பக்கங்கள்

05 பிப்ரவரி 2015

அனந்திக்கு விசாரணையென்றால் சம்பந்தருக்கு என்ன?குருபரன்

1972 ஆம் ஆண்டு ‘சிலோன்’ குடியரசாகி ‘சிறீலங்கா’வாக மாற்றப்பட்ட அரசியலமைப்புச் செயன்முறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தமிழரசுக் கட்சியும், அது அங்கமாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன புறக்கணித்துள்ளன. சிறீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழர்களை உள்ளடக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு 40 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இது விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே செல்வநாயகம் எடுத்த முடிவு. இம்முடிவு ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதற்காண நிலைப்பாட்டுக்கு முரணானதென்று கொள்ளப்படுவதற்கும் இல்லை. எனின் இவ் 40 வருட கால கால முடிவை இன்று மாற்றுவதற்கு திருவாளர். சம்பந்தன் சொல்லும் நியாயம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன். நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்த போது தமிழர் தொடபான விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியதாக ஏஎவ்பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒரு சில அரசியல் கைதிகளின் விடுதலையையாவது எதிர்பார்ப்பதாக தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இது கூட நடைபெறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எக்காரணத்துக்காக இவ்வளவு பெரிய தடம் மாறும் முடிவை மேற்கொண்டார்? தமிழரசுக் கட்சியின் சனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவொன்றை மீறியமைக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது. 40 வருட முடிவை மீறியோருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பதெனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.