பக்கங்கள்

26 ஜூலை 2016

பிரான்சில் மதகுருவும் ஜெர்மனியில் மருத்துவரும் படுகொலை!

வடக்கு பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் பூசை நடந்துகொண்டிருந்த போது நுழைந்த இரு ஆயுதபாணிகள் ஆட்களை பணயமாக பிடித்து வைத்த சம்பவத்தில் எண்பத்து நான்கு வயதான கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.இன்னுமொருவர் உயிருக்காக போராடுகிறார். இரு தாக்குதலாளிகளையும் போலிஸார் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகின்றது. கடந்த இரு வாரங்களில் 84 பேர் கொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிகபட்ச உசார் நிலையில் இருக்கும் பிரான்ஸில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதே வேளை ஜேர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை சுட்டுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறித்த சம்பவத்தால் வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை எனவும்,வைத்தியசாலை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் இருந்த வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2016

செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்!

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல்:
1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர். முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும். விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான். தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது. செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது. “அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம். ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம். ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது. ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது. சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது. ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான். அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின. இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது. சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி. மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர். ”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி. மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது. இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது. இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம். ”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான். இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார். பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன். வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது. லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

 - அன்புடன் கிட்டு –

22 ஜூலை 2016

கடும் பாதுகாப்புடன் நடந்த மரணச்சடங்கு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கலந்து கொண்டனர். மேற்படி இரு சந்தேக நபர்களும் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் சிறையிலிருந்து அவர்களது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஓட்டுமடத்திலுள்ள மலர்சாலை ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை அனுமதியுடன் யாழ்,போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் சசிகுமாரது (சுவிஸ் குமார்) தாயார் மரணமானார்.மரணமான மகாலிங்கம் தவநிதி என்ற குறித்த பெண்மணி மேற்படி வழக்கில் நீதிமன்ற தவணைக்காக வந்திருந்த படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாரான சரஸ்வதி என்பவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சாட்சிகளை பாதுகாப்பதற்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணுடன் அவரது சம்பந்தியான சிவதேவன் செல்வராணி என்பவரும் குறித்த சாட்சியை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வழக்கு தவணையின் போது ஜுன் 21ம் திகதி இறுதிக் கிரியைகள் நடத்த வேண்டி இருந்த காரணத்தினால் சட்டத்தரணி ஒருவர் ஊடாக விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.இதனடிப்படையில் குறித்த வழக்கில் 4 வது சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரன், 9ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) ஆகியோருக்கு இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி ஆகியோருக்கும் நீதிமன்றம் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தது. இவ்வனுமதி வழங்கும் போது ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ. சபேசன் சந்தேக நபர்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் போது சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.சடலம் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் அமைந்துள்ள கோம்பையன் மணல் இன்பம் மலர்ச்சாலை சூழலில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்தது.இறுதி கிரியைக்கு இறந்த பெண்மணியின் மகன்களான மகாலிங்கம் சசிதரன், மகாலிங்கம் சசிகுமார் ஆகியோர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கைவிலங்கு இடப்பட்டு அழைத்து வரப்பட்டனர். ஆனால் இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி அழைத்து வரப்படவில்லை.அத்துடன் 20 நிமிடம் வரை தாயாரின் இறுதிக் கிரியைகளை மேற்குறித்த இரு சந்தேக நபர்களும் கைவிலங்குடன் நிறைவேற்றினர். இறுதியாக தங்கள் சொந்த பந்தங்களுடன் இணைந்து அனுதாபங்களை பகிர்ந்ததுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்புடன் ஏற்றிச் சென்றனர்.

18 ஜூலை 2016

தாயாரின் மரணசடங்கில் பங்கேற்க சுவிஸ் குமாருக்கு அனுமதி!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் மற்றும் அவரது சகோதரர் சசீந்திரன் ஆகியோருக்கு, அவர்களது தாயாரின் மரண சடங்கில் பங்கேற்பதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த சுவிஸ்குமாரின் தாயார், நேற்று சிறைச்சாலையிலேயே மரணமடைந்துள்ளார். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சுவிஸ்குமார் மற்றும் அவரது சகோதரருக்கு தாயாரின் மரண சடங்கில் பங்கேற்பதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை மேலதிக நீதவான் இ.சபேசன் வழங்கியுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரின் தாயாருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு உறவினரான சிவதேவன் செல்வராணிக்கும் சுவிஸ்குமாரின் தாயாரது மரண சடங்கில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவிஸ்குமாரின் தாயார் உடல் நலம் குன்றிய நிலையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காரணத்தாலேயே இந்த மரணம் சம்பவித்ததாக தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணியான ரகுபதி, மற்றைய சந்தேக நபரும் உடல்நலம் பாதிப்புற்றிருப்பதாக தெரிவித்து பிணை வழங்குமாறு கோரினார். எனினும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், அவர்களுக்கு பிணை வழங்குவது நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்லவென தெரிவித்த நீதவான் சபேசன், அந்த அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதென குறிப்பிட்டார். இதேவேளை, வித்தியா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுபாஷ், ஏற்கனவே சுவிஸ்குமார் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோடி பின்னர் கொழும்பில் மீண்டும் கைதுசெய்யப்பட்டவர் என்பதை மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு, அதனை கவனத்திற்கொண்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே சுவிஸ்குமாரை அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் வழங்கியதோடு, மற்றொரு சந்தேகநபரான சிவதேவன் செல்வராணியை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சுவிஸ்குமாரின் தாயார் சிறைச்சாலையில் மரணம்:
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு பெண்களில் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்.சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனப்படும், சுவிஸ்குமாரின் தாயான மகாலிங்கம் தயாநிதி என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும், இது இயற்கை மரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 5ஆம் திகதி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை முடிவடைந்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய மாணவியின் தாயாரை மிரட்டியதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கிணங்க, சுவிஸ்குமாரின் தாய் மற்றும் மற்றொரு உறவினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறைச்சாலையில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட சுவிஸ்குமாரின் தாயார், தற்போது மரணமடைந்துள்ளார்.

17 ஜூலை 2016

சம்பந்தனுக்கு செருப்பு மாலை!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற - மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் நேற்று சந்தித்திருந்தார். இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமைத்துவ தகுதி உண்டா? என்று கேள்வியெழுப்பி பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட ‘யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்’ தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்த மாட்டோம் என்று சம்பந்தன், ரிவிர சிங்கள ஊடகத்துக்கு கருத்து கூறிய பின்னர் அவர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த எதிர்ப்பு மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஜூலை 2016

பிரான்சில் இடம்பெற்ற தாக்குதலில் 84பேர் பலி!

பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார். மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என வர்ணித்துள்ளார். "ப்ரோமனேட் தேஸாங்கிலே" என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது. பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. லாரி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு இது வரை எந்தக்குழுவும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போலிசார் இதை விசாரிப்பார்கள் என்று அரசவழக்கறிஞர்கள் கூறினர்.இந்தியா பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நீஸ் தாக்குதல் குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

13 ஜூலை 2016

இலங்கையின் பிரபல கலைஞர் மரிக்கார் எஸ்.ராமதாஸ் காலமானார்!

மரிக்கார் எஸ்.ராமதாஸ்
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.இலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான "கோமாளிகளின் கும்மாளம்" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார். "கோமாளிகள் கும்மாளம்" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

12 ஜூலை 2016

சிறுமியின் உடல் பனையோலையால் மூடப்பட்டிருந்தது!

கிளிவெட்டியில் இருந்து குமாரபுரத்துக்கு சுட்டவாறு சென்ற படையினர் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்களை சுட்டனர். இதில் பலர் இறக்க, பலர் காயமடைந்தனர். அத்துடன் கடைக்குள் இருந்த 16 வயது பெண்ணை இழுத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினர். மறுநாள் அவரின் உடலை பனையோலையால் மூடப்பட்ட நிலையில் மீட்டோம். இவ்வாறு கிளிவெட்டிப் படுகொலை குறித்து சாட்சியமளிக்கப்பட்டது. திருகோணமலை, கிளிவெட்டியில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது சாட்சியமளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில் தெரிவித்தவை வருமாறு: "நான், எமது கிராமத்தில், கிளிவெட்டி - மூதூர் பிரதான வீதியில் கடை ஒன்றை நடத்தி வந்தேன். சம்பவ நாளன்று வீதியில் படையினர் சுட்டுக் கொண்டு வந்தனர். இதனால் அச்சமடைந்த சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்திருந்த நாம் கடையை பூட்டினோம். இதன்போது கபில என்ற சிப்பாய் கதவு ஓட்டைக்குள்ளால் முதலில் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு வந்து சுட்டார். அதன் பின்னரும் சுட்டார். இதன்போது பலர் இறந்தனர். கடைக்குள் 5 பேர் வரை இறந்தனர்.இந்தச் சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயதுப் பெண் பிள்ளையும், எனது கடைக்குள் ஒளிந்திருந்தார். அவ்வேளை, இறந்தவர்களைத் தவிர நாங்கள் பலர் காயம்பட்டிருந்தோம். அந்நிலையிலேயே கடையை விட்டு வெளியேறினோம். ஆனால் அந்தப் பெண் பிள்ளை, கடைக்குள்ளேயே இருந்துள்ளார். அவரைக்கண்ட படையினர், அருகிலிருந்த பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்குள் கொண்டு சென்று வன்புணர்வு செய்தனர். அது எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்தப் பெண் பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களும் பலரால், வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன' எனத் தெரிவித்தார்.நேற்றைய விசாரணைகளின் போது அன்றைய சூழலில் கிராமத்தில் பணியாற்றிய கிராம சேவகர் சுப்பிரமணியம் இராசலிங்கமும், சாட்சியமளித்தார். 'குறித்த கிராமத்தில் 74 குடும்பங்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும், தற்காலிகக் கொட்டில்களிலேயே வசித்தனர். முகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்திலேயே கிராமம் அமைந்துள்ளது' என அவர் விவரித்தார். மாரிமுத்து துரைராஜா (வயது 63) என்பவர் சாட்சிமளிக்கையில், 'நான், கிளிவெட்டியில் தேநீர்க்கடை வைத்திருந்தேன். அன்றைய தினம், கிளிவெட்டி முகாமிலிருந்த படையினர்
, சுட்ட வண்ணம் குமாரபுரத்தை நோக்கிச் சென்றனர். அதன்போது, இம்மன்றிலுள்ள குமார மற்றும் கபிலவும் சென்றமையை நான் கண்டேன்" எனக் குறிப்பிட்டார். இவ்வழக்கு விசாரணை தொடர்பில் சாட்சியமளித்தல், இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

10 ஜூலை 2016

பெண்களிடம் பாலியல் கையூட்டு கேட்டதாக புகார்!

இலங்கையில் காணமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது அமைப்புக்களிடம் கருத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்பட்ட அமர்வொன்றில் காணாமல் போயுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் கையூட்டு கோரப்பட்டதாகவும் காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக ஸ்றீன் ஸரூர் கூறியுள்ளார்.இத்தகைய சுமார் 300 பெண்களிடம், அவர்கள், காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடிக் கண்டறிய முற்பட்டபோது எதிர்நோக்கிய சவால்கள் குறித்த தகவல்களைத் தங்களிடம் கூறியதாகவும், அதில் ஒரு விடயமாக இவ்வாறு கையூட்டு கோரப்பட்டமை தொடர்பான விவரங்களும் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீன் ஸரூர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அரச படையினரின் புலானய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்றார் ஸரூர். அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் இவ்வாறு பெறப்பட்ட கையூட்டு பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் கையூட்டு கோரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமது விண்ணப்பத்தில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் கோரியிருக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சம் மற்றும் சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினரிடமோ அல்லது மனித உரிமைகள் அமைப்புக்களிடமோ முறையிடவில்லை. இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது, இது குறித்து அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளது என அந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் கூறினார்.

08 ஜூலை 2016

டல்லஸ் துப்பாக்கிதாரி "வெள்ளை அதிகாரிகளை கொல்ல விரும்பினார்"

அமெரிக்க நகரான டல்லஸில் ஐந்து காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பின ஆண்கள் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்க்கும் அமைதி ஊர்வலத்தின் முடிவில் இது நடந்தது. இத்தாக்குதலை நான்கு பேர் ஒருங்கிணைத்ததாக காவல்துறை கருதுகிறது. இரண்டுபேர் துப்பாக்கியால் சுட்டனர். மற்ற இருவர் உயரமான இடங்களில் இருந்து தாக்குதல் தொடுத்தனர். இந்த சம்பவத்தில் கைதான சந்தேக நபர் ஒருவர், வெள்ளை இனத்தவரை, குறிப்பாக காவல்துறை அதிகாரிகளை கொல்ல விரும்பியதை தம்மிடம் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கொடூரமானது, திட்டமிடப்பட்டது, அறுவெறுக்கத்தக்கது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

30 ஜூன் 2016

மல்லாவியிலும் ஆசிரியர் அராஜகம்!

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தொடர் கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,‘பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய நிலையில் விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து உடனடியாக விசாரணை செய்ய பணிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இசம்பவம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 ஜூன் 2016

மண்கும்பானில் கிணற்றில் வீழ்ந்து யுவதி மரணம்!

வேலணை 5ம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியை எடுக்க முற்பட்ட இளம் பெண் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாரை  மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று நடந்த இச்சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற இளம் பெண்ணே நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.மரண விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

24 ஜூன் 2016

புளியங்கூடல் அம்பாள் ஆலய இரதோற்சவம் நாளை!

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.நாளை(25.06.2016)சனிக்கிழமை மகாமாரி அம்பாள் இரதத்தில் அமர்ந்து வீதியுலா வரும் பெருவிழா காலை 8:00மணிக்கு ஆரம்பமாகி பக்தர்களின் ஆனந்தப் பெருவெள்ளத்தினூடே வெகு சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.அடியவர்தம் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றிக் கொடுப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்து அன்னையின் தேர்த்திருவிழாவிலே கலந்து தாயவளின் ஆசிகளை பெற்றுய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

22 ஜூன் 2016

ஆசிரியர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உதவாக்கரைகள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பில் வலையக் கல்விப்பணிமனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஏழாம் வகுப்பில் கற்று வரும் மாணவிகள் சிலருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பாக அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவிகளின் பெற்றோரும் இணைந்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும்,அதிபர் இவ்விடயத்தை மறைக்க முயன்றதாக தெரியவருகிறது.இதையடுத்து அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.இதேவேளை இச்சம்பவம் குறித்து கல்விப்பணிப்பாளரும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் வரணிப்பகுதியிலும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றதும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அதிபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புலிகளின் ஆளுமை இருந்த காலங்களில் தமிழர் பகுதிகளில் நீதி நிர்வாகம் சிறந்த முறையில் விளங்கியது.பெண்கள் இரவு நேரங்களிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது.இன்று நல்லாட்சி என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகளே முடுக்கி விடப்பட்டுள்ளது.தமிழின அழிப்பும்,சிங்களக் குடியேற்றமும் தொடர்கதையாக உள்ளது. 

19 ஜூன் 2016

நயினாதீவு கடலில் இளைஞர் மூவர் பலி!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவுக்கு சென்ற இளைஞர் குழுவொன்று கடலில் நீராடிய போது, அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நயினாதீவு தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள சென்ற எட்டுப் பேர் கொண்ட இளைஞர் குழு அங்கு கடலில் நீராடியுள்ளது.அந்த எட்டுப் பேரும் நீர்ச்சுழியில் அகப்படுள்ளனர். இதில் ஐவர் காப்பாற்றப்பட்ட போதும் ஏனைய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணம், கோண்டாவில் நாராயணன் கோயிலடியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

17 ஜூன் 2016

இலங்கை அகதிகள் படகில் பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. படகிலுள்ள அகதிகளை தரையிறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் அகதிகள்கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய பொலி்சார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன், தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஜூன் 2016

இரகசியத்திட்டத்துடன் ஜெனீவா பயணமாகும் கஜேந்திரகுமார்!

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் பல இரகசிய திட்டங்களுடன் ஜெனீவா பயணமாகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர், நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரின்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பகிரங்கமாக அறிவித்துவிட்டுச்ப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இம்முறை அவ்வாறு இடம்பெறு சென்றதால், அவற்றை முறியடிக்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளவதை தடுக்கும் நோக்கிலேயே தமது திட்டங்களை இரகசியமாக வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2016

'காற்றே காத்திரு…. !'பேரறிவாளன் தந்தை கண்ணீர் கவிதை!

காற்றே! உன்னை வேண்டுகிறேன்.
இன்னும் சிறிது காலம் உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான் தழுவும்வரை……
 என் கண்ணுக்குத் தெரியாமல் நான் அழுகின்றேன்.
கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான் பயின்றபோது
இமயத்துப் புலி டென்சிங் நார்கே
எனதொரு காலை அவர் தோள்மீதும்
மறுகாலை அவர் உள்ளங்கையாலும் தாங்கிட
இமயம் ஏறிய என் கால்களோ
இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன!
மூளையோ எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்...
என்று தடைபோடுகிறது! தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!
சில பற்களோ பாவம் எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து இறுதியாகப் பிரிந்தே விட்டன.!
உணவுப் பாதையோ குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக…..!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக இருக்க வேண்டிய
என் மனைவியோ அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு இன்னும் எங்கள் மகனைத் தேடி அலைந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாய்……! ஊழிக்காற்றே! நான் எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான் என்னை அழித்துக் கொள்ள நேர்ந்தாலும்
அது எம் இனத்திற்குப் பயன்படுவதாக அமையுமே யன்றி
வீணாக இல்லை.
மானிடத்திற்கு என் பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு நீ விடுதலை பெற
எண்ணுவது சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு நான் பொறுத்திருப்பதுபோல.
நீதியை அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப் பறக்கவிடும்வரை.…..
 இதுநாள்வரை நான் இப்புவியில் இருக்க
உதவிய உனக்கும் எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும் மனிதத்தை
வெளிப்படுத்திய மனிதா;
அனைவருக்கும் என் நன்றியைப் படைக்கின்றேன்.

 -அன்புடன் குயில்தாசன்

03 ஜூன் 2016

சுவிஸ் குமாரின் தாயாருக்கும் விளக்கமறியல்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். கடந்த மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து, அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய, தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், மே மாதம் 18ஆம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் அவரின் மற்றுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை நேற்று ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

மதம் மாறிய மகளை அடித்துக்கொன்ற தாய்!

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டு வருவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்துவரும் தாயாருக்கும் மகளுக்கும் மதம் மாறியது தொடர்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசார் நேற்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாயாரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.