பக்கங்கள்

12 ஜூலை 2016

சிறுமியின் உடல் பனையோலையால் மூடப்பட்டிருந்தது!

கிளிவெட்டியில் இருந்து குமாரபுரத்துக்கு சுட்டவாறு சென்ற படையினர் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்களை சுட்டனர். இதில் பலர் இறக்க, பலர் காயமடைந்தனர். அத்துடன் கடைக்குள் இருந்த 16 வயது பெண்ணை இழுத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினர். மறுநாள் அவரின் உடலை பனையோலையால் மூடப்பட்ட நிலையில் மீட்டோம். இவ்வாறு கிளிவெட்டிப் படுகொலை குறித்து சாட்சியமளிக்கப்பட்டது. திருகோணமலை, கிளிவெட்டியில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது சாட்சியமளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில் தெரிவித்தவை வருமாறு: "நான், எமது கிராமத்தில், கிளிவெட்டி - மூதூர் பிரதான வீதியில் கடை ஒன்றை நடத்தி வந்தேன். சம்பவ நாளன்று வீதியில் படையினர் சுட்டுக் கொண்டு வந்தனர். இதனால் அச்சமடைந்த சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்திருந்த நாம் கடையை பூட்டினோம். இதன்போது கபில என்ற சிப்பாய் கதவு ஓட்டைக்குள்ளால் முதலில் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு வந்து சுட்டார். அதன் பின்னரும் சுட்டார். இதன்போது பலர் இறந்தனர். கடைக்குள் 5 பேர் வரை இறந்தனர்.இந்தச் சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயதுப் பெண் பிள்ளையும், எனது கடைக்குள் ஒளிந்திருந்தார். அவ்வேளை, இறந்தவர்களைத் தவிர நாங்கள் பலர் காயம்பட்டிருந்தோம். அந்நிலையிலேயே கடையை விட்டு வெளியேறினோம். ஆனால் அந்தப் பெண் பிள்ளை, கடைக்குள்ளேயே இருந்துள்ளார். அவரைக்கண்ட படையினர், அருகிலிருந்த பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்குள் கொண்டு சென்று வன்புணர்வு செய்தனர். அது எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்தப் பெண் பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களும் பலரால், வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன' எனத் தெரிவித்தார்.நேற்றைய விசாரணைகளின் போது அன்றைய சூழலில் கிராமத்தில் பணியாற்றிய கிராம சேவகர் சுப்பிரமணியம் இராசலிங்கமும், சாட்சியமளித்தார். 'குறித்த கிராமத்தில் 74 குடும்பங்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும், தற்காலிகக் கொட்டில்களிலேயே வசித்தனர். முகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்திலேயே கிராமம் அமைந்துள்ளது' என அவர் விவரித்தார். மாரிமுத்து துரைராஜா (வயது 63) என்பவர் சாட்சிமளிக்கையில், 'நான், கிளிவெட்டியில் தேநீர்க்கடை வைத்திருந்தேன். அன்றைய தினம், கிளிவெட்டி முகாமிலிருந்த படையினர்
, சுட்ட வண்ணம் குமாரபுரத்தை நோக்கிச் சென்றனர். அதன்போது, இம்மன்றிலுள்ள குமார மற்றும் கபிலவும் சென்றமையை நான் கண்டேன்" எனக் குறிப்பிட்டார். இவ்வழக்கு விசாரணை தொடர்பில் சாட்சியமளித்தல், இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.