பக்கங்கள்

15 ஜூன் 2020

கஜேந்திரகுமார் தலைமையில் தேர்தல் தொடர்பிலான கலந்தாய்வு!


யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நல்லூர் இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

13 ஜூன் 2020

நினைவேந்தல்களை எட்டியும் பார்த்திராதவர் சுமந்திரன்!

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்குகின்றது – தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தையே சொல்லி நிற்கின்றது. தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்புக்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்.”இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தமது கட்சியில் இடம் கொடுப்போம் என்றும், போராளிகள் தியாகங்கள் செய்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்துகள் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லுகின்றது. தேர்தல் நெருங்கிவிட்டது. ஆகவே, நாங்கள் ஏமாற்றுவதற்காக வந்துவிட்டோம் என்பதாகும். முன்னாள் போராளிகள் தியாகிகள் என்று சுமந்திரன் கூறுவது வேடிக்கையான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அவர்களின் அரசியல் போராட்டத்தையோ தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேலையில்லாத காரணத்தினால் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய அவர்தான், இன்று போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளப் போகின்றேன் என்று கூறுகின்றார். இவ்வாறு பேசிய சுமந்திரன் இன்று போராளிகள் தொடர்பில் வெளியிடும் கருத்து தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான முனைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூறகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்கிவிட்டது என்ற விடயம் மட்டும்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. சுமந்திரன் போன்ற ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் அகற்ற வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசு ஏற்றுக் கொண்டால் தாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்மைப்போடு, மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்திருந்த நிலையில், சர்வதேசம் மற்றும் நாடாளுமன்றத்தில் அந்த அரசுக்கு எதிராக எழுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முழுமையான ஆதரவை வழங்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இருப்பினும், அரசியல் தீர்வையும், அடிப்படைப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்தையும் அவர்களால் செய்து முடிக்க இயலவில்லை. இவ்வாறான நிலையில் மீண்டும் கோத்தாவின் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, ஏற்கனவே கோட்டாபய அரசின் காலில் விழுந்து, இரகசிய உடன்படிக்கையை செய்துவிட்டார்கள் என்பதையெ தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மண்ணுக்குள் புதைக்கும் நடவடிக்கைகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம். தமிழர்களின் அரசியலும், வாழ்வியலும் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் இனஅழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வரைபடத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீக்கப்பட வேண்டும்” என்றார்.

02 ஜூன் 2020

ட்ரம்ப் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்,பொலிஸ் அதிகாரியின் கோபம்!

 george floyd: please, keep your mouth shut if you cant be constructive, houston police chief to trump"இந்த போராளிகள் நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளதற்கு அமெரிக்க போலீஸ் அதிகாரிகளே கடுப்பாகி உள்ளனர்.. "இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கருப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் தேதி 20 டாலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.. போலீசார் லத்தியால் அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை சுட்டும், போராட்டக்காரர்களை துரதியடிக்கின்றனர்... ஜார்ஜ் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுபவர்களில் வெள்ளை இனத்தவர்களும் அதிகம் பங்கேற்றுள்ளனர்.. இதனால் அதிபர் ட்ரம்ப் "நேரத்தை வீணடிக்காதீர்கள்... போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்" என்று போலீசாருக்கு அட்வைஸ் சொல்லி உள்ளது போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.. ஏற்கனவே "இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு இவ்வாறு அட்வைஸ் தந்துள்ளார். ஆனால் அதிபரின் இந்த வெறியேற்றும் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சிலரே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். ஆர்ட் அகவதோ என்ற ஹவுஸ்டன் நகர போலீஸ் கமிஷனர் சிஎன்என் டிவிக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.அதில், "அமெரிக்காவின் அனைத்து காவல்துறை தலைவர்களின் சார்பாகவும், இதை அதிபர் டிரம்ப்புக்கு தெரிவிக்க விரும்புகிறேன்... இது மக்களை அடக்கி ஒடுக்கும் நேரம் கிடையாது.. மக்கள் மனங்களை வெல்ல வேண்டிய நேரம்.. அதனால் இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை பேரிடம்தான் இப்படி அதிபர் வாங்கி கட்டிக் கொள்வாரா?!

01 ஜூன் 2020

அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பதுங்கு குழியில் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவில் தற்போது நடக்கும் போராட்டங்கள் குறித்து பார்க்கும் முன், இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பல நூறு வருடங்களாக கறுப்பின மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அங்கு போலீஸ் மூலமும், அரசு மூலம் தொடர்ந்து கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். போலீஸ் என்கவுண்டர் தொடங்கி தவறான குற்றச்சாட்டுக்கு சிறை தண்டனை வரை பல விஷயங்களை கருப்பின மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.தற்போது இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து போராட்டமாக உருவெடுத்து உள்ளது. இந்த போராட்டங்களுக்கு பின் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞர் ஒருவரின் கொலைதான் காரணம். கடந்த 27ம் தேதி அமெரிக்காவின் மின்னேபோலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையின் போதே இவர் கொலை செய்யப்பட்டார்.20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது, இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் போலீசார் காலை வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.இந்த நிலையில் இந்த கொலை காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அங்கு முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி உள்ளது. முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்து இருக்கிறது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் தற்போது அங்கு வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாக சென்றனர் . ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் எல்லோரும் அங்கு வெள்ளை மாளிகை நோக்கி சென்றனர். வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் வகையில் அங்கு மக்கள் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் தேசிய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது.வெள்ளை மாளிகை வெளியே பெரிய அளவில் போராட்டம் வெடித்து அது கலவரமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே அங்கு பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு படையும் அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு வெளியேதான் இத்தனை கலவரங்கள், சண்டை நடந்துள்ளது. வெள்ளை மாளிகையை மொத்தமாக சுற்றி வளைக்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.இந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக தற்போது அதிபர் டிரம்ப் அங்கு வெள்ளை மாளிகை உள்ளே பதுங்கி உள்ளார். அங்கிருக்கும் பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் இப்படி பங்கரில் பதுங்குவது சாதாரண விஷயம் இல்லை.இதனால் அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டம் கைமீறி போய் உள்ளது. இப்படியே போனால் மக்கள் அங்கு வெள்ளை மாளிகையை கைப்பற்ற கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக 5 போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். 1:5 என்ற ரீதியில் போராட்டம் நடப்பதால் போலீசால் அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள். அங்கு கடைசியாக 155 ஆண்டுகளுக்கு முன் 1865ல் உள்நாட்டு யுத்தம் நடை பெற்றது. ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சி காலத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையில் இந்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது.தற்போது அங்கு மீண்டும் யுத்தம் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளையர்களுக்கு இடையிலான போராட்டமாக இது உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.

18 மே 2020

சிறிலங்கா இணையங்கள் மீது சைபர் தாக்குதல்!

ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் மூன்றாம் தடவையாக 300க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சற்று முன்னர் சைபர் தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் மேற்கொண்டுள்ளது. மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை நாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கோத்தபாயவின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சைபர் வழித்தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை ஒன்றையும் அமைத்த நிலையில் இன்று அவர்களுக்கு தண்ணிகாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நன்றி:பதிவு 

17 மே 2020

முள்ளிவாய்க்காலில் கெடுபிடியை தொடங்கியது அரசபடை!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருகே, புதிதாக பொலிஸ்,படையினரின் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில்,பொலிஸ் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் கடந்த மூன்று நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில்,படைகள் மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 மே 2020

சுமந்திரனின் செவ்வி தொடர்பில் கஜேந்திரகுமார் ஊடக சந்திப்பு!(காணொளி)

விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில்:- நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய காலம் முதல் நாங்கள் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் கொள்கையைக் கைவிட்டு தனியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலிருந்து அவர்கள் விட்டுச் செல்கிறார்கள் என்ற கருத்தை 11 வருடங்களாக கூறிவருகிறோம். அதற்கு பல ஆதாரங்களையும் நாங்கள் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம். 2010 ஆண்டு பேராசிரியர் சிவநாதன் தலைமையில் ஏற்பாடு செய்த ஒரு விவாதத்தில் சுமந்திரன் விடுதலைப் போராட்டம் ஒரு அதர்மம் என்றும் தர்மமே எப்போதும் வெல்லும் என்று இந்த ஆயுதப் போராட்டத்தை அதர்மம் என்று கூறி தனது ஆழமான கருத்தை வலியுறுத்தினார்.

ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்கிறார் சார்ள்ஸ்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பொறுப்பில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்று கோரி   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளார்.
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பொறுப்பில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்று கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுச்ச தியாகங்களை செய்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதேபோன்று கருத்து கூறியிருக்கின்றார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளதாம்.

25 ஏப்ரல் 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான கோப்பாயைச் சேர்ந்த இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று காலை தொண்டைமானாறு, மயிலியதனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போயிருந்த இவரை, நேற்று இரவு தொடக்கம் தேடி வந்த நிலையிலேயே இன்று காலை அவரது சடலம், கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, நேற்று இரவு 7.20 மணியளவில் தொண்டைமானாறு மயிலியதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம், அடையாள அட்டை அடங்கிய பர்ஸ் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாரால் அவை மீட்கப்பட்டன. இதன் பின்னரே அவர் காணாமல் போனார் என்று தெரியவந்தது. இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

28 பிப்ரவரி 2020

குற்றவியல் நீதிமன்று அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஐநாவில் கஜேந்திரகுமார் கோரிக்கை!

இப்போதாவது சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் இன்று ஆற்றிய உரையில், 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது. இந்த பிரேரணையின் உள்ளடக்கமானது , மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப் பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்ட போதிலும், இந்த 30/1 பிரேரணையானது, சிறிலங்கா அர்சாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது இந்த ஐநா மனித உரிமை சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது. இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு (Hybrid) குற்றவியல் பொறிமுறையை கொண்டிருக்கும் என்று, தமிழர்களிற்கு சொல்லப்பட்ட போதும் (தமிழர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்ட போதும்) அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும் , தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பரில் சிறிலங்காவில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது. இங்கு இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார். இந்த புதிய அரசாங்கமானது , எதிர்பார்க்கப்பட்டபடியே, 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக , உத்தியோகபூர்வமாக இந்த மன்றிற்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது . அவையின் தலைவர் அவர்களே மற்றும் ஆணையாளர் அவர்களே , நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேசதீர்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை விடுக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

19 பிப்ரவரி 2020

முன்னாள் முதல்வர் உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிடுகிறார் என கண்டனம்!


முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் இன்று  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'விக்னேஸ்வரன் அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாளுவதாக அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயம் பூசி சிறிலங்கா அரசின் ஓ.எம்.பிக்குள் முடக்க எத்தனிக்கிறாரா??? தமிழர்களை காணாமலாக்கிய ஒட்டுக்குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக்குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்னேஸ்வரனுக்கு எம்மையும், எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். விக்கினேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் ,நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிகொண்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாளுகின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி நீதி வேண்டி போராடி வருகின்றது ஓ.எம்.பியை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். எமது அமைப்பு கடந்த பிப்ரவரி 4 திகதி அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளை தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தை பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? கனகரஞ்சினி உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஓ.எம்.பி யை ஆதரித்து அவர்களுடன் பல தடவை ரகசிய பேச்சுக்களை நடத்தி யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பியைத் திறக்க வழி கோலிவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் நீதியை கோரி வருகின்றனர். அரசிடம் நீதியை கோருகின்ற தரப்புக்கு விக்னேஸ்வரன் ஆதரவா ?என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஐநா பாதுகாப்புச்சபை ஊடாக நீதியை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? நாம் ஓ.எம்.பியை வெளியேற கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு இன்றுடன் 162 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் இது வரைக்கும் எமது போராட்ட கொட்டகைக்கு வந்து ஏன் இதில் இருக்கிறீர்கள்? எதற்காக இருக்கிறீர்கள் ? என்று கூட கேட்காத விக்னேஸ்வரன் தனது கட்சி லாபத்திற்காக வாக்கு வேட்டைக்காக எமது தூய்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கிறார். காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை சிறிலங்கா அரசு பிரித்தாழ்கிறது என்பது விக்னேஸ்வரனுக்குத் தெரியாத விடயமல்ல ?அல்லது தெரியாது போல் நடிக்கிறாரா? தமிழின அழிப்பிற்கான நீதியை சொகுசான வாழ்க்கைக்காகவும்,தமது அரசியல் இருப்பிற்காகவும் விலைபேசி விற்ற கூட்டமைப்புப் போன்று கூட்டணி அமைத்து கும்மாளம் போட்டு தமிழர் தேசத்தை கூறுபோடும் விக்கினேஸ்வரனின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தால் வரலாம் இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது. இல்லை கதைப்பேன் என நினைத்து எம்மைச் சீண்டினால் நீதியரசருக்கெதிராகவும் எமது போராட்டம் திரும்பும். என்பதினை அறியத்தருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பிப்ரவரி 2020

சவேந்திர சில்வாவிற்கு தடை போட்டது அமெரிக்கா!

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை படைத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறலான சட்டவிரோதக் கொலைகளில், அவரது ஈடுபாடு தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல் அல்லது குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகமான தகவல்கள் இருந்தால், அந்த நபர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை. அவரது பதவி இலங்கையிலும் உலக அளவிலும் மனித உரிமைகள் மீது நாம் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்த நமது அக்கறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான எங்கள் ஆதரவு. மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை வைத்திருக்கவும், பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை அரசாங்கத்துடனான எங்கள் கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதன் பாதுகாப்புப் படைகளை மாற்றியமைக்க உதவுவதற்கும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு எங்கள் பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமாக மனித உரிமைகளுக்கான மரியாதையை தொடர்ந்து வலியுறுத்தும். உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை எப்போது நிகழ்ந்தது அல்லது யார் செய்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கிடைக்கக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்துகிறது. இன்றைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை ஆதரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும், அமைதியான, நிலையான மற்றும் வளமான இலங்கைக்கு ஆதரவாக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றுள்ளது.

14 பிப்ரவரி 2020

இளம் மனைவியை கொன்று தோலை உரித்த கொடூரன்!

ஆத்திரம் அடங்காமல் சமையல் அறைக்கு ஓடிப்போய்,காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.இவருக்கு வயது 46 ஆகிறது.. இவரது மனைவிக்கு வயது 25 ஆகிறது.. வயது பொருத்தம் இல்லாத காரணத்தினால் இருவருக்குள்ளும் நிறைய தகராறு வந்துள்ளது.அப்படி ஒரு சண்டை சம்பவத்தன்றும் நடந்தது.. அந்த நேரம் பார்த்து கணவன் செம போதையில் இருந்துள்ளார்.. தம்பதியிடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமும் போதையும் தலைக்கேறிய கணவன், நேராக சமையலறைக்கு போய் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டார்... உடம்பில் பல இடங்களில் கத்திகுத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட்டார்... அப்போதும் ஆத்திரமும், போதையும், வெறியும் அடங்காத கணவன், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை தோலை உரித்து எடுத்துள்ளார்..பிறகு உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து கொண்டு போய், ஒரு ஏரியில் வீசினார்... பிறகு வீட்டுக்கு வந்து கொலை செய்ததற்கான அடையாளங்களை அழித்துள்ளார். அதற்கு பிறகு முதல் மனைவிக்கு போன் செய்து தான் எப்படி எல்லாம் கொலை செய்தேன் என்பதை ஒன்றுவிடாமல் விளக்கி இருக்கிறார்.இதை போனில் கேட்டதற்கே முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்..இதற்கு பிறகுதான் போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது மிச்சம் மீதி இருந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். கணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மெக்சிகோ நகரமே வெலவெலத்து காணப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன.. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த போட்டோவை பார்த்து மக்களும் கொதிப்படைந்து உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

07 பிப்ரவரி 2020

தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் காலமானார்!

ஈழத்து நடிகரும் குறும் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய அபார நடிப்பு திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி பலராலும் போற்றப்பட்டு வந்தவர் அவர். ஒரு சிறந்த மனிதனாகவும் தனது திறமையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு வந்தவரும் நடிகரும் குறும் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் இன்று அதிகாலை கள்ளப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்தார்.கள்ளப்பாடு தெற்கு முல்லைத்தீவில் வசித்து வந்த சந்தியோகு ஜேசுதாசன்17.08.1955 ல் பிறந்தார். அவருடைய 65 ஆவது வயதில் இன்று காலை அவர் சாவடைந்தார்.தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் புகழுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

24 ஜனவரி 2020

கனடாவில் தமிழக மாணவி மீது தாக்குதல்!

ரேச்சல் ஆல்பர்ட்கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பிறகு, சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பள்ளி, கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் "விநியோகச் சங்கிலி மேலாண்மை" (Supply chain management) பயின்று வருகிறார்.இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5'11'' உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர காவல்துறையின் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.டொரொண்டோ நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை ஆல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று ஆல்பர்ட் சந்தேகிக்கிறார். "எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் 'எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்' என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். "எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை" என்று ஆல்பர்ட் கூறுகிறார்.ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார். "எனது மகளின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்" என்று ரேச்சலின் தந்தை ஆல்பர்ட் கூறுகிறார். ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

நன்றி:பிபிசி தமிழ்

09 ஜனவரி 2020

ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

காசெம் சுலேமானீஇரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. "இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்" என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார்.காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த ராணுவ தளங்கள் மீது இரானில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மேற்கொண்டு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும், இரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், இரான் தரப்புடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடும் தங்கள் தற்காப்பு கருதி நடவடிக்கை எடுக்க ஐநா சாசனத்தின் பிரிவு 51 வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அந்தக் கடிதத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு தெரிவிக்க அமெரிக்கா எழுதியுள்ளது.மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரான் மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என்று ஐநாவுக்கான இரான் தூதர் மஜித் தக்த் ராவன்சி கூறியுள்ளார். இராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதலும் ஐநா சாசனத்தின் பிரிவு 51இன் கீழ் நியாயப்படுத்தக்கூடியதே என்று அவர் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு சபைக்கு இரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும், உரிய அளவிலான பதில் ராணுவ நடவடிக்கையை தாங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. தாங்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை. ராணுவ நிலைகள் மீது மட்டுமே இலக்கு வைத்து தாக்கப்பட்டது என்றும் இரானின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்

25 டிசம்பர் 2019

சிங்கள சிப்பாயின் துப்பாக்கி அபகரிப்பு!

வவுனியா போகஸ்வெவ படை முகாமில் கடமையில் இருந்த சிங்கள சிப்பாய் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா படைகளின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த படையினன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

17 டிசம்பர் 2019

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் சிறீலங்காவிற்கு எச்சரிக்கை!


கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை (எஃப்.டி.எஃப்.ஏ) பணியாளர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க உறுதி செய்யுமாறு இலங்கை நீதித்துறை அதிகாரிகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் கொழும்பு சுவிஸ் தூதரகம் தங்கள் பொறுப்புகளை தொடர்ந்து பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உதவ தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும். நவம்பர் 25, 2019 அன்று, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தி கொழும்பில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பணியாளர் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர். எஃப்.டி.எஃப்.ஏ பலமுறை உரிய செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும், மூன்று நாட்களுக்கு மேலாக ஊழியர் 30 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் இலங்கையின் மூத்த அதிகாரிகள் அவரது கணக்கை கேள்விக்குட்படுத்தியதன் பொது அறிக்கைகளையும் எஃப்.டி.எஃப்.ஏ விமர்சித்துள்ளது. தமது ஊழியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் FDFA எதிர்பார்க்கிறது. பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை பூர்த்திசெய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளை எஃப்.டி.எஃப்.ஏ அழைப்பு விடுக்கிறது. இந்த உயர் வழக்கில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறது. கொழும்பில் உள்ள எஃப்.டி.எஃப்.ஏ மற்றும் சுவிஸ் தூதரகம் முடிந்தவரை தங்கள் ஊழியருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். பாதுகாப்பு சம்பவத்தை தீர்க்க ஒரு பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான வழியை நாடுகிறோம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு எஃப்.டி.எஃப்.ஏ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 16 டிசம்பர் 2019 அன்று, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான நேருக்கு நேர் சந்திப்பில் இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 டிசம்பர் 2019

மண்கும்பானில் மணல் கடத்தல்காரர் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!


தீவகம், சாட்டி மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுடன் பிரதேச மக்கள் முரண்பட்டதனால் மூவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பிரதேச மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்யுமாறும், அதிகளவு மணல் குவியல்கள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரணடைந்தனர். வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது. பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும். சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். “அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இரண்டு நாட்களுக்கும்  மேலாகியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும். அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

06 டிசம்பர் 2019

நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியீட்டு விழா!

புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.

வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்

ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்

வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்

தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்

பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்

தொடர்ந்து அகராதி வெளியீடும் சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் வெளியீட்டாளர் உரையும் இடம்பெறும்.ஏற்புரையை நடராசா சிறிரஞ்சன் நிகழ்த்துவார்.இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.