பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2015

கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையில் தீர்வு என்று குறிப்பிட்டதன் மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையிலேயே தீர்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கூட்டமைப்பின் தலைவர் தீர்வு விடயத்தில் ஒரு கடும்போக்கான கட்டத்துக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அவர் பெருந் தவறிழைத்துள்ளார் என்பதனை குறிப்பிடுகின்றேன். குறிப்பாக இவ்வாறு கடும்போக்குவாதத்தை பின்பற்றி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. குறிப்பாக பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி எந்தத் தீர்வையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்நிலையில் சம்பந்தன் சமஷ்டி என்ற விடயத்தை குறிப்பிட்டவுடன் தென்னிலங்கை மக்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு தென்னிலங்கையில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தேர்தலில் தனித்து ஒரே கொள்கையுடன் களமிறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவுமே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சம்பந்தன் அடிக்கடி தமது நிலைப்பாடுகளை கூட்டமைப்புக்காக மாற்றிக்கொண்டிருக்கின்றார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப் போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.