2015

16 படுகொலைகளுடன் கோத்தாவுக்கு நேரடிப் பொறுப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார். பின்னர் சட்டவிரோதமான மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார். பொலிஸ் அதிகாரியின் சட்டவிரோத மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம் வரிசைப்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நிலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், மட்டக்களப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்டவிரோத மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என்று ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

18 அக்டோபர் 2015

தமிழீழ அரசியற்றுறை மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினி மரணம்!

தமிழீழ தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழினி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்) சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி, தனது கவனிக்கத்தக்க பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார்.2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல் நிலை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல இன்னல்களை தாங்கி பற்பல எண்ணங்களுடன் காவியமாகி விட்ட அந்த வரலாற்று நாயகிக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது வீரவணக்கத்தை செலுத்தி நிற்கின்றது.

12 அக்டோபர் 2015

தீவகத்தின் காந்தி டேவிட் ஐயா காலமானார்!

காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயாவின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "டேவிட் ஐயா என கழக தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்கள் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தியுள்ளார். இவரின் இழப்பால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (புளொட் அமைப்பினர்) மிகுந்த துயரத்துடன் உள்ளனர். யாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டேவிட் ஐயா நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்ததன் பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்பட்டநிலையில் தனது உறவினருடன் இல, 33 மகாத்மா வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சியில் வசித்து வந்தார். இலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக அந்தக் காலத்தில் திகழ்ந்த சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர். 1979களின் ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) மற்றும் யோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோருடன் இணைந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு காந்தீயம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். பின்னர் இலங்கையின் இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக காந்தீய வழியில் தீவிரமாக செயற்பட்டார். 1983 ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் ஆகியோருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1983 ஜூலையில் இடம்பெற்ற வெலிக்கடைப் படுகொலையின்போது டாக்டர் ராஜசுந்தரம் உட்பட 52பேர் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் கொலைசெய்யப்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியவர்களுள் டேவிட் ஐயாவும் ஒருவர். அதன் பின்னர் 1983 செப்டம்பர் மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி தமிழகம் சென்றார். இக்காலப் பகுதியில் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ ஆங்கிலப் பத்திரிகைகளான PLOT-Bulletin மற்றும் மாத சஞ்சிகையான SPARK ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றி பல முக்கிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அதேபோல் புளொட் அமைப்பின் தமிழீழத்தின் குரல் (Voice of Tamil Eelam - VOTE) வானொலி சேவையின் ஆங்கிலப் பிரிவிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார். 1983இன் இறுதிப் பகுதியில் அன்றைய மொறீசியஸ் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்றிருந்தபோது அவருடன் டேவிட் ஐயா மற்றும் சித்தார்த்தனும் உடனிருந்து அந்நாட்டின் செங்கம்பள வரவேற்பைப் பெற்றிருந்தனர். பின்னர் 1986இல் வறிய மற்றும் அகதி மக்களுக்கு தனி மனிதராக தன்னாலான சேவைகளை தமிழ் நாட்டிலிருந்து ஆற்றிவந்தார். பின்னர், 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.