பக்கங்கள்

04 ஜூன் 2015

நாரந்தனையில் தொடரும் வாள்வெட்டு!

நாரந்தனையில் நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

01 ஜூன் 2015

பெண்களுடன் சேஷ்டை விடுவோரைக் கைது செய்ய உத்தரவு!

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லியடியிலுள்ள கல்வி நிலையங்கள், மகாத்மா திரையரங்கு, தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் நின்று பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை கோருபவர்களையும் அவர்களைக் கேலி செய்து அவர்கள் அணிந்துள்ள தொப்பிகளைக் கழற்றுபவர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக பொதுமக்களால் புகைப்படங்களுடன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

23 மே 2015

காணவில்லையென தேடப்படும் இளம்பெண் இவர்தான்!

யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.முன்னர் நாரந்தனையை சேர்ந்தவர் என செய்திகள் வந்திருந்தமையால் நாமும் அதை பிரசுரித்திருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

22 மே 2015

நாரந்தனையை சேர்ந்த இளம்பெண்ணை காணவில்லை!

நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த 11ம் திகதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முல்லைத்தீவில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி, இரண்டரை வயதான தனது குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் முல்லைத்தீவிற்கும் வந்து சேரவில்லையென அவரது கணவர் கூறியுள்ளார். ஏற்கனவே தீவகத்தில் வித்தியா காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னர் மீண்டும் அந்த பகுதியில் இளம்பெண்ணொருவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 மே 2015

வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன். மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு ஏழு தினங்களாகின்றன. இதனால் இன்று வட மாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தின் இயல்புநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் 9 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமன்றி, குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன், மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையாகச் செயற்பட்டுள்ளனர். மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமிகளை, யுவதிகளை, பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும். இன்று வடக்கில் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர். மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், உடைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்திவருகின்றன. எனவே, வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்'' என்றார்.

19 மே 2015

சுவிசிற்கு தப்பிச்செல்ல முயன்ற மகாலிங்கம் சிவகுமார் கைது!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுவிஸிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், சந்தேகநபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சுவிஸிலிருந்து இலங்கை வந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு வித்யா கொலையுடன் நேரடித்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த புங்குடுதீவு பிரதேச மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்குச் சென்ற சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறித்த நபரை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அவரைத் தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் பிரதேசமக்கள் குறித்த சந்தேகநபரை சட்டத்தரணியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், வித்தியாவின் கொலை தொடர்பில் வடமாகாண பொலிஸ் மாஅதிபருடன், சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பகுதிக்கு இன்று காலை மீண்டும் சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில், சந்தேகநபர் மகாலிங்கம் சிவகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ளதாகவும், அவர் சுவிஸ்ஸிற்கு இன்று பிற்பகல் தப்பிச் செல்லவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு கிடைத்த செய்தியினை அடுத்து அவர்கள் சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பியதுடன், சந்தேகநபரை ஒப்படைக்குமாறும் கோரினர். இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வி.ரி.தமிழ்மாறனின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 மே 2015

புங்குடுதீவில் மாணவி படுகொலை!மேலும் ஐவர் கைது!

நல்லூரில் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் அங்கும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊர் மக்கள் திரண்டு கைது செய்யப்பட்டவர்களைக் கைப்பற்ற மேற்கொண்டுள்ள முயற்சியையடுத்து, புங்குடுதீவுக்கு மேலதிக காவல்துறையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புங்குடுதீவு மாணவி வித்யா பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு மறுநாள் காலை காட்டுப்பாங்கான பகுதியில் கோரமாகக் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஏற்கனவே மூன்று பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களை மே மாதம் 28ஆம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த ஐந்து பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கையின் வடபகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 மே 2015

புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

14 மே 2015

புங்குடுதீவில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை புங்குடுதீவினில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படடுள்ளார். நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.

09 மே 2015

ஊர்காவற்றுறையில் இளைஞர் தற்கொலை!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 37 வயதுடைய வில்யம் விமலசிறி என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தன் மனைவியுடன் இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

08 மே 2015

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் நாளை கொடியேற்றம்!

ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (09.05.2015)சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா நடைபெறும்.எட்டாம் திருவிழாவான (16.05.2015)சனிக்கிழமை வேட்டைத் திருவிழாவும்,(17.05.2015)ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்,(18.05.2015)திங்கள்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.அதைத் தொடர்ந்து (19.05.2015)செவ்வாய்க்கிழமை வைரவர் பொங்கல் இடம்பெறும்.

07 மே 2015

ஐ.எஸ் பாணியில் யாழில் புதிய இயக்கம்!

மத்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ் இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரௌடித்தனம், புகைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்யும் வாலிபர்கள் மற்றும் குட்டையான கவர்ச்சியான ஆடைகள் அணியும் பெண்களின் கைகளை வெட்டவுள்ளதாக எச்சரிக்கைவிட்டு அனாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் பல இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தது. யாழ்க்குடாவில் ரௌடித்தனங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் எல்லைமீறி சென்றால் எப்படியான தண்டனைகள் வழங்கப்படும் என அதில் விபரிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்தல், வாள்வெட்டில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களிற்கு கை துண்டிக்கப்படும் என்றும் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திகளில் மூன்றுபேருக்கு மேல் கூடி நின்றால், பொது இடத்தில் கும்பலாக சிகரெட் புகைத்தால் தண்டனை வழங்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெண்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவர்களிற்கும் தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எம்.கே.ஓ என்ற அமைப்பு அதற்கு உரிமை கோரியுள்ளது.

05 மே 2015

39-வது அகவையில் கால் பதிக்கிறது தமிழீழ விடுதலைப்புலிகள்!

தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 39-வது அகவையில் கால் பதிக்கிறது.1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.ரி.ரி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார். தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர். இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள். ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
 01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரணி. சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு. 02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி 03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு. 06. புலனாய்வுத்துறை 07. வேவுப்பிரிவு 08. ஒளிப்பதிவுப் பிரிவு 09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. கணணிப் பிரிவு 11. மாணவர் அமைப்பு 12. தமிழீழ வைப்பகம் 13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14. அனைத்துலகச் செயலகம் 15. சுங்கவரித் துறை 16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18. அரசறிவியற் கல்லூரி 19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20. வன வளத்துறை 21. தமிழீழ நிதித்துறை 22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 28. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 29. அன்பு இல்லம் (முதியோர்) 30. பொத்தகசாலை 31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32. ஈழநாதம் செய்தி இதழ் 33. வெளிச்சம் செய்தி இதழ் 34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36. நிதர்சனம் 37. புலிகளின் குரல் வானொலி 38. மாவீரர் பணிமனை 39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான) 40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) 41. சேரன் வாணிபம் 42. சேரன் சுவையகம் 43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44. பாண்டியன் வாணிபம் 45. பாண்டியன் சுவையூற்று 46. சோழன் தயாரிப்புகள் 47. வழங்கற் பிரிவு 48. சூழல் நல்லாட்சி ஆணையகம் 49. நிர்வாக சேவை 50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55. தமிழீழ விளையாட்டுத்துறை 56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

23 ஏப்ரல் 2015

கனடியத் தமிழர்களின் நண்பன் பற்றிக் பிரவுண்!

கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் பற்றிக் பிரவுண் என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுணை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும், சேலை அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோன்யமாகப் பழகியதா குறிப்பிட்டுள்ளார். சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரோ அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்களைப் பார்க்கவில்லை, தங்களது பக்கத்து வீட்டுப் பையன் போல அவ்வளவு உரிமையோடு பழகினார்கள். அவருடன் தங்களின் விடயங்களை இலகுவாகப் பகிர்ந்து கொண்டனர் எனவும்,குறிப்பிட்டுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட சாந்தா பஞ்சலிங்கம் என்பவர் “பற்றிக் தமிழர்களது நண்பன்” , “எங்களது இன்ப, துன்பமோ எந்த நிகழ்வென்றாலும் பற்றிக் எங்களுடன் நிற்பார்” எனப் பெருமிதமாகச் சொன்னார். ஒரு பல் வைத்தியரும், அவரது குடும்பமும் பற்றிக்குடன் படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த வைத்தியரின் மகனான சிறுவன் பற்றிக்கோடு மிகவும் உரிமையோடு பழகினான். பற்றிக்கை தெரிந்ததையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்த பொறியியலாளரான மூர்த்தி நாராயணன் பற்றிக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்படுவதற்கு அவர் மரதன் வீரராய் இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறு தமிழர்களிற்கும் திரு.பற்றிக் பிரவுனிற்குமான உறவை மேற்படி ஆங்கிலப் பத்திரிகை சிலாகித்துள்ள அதேவேளை, திரு.பற்றிக் பிரவுண் இந்து ஆலயமொன்றிற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அங்கிருந்த மக்களுடன் இணைந்து உணவருந்திச் சென்றார்.

17 ஏப்ரல் 2015

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது. இதன் முதல் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து நடத்தும் பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மதியம் 2 மணியளவில் நடை பெற உள்ளது. இவ் விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வருமாறு அழைக்கின்றனர். தொடர்புக்கு: 9600031771, 9884495527, 9940121655.

16 ஏப்ரல் 2015

தேசியத்தலைவரின் இருப்பிடத்தை நெருங்கிய இந்தியப்படைக்கு ஏமாற்றம்!

இந்திய அமைதிப்படையினரால் ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் இந்திய அமைதிப் படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிவைக்க எடுத்த முடிவு கொள்கை ரீதியான உயர்மட்டத் தவறு என்று குறிப்பிட்டிருந்த ஜெனரல் வி.கே.சிங், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன், இதனை மறுத்தார். பிரபாகரனின் மறைவிடத்தை இந்திய அமைதிப்படையினரால் ஒருமுறை மட்டுமே நெருங்க முடிந்தது எனக்குறிப்பிட்ட அவர், அப்போது கூட பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார் எனத் தெரிவித்தார். “இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்திய- இலங்கை உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது. நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு இந்திய அமைதிப்படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இந்திய அமைதிப்படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றும் கேணல் ஹரிகரன் தெரிவித்தார்.

09 ஏப்ரல் 2015

தம்பாட்டியில் நண்டு பதனிடும் தொழிற்சாலை!

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிய பதனிடும் வசதி இல்லாததால் குடாநாட்டில் பிடிக்கப்படும் நண்டுகள் உள்@ர் மக்களினாலேயே நுகரப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்நண்டு பதனிடும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. தீவகக் கடற்பரப்புகளில் மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிடிக்கப்படும் நண்டுகளையும் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்து இத்தொழிற்சாலையில் பதனிடவுள்ளது. இதன் பின்னர் பதனிடப்பட்ட நண்டுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். நண்டு ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதோடு, தம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் இத்தொழிற்சாலை வழங்க உள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நவீன வசிதிகளுடன்கூடிய இந்நண்டு பதனிடும் தொழிற்சாலையை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரற் லோஹீன், ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர் நிர்வாக அதிகாரியுமான ஹோலியாங்சூ, ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினைநந்தி மற்றும் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். இத்தொழிற்சாலை அமைந்துள்ள ஏழு நெல்பரப்புக் காணியையும் அமரர் பொன்னுச்சாமி குமாரசாமி என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறவினர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

07 ஏப்ரல் 2015

புளியங்கூடல் தெற்கு அருள்மிகு வீரபத்திரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் தெற்கில் அமைந்துள்ள அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும்(10.04.2015)வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.(08.04.2015)புதன்கிழமை குருமாரம்பமும்,(09.04.2015)வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதலும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து (10.04.2015)வெள்ளிக்கிழமை அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற உள்ளது.வீரபத்திரர் அடியார்கள் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறையருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.

06 ஏப்ரல் 2015

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்! - துரத்திய மக்கள்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில் படைச்சிப்பாய் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தப்பிச் சென்றுள்ளார். குறித்த படைச்சிப்பாய் ஓடி வருவதைப் பார்த்து படைமுகாமில் காவலில் நின்ற சிப்பாய் முகாமின் பிரதான வாயிலை திறந்து சிப்பாயை உள்ளே விட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் முகாமிற்குள் செல்ல முடியாத நிலையில் திரும்பியுள்ளனர். எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணைகள் நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டு உரிமையாளரை நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைத்தனர். நேற்றுக்காலை குறித்த வீட்டாருக்கு அழைப்பினை எடுத்த பொலிஸார் விசாரணைக்கு வரவேண்டாம். படையினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற படையினர், சிப்பாய் வீட்டுக்குள் வந்தது உண்மைதான் ஆனால் அந்த சிப்பாய் யார் என்பது தெரியவில்லை. வாயிலில் காவலுக்கு நின்ற சிப்பாயும் உண்மையை சொல்ல மறுக்கின்றான். எனவே சமாதானமாக போங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் சமாதானத்திற்கு மக்கள் முழுமையான மறுப்பினை தெரிவித்துள்ளனர்.

29 மார்ச் 2015

புளியங்கூடல் காட்டு வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் கிராஞ்சியம்பதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காட்டு வைரவர் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையிலே (30.03.2015)திங்கட்கிழமை மற்றும் (31.03.2015)செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் விஷேட பூஜைகள் நடைபெற்று பின்னர்(01.04.2015)புதன்கிழமை மகா கும்பாபிஷேகப்
பெருவிழா ஆரம்பமாகி நடைபெற உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக நம்பப்படும் காட்டு வைரவர் ஆலய பின் பகுதியில் கல் ஒன்று வளர்ச்சி பெற்று வருவது ஊர் மக்களின் நம்பிக்கைக்கும் ஆச்சரியத்திற்கும் உரிய ஒன்றாக நோக்கப்படுகின்றது.ஆலயத்திற்கு நன்கொடைகள் அளிக்க விரும்பும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஊர் மக்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

28 மார்ச் 2015

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க சிறீலங்கா முடிவு?

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார். இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது. இதனாலேயே குறித்தத புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் இதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றுமம் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தீர்மானத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளமை கனடியவாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது உலக தமிழர்கள் பேரவை இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 மார்ச் 2015

தளபதி சூசை அவர்களின் குடும்பத்திற்கு விஜயகலா உதவி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது.அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்டு ஒன்றை சன்மானமாக வழங்கி இருந்ததார். குறித்த நிலத்தை அரசுடமையாக்கியதை தொடர்ந்து சூசையின் மனைவி பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு தனக்கு ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறியதாக தெரிய வருகிறது. விரைந்து செயற்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ்(22) மகள் மதி (23) உட்பட குடும்பத்தினர் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் என சந்தேகிக்கபடுபவர்களால் தொடர்ந்து வரும் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியனதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதே நேரம் சூசையின் மனைவியிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலத்துண்டை மீளவும் ஒப்படைக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ் மகள் மதி உட்பட குடும்பத்தினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை அவர்களை கடற்படையினர் சிறைப்பிடித்து திருமலையில் கடற்படை முகாம் ஒண்றில் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடதக்கது. முன்னாள் போராளிகளை தீண்டத்தகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துவரும் நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

19 மார்ச் 2015

கொலை முயற்சியிலிருந்து தப்பினார் பகீரதி!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015) கொலை முயற்சியொன்றிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது. இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார். இந்நிலையில் முல்லைதீவு கண்டாவளையில் தனது குடும்பத்தவர்களுடன் தங்கியிருந்த பகீரதி அருகாகவுள்ள கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அவ்வேளையில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவர் அவரை கொலை செய்யும் முயற்சியாக மோதி தள்ளியுள்ளனர். தாக்குதலாளிகள் தப்பித்து சென்றிருந்ததால் அவர்களை அடையாளம் காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார். தூக்கி வீசப்பட்ட அவர் அபயக்குரல் எழுப்ப அயலவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். முன்னதாக தமது வீட்டை சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் வேவுபார்ப்பதில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் குடும்பத்தவர்கள் காவல்நிலையத்திற்கு ஒப்பமிட சென்று திரும்பியவேளையும் அச்சுறுத்தப்பட்டு பின்தொடரப்பட்டதாக தெரிவித்தனர். இதேவேளை, 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பகீரதி 2005ஆம் ஆண்டில் பிரான்ஸ் சென்று திருமணம் முடித்திருந்தார். விடுமுறையைக் களிப்பதற்கு தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று வன்னியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாதகாலம் தங்கி மீண்டும் பிரான்ஸ் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். ஒருபுறம் நீதியை பேணுவதாக காட்டிக்கொண்டு மறுபுறம் வடிகட்டல்களை அரச படைகள் முன்னெடுத்துவருவதன் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகின்றது.

நன்றி:குளோபல் தமிழ் நியூஸ்

14 மார்ச் 2015

வட,கிழக்கு மக்கள் குறித்து பிழையாக கணித்துவிட்டேன் - மகிந்த

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமான வாக்குகள் தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இது இவ்வாறு நிகழும் என்று தாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் இப்படி வாக்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பது தமக்கு புரியவில்லை. மேலும் வடக்கு கிழக்கின் வாக்குகள் சரிவடைந்துள்ளது என்பது தெரிந்ததோடு, தாம் தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதையும் உணர்ந்துக் கொண்டதாக மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2015

கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்!

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார். சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட 26 வயதுடைய விஸ்வலிங்கம் வினோதினி என்ற பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.

12 மார்ச் 2015

பெண் போராளி புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டார்!

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர். மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித்த முன்னாள் போராளி கடத்தி செல்லப்பட்ட வேளை இலங்கை காவல்துறையும் அப்பகுதியில் பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

09 மார்ச் 2015

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் பிரான்சில் காலமானார்!

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) இன்று காலை பிரான்சில் காலமானார். ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலகட்டத்தில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருந்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர். 1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார். 1972 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர். கி.பி.அரவிந்தன் பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், புதினப்பலகை இணையத்தளத்தின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.இவர் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08 மார்ச் 2015

கனடா வந்தடைந்த ஜெசிக்காவிற்கு அமோக வரவேற்பு!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற ஜெசிக்காவிற்கு கனடாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த ஈழ மாணவி ஜெசிக்காவும் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.அந்த ஒரு கிலோ தங்கத்தையும் தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கினார் ஜெசிக்கா. ஏற்கனவே, தனது இனிமையான குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்த ஜெசிக்கா, இந்த நற்செயல் மூலம் அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்நிலையில், கனடா திரும்பினார் ஜெசிக்கா. டொராண்டோ விமான நிலையத்தில் ஜெசிக்காவை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெசிக்காவை பாராட்டி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

07 மார்ச் 2015

லண்டனில்"யாழ் வுட்"ரகசிய தடுப்பு முகாம்!அம்பலப்படுத்தியது சனல் 4

லண்டனில் "யாழ் வுட்"
என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் ஈழத் தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள்.அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்களை இந்த முகாமிற்கே அனுப்புகிறார்கள். குறித்த முகாமில் சுமார் 400 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமானோர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் கர்பினிப் பெண்கள் என்பது திடுக்கிடும் தகவல்.இங்கே பலர் எண்ணில் அடங்காத அளவு தற்கொலை முயற்சிகளுக்கு முயன்றுள்ளார்கள். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க இங்கே காவலாளிகளாக பணிபுரிபவர்கள் பெண்கள் குளிக்கும்வேளை பார்த்து அவர்கள் அறைக்குச் சென்று அவர்கள் குளிப்பததை பார்கிறார்கள். ஆபிரிக்க பெண்களைப் பார்த்து அவர்கள் மிருகம்போன்றவர்கள் என்று தமக்கு தாமே பேசும் காட்சிகள் மற்றும் ஒலி நாடாக்களையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பெண்கள் குளிக்கும்போது பார்பது அலாதியான ஒருவிடையம் என்றும், அதனை இங்கே தான் இலவசமாகப் பார்கலாம் என்றும் ஒரு காவலாளி மற்றைய காவலாளியோடு உரையாடும் ஒலி நாடாக்களும் வெளியாகி பெரும் அதிர்சியை கிளப்பியுள்ளது. இலங்கையில் மட்டும் பாலியல் கொடுமை நடக்கவில்லை. பிரித்தானியாவில் அவை நடக்கிறது என்பதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்கள் சனல் 4 தொலைக்காட்சிக் குழுவினர். இதனால் லண்டன் இமிகிரேஷன் அதிகாரிகள் பெரும் சிக்கலில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

01 மார்ச் 2015

ஜெசிக்காவை பாராட்டினார் நடிகர் சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார். சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.

22 பிப்ரவரி 2015

நாரந்தனையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடலம்!

ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது- 19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார். நேற்று காலை யாழ். நகரிலுள்ள கல்வி நிலையத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட யுவதி, மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் தேடுதல் நடத்தியதுடன், பொலிஸ் நிலையத்திலும் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டவேளை, அது காணாமற்போயிருந்த யுவதியுடையது என்று தெரியவந்தது. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

18 பிப்ரவரி 2015

'போரும் சமாதானமும்' நூல் அனுமதியின்றி மறுபிரசுரம்! - அடேல் பாலசிங்கம் அறிக்கை

அன்ரன் பாலசிங்கம் அவர்களினால் 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட போரும் சமாதானமும் என்ற நூல் தற்பொழுது தமிழ்நாட்டில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அவரது மனைவியார் அடேல் பாலசிங்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு- எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டு, அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் (Fairmax Publishing Ltd) வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ‘போரும் சமாதானமும்’ என்ற தமிழ் நூல் தற்பொழுது இந்தியாவில் ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்றழைக்கப்படும் நிறுவனத்தால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் எனது அனுமதியின்றியே இந்நூலை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன். எனது கணவரால் எழுதப்பட்ட ‘போரும் சமாதானமும்’ தமிழ் நூல் 2005ஆம் ஆண்டு முதற்தடவையாகப் பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட பின்னர் அவ்வாண்டின் இறுதியில் கிளிநொச்சியில் அவரது அனுமதியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்நூல் மீள்பதிப்புச் செய்யப்படவில்லை. அவ்வாறான மீள்பதிப்பை மேற்கொள்வதற்கான அனுமதி எனது கணவர் உயிருடன் இருந்த பொழுது அவராலோ, அன்றி அவரது மறைவுக்குப் பின்னர் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் என்னாலோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எனது அனுமதியின்றி, காப்புரிமை விதிகளுக்கும், புலமைச்சொத்து அறநெறிகளுக்கும், எழுத்துரிமச் சட்டங்களுக்கும் முரணாகத் தன்னிச்சையாக இந்நூலை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மீள்பிரசுரம் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. எனது அனுமதியோ அன்றி மேற்பார்வையோ இன்றி இப்பிரசுரத்தை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மேற்கொண்டிருப்பதால் இதில் தகவல் திரிபுகளும், குழறுபடிகளும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனத்தின் இப்பிரசுரத்தை எனது கணவரின் அதிகாரபூர்வ எழுத்தாக்கமாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு, இந்நூலை விற்பனை செய்வதற்கான உரிமம் என்னால் எந்தவொரு தனிநபருக்குமோ அன்றி நிறுவனத்திற்குமோ வழங்கப்படவில்லை என்பதோடு, அவ்வாறான உரிமை கோரலை எவராவது மேற்கொண்டால் அது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன். எனது கணவரால் எழுதப்பட்ட போரும் சமாதானமும், விடுதலை ஆகிய நூல்களும், என்னால் எழுதப்பட்ட சுதந்திர வேட்கை என்ற நூலும் தற்பொழுது பதிப்பில் இல்லை. எதிர்காலத்தில் இந்நூல்களை மீள்பிரசுரம் செய்வதற்கு நான் தீர்மானிக்கும் பட்சத்தில் அவற்றை என்னால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதிப்பகம் ஊடாகவும், உரிய முறைப்படியும், வெளியீட்டு விழா ஒன்றின் மூலமாகவுமே வெளியிடுவேன் என்பதை அறியத் தருகின்றேன்.

இவ்வண்ணம்,
திருமதி அடேல் பாலசிங்கம்

16 பிப்ரவரி 2015

புலிகளின் சொத்துக்கள் எவையும் என்னிடம் இல்லை-கே.பி.

புலிகளின் நிதியோ,கப்பல்களோ அல்லது வேறு சொத்துக்களோ கைது செய்யப்பட்டபோது என்னிடம் இருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் அமைப்புடனான தொடர்புகளுடன் இருந்து நான் ஒதுங்கியே வாழ்ந்து வந்தேன் என கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 40 பேரின் கடும் கண்காணிப்பின் கீழ் புனர்வாழ்வுக்கு ஒப்பான நிலையிலேயே கிளிநொச்சியில் தான் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கே.பியைக் கைது செய்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அவரிடம் இருக்கும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சி செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் கே.பியை தமிழ் பத்திரிகை ஒன்று தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மலேசியாவில் வைத்து நான் கைது செய்யப்பட்டு 24 மணிநேர விசாரணைகளின் பின்னர் எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் என்னை ஒப்படைத்தார்கள். அன்று முதல் பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பின் கீழேயே வைக்கப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அரசு வசமானதாகக் கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, நான் வழங்கிய தகவல்களின் பிரகாரம் எனது பொறுப்பில் இருந்த கப்பல்கள் இலங்கையால் கைப்பற்றப்பட்டதகாக் கூறப்படும் தகவல்களிலும் உண்மை இல்லை. அது பொறுப்பில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்;. கைதான அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் புனர்வாழ்வுக்ககு உட்படுத்தப்பட்டபோதும், நீங்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது இந்தக் கேள்வியை முன்னைய அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என கே.பி.தெரிவித்தார். நான் தற்போதும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டே வருகின்றேன். எனது குடும்ப உறுப்பினர்களைக் கூட சுதந்திரமாக சந்தித்துப் பேச முடியாத நிலையே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்கள். உங்களிடம் பல பெயர்களில் பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் இருந்ததகாவும் கூறப்படுகிறதே அவை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டபோது, எனக்கு கடவுச்சீட்டே இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

12 பிப்ரவரி 2015

தீவகத்தில் மூடிய கிணறுகளில் உடல்கள்?

யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மீள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கு எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ் தீவகப்பகுதிகளில் இன்னும் அச்சத்துடன் வாழ்கின்ற மக்களின் அச்சத்தைப் போக்கி இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியிருக்கின்றார். அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவிருப்பதாகவும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

10 பிப்ரவரி 2015

முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் டொமினிக் காலமானார்!

1990களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) திருச்சியில் நேற்று முன்தினம் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த போதே, பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமரசப் பேச்சு தோல்வியடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார். அவரை வழியனுப்பி வைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன் கூடச் சென்றார். பலாலி முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் யுத்த சூனியப் பிரதேச எல்லையில் அமைச்சர் ஹமீத்துக்கு டொமினிக் விடைகொடுத்த சமயம் இரு தரப்புகளுக்கும் இடையில் அங்கு சமர் மூண்டது. இரு தரப்புகளிலிருந்தும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எனினும் இரு தரப்புத் தலைவர்களும் விழுந்து எழும்பி, ஓடித் தப்பி தத்தமது பிரதேசத்துக்குள் எப்படியோ வந்து சேர்ந்தனர். இந்த விடயம் அச்சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. எனினும் பின்னர் இயக்கத் தலைமையோடு ஏற்பட்ட ஒரு சிறு முரண்பாட்டை அடுத்து டொமினிக் தனது துணைவியாருடன் இயக்கத்தை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினர். அண்மைக்காலமாக பல்வேறு நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் தீரமான போராளியாக பல சமர்களில் டொமினிக் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08 பிப்ரவரி 2015

தீவகத்தில் கால் வைத்தால் அழிப்போம்!விந்தனுக்கு மிரட்டல்.

வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டின் மீது, வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றிரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும், கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன. பின்னர் சிலர் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.இதனையடுத்து, நான் வெளிச்சத்தை போட்டுவிட்டு வெளியே வந்து மதிலால் எட்டிப் பார்த்தபோது வீட்டிலிருந்து 50 யார் தொலைவில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றது. அதற்கருகில் சிலர் வாள் மற்றும் கம்பிகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து தீவகத்திற்குள் இனிமேல் நுழைந்தால் குடும்பத்தோடு அழிக்கப்படுவாய் என திட்டினார்கள்.பின்னர் அவர்கள் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.

05 பிப்ரவரி 2015

அனந்திக்கு விசாரணையென்றால் சம்பந்தருக்கு என்ன?குருபரன்

1972 ஆம் ஆண்டு ‘சிலோன்’ குடியரசாகி ‘சிறீலங்கா’வாக மாற்றப்பட்ட அரசியலமைப்புச் செயன்முறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தமிழரசுக் கட்சியும், அது அங்கமாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன புறக்கணித்துள்ளன. சிறீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழர்களை உள்ளடக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு 40 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இது விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே செல்வநாயகம் எடுத்த முடிவு. இம்முடிவு ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதற்காண நிலைப்பாட்டுக்கு முரணானதென்று கொள்ளப்படுவதற்கும் இல்லை. எனின் இவ் 40 வருட கால கால முடிவை இன்று மாற்றுவதற்கு திருவாளர். சம்பந்தன் சொல்லும் நியாயம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன். நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்த போது தமிழர் தொடபான விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியதாக ஏஎவ்பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒரு சில அரசியல் கைதிகளின் விடுதலையையாவது எதிர்பார்ப்பதாக தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இது கூட நடைபெறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எக்காரணத்துக்காக இவ்வளவு பெரிய தடம் மாறும் முடிவை மேற்கொண்டார்? தமிழரசுக் கட்சியின் சனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவொன்றை மீறியமைக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது. 40 வருட முடிவை மீறியோருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பதெனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.

11 ஜனவரி 2015

சுமந்திரனும் அமைச்சரானார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வென்று புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவர் ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய நபர்களை நியமித்துள்ளார்.மேலும், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி அமைச்சராக கலாநிதி ஹர்ஸ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன, கல்வித் துறை அமைச்சராக கபீர் ஹாசிம். பொது அலுவல்கள் அமைச்சகத்தின் சஜித் பிரேமதாச, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராக ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சராக ஜெயந்த கருணாதிலக, மின்சாரம், எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையின் அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க, நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பைசர் முஸ்தபா, விமானத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக கரு ஜயசூரியவும், கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத் துறை அமைச்சராக ரோசி சேனநாயக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சராக நவீன் திசாநாயக்க.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்கவும், மீன்வளத் துறை அமைச்சராக ரிஷாத் பதியுதீன்தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும், தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் துறை அமைச்சராக நிறோசன் பெரேராவும், நாடாளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சராக ஜோசப் மைக்கல் பெரேராவும், சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக லட்சுமன் கிரியல்லவும், கலாசார மற்றும் சமய விவகாரங்கள் துறை அமைச்சராக ஜோன் அமரதுங்கவும், மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான துறைக்கு எம்.ஏ.சுமந்திரனும், பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி துறைக்கு எம்.கே.டி.எச்.குணவர்தனவும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணை அமைச்சர்களாக நிதித் துறைக்கு எரான் விக்கிரமரட்னவும், கல்வித் துறைக்கு அகில விராஜ் காரியவசம்வும், சுகாதாரத் துறைக்கு புத்திக்க பத்திரணவும், ஊடகத் துறைக்கு சுஜீவ சேனசிங்கவும், வெவிவகார அலுவல்கள் இணை அமைச்சராக ருவான் விஜயவர்தனவும், நீதி மற்றும் சட்ட அலுவல்கள் இணை அமைச்சராக அஜித் பி.பெரேராவும், மீன்வளத் துறை இணை அமைச்சராக பாலித ரங்கேபண்டாரவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் இணை அமைச்சராக அஜித் மன்னப்பெருமவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறையின் இணை அமைச்சராக ராஜன் ராமநாயக்கவும், மரநடுகை மற்றும் நீர்ப்பாசனத் துறையின் இணை அமைச்சராக பி.திகாம்பரமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 ஜனவரி 2015

மரக்கறி விற்கிறார் மகிந்த-கலகல போட்டோ!

தேர்தலில் தோல்வியடைந்துள்ள மகிந்தரின் வருங்கால நிலை இப்படி தான் இருக்கப்போகிறது என்று சித்தரிக்கப்படும் படம் ஒன்று பேஸ் புக்கில் சக்கை போடு போடுகிறது. என்ன தான் தேர்தலில் தோற்றாலும் மகிந்தவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது என்று சிலர் கூறுவார்கள். அவர் அதனை வைத்துக்கொண்டு இருப்பார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் சில தகவல்கள் அடிப்படையில் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பு செயலாளராக மைத்திரி நியமிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. 2010 தேர்தலில் சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவரை கைதுசெய்து நொங்கெடுத்தார் மகிந்தர். இதனை சரத் பொன்சேகா அவ்வளவு எழிதில் மறந்துவிடுவார என்ன ? …எனவே மெல்ல மெல்ல பழிவாங்கல் ஆரம்பிக்க உள்ளது. தேர்தலில் வென்றவுடன் மகிந்தரை பழிவாங்க ஆரம்பித்தால். வெற்றிக் கழிப்பில் இவ்வாறு ஆடுகிறார்கள் என்று சிங்களவர்கள் கூறுவார்கள். எனவே மெல்ல மெல்லமாக, சில நடவடிக்கைகள் தொடங்கும். இதேவேளை இலங்கையில் இனி எவரும் போய், எனது கணவரை கோட்டபாய தான் கடத்தினார் என்று பொலிஸ் நிலையத்தில் சொல்லலாம். தற்போது கோட்டபாய சாதாரண ஒரு மனிதர். அவர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். இவர்கள் கொட்டம் எல்லாம் 9ம் திகதியோடு அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது அல்லவா. வட கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கொடுத்த நல்ல பாடம் இதுவாக தான் இருக்க முடியும். 2010 ம் ஆண்டில் கூட மகிந்தருக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிட்டார். அந்தவேளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு தமிழர்களை வாக்குப் போடச் சொன்னது. ஆனாலும் எவரும் அவருக்கு போடவில்லை. அனால் இம் முறை தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக காத்திரமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். குடும்ப அரசியல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக நின்றுள்ளார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

09 ஜனவரி 2015

கே.ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரி சத்தியப்பிரமாணம் எடுப்பார்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

06 ஜனவரி 2015

கோத்தாவுடன் ஓடத் தயாராகும் கருணா… பிள்ளையான்!

தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சயப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மலேசியா அல்லது சிங்கபூருக்கு இவர்கள் தப்பிச் செல்லக்கூடும் என்று கொழும்பின் முக்கிய வட்டாரங்கள் மூலமாக அறியமுடிகிறது.முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே . இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது. அதன் நன்றிக் கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாட்டுக்கு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்யப் பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலேயே இந்த நகர்வுகள் நகர்த்தப்பட்டு வருகின்றனவாம். அவ்விதம் கருணா தப்பி செல்லாவிட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும் என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது . எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் ஏதாவது நடக்கலாம் என்பதே அந்த பர பரப்பு . மேலும்நான்கு நாட்கள் உள்ள நிலையில் இந்த பர
பரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன.

01 ஜனவரி 2015

எட்டாம் திகதியின் பின் எதிர்க்கட்சியில் மகிந்த?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது.நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது. மேலும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக கூடுதல் ஆசனங்களை வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் மூலம் தொடர்ச்சியாக அரசியலில் தமது குடும்ப செல்வாக்கைத் தக்க வைத்துக்கொண்டு மீண்டும் அரசியல் தலைமைத்துவத்தை அடைவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வகுத்துள்ள புது வியூகத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.

30 டிசம்பர் 2014

மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் மைத்ரிபால சிறிசேனா இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சூழலில் அவருக்கு ஆதரவு என்கிற தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னனி, ஐக்கியத் தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

23 டிசம்பர் 2014

மீனவர் ஜேசுதாசனின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்–கஜதீபன்.

கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். வழமை போல தொழிலுக்குச் சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப் படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் போது காப்பாற்றாமல் சென்றுள்ளனர். சுமார் முக்கால் மணி நேரத்தின் பின்னரே ஜேசுதாசன் அவர்கள் தனது நிலையை உறவினர்களுக்கு அறிவித்த போது அவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமாகியுள்ளார். கடற்படையினர் தம்மால் மோதப்பட்ட வரை, மனிதாபிமானத்துடன் உடனே காப்பாற்றியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரைக் காப்பாற்றாமல் ஓர் கொலைக்கு சமமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். மக்கள் கொந்தளிக்கின்ற சூழ்நிலையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இன்று இங்கு வந்துள்ள கடற்படை உயரதிகாரிகள், இவ்விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமெனவும், இழப்பீடுகளும், வேலைவாய்ப்பும் தருவதாகவும், இவ்விடயத்தை அப்படியே விட்டுவிடுமாறும் கூறியுள்ளனர். பெரிய குடும்பமொன்றின் குடும்பஸ்தரான ஜேசுதாசன் அவர்களின் கொலைக்கு சட்டரீதியாக அரசினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் உரிய விதத்தில் உடனே வழங்கப்படுவதுடன், கொலைக்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என இவ்விடத்தில் நான் கோரிக்கையொன்றை விடுக்கின்றேன். வழமைபோல இவ்விடயம் அரசினாலும்,படையினராலும் ஏமாற்றப்படுமானால், நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது, அதில் நானும் கலந்து கொண்டு போராடுவேன். எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பின்னர் மக்களின் கடற்படையினருக்கு எதிரான மனக்கொந்தளிப்பின் மத்தியிலும், கடற்படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினரின் கடும் கண்காணிப்பிலும் அன்ரனி ஜேசுதாசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

27 நவம்பர் 2014

'வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை' : தமிழ்கவி

இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார். அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார். இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார். அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

உங்களின் கனவுகள் நிஜமாகும்;யாழில் அநாமதேய கடிதங்கள்!

உங்களின் கனவுகள் நிஜமாகும்; யாழில் அநாமதேய கடிதங்கள் பாடைசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் உயிரை விதையாக்கி உதிரத்தை உரமாக்கி கனவு தேசத்தைக் கருவாக்கி ஓய்ந்த கரும்புலிகளே, மாவீரர்களே உங்களின் கனவுகள் நிஜமாகும் தமிழரின் நாடு உருவாகும் என்று எழுதப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2014

தலைவர் பிறந்தநாளில் யாழ்,பல்கலைக்கழகம் சுற்றிவளைப்பு!

யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாவீரர்களை நினைவு கூரும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் சுடர் ஏற்றப்படலாம் என்ற அச்சநிலை காரணமாக இன்று காலை முதல் அதிகளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை வீதிச்சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருக்கும் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று பல்கலைக்கழகத்தைப் படையினர் கண்காணித்து வருகின்றனர். இதேவேளை இன்று மதியம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த தினம் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்த இராணுவ மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினர் சல்லடை போட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

25 நவம்பர் 2014

புலிகள் இயக்க உறுப்பினரை நீதிமன்றில் ஆயராகுமாறு உத்தரவு!

அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை கையளிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் மற்றுமொரு உறுப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அனுராதப்புரம் விஷேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி;டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் 10 வானுர்திகள் முற்றாகவும், 6 வானுர்திகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்த தாக்குதலின் போது, 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.