பக்கங்கள்

10 ஜூலை 2010

இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்கிறது கணவாய்!


இந்த முறை உலக கோப்பை கால்பந்தில், வீரர்கள் பற்றிய பேச்சை விட, ஜெர்மனி அருங்காட்சியகத்தின் ஆக்டோபஸ் பால் பற்றிய பேச்சே அதிகம். இதுவரை அது கணித்த 6 அணிகள் வென்றன. இறுதி போட்டியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் நாளை மோதுகின்றன. அதில் கோப்பையை ஸ்பெயின் வெல்லும் என்று ‘பால்’ நேற்று சொல்லி விட்டது. இந்நிலையில், ஜெர்மனி ரசிகர்களின் மிரட்டலால், பாலுக்கு பாதுகாப்பு தர தயார் என்று ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் ஜாபடேரோ நேற்று தெரிவித்தார். இன்று இரவு ஜெர்மனி -உருகுவே இடையே நடைபெறும் 3வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி வெல்லும் என்று கூறி தாய்நாட்டு ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளது ‘பால்’.

அரசாங்கத்தின் தவறை மூடி மறைக்க விமல் வீரவன்ச ஆடும் நாடகமே உண்ணாவிரதம்.



அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்காக விமல் வீரவன்ஸ ஆடும் நாடகமே உண்ணாவிரத போராட்டமாகும். அதற்காக அவர் தற்கொலைக் குண்டுதாரியாகி விட்டார் என்று ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐ.நா. அலுவலகம் முன்பாக தொவில் ஆடி வேலையில்லை (பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்) இராஜதந்திரமே அவசியமானதாகும் என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தின் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் குதிக்க இருந்தார். அங்கேயே தற்கொலைத் தாக்குதல் நடத்தவிருந்தார். எனினும் உயர்மட்ட ஆலோசனையினால் ஐ.நா. வின் அலுவலகத்திற்கு முன்பாக படுத்துக் கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தை நகைச்சுவையாக எடுக்கமாட்டேன், அடக்குறைக்கு எதிராக குரல் கொடுப்பேன். எனினும் போராட்டம் எனும் பெயரில் உண்ணாவிரதத்தில் உடனடியாக குதிப்பதா? என்பது தான் எனது கேள்வியாகும்.
கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், அவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை என்பவற்றை முன்னெடுத்து இறுதியாகவே உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இறுதியில் மேற்கொள்ள வேண்டிய உண்ணாவிரதத்தை முதலிலேயே மேற்கொள்வதுதான் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்றது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும்.
உண்ணாவிரதம் இருக்கின்ற விமல் வீரவன்சவின் தலைமையிலான கட்சியின் பிரதியமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் உணவகத்தில் இருப்பதைக் கண்டேன். கட்சி உறுப்பினரைக் கூட அமரச் செய்ய முடியாதவர் ஏன் உண்ணாவிரதத்தில் குதித்தார்?
சிங்கள பௌத்தவாதிகளுக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை அரசாங்கத்திற்குள் இருக்கின்றது. ஹெல உறுமயவின் முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில் அதற்கான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
பட்டினி, விலையுயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக மக்கள் கதைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சிங்கள பௌத்தவாதத்தை தூண்டி விட்டு அதற்கு தலைமை ஏற்பதற்கே இவர் முயற்சிக்கின்றார்.
உண்மையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவே விமல் வீரவன்ஸ தற்கொலைதாரியாக விருந்தார். அவரது இதயத்திலும் அதுவே இருக்கின்றது. எனினும், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே ஐ.நா. அலுவலகத்துக்கு முன் தற்கொலைதாரியாகி விட்டார்.
தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்புவது போல சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய விமல் வீரவன்ஸ ஐ.நா.விற்கு முன்னால் படுத்துக் கொண்டார்.
பான் கீ மூனின் செயற்பாட்டை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல நிலைமை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இராஜதந்திர ரீதியில் செயற்படாமல் பேய் ஆடுவதன் ?மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதுவா இராஜதந்திரம்?
தூதுவராலயங்கள் நாட்டின் தலைநகரமாகவே பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கு முன்பாக சென்றால் கைது செய்யப்படுவார்கள். எனினும், ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக தொவில் ஆடுகின்றனர்.
கடனை வழங்கி வாட்டுகின்றது என்பதனால் சர்வதேச நாணய நிதியத்தின் முன்பாக ஏன் போக முடியாது? போனால் நாம் வருவோம். இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும்.
ஜனாதிபதி கூறினால் அல்லது உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் உண்ணாவிரதத்தினை அமைச்சர் விமல் வீரவன்ஸ கைவிட்டு விடுவார் என அக்கட்சி உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்கே விமல் வீரவன்ஸ தற்கொலை குண்டு தாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தான் உண்மையாகும்.

09 ஜூலை 2010

சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு தமிழனின் உயிருக்கு இல்லையா?சீமான் ஆவேசம்.




பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா?சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.இது போக மற்ற மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை மிகவும் இழிவாக நடத்தியுள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளாக நம் மீனவர்கள் மீது தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதும், அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதனை நம் அரசியல் தலைவர்கள் கண்டித்து வெற்று அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாக உள்ளது. தமிழ் மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது இந்த முறையாவது நாம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த நிலைக்கு காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி,அதிகாரத்தில் இருப்பவர்களின் கையாலகாத்தனம் தான்.
இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட – இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை – குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை. இது குறித்து இதுவரை இந்திய தூதரகம் பெயரளவுக்கு கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்குள்ள பூத்தொட்டி உடைந்தவுடன் பதைபதைத்து தன் கவலையை இலங்கைக்கு தெரிவித்த மத்திய அரசு,உடனடியாக விசாரணையை முடுக்கிய மத்திய அரசு இது வரை செத்த 500 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவனுக்கு என்ன செய்திருக்கின்றது?
பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா?சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?
இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?
இந்தியாவின் கிழக்கு கடற்படை காமாண்டோ ராஜசேகர் நேற்று அளித்த பேட்டியில் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கின்றார்.அப்படியானால் அவர்களுக்குத் தெரிந்து தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றதா?
.வழக்கம் போல் நமது முதல்வரும் கடிதம் எழுதி பிரச்சனையை முடித்து விட்டார். தமிழர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தீர்வாக சொல்லும் முதல்வரே, மத்திய அரசு இப்பிரச்சனையத் தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை என்று மத்தியில் பதவி வகித்துக்கொண்டே நேற்று கூறியிருக்கின்றார். இந்த முறையும் கடிதம் எழுதி விட்டு வழக்கம் போல் பிரச்சனையை முடித்து விட்டார்.பதவிகளைப்பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமை முடித்து விட்டார்.
இது தொடர்கதையாகி விடக்கூடாது.
ஆகவே இந்த முறையாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.முதற் கட்டமாக இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும்,இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.இல்லையெனில் இந்திய இறையான்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறிவிடும்.
இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

08 ஜூலை 2010

கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகத்தை மூடுமாறு பான் கி மூன் பணிப்பு.



இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னேவை நியூயோக்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் அரசாங்க அமைச்சர் ஒருவர் தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறுவதை அடுத்தே இந்த அழைப்பு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தகவல் தருகையில், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நீல் பூஹ்னேயுடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக அவரை நியூயோர்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என சீமான் அழைப்பு.



தமிழர்கள் உலக வல்லரசுகள் அனைத்தின் உதவியுடன் சிங்கள ஏகாதிபத்தியத்தால் பெரும் எண்ணிக்கையில் அழித்தொழிக்கப்பட்ட பின்பு உலகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக ஒரு வருடம் கழித்து ஐ.நா.அமைப்பானது சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு மூவரடங்கிய நிபுணர் குழுவினை நியமனம் செய்துள்ளது.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னரும் , இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட அதிபர் மர்சுகி தருஸ்மனும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகாவும் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச போர் சட்டங்களுக்குப் புறம்பான அத்தனை வழிமுறைகளையும் தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடத்தியுள்ளது இன வெறி சிங்கள ராணுவம்.
சிறிலங்காவின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும்,இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களும், வரவேற்றுள்ள போதிலும் பெயரளவில் கம்யூனிசம் பேசும் ரஷ்யா,சீனா உள்ளிட்ட 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இந்தியா இது குறித்து கருத்து எதும் தெரிவிக்காமல் ”கள்ள” மவுனம் சாதிக்கின்றது.
இந்தியா,ரஷ்யா,சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு தினந்தோறும் பல்வேறு வகை சான்றுகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
அதிநவீன ரேடார்கள்.உளவு பார்க்கும் கருவிகள்,ரோந்துக் கப்பல்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை தமிழர்களைக் கொன்றொழிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான போரில் தடைசெய்யப்பட்ட 500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள கொத்தக் குண்டு மற்றும் இரசாயனஆயுதங்களை ரஷ்யா இலங்கைக்கு போர் காலத்தில் விற்பனை செய்துள்ளது.
சீனாவோ இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது.கடந்த ஆண்டு மட்டும் உலக வங்கியை விட அதிக அளவில் சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது.இப்பொழுது போர் முடிந்த பின்னும் சீனா இலங்கைக்கு 3021 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.இது தவிர தனது நாட்டில் கொடும் குற்றம் புரிந்த 25000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகலிடமாக ஈழத்தை சீனா மாற்றிக்கொண்டு வருகின்றது.
இவ்வாறு இந்தியா,ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு அனுசரணையாக இருக்கும் தைரியத்தில் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் இப்பொழுது விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கின்றது.
மேலும் மேலும் இந்த நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு இன்று வரை உதவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு பெற்று வருகின்றது.
இதன் மூலம் இத்தகைய நாடுகள் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு பகிரங்கமாகத் துணைபோகின்றனர்.இத்தகைய நிலையில் கண் முன்னே நடக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துவதும் அதற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுப்பதும் நம் அனைவரின் கடமை.ஆகவே முதற்கட்டமாக வரும் ஜூலை 10 ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

07 ஜூலை 2010

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க முடியாது.



இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பர்ஹான் ஹக் நேற்றிரவு பி.பி.ஸி. க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பி.பி.ஸிக்குத் தெரிவித்தவை வருமாறு:-
கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். அத்துடன் இது குறித்து அவதானித்து வருகின்றோம். இதேவேளை இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேசிவருகின்றோம்.
எனினும் எமது பணியாளர்கள் குறித்து எமக்கு முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவகையில் நேற்றைய சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் அவர்கள் தற்பொது அலுவலகத்துக்கு உள்ளே இருக்கின்றனரா அல்லது வெளியே உள்ளனரா என்பது குறித்து எம்மிடம் முழுமையான தகவல் இல்லை இப்படி அவர் பி.பி.ஸிக்குச் சொன்னார்.
இலங்கை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா நிபுணர் குழு கலைக்கப்படுமா? என்று பி.பி.ஸி செய்தியாளர் அவரிடம் கேட்டபோது இல்லை. அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார்.
அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ஐ.நாவிற்கு இலங்கை அரசின் மன்னிப்புக்கோரும் அறிக்கை ஏதாவது கிடைத்ததா? என்று பி.பி.ஸி செய்தியாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது,
ஆம், நாங்கள் இலங்கை அரசிடம் தெளிவான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் இதுகுறித்து என்ன நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக நேற்று முன்நாள் திங்கட்கிழமை இலங்கைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து எமக்கு அறிக்கை ஒன்று கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றார்.

06 ஜூலை 2010

சரணடைய சென்ற புலிகளை கொன்றதை கண்டிக்கிறேன்.


விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980 களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.
அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.
போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு இனி அகதி அந்தஸ்து இல்லை.


இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் பாரிய அவலங்களைச் சந்திப்பதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பெண்கள், யுவதிகள் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

05 ஜூலை 2010

மட்டக்குளியில் முறுகல் நிலை,பொலிசார் இடமாற்றம்.


மட்டக்குளியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே நேற்று முன்தினத்திலிருந்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அந்த நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸாரையும் வேறிடங்களுக்கு மாற்றியதுடன் மேற்படி நிலைமை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் தலைமைக் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரும் இடமாற்றப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சட்டத்தை மீறி நடந்து கொண்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.மேற்படி சம்பவம் குறித்து கொழும்பு குற்றவியல் பொலிஸ் பிரிவினர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கரும்புலிகள் நாள் 2010




கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள்
Svr.பாமினிpaminiswiss@hotmail.com

04 ஜூலை 2010

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை.




அன்புள்ள ஊடகத்தினருக்கு,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. அவ்வறிக்கை விடுதலைப் புலிகளின் தலைமைச் செயகலத்தால் அனுப்பப்படவில்லை என்பதை அறியத் தருகிறோம். வழமையாக எமது அறிக்கைகள் அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரியின்றி புதிய மின்னஞ்சல் முகவரியூடாக (viduthalipulikalmediagroup@gmail.com) வந்த இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்னும் சிறிது நேரத்தில் எமது தலைமைச் செயகலத்தின் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கை தலைமைச் செயலக இணைப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும். எமது அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவ்வறிக்கை ஒலிபரப்பப்படுவதுடன் விடுதலைப்புலிகள் வலைத்தளத்திலும் அது வெளியிடப்படும்.
மக்களிடையே குழப்பங்களைத் தவிர்க்கும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயற்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
ஊடகப்பிரிவு சார்பாக,
ஆ.அன்பரசன்.
media@viduthalaipulikal.net

பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மட்டக்குளியில் மோதல்!




கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் மட்டக்குளி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று தற்போது நிலவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள ஒருவரை கைது செய்து தாக்கியதில் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே, பொது மக்கள் காவற்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கலைக்க முயன்ற காவற்துறையினரை பொது மக்கள் தாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அங்கு 10க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்ற போதும், தொடர்ந்தும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், காவற்துறையினர் தண்ணீர் பம்பி வண்டிகளும், இராணுவ ட்ரெக் வாகனங்களும் அந்த பிரதேசத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
தற்போது மட்டக்குளி செல்வதற்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

03 ஜூலை 2010

அபாயத்துடன் வருபவர்களை மீண்டும் அபாயத்துள் தள்ளமுடியாது.



இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02 ஜூலை 2010

மாவோயிஸ்டுக்களின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை என்கிறது ஆந்திர காவல்துறை.


ஆந்திர மாநில பொலிசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சண்டையில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரத்திலிருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழு ஆந்திரத்துக்கு ஊடுருவுவதாக அம் மாநில பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கிடி வனப் பகுதியில் பொலிசார் பதுங்கியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகளை எதிர்கொண்ட பொலிசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் சண்டை நீடித்தது.
இதில், மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் ராஜ்குமார் என்ற ஆசாத் உள்பட இரு தீவிரவாதிகள் இறந்தனர்.
எம்.டெக். பொறியியல் முதுநிலை பட்டதாரியான ஆசாத், 1970-ல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
சண்டையின்போது, மாவோயிஸ்டுகளில் சிலர் சரண் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரில் நக்ஸல் தலைவர் கைது: பிகாரில், ஜெகனாபாத் மாவட்டத்தில், நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரதுமன் சர்மா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ரஸ்தாபூர் கிராமத்தில், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் "வரிவசூல்' என்ற பெயரில் பணம் பறித்துக் கொண்டிருந்தபோது அதிரடிப் படை பொலிசார் அவரைக் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களை மீட்க அமெரிக்கா முயற்சித்தது.



அமெரிக்கக் கடற்படையினர் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களை பாதுகாப்பதற்கு முயற்சித்ததாக சென்னையைச் சேர்ந்த மதகுருவான பிதா கஸ்பார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பெக்கோமா இராணுவத் தலைமையகத்திலிருந்து கடற்படைக் கப்பல் ஒன்றை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்று இருந்ததாக கஸ்பார் பிதாவை ஆதாரம் காட்டி திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அமெரிக்கத் தலையீட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு பிரான்ஸ் நாட்டு அரசாங்கமும் ஆதரவளித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீட்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதி போர்க் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை அதிமுக நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்கும்.-ஜெயலலிதா.



ராஜபக்சே சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை, குழு ஒன்றை அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு அரசும், முதல்வர் கருணாநிதியும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் ஐ.நா. சபை ஆதரவு கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை தலைவரின் இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசு குற்றம் செய்யவில்லை என்றால், ஐ.நா. குழுவை இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், ராஜபக்சே அரசு செய்த கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் போர் முடிந்த 19.5.2009-ம் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியதை தமிழக மக்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள தமிழர்களும் நம்பினார்கள். போர் முடிந்து விட்டது என்று நம்பி, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தவர்கள் மீது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இரண்டே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்காத அப்பாவி மக்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனால், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொல்ல, இலங்கை அரசுக்கு கருணாநிதி உதவி செய்திருக்கிறார். எனவே, ராஜபக்சே சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான். ஐ.நா. சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அ.தி.மு.க. குழு அவர்களைச் சந்திக்கும். கருணாநிதி போர் குற்றவாளி என அறிவிக்கத் தேவையான ஆதாரங்களை ஐ.நா. குழுவிடம் அ.தி.மு.க. அளிக்கும். சதிச் செயல்களால் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்காக இதையாவது நாம் செய்ய வேண்டும். இதைத்தான் நம்மால் செய்ய முடியும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

01 ஜூலை 2010

நாங்கள் விரும்பியே நித்தியானந்தரின் ஆச்சிரமத்திற்கு செல்கிறோம்,பெண் சகோதரிகள் பரபரப்பு புகார்.



நித்யானந்தா சாமியாரின் பெண் சீடர்கள் 2 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்தவர் கிருஷ்னேஸ்வரி என்ற நித்ய பிரீத்தானந்தா (வயது 29) எம்.ஏ. பட்டதாரி. இவரது தங்கை சித்ரேஸ்வரி என்ற நித்ய பிராவனானந்தா (28). இவரும் எம்.ஏ. பட்டதாரி ஆவார். அக்கா-தங்கையான இவர்கள் இருவரும் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் ஆவார்கள். இவர்கள் நேற்று காலையில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்தனர். அவரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் இருவரும் கையெழுத்து போட்டிருந்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- உடன்பிறந்த சகோதரிகளான நாங்கள் இருவரும் எம்.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு தற்போது பி.எச்டி. படித்து வருகிறோம். சென்னையில், எங்கள் அப்பாவின் தம்பியான விஸ்ரூபானந்தாவின் வீட்டில் தங்கியுள்ளோம். நாங்கள் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பி.எஸ்பி. ஹீலர் நித்யானந்தம் போன்ற வகுப்புகளில் சேர்ந்து படித்து தேர்வு பெற்றோம். அவரது ஆசிரமத்திலேயே நாங்கள் இருவரும் பிரமச்சாரிகளாக பணிபுரிந்து வந்தோம். எங்களது பெற்றோரின் அனுமதியோடுதான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். நித்யானந்தா மீது எங்கள் தந்தைக்கு மரியாதை இருந்ததால் எங்கள் தந்தை ஆசிரமத்திற்கு வந்து அடிக்கடி எங்களை பார்த்துவிட்டு செல்வார். நித்யானந்தா மீது கடந்த மார்ச் மாதம் உண்மைக்கு புறம்பாக சில குற்றச்சாட்டுகள் வந்தபோது எங்களது தந்தை எங்களை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். எங்கள் வீட்டில் வைத்து எங்களை கட்டாயப்படுத்தி எங்கள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். நாங்கள் திருமணத்துக்கு உடன்படவில்லை. எங்களது பெற்றோரின் தொல்லை தாங்கமுடியாமல், நாங்கள் எங்கள் சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டோம். நாங்கள் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்வதற்கு முடிவு செய்து அதற்கு ஆயத்தமானோம். அதற்கு எங்கள் பெற்றோர் சம்மதிக்கவில்லை. நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு மீண்டும் சென்றால் அவர் உங்களை கடத்தி சென்றுவிட்டார் என்று போலீசில் புகார் கொடுப்போம் என்று எங்கள் பெற்றோர் மிரட்டி வருகிறார்கள். நாங்கள் சுய நினைவோடு யாருடைய தூண்டுதலுமின்றி ஆன்மிக பணி ஆற்றுவதற்காக மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்கிறோம். ஒருவேளை இதையொட்டி நித்யானந்தா மீது எங்கள் பெற்றோர்கள் பொய்யான புகார் எதுவும் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு கொடுத்த பெண் சீடர்கள் கிருஷ்னேஸ்வரி, சித்ரேஸ்வரி ஆகிய இருவரும் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. ருத்ராட்சை மாலையையே கழுத்தில் அணிந்திருந்தார்கள். அவர்களை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:- கேள்வி:- நித்யானந்தாவின் சீடர்களாக நீங்கள் மாறியது ஏன்? உங்கள் பெற்றோர் அறிவுரைபடி நீங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கலாமே? பதில்:- நித்யானந்தா மீது எங்கள் பெற்றோரும் முதலில் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எங்களது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவர் மன அழுத்த நோயால் மிகவும் அவதிப்பட்டார். அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று சொல்லுவார். நித்யானந்தாவை சந்தித்த பிறகு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டார். அதன்பிறகுதான் எங்கள் குடும்பத்தினருக்கு நித்யானந்தா மீது மரியாதை ஏற்பட்டது. எங்கள் பெற்றோரின் அனுமதியோடும், அவர்கள் கொடுத்த உத்தரவாத கடிதத்தோடும்தான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்தோம். அவரது ஆசிரமத்தில் எங்களை போல் 300 இளம் பெண்கள் அவரது சீடர்களாக பணிபுரிகிறார்கள். நாங்கள் சம்பளத்துக்காக அங்கு வேலைபார்க்கவில்லை. ஆன்மிக பணியில் எங்களை அர்ப்பணித்துக்கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டும் ஆன்மிக பணியை செய்யலாம். திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாக இருந்தும் ஆன்மிகத்தில் ஈடுபடலாம். நாங்கள் 2-வது வழியை தேர்ந்தெடுத்துள்ளோம். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் எங்களைபோன்ற இளம் பெண்கள் மட்டுமல்லாமல், எத்தனை கணவன்-மனைவிகள் கூட தங்கியிருக்கிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட்டுவிட்டால் அழகு, ஆசை, வயது எதிலும் ஈடுபாடோடு இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் தங்க நகைகள் அணிந்துகொள்ளவில்லை. எங்களுடைய வாழ்க்கையை முடிவு செய்துகொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் இந்த வாழ்க்கையை நாங்கள் தேர்வு செய்தோம். இப்போது திடீரென்று பிரம்மச்சாரியத்தை கைவிட்டு, விட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு வரும்படி எங்கள் பெற்றோர் சொல்லுகிறார்கள். நித்யானந்தா மீது போலீசார் போட்டுள்ள வழக்கை அடிப்படையாக வைத்து எங்கள் பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். நாங்கள் நித்யானந்தாவை நம்புகிறோம். அவர் விரைவில் நிரபராதி என்று போலீஸ் வழக்கில் இருந்து விடுதலை பெற்று வருவார். நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து வெளியிடப்பட்ட சி.டி. படத்தை நாங்கள் நம்பவில்லை. போலீஸ் வழக்கு விசாரணை இருப்பதால் நாங்கள் இப்போது இதற்குமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நித்யானந்தா மோசமானவராக இருந்திருந்தால் நாங்கள் மீண்டும் அவரது ஆசிரமத்துக்கு போக விரும்புவோமா? இதுவரையில் அவருக்கு எதிராக எந்த பெண்களும் புகார் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பெண் சீடர்கள் இருவருக்கும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள். உரிய ஆதாரங்களோடுதான் நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ பட ஆதாரமும் உண்மையானது. எனவே நீங்கள் இருவரும் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் பேச்சை கேட்டு திருமண பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் பெண் சீடர்கள் இருவரும் நாங்கள் எடுத்த முடிவில் இருந்து மாறமாட்டோம் என்று பதில் அளித்துவிட்டு சென்றனர். ஒருவேளை இதுதொடர்பாக பெண் சீடர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுப்போம்' என்று அந்த அதிகாரி கூறினார். பெண் சீடர்கள் இவ்வாறு புகார் கொடுக்க வந்தது போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனர் வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.



புனர்வாழ்வளிக்கப்பட்டு சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் முன்னாள் போராளி யுவதிகள் பாலியல் சேஷ்டைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்று கூட்டமைப்பு எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண் டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர் ந்து உரையாற்றுகையில், வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்க்கையில், வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் அதில் எந்தவிதமான பலனும் கிடையாது. நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கு அதிகமான பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். வரவு செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளுக்கென எந்த ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே வேலை வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் இளைஞர் யுவதிகளின் நலன்கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. எனவே விசேட பிரேரணையின் மூலமாவது அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். வடக்கில் மீள்குடியேறிய அரச ஊழியர்களுக்கு சைக்கிளொன்றை வழங்குவதற்கு கூட வசதிகள் இல்லை. எனவே அவர்கள் சைக்கிள், வீடு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அரச துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதனால் தகுதியான இளைஞர், யுவதிகள் போதிய வாய்ப்புகளின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதிற்கு மேற்பட்டோர் அரச துறையில் பதவிகளை வகிப்பதை தவிர்க்கும் வகையில் சட்டமூலமொன்று கொண்டு வரப்பட வேண்டும். யுத்த காலத்தின் போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களது நிலைமைகள் என்ன என தெரியாமல் பெற்றோர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைமை பற்றி தேடி கண்டறியப்பட வேண்டும். இதேபோல் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டதாக இருந்த முன்னாள் போராளிகளாக இருந்த தமிழ் யுவதிகள் சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு இந்த யுவதிகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிங்களமும் தெரியாது. அதுமட்டுமன்றி இந்த யுவதிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சேஷ்டைகளுக்கும் ஆளாகின்றனர். புனர்வாழ்வு என்பதை விட அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைப்பதே அவர்களின் மாறுதலுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இவ்விடயத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளை என்ற வகையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு,டக்ளஸ் மீது வழக்கு தொடரவுள்ளேன்.-விஜயகலா.



யாழ்ப்பாணத்தில், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலையை, சிங்களக் காடையர்களைக் கொழும்பில் இருந்து கூட்டிச்சென்று நானே இடிப்பித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார். என்று திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் திருமதி மகேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது:-
வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் வழங்கி அவர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
அந்தப் பேட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெளிநாட்டுத் தொலைக்காட்சியிலிருந்து மறுஒளிபரப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
அவர் என் மீதான இந்த அபாண்டமான பழியை வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
அவர் மீது நூறு மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளேன் என்பதனை இந்தச் சபையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகலா.

30 ஜூன் 2010

தென்னிந்திய திரைப்படத் துறையின் போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை.-சல்மான் கான்.


'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை என வட இந்திய சினிமா நட்சத்திரம் சல்மான்கான் தெரிவித்தார். சல்மான்கான் மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவாறு தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட நடிகர் சல்மானிடம் ஊடகவியலாளர் ஒருவர்," தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், "நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை. இந்த விடயம் தொடர்பில் நான் இதுவரை எதுவித பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை. குறித்த திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது. படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், அநேகமான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.