பக்கங்கள்

16 ஜனவரி 2012

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை த.தே.கூட்டமைப்பு நிராகரித்தது.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பாக அணைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நேற்று 100 பக்கங்களில் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முன்னுரையில்,
" இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைகளை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
இந்த நாட்டின் அங்கங்களான மக்கள் மீது தண்டனை எதுவுமே வழங்கப்படாமல் தாராளமாயும் குறிப்பானதாயும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளையும், இத்தகைய வன்முறைகளை நெறிப்படுத்தி, அனுசரணை வழங்கி அல்லது அதை திட்டமிட்டு மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கு உள்ள பங்கினையும் பற்றி ஆற்றொணாத் துயருற்றுள்ளோம்.
சுய ஆட்சி, மாண்பு மற்றும் முழுமையும் சமத்துவ மகிழ்வும் கொண்ட குடியுரிமை போன்ற தமிழர்களின் மறுக்க இயலாத உரிமைகள் பற்றிய கோரிக்கையானது இப்படியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தீர்வுகளற்ற வன்முறைகளால் வலிவூட்டம் பெற்றுள்ளது.
பல தசாப்த காலமாகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்வற்று நெரித்து வந்த வன்முறைகளால்  கதிகலங்கிப் போன தமிழ் வாலிபர்கள் அரசுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை எழுச்சிகள் இறுதியிலே பல்வேறு காரணங்களுக்காகக் குடியியல் யுத்தமாக முடிவுற்றமையை மனதிலே வரிந்து கொண்டுள்ளது.
இந்த நாட்டைப் பீடித்துள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நிலைநிற்கத்தக்கதும் நியாயமுமான தீர்வானது தமிழ் பேசும் மக்களின்,  குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் மீள் செப்பனிடப்பட்ட திட நம்பிக்கை மீது கட்டப்பெற்றதாய்,  இலங்கை அரசுடனான அந்த மக்களின் உறவினை மீள் சீர்பொருந்துவதாக அமைய வேண்டும்.
இந்த நாட்டின் கூறுகளாக அமையப்பெற்ற அனைத்து மக்களும் சமத்துவ அந்தஸ்தையும், அரசாட்சிக்கான அடைவு வழியையும், சந்தர்ப்பத்தையும், நீதிக்கும் மாண்புக்குமான அடைவு வழியையும் பெற்றடைவதைத் தரிசனமாகக் கொண்ட ஒரு எதிர்காலத்தை நோக்கியவர்களாய் உள்ளோம்.
2009 இன் இறுதி யுத்தக் கட்டங்களிலே இடம்பெற்ற அரச இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் மற்றும் குறிப்பாக தமிழ் குடிமக்கள் ஆகியோரின் வாழ்வுகளில் ஏற்பட்ட பெரும் இழப்பையிட்டுப் பெரும் துயருற்றவர்களாய் உள்ளோம்.
குடியியல் யுத்தக் காலத்திலே பிரசன்னமாகியிருந்த பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால், இந்த நாட்டிற்குள்ளும் அதற்கு வெளியேயும் இருந்த இலங்கையின் குடிமக்களுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஆகியவைகள் பற்றிய கண்டனத்தையும் வெளியிட்டுள்ளோம்.
இலங்கை அரசின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது வன்னித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவானது இலங்கையின் கணக்கொப்புவிப்பு பற்றி வெளியிட்ட கண்டுபிடிப்புகளை மீள்வலியுறுத்தி நிரந்தரமான அரசியற்தீர்வை முன்வைக்கும் அரசின் மீது தமிழ்மக்களின் நம்பிக்கையினை மீள்சீரமைப்பதற்கு, படுமோசமான அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான கணக்கொப்புவிப்பானது நேர்மையான நல்லிணக்கத்துக்கான செயன்முறைக்கு அவசியமான ஒரு முன்நிபந்தனையாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, உண்மையை வலியுறுத்துவதை நோக்காக் கொண்டு நெறிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நடப்பித்து,  அவர்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்குவது நேர்மையான நல்லிணக்கத்துக்கான நடைமுறையாகும்.
யுத்த குற்றங்களையும் இதர மனித உரிமைகள் மீறல்களையும் கொல்லப்படுமளவுக்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய சகல கணக்கொப்பு விடயங்களையும் பற்றி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது கவனத்திற்கொள்ளும் என இலங்கை அரசானது உலகுக்கு வழங்கி வந்த உறுதியை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
மோசமான சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அரசுகள் கருத்திற்கொள்ள இயலாதிருக்கும் பட்சத்திலே பிரயோகிக்கப்படக் கூடிய குறைநிரப்புக் கொள்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்வுகள் ஆகியவைகள் பற்றி அறிந்துள்ளோம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் திட நம்பிக்கையை மீளவும் பெற்றிருக்கக் கூடியதான போதியதும் நம்பகத்தன்மை கொண்டதுமான நல்லிணக்கத்தைக் கண்டடைவையும் அமைப்பியக்கம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டுள்ளமை பற்றி மனக்கசப்படைந்தவர்களாய் உள்ளோம்.
கணக்கொப்புவிப்பு தொடர்பானதாக எதுவுமே இல்லாவிட்டாலுங் கூட,  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில நேரிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரித்து, அதன் பரிந்துரைகள் அனைத்தையும் திரட்டினாலுங் கூட, இலங்கையின் கணக்கொப்புவிப்பினை முன்னெடுப்பதிலே அவை குறைவுபட்டவை என்பதைக் குறிப்பிட்டு கூறுகின்றோம்.
அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தும் உளச்சுத்தியான முன்னெடுப்புகள் அனைத்துக்குமே எவ்வித பாரபட்சமுமின்றி ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது குறிப்பிட்ட காரணங்களின் நிமித்தமாகக் கொண்டுள்ள முடிவு யாதெனில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக்கூறும் முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்ளவில்லை.
அத்துடன் மோசமான யுத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதனுடன் தொடர்புபட்ட ஆயுதப் படையினர் மற்றும் குடியியற் பணியாளர் ஆகியோரை வேலியடைத்து பாதுகாக்கவே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறும்  விடயம் தொடர்பாக கருத்திற் கொள்வதற்கோ அல்லது அதனை அங்கீகரிப்பதற்கோ இலங்கை அரசு விரும்பில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக பகுப்பாய்வு செய்த பின்னர் டிசெம்பர் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிட்ட ஆரம்பப் பதிலீட்டை மீள்வலியுறுத்தியே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது“ என்று கூறப்பட்டுள்ளது.

15 ஜனவரி 2012

இந்தியா கொடுத்த சைக்கிள்களை சுருட்ட முனைந்த ஈ.பி.டி.பி.

வன்னியில் நடந்த இறுதிப் போரால் பாதிக்கப்பட்ட பின்னர் குடாநாட்டில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட இருந்த சைக்கிள்களை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி தமது ஆதரவாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது.யாழ். மாவட்டத்துக்கு 1,500 சைக்கிள்களை இந்தியா வழங்க இருந் தது. சைக்கிள்களைப் பெறும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகத் தயாரிக்கப்பட்டன. அவற்றை விநியோகிக்கும் பொறுப்பு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
பயனாளிகளின் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் அதனை மீளாய்வு செய்தது. பட்டியலில் இருந்த பெரும் பாலானவர்கள் பயனாளிகளுக்குரிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதை அது கண்டறிந்தது.
அது குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அந்தப் பெயர்ப்பட்டியல் உடனடியாக நிறுத்தப்பட்டது. புதிய, திருத்திய, சரியான பட்டியலைத் தயாரிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து விசாரித்ததில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் பிரதேசக் கிளைகளால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலே சமூக சேவைகள் அலுவலர்கள் மூலமாக முன்னர் பிரதேச செயலர்களுக்குத் தரப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்தது.
இருப்பினும், பட்டியலில் ஏற்பட்ட தவறு குறித்து யாழ். செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள் எதுவும் கூறவில்லை. சமூக சேவைகள் அலுவலர்கள் தந்த பட்டியலையே தாம் வழங்கினர் என்று குறிப்பிட்டனர். இந்தப் பதிலுக்காக அரச அதிபர் அவர்களைக் கடிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸின் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்களில் பெரும்பாலானவை அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உறவினர்களுடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமது உதவிகள் அமைச்சர் டக்ளஸ் சார்ந்தவர்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விடயம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்திருக்கிறது.
இதேவேளை, திருத்திய புதிய பட்டியலின் அடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சைக்கிள்களைப் பயனாளிகளிடம் கையளிப்பார். யாழ். மாவட்டத்துக்கு இந்தியா 2,000 சைக்கிள்களை ஒதுக்கி இருந்தபோதும் அவற்றில் 500 சைக்கிள்கள் ஏற்கனவே மணலாறு பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதற்காக ஆளுநரால் ஒதுக்கப்பட்டுவிட்டது.

14 ஜனவரி 2012

ஆனந்தராஜாவை கைது செய்ய இன்டர்போலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொருளாதார செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்த குமரன் பத்மநாதனுக்கு நிதி வழங்கிய பிரதான நபர்களில் ஒருவரான ஆனந்தராஜா என்பவரை கைது செய்வதற்கு சர்வதேச காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு நேற்று இடம்பெற்ற போது அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, பிரதிவாதி இல்லாத பட்சத்தில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது...
விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் அமெரிக்கா, கனடா, நோர்வே, மலேசியா உட்பட பல நாடுகளில் இயக்கத்திற்காக நிதி சேகரித்தார் என குற்றஞ்சாஞ்டப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்கவின் உரையை கூச்சலிட்டு குழப்பிய யாழ்,பல்கலை மாணவர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார்.
அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். ‘ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது’ என அவர் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியின்றி சிங்களத்தில் உரையாற்ற ஆரம்பித்தபோதும் மாணவர்கள் கூச்சலிட்டதாகவும் அதன்பின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைக்கப்பட்டதாகவும் உதுல் பிரேமரட்ன கூறினார்.

13 ஜனவரி 2012

நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை தாக்கினர் தென்னிலங்கை மீனவர்கள்!

நயினாதீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை அங்கு கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதன்னிலங்கை மீனவர்கள் தாக்குதல் நடாத்தி இரு இந்திய மீனவர்களை கைது செய்து கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ் தீவகம் நயினாதீவு கடல் எல்லைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டடிருந்த ஒரு படகில் 4 பேர் அடங்கிய இந்திய மீனவர்களை, பிறி தொரு பகுதயில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டடிருந்த தென்இலங்கையை சேர்ந்த மீனவர்கள், இந்திய மீனவர்களை கடுமையாக தாக்கி விட்டு இரண்டு மீனவர்களை கைது செய்து நயினாதீவு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதன் போது ஒப்படைப்பதற்காக வந்த தென்இலங்கை மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இரண்டு தென்இலங்கை மீனவர்களும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்படவுள்ளனர்.

சுழிபுரம்,தீவகப் பகுதிகளிலும் காணிகளை கோரும் படையினர்!

சுழிபுரம், திருவடிநிலை கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகளைக் கடற்படைக்குத் தருமாறு கோரி வடபிராந்திய கடற்படைத் தலைமையகத்தால் சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இருப்பினும் இதற்கான பதில் கடற்படையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குட்பட்ட பகுதியிலுள்ள மெலிஞ்சிமுனை பிரதேசத்தில் 5 ஏக்கர் அரச காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அந்தக் காணி நில அளவை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவில், குடியிருப்பு பகுதியிலுள்ள கடற்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றம் செய்வதற்காக கடற்படையினர் மக்களின் தோட்டக்காணிகளை வழங்குமாறு கோரியுள்ளனர். காணி சுவீகரிப்பு செய்வதனால் அதற்குரிய வழிமுறையூடாக கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று வேலணை பிரதேச செயலகத்தால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழுவில் விடுதலையான தமிழ்ப் போராளிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துசெயற்படுவதாக ஜே.வி.பி. கிளர்;ச்சிக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. வட மாகாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்முன்னாள் போராளிகள் இணைந்து கொண்டுள்ளதாக கிளர்ச்சிக்குழு உறுப்பினர் உந்துல் பிரேமரட்னதெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 900 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 500 கைதிகளுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் புலிப் போராளிகள் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதனை மறுக்கவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரிவினைவாத அமைப்புடனும் இணைந்து தாம் அரசியல்நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழர்கள் என்ற காரணத்தினால் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புவாதம் தொடர்பான பிரச்சினைகளும் முக்கிய இடத்தை வகிப்பதாகத்தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதிலும் வேறும் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலி உறுப்பினர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

12 ஜனவரி 2012

சவேந்திர சில்வாவை மன்னிப்புக் கோருமாறு உத்தரவாம்!

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக உடனடியாக மன்னிப்புக் கோரும் படி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் ஊடகத்துறை அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விசாரிக்க சிறிலங்கா அதிபர் செயலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளைளுக்கு மகிந்த ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருந்தார்.
எனினும், சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஏற்கனவே மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

தேடப்படுவோர் பட்டியலில் இருந்த தமிழர் கனடாவில் கைது!

மிக அதிகமாக தேடப்பட்டு வருவோரில் 15ஆவது இடத்தை வகிப்பவரும் இலங்கையருமான தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி என்பவர், கனடா, ரொறன்ரோ நகர பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள், நிறுவனமயப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் கொண்ட புதிய பட்டியலை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் தோவ்ஸ் வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முனனரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 பேர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு வழங்குவதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு கனடாவில் ஒளித்து வாழும் 42 சந்தேகநபர்களின் பெயர்களை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார். இந்த 42பேரும் கனடா எல்லை சேவை முகவராண்மையால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

11 ஜனவரி 2012

யாழ்,பண்ணைப்பகுதி காணியையும் அபகரிக்க திட்டம்!

யாழ்.நகரின் பண்ணைப் பகுதியில் சுகாதாரத்திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாப்பு அமைச்சுக்குப் பாரப்படுத்துமாறு காணி அமைச்சினால் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்.நகரின் கரையோரப் பிரதேசமான பண்ணையில் சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரி யாழ். பிரதேச செயலகத்துக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்குப் பிரதேச செயலகம் பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் அந்தக் காணி சுகாரதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தினால் குறித்த காணி அளவீடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினால் காணி அமைச்சுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காணி ஆணையாளர் நாயகம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு மேலும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான அந்த 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன அழிப்பு குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ!

இலங்கை அரசாங்கத்தின் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை எனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘எந்தவொரு சிவில் யுத்தத்திலும் பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பொதுமக்களின் பூச்சிய இழப்புக் கொள்கையில் அரசாங்கம் தெளிவாக இருந்தது’ என அவர் கூறினார்.
‘இக்கொள்கையின் காரணமாக, யுத்தத்தின்போது பொதுமக்கள் இழப்பு குறைவாக இருந்தது. எந்த யுத்தத்திலும், குறிப்பாக மனிதக் கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்படும்போது இழப்புகள் ஏற்படும். பொதுமக்கள் இழப்பை குறைப்பதும் மனித உயிர்களை பாதுகாப்பதும் யுத்தத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரதான நோக்கமாக இருந்தது’ என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு குழுக்களினால் தெரிவிக்கப்படும் எண்ணிக்கைகள் ஆதாரமற்றவை என அவர் கூறினார். சந்தேகம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இழப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு நாம் பிரிவொன்றை நியமித்தோம். அக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. அவர்கள் இறுதி அறிக்கையை தயாரிக்கிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்’ என அவர் தெரிவித்தார்.
எனினும் இக்கணக்கெடுப்பில் இயற்கையாக இறந்தோர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டோர், எல்.ரி.ரி.ஈ.யினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டோர், புலிகளின் அங்கத்தவர்கள், விபத்துகளினால் இறந்தவர்கள், நாட்டைவிட்டு சட்டவிரோதமாக தப்பியோடியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை. ஏனைய எண்ணிக்கைக்கு மாத்திரமே இராணுவம் பொறுப்பேற்க முடியும் என அவர் தெரிவித்தார்.

10 ஜனவரி 2012

புளியங்கூடலை சேர்ந்த ஒருவர் உட்பட 10 தியாகிகள் இன்று நினைவு கூரப்பட்டனர்!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. யாழ். நகரில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலையிட்டு அவர்களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் அஞ்சலி செலுத்தினர்.
1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சிறிலங்கா பொலிஸாரின் அராஜகத்தினால் படுகொலையாகிய புளியங்கூடலை சேர்ந்த தில்லைநாதன் உட்பட்ட 10 பேரையும் மனதில் நிறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறீதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்,புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், யாழ். மவட்ட பிரதேச சபை தலைவர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்டு 38வருடங்கள் கடந்தும் இன்றுவரை தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த தியாகிகளுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறது.

மேலும் 10,000 முத்திரைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளது!

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.
முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது.

09 ஜனவரி 2012

நெடுந்தீவிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் பொலிசில் பதியவேண்டுமாம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் பொலிஸில் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே படகில் தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். சில காலமாக இல்லாமல் இருந்த இந்தப் பதிவு நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
பதிவு நடவடிக்கைகளால் பெரும் நேரவிரயம் ஏற்படுவதால் , நேற்று நெடுந்தீவில் இருந்து படகு தாமதமாகவே புறப்பட்டுள்ளது.இதனால் பலரும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மக்களை இடையூறுகளுக்குள் தள்ளும் இந்தப் பதிவு நடைமுறையைப் பொலிஸார் கைவிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

தமிழீழ முத்திரைகளை ஸ்ரீலங்கா ஏற்காதாம்.

தமிழீழம் தொடர்பான படங்கள், சின்னங்கள் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்துச் செயற்படுவதற்கு இலங்கை தபால் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் படங்கள், சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிட செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்பப்படலாம்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரெஞ்சு தபால்துறைக்கு தான் கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்தார். இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகள் எப்படியிருந்த போதிலும், உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படி நாம் செயற்படுவோம்" என அவர் கூறினார்.
இம்முத்திரை வெளியீடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏற்கெனவே பிரெஞ்சு தூதரகத்திடம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

08 ஜனவரி 2012

கிளிநொச்சியில் பரவிவரும் காச்சலால் இதுவரை ஏழு பேர் மரணம்!

ஒருவிதமான காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பகுதியில் இதுவரைக்கும் 7 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அரைகுறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப் பகுதி மக்களுக்கு இக் காய்ச்சல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை ஏழு பேர் மரணமாகியுள்ளனர். இப்புதுவித காய்ச்சல் நோய்க்காளாகிய பலர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இறுதியாக உதயநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியசீலன் (வயது45) என்பவர் இக்காய்ச்சல் காரணமாக மரணமானார்.
இதேவேளை, வேகமாக பரவிவரும் காச்சல் நோயினை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் இருந்து வைத்ச்திய நிபுணர்குழு வன்னிக்கு விரைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணமானவர்களுக்கு அஞ்சலி!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நாளை மறுதினம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் நினைவுத் தூபி அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகிய 10 பேரையும் மனதில் நிறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் தமிழின ஆர்வலர்களைக் கலந்துகொண்டு மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

07 ஜனவரி 2012

கே.பியை இன்டர்போலுக்கு காட்டிக்கொடுப்பேன் என்கிறார் ஜெயலத்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.
இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார்.
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்’ என ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார்.எனினும் இது தொடர்பாக சென்னையிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியை தாக்கிய சிங்கள படையினனுக்கு பிரேமதாசா பட்டமளித்து கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிடம் இடிந்து வீழ்ந்து தெல்லிப்பளையில் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உடல் நசிந்து உயிரிழந்துள்ளார். கட்டுவன் மேற்கைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான நாகராசா தர்மராஜா என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றம் முழுமையாக மேற்கொள்ளப்படாத பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்த ஜன்னல் கம்பிகளை அகற்றுவதற்காக கட்டிடத்தினை இடித்த போது கட்டிடம் இடிந்து விழுந்ததினாலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 ஜனவரி 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று சர்வமத பேரவை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மதத் தலைவர்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
“இனப்பிரச்சினைக்கு அனைத்து மக்களும் உணரக் கூடிய மற்றும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும்.
நாட்டில் போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் இன்னும் உள்ளன. அவற்றை விரைவாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டத்தை நீக்கி 17 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை அற்றுப்போய் விட்டது“ என்று சர்வ மதப் பேரவையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.