பக்கங்கள்

06 ஜனவரி 2012

சிசுவை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூரபெண்!

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு , பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் இறுதிப்போரின் போது உயிரிழந்து விட்டார்.
நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி, மீளக்குடியமர்ந்த இந்தப் பெண் கருத்தரித்துள்ளார். நேற்று முன்தினம் முதல் இவரது வீட்டில் எவரும் இல்லாததால் சந்தேகப்பட்ட அயலவர்கள் அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதன் பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார் அந்தப் பகுதிக்கு சென்று நடத்திய சோதனைகளின் போது, குறித்த பெண்ணின் வீட்டுக் கிணற்றில் இருந்து, பிறந்து ஒரு நாளேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு குறித்த சிசுவை தாய் கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது ஏனைய 5 பிள்ளைகளுடன், சிசுவை கிணற்றில் வீசிய பெண் தலைமறைவாகி விட்டார். கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

05 ஜனவரி 2012

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நினைவுச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது!

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலையின் ஒரு பகுதி சேதமடைந்து இருப்பதாகவும் இச்சிலை வெடிப்புச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தகர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் இது தொடர்பாக பல்கலைகழக உப வேந்தர் கலாநிதி.என்.எல்.ஏ.கருணாரட்னவிடம் கேட்ட போது, பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சில மாணவர்களின் முறைகேடான சம்பவமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இச்செயலுக்கு இராணுவமே காரணமென மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் வெடிப்பு சம்பமொன்று பல்கலைக்கழக நினைவுச்சிலை மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து உடனடியாக பொலிஸ் அவர சேவை பிரிவு (119) மற்றும் மிரிஹான பொலிஸூக்கு அறிவித்தும் இதுரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சஞ்சீவ பண்டார குற்றம்சுமத்தினார்.
மேலும், சிலைக்கு பாரியசேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டனார்.
இத்தகைய செயலை சாதாரண மாணவர்கள் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் இச்சம்பவத்துடன் இராணுவத்தினருக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ தொடர்பு இருக்கவேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அனைத்து பீட மாணவர்களும் தற்போது வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் வகுப்பிற்கு செல்லப்போவதில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா பயணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இக்குழு தென்னாபிரிக்காவின் தலைநகரான டர்பனுக்கு சென்றுள்ளது. தென்னாபிரிக்காவில் ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத் தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.
இக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி அளவில் நாடு திரும்புவார்கள் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இக்குழுவினர் அந்த விஜயத்திற்குப் பின்னர் தென்னாபிரிக்காவிற்கு திடீரென சென்றுள்ளமையானது அரசு தரப்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக கொழும்பு நாளிதழ் ஒன்று தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

04 ஜனவரி 2012

குறிகாட்டுவான் கொண்டு வரப்பட்ட கடற்பாதை பயன்பாட்டுக்கு உதவாதது.

குறிகட்டுவான் துறையில் கடந்த ஒருவருட காலமாக வைக்கப்பட்டிருந்த கடற் பாதையைச் சீர் செய்யும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கடற்பாதையைச் சீர்செய்து குறிகட்டுவான் துறைக்கும் நயினாதீவு இறங்கு துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கெனக் கொழும்பில் இருந்து தொழில்நுட்பவியலாளர் குழு ஒன்றும் யாழ்ப்பாணம் வந்தது. இந்தக் குழுவினர் கடற் பாதையைப் பார்வையிட்டு ஆராய்ந்த வேளை அது பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதைச் சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் தொழில்நுட்பவியலாளர் குழு தெரிவித்தது. இந்தக் கடற்பாதை மோசமாகத் துருப்பிடித்துள்ளமையே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலைத் துறைமுகத்தில் நீண்டகாலமாகப் பராமரிப்பு இன்றிக் காணப்பட்ட இந்தக் கடற்பாதை ஒரு வருடத்துக்கு முன்னரே யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டது. குறிகாட்டுவான் நயினாதீவு இடையே சேவையில் ஈடுபடுத்து வதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தக் கடற்பாதை குறிகாட்டுவான் இறங்கு துறையிலும் ஒரு வருடமாகக் காத்துக் கிடந்தது.
எனினும் அது பயன் படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையால் கடற்பாதைச் சேவை கைவிடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிகாட்டுவான் துறைக்கும் நயினாதீவுக்கும் இடையில் கடற்பாதைச் சேவை ஜனவரியில் ஆரம்பமாகும் என அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தி ருந்தனர்.
இந்தக் கடற்பாதை மூலம் நயினாதீவுக்கு வாகனங்கள் மற்றும் பொருள்களை இலகுவாகக் கொண்டு செல்ல முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கடற்பாதைச் சேவை கைவிடப்பட்டுள்ளமையால் அந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

03 ஜனவரி 2012

அவுஸ்ரேலியாவின் அழுத்தத்தினால் பிரேம்குமாரின் மனைவி விடுதலை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேவிபி மாற்றுக்குழுத் தலைவர் பிறேம்குமார் குணரத்தினத்தின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாங்கொக் செல்வதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த இவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் இறக்கிச் சென்று தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 15 மணித்தியாலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த இவர்கள் நேற்றிரவு 7.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து பாங்கொக் நோக்கிப் பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களைச் சந்திக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.
எனினும் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஜேவிபி மாற்றுக்குழுவைச் சேர்ந்த போபகே தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்ற மூவரையும் விடுதலை செய்வதற்கு உதவ அவுஸ்ரேலிய இராஜதந்திரிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தனர். எனினும் அவர்களையும் சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
ஆனாலும் அவுஸ்ரேலிய இராஜதந்திரிகள் குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் இல்லையேல் விடுவிக்குமாறும் திரும்பத் திரும்ப சிறிலங்கா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதையடுத்தே, நேற்றிரவு சம்பா சோமரத்னவும் பிள்ளைகளும் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது பேராதனைப் பல்கலைக்கழக மாணவியாக இருந்த சம்பா சோமரத்ன, ஜேவிபியின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்தார் என்றும், ஆனால் நேற்று தடுத்து வைக்கப்படும் வரை அவரது ஒரு ஒளிப்பட ஆதாரம் கூட சிறிலங்கா புலனாய்வுத்துறையிடம் இருக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே சம்பா சோமரத்ன மூலம், தற்போது தலைமறைவாகியுள்ள பிறேம்குமார் குணரத்தினத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை, பிறேம்குமார் குணரத்தினத்தின மனைவி என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே, சம்பா சோமரத்ன விசாரிக்கப்பட்டதாகவும், அதற்கான போதிய சாட்சியங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாவும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நாரந்தனையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாம்!

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பிரதேசத்தில் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்திலுள்ள கடற்படையினரால் ரி – 56 ரக ஆயுதங்கள் நான்கு அதற்குரிய ரவைகள் 7, எல்.எம்.ஜி ஆயதங்கள் 4, அதற்குரிய ரவைகள் 9,000 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

02 ஜனவரி 2012

லலித்,குகன் விடுதலையை வலியுறுத்தி 5 இலட்சம் துண்டுப் பிரசுரம்.

லலித், குகன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன நேற்றுத் தீர்மானித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, நவசமசமாஜக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம்,ஐக்கிய சோசலிஷக் கட்சி, சோஷலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலும், லலித், குகன் ஆகியோரின் விடுதலையை தொடர்பிலும் மேற்படி கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன முக்கிய சந்திப்பொன்றை நேற்று இராஜகிரியவில் நடத்தின. இதன் போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் யாழ்ப்பாணத்திலும் துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிப்போம் என காணமல் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழில் வைத்து லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்னர் என தெரிவிக்கப்படுகின்றது.

01 ஜனவரி 2012

உடுவில் பகுதியில் இளைஞர்களின் தொல்லை அதிகரிப்பு!

உடுவில் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதாக பொதுமக்கள் குறைப்பட்டுக் கொள்கின்றனர். மாலை வேளைகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்து முக்கிய சந்திகளில் கூடும் இளைஞர்கள் வீதியால் போக்குவரத்து செய்யும் மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதுடன் மதுபோதையிலும் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்களால் கிராம அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இதேவேளை, கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுடைய செயற்பாடுகள் முழுமைபெறாத நிலை காணப்படுகிறது. இதனால் இச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

31 டிசம்பர் 2011

பலாலி ஆசிரியர் கலாசாலையை கையகப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்!

பலாலி ஆசிரியர் கலாசாலையைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்தால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு கல்வியியலாளர்களும், ஆசிரியர் தொழிற்ச் சங்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியாகத் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இந்தக் கலாசாலை விசேட பயிற்சியளித்து வந்தது. தற்போது பலாலி ஆசிரியர் கலாசாலை அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் திருநெல்வேலியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கிவருகிறது.
போர் நிறைவுக்கு வந்த பின்னராவது கலாசாலை சொந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை கல்விச் சமூகத்திடம் இருந்தது.
இந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கும் வகையில் பலாலி கலாசாலையை கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கவுள்ளது. இதனை எமது சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. கலாசாலையை மீண்டும் சொந்த இடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், ஆசிரியர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இதனைப் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளித்தால் நாடு முழுவதும் கல்வியாளர்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டது.

30 டிசம்பர் 2011

யாழ்,மாநகரசபை கூட்டத் தொடரில் மோதல்.

யாழ்,மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கைலப்பு இடம்பெற்றுள்ளது.
ஆளும்கட்சி உறுப்பினர்களான மங்கள நேசன், நிஷாந்தன், விஜயகாந் ஆகியோரே மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து விசேட பொலிஸ் உத்தரவிற்கமைய மேற்படி உறுப்பினர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதினொருபேர் காணாமல் போனதாக கூறப்படுவதில் உண்மையில்லை என பொலிசார் மறுப்பு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பதினோரு பேர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் மறுத்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சடலத்துடன் கட்டுநாயக்காவில் இருந்து சென்ற பதினொரு பேர் மாங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் காணாமல் போனதாக பேரின்பராசா நளாயினி என்பவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட தவபாலன் தனஞ்செயன் என்பவர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் இத்தகைய சம்பவம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி.

இவ்வாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சித்தியடைந்தவர்களில் 3 ஆயிரத்து 687 பேர் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சையில் பாடசாலை ரீதியில் இரண்டு இலட்சத்து 3 ஆயிரத்து 823 பேரும் தனிப்பட்ட முறையில் 35 ஆயிரத்து 801 பேருமாக மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 624 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
சித்தி பெற்றோரின் அடிப்படையில், விஞ்ஞான பிரிவில் 422 பேரும், கணித பிரிவில் 310 பேரும், வணிக பிரிவில் 800 பேரும், கலைப் பிரிவில் 2 ஆயிரத்து 146 பேரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவில் 2 பேரும் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

29 டிசம்பர் 2011

சடலத்துடன் ஏழாலை சென்ற 11பேர் காணாமற் போயுள்ளனர்!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சடலம் ஒன்றுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த 11பேர் காணாமற் போயுள்ளனர்.
இந்திய மருத்துவமனை ஒன்றில் கடந்த 18ம் நாள் மரணமான 38 வயதான தனஞ்சயன் என்பவரின் சடலம், கடந்த 19ம் நாள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டிருந்தது.
அங்கிருந்து வாகனம் ஒன்றின் மூலம் சடலம் யாழ்ப்பாணம், ஏழாலை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில் இறந்தவரின் உறவினர்கள் 11 பேர் பயணம் செய்திருந்தனர்.
கடந்த 20ம் நாள் அதிகாலை 1 மணியளவில் சடலத்துடன் தாங்கள் ஓமந்தைக்கு வந்து விட்டதாக, இறந்தவரின் சகோதரியான கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனை மருத்துவர் விமலச்சந்திரா குமுதா தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
பின்னர் காலை 11 மணியளவில் பனிக்கன்குளத்தில் நிற்பதாகவும், சடலத்தை எடுத்து வந்த வாகனத்தின் சக்கரங்களின் காற்றுப் போய்விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
மீண்டும் மாலை 5 மணியளவில் வாகனம் இயங்கவில்லை என்றும் திருத்தியதும் புறப்படுவதாக கூறியிருந்தார்.
எனினும் இரவு வரை சடலமோ அதனுடன் பயணம் செய்தவர்களோ ஏழாலைக்கு வந்து சேரவில்லை. அவர்களுடனான தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 21ம் நாள் காலை தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச் சென்று காட்டில் வைத்திருப்பதாக உறவினர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததுடன், தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பணியகத்திலும், புளியங்குளம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவி, மூன்று பிள்ளைகள், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் நிகொட் திட்ட அதிகாரி நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி, அவர்களின் மூன்று பிள்ளைகள், சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களுடன் வாகனத்தின் சாரதியும் காணாமற் போயுள்ளார்.

இலங்கையின் கொலைக்களம்"ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்த்தாராம்.

இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். பான் கீ மூன் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்தாரா? இல்லையா? என்பதற்கு ஆம் அல்லது இல்லை என்பதையாவது குறிப்பிடுமாறு நேற்று (28) மின்னஞ்சல் மூலம் இன்ன சிட்டி பிரஸ் மார்டின் நெசர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இக்கேள்விக்கு நான்கு மணித்தியாலங்கள் கழித்து பதிலளித்துள்ள மார்ட்டின், ஆம் என கூறியுள்ளதாக இன்ன சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் கொலைக்களம் காணொளியை பான் கீ மூன் எப்போது பார்வையிட்டார். அது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்றும் இன்ன சிட்டி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் பான் கீ மூன் ஆராய்கிறார். பின்னர் இது குறித்தும் கருத்துக்கள் வெளியிடப்படும். என மார்டின் நெசர்கி அக்கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

28 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவில் அர்த்தமுள்ள எந்த நல்லிணக்கமும் காணப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின்போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது குறித்து தாம் பெருமைப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
ஆறு பத்தாண்டுகளைக் கொண்ட ஐ.நா வரலாற்றில், பாதுகாப்புசபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முதல்முறையாக கடந்த ஆண்டு கனடா தோல்வியைச் சந்தித்தது குறித்தும், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் நேற்று கனடிய ஊடகங்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆபிரிக்காவில் ஒரு பாலுறவில் ஈடுபடுவோரின் உரிமைகள் குறித்து பேசாதிருந்திருந்தாலோ, சிறிலங்கா தொடர்பான எமது கவலைகளை வெளிப்படுத்தாமல் மெளனமாக இருந்திருந்தாலோ, ஈரானின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்திருந்தாலோ, ஐ.நா பாதுகாப்புச்சபை உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் எமக்கு வாக்குகள் கிடைத்திருக்கும்.
ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. நாம் எதைப் பற்றியும் வருந்துவதாக நான் நினைக்கவில்லை. எமக்கு எதிராக ஈரான் வாக்களித்திருக்கலாம். வடகொரியாவோ கடாபியோ எமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம்.
அவையனைத்தும் எமக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதுகளாகவே நினைக்கிறேன்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நாங்கள் திகைப்படைந்துள்ளோம்.
யாராவது ஒருவர் எழுந்து போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை, அர்த்தமுள்ள எந்தவொரு நல்லிணக்கமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூற வேண்டும்.
அது மிகவும் பிரபலமாகாது போகலாம். ஆனால் யாரோ ஒருவர் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். இது மிகவும் முக்கியமானதென்று நான் நினைக்கிறேன்.
புதிதாக வந்த பெருமளவு கனேடியர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக - புலம்பெயர் அரசியல்- நடத்துவதாக விமர்சகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானது.
தேர்தலுக்கு முன்னர் அதை நாங்கள் செய்யவில்லை“ என்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் கடும் குளிர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வெப்பநிலை ஆகக்குறைந்தளவை எட்டியுள்ளது.
கொழும்பில் இன்று வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
இது 1951ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகியுள்ள ஆகக் குறைந்த வெப்பநிலையாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லா-நினா காலநிலை தாக்கத்தினால் ஜனவரி மாதம் வீசிய குளிர் அலையின் போது கொழும்பில் ஆகக் குறைந்த வெப்பநிலை 18.8 பாகை செல்சியசாகப் பதிவாகியிருந்தது.
அதைவிடக் குளிரான காலநிலை இன்று காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 டிசம்பர் 2011

ஊருக்குள் புகுந்தது கடல் நீர்!

முல்லைத்தீவில் கடல்நீர் பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவை அண்டிய கரையோரக் கிராமங்களிலேயே நேற்றிரவு 9 மணியளவில் கடல் நீர் திடீரென குடிமனைகளுக்குள் புகுந்தது.
செம்மலை, கள்ளப்பாடு, அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகள், உப்புக்குளம் போன்ற பகுதிகளுக்குள்ளேயே, கடல்நீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டு இதேநாளில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கடல்நீர் குடிமனைகளுக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்ததால், மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று அஞ்சிய மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
கடல் பெருக்கெடுத்ததால், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் பலவும் குடிமனைகளுக்குள் இழுத்து வரப்பட்டன.
பல இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக கடல்நீர் குடிமனைகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இன்று அதிகாலை வரை வற்றாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மல்லாகத்தில் இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து மரணம்!

மல்லாகத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் கிணற்றிலிருந்தே இவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றில் நீர் அள்ளச்சென்ற வேளையிலேயே இவர் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

26 டிசம்பர் 2011

அது கருணா குழுவின் விழாவல்ல"என சங்கீதா மறுப்பு.

இலங்கை தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல," என்று நடிகை சங்கீதாவும் அவர் கணவர் கிரீஷும் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தமிழ் அமைப்புகள் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகரும் சங்கீதாவின் கணவருமான கிரிஷ் ஆகியோர் பங்கேற்க திடீர் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலி எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் இவ்விழாவை நடத்துவதாகவும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதையடுத்து ஜீவா அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுஅறிவித்து விட்டார்.
எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன் என்று அவர் அறிக்கை விடுத்தார்.
ஆனால் சங்கீதா, கிரிஷ் இருவரும் அந்த விழாவை விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ளனர்.
இது குறித்து சங்கீதா கூறும்போது, "புத்தாண்டு விழாவை சுவிட்சர்லாந்தில் உள்ள உள்ளூர் தமிழர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர். கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்துவதாக சொல்லி அழைத்தனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க மனோ, கிரிஷ், சுசித்ரா, உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
இலங்கை அரசு பின்னணியில் அவ்விழா நடப்பதாகவும் அதில் பங்கேற்கக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததை பாராட்டத்தான் இவ்விழாவை நடத்துவதாக அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்," என்றார்.
புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்தும் சுவிட்சர்லாந்து தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு பின்னணியில் நடந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காகவே கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். எங்களை ராஜபக்சேவின் கைக்கூலிகள் என்று கூறுவது வேதனையளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரியாலையை சேர்ந்தவர் கிளிநொச்சியில் தூக்கில் தொங்கினார்!

கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையை சொந்த இடமாகக் கொண்ட இ.இரவீந்திரன் வயது 49 என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார்.
திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (25) குறித்த வியாபார நிலையத்தினர் நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று மறுநாள் காலை (26) வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். உரிய இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.