பக்கங்கள்

18 ஜூலை 2016

தாயாரின் மரணசடங்கில் பங்கேற்க சுவிஸ் குமாருக்கு அனுமதி!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் மற்றும் அவரது சகோதரர் சசீந்திரன் ஆகியோருக்கு, அவர்களது தாயாரின் மரண சடங்கில் பங்கேற்பதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த சுவிஸ்குமாரின் தாயார், நேற்று சிறைச்சாலையிலேயே மரணமடைந்துள்ளார். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சுவிஸ்குமார் மற்றும் அவரது சகோதரருக்கு தாயாரின் மரண சடங்கில் பங்கேற்பதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை மேலதிக நீதவான் இ.சபேசன் வழங்கியுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரின் தாயாருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு உறவினரான சிவதேவன் செல்வராணிக்கும் சுவிஸ்குமாரின் தாயாரது மரண சடங்கில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவிஸ்குமாரின் தாயார் உடல் நலம் குன்றிய நிலையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காரணத்தாலேயே இந்த மரணம் சம்பவித்ததாக தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணியான ரகுபதி, மற்றைய சந்தேக நபரும் உடல்நலம் பாதிப்புற்றிருப்பதாக தெரிவித்து பிணை வழங்குமாறு கோரினார். எனினும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், அவர்களுக்கு பிணை வழங்குவது நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்லவென தெரிவித்த நீதவான் சபேசன், அந்த அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதென குறிப்பிட்டார். இதேவேளை, வித்தியா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுபாஷ், ஏற்கனவே சுவிஸ்குமார் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோடி பின்னர் கொழும்பில் மீண்டும் கைதுசெய்யப்பட்டவர் என்பதை மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு, அதனை கவனத்திற்கொண்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே சுவிஸ்குமாரை அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் வழங்கியதோடு, மற்றொரு சந்தேகநபரான சிவதேவன் செல்வராணியை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சுவிஸ்குமாரின் தாயார் சிறைச்சாலையில் மரணம்:
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு பெண்களில் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்.சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனப்படும், சுவிஸ்குமாரின் தாயான மகாலிங்கம் தயாநிதி என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும், இது இயற்கை மரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 5ஆம் திகதி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை முடிவடைந்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய மாணவியின் தாயாரை மிரட்டியதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கிணங்க, சுவிஸ்குமாரின் தாய் மற்றும் மற்றொரு உறவினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறைச்சாலையில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட சுவிஸ்குமாரின் தாயார், தற்போது மரணமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.