பக்கங்கள்

13 டிசம்பர் 2019

மண்கும்பானில் மணல் கடத்தல்காரர் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!


தீவகம், சாட்டி மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுடன் பிரதேச மக்கள் முரண்பட்டதனால் மூவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பிரதேச மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்யுமாறும், அதிகளவு மணல் குவியல்கள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரணடைந்தனர். வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது. பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும். சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். “அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இரண்டு நாட்களுக்கும்  மேலாகியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும். அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.