பக்கங்கள்

26 பிப்ரவரி 2016

புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் கேவலமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?


http://www.netrigun.com/wp-content/uploads/2016/02/pothu-amippu.jpgசர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலே அண்மைக்காலமாக ஜனநாயக அத்துமீறல்களும் தான்தோன்றித்தனமான தன்னதிகாரச் செயற்பாடுகள் வரன்முறைக்குட்பட்ட நிர்ணய நிலையியலுக்கு அப்பால் எல்லை மீறி தொல்லை கொடுக்கும் துயரச் சம்பவங்கள் தூபமிடுகின்றன.இவை சட்ட நிர்வாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை ஆட்டம் காண வைக்கிறது. மனித உரிமைகள் விவகாரம் சர்வதேச ரீதியாக தங்களை அச்சுறுத்துகின்ற நிலை காணப்படும் சூழலில் இவ்விதமான சம்பவங்கள் மேலும் தங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. ஜனநாயகத்தின் முதல் படியே சட்ட ஆட்சி அது இலங்கையில் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா எனும் விவகாரத்திற்குட்பட்ட கேள்வி பல தசாப்தத்தை தாண்டி எம்மத்தியில் உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கடந்த வருடத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்கொடுமை மரணம் நிகழ்ந்தது ஒரு வருடம் அண்மித்த நிலையில் உங்கள் சட்ட ஆட்சி அல்லது நல்ல ஆட்சி சாதித்தது என்ன? உங்கள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனும் வாக்குறுதி கானல் நீராகி கரையேறி விட்டதா? எனவே உங்கள் வாக்குறுதிகளை எதிர்காலத்தில் நாம் எப்படி நம்புவது? சிறுவர் துஸ்பிரயோகமும் பாலியல் வன் கொடுமைகளும் நாளொன்றுக்கு பல நூறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. வெளிவருபவை ஒரு சிலதே. இதை தடுக்க வேண்டிய சட்டம் இருட்டறையில் நித்திரை கொள்கிறதா? வித்தியாவின் வழக்கிற்கே இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாத உங்களின் சட்டக் கட்டமைப்பு சேயாவின் படுகொலையிலும் இதுவே தொடர்கிறது.ஹரிஸ்ணவியின் கொலையாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியாத அளவில் மிகப் பலவீனமான முறையிலா தங்களின் புலனாய்வுக் கட்டமைப்பு இயங்குகின்றது. இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு புதிதும் அல்ல, வேடிக்கையும் அல்ல. எத்தனை வழக்குகளையும் விசாரணைகளையும் ஆணைக்குழுக்களையும் சந்தித்து அலுத்துப்போனவர்கள்.எனவே அவசரமாக நடைமுறையில் உள்ள குற்றவியல் தடுப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இவ்விதமான சிறுவர் வன்கொடுமைக் கொலைகளிற்கு விரைவாக தண்டனை கிடைப்பதற்கு வழிவகுப்பதுடன் அத்தண்டனை வினோதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு வலுவேற்ற வேண்டும். ஆகவே அவ்விதமான அதி பயங்கரமான தண்டணை வழங்காவிட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே போய்விடும்.எனவே உங்களாலும் சில சர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள்; ஆராய வேண்டும். ஆகவே வழமைபோல் பாராமுகமாகவும் கேளாச் செவியாகவும் எமது நியாய பூர்வமான வேண்டுகோளை உதாசீனம் செய்பவர்களாக இருக்காதீகள். ராஜபக்ச ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பெரிய இடைவெளி இருப்பதாக எமக்கு தெரியவில்லை.எனவே எமது வேண்டுகோளை ஏற்றுணர்ந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில் எதிர்காலத்திலும் இன்னும் பல பெண்களிற்கு இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு மேலும் வழிவகுக்கப் போகின்றீர்கள் எனும் வாதத்தையும் முன்வைக்க விரும்புகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.