பக்கங்கள்

22 ஜூன் 2013

குடாநாட்டு வர்த்தகர்களிடம் பொலிஸ் கப்பம்!

யாழ்ப்பாணம் 
யாழ். குடாநாட்டு வர்த்தகர்கள் சிலரிடம் பொலிஸார் மூலம் சிலர் கப்பம் கோரினரா என்ற விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வர்த்தகர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு கப்பம் கோருவோர் பற்றியும், அதற்கு உடந்தையாக பொலிஸார் இருந்தனரா என்பது பற்றியும் இரு வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். ஜெப்றி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தச் தகவலை வெளியிட்டார். யாழ். நகரில் ஆஸ்பத்திரி வீதியில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்று உள்ளது. அதனை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடமே இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலை வீதியில் பொலிஸார் சீருடையில் கடமையில் நிற்பர். அவர்களது கைத்தொலைபேசிகளுக்கு சிலர் அழைப்புக்களை மேற்கொள்வர். அதில் தம்மைப் பொலிஸார் என்று கூறும் நபர்கள் குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் கைத்தொலைபேசியைக் கொடுக்குமாறு கூறுவார்கள். பொலிஸாரும் அவ்வாறே கைத்தொலைபேசியைக் கொண்டு சென்று வர்த்தகர்களிடம் கொடுப்பார்கள். மறுமுனையில் பேசுபவர் தான் ஒரு பொலிஸ் உயர் அதிகாரி என்றும் தனக்கு ஒரு தொகைப் பணம் வழங்க வேண்டும் என்றும் அதனை வழங்க மறுத்தால் வவுனியாவுக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டி வரும் என்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தும் பாணியில் பேசுகின்றனர். ஒரு சில வர்த்தகர்கள் இவ்வாறு கப்பம் செலுத்தியுள்ளனர். சிலரிடம் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கப்பம் கோரப்பட்டுள்ளது. சில வர்த்தகர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையிலேயே கப்பம் கோருவோர் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் குறித்தும் வர்த்தகர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கு அனுசரணையாகச் சென்ற பொலிஸார் சிலர் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதனால் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்துபவர்கள் தாமும் பொலிஸார் என்றே கூறியள்ளனர். அவர்கள் தொடர்பிலும் கப்பம் கோரலுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூறப்படும் பொலிஸார் தொடர்பிலும் தனித்தனியே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னரே ஏனைய விடயங்கள் தெரியவரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.