பக்கங்கள்

02 ஜனவரி 2017

ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த போராளி சடலமாக மீட்பு!

முன்னாள் போராளி ஒருவர் சாவகச்சேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயக போராளிகள்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான இனியவன் என அழைக்கப்படும் தர்மசேன ரிசிகரன் (வயது-34) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள ஜன நாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போராளியாக இருந்து, புனர்வாழ்வின் பின் சாவகச்சேரி டச்சு வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ரிசிகரன் சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் வீடு ஒன்றில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கான அலுவலகம் ஒன்றினை உருவாக்கி வந்துள்ளார். நேற்று இரவு குறித்த அலுவலகத்தின் காவலாளி இரவுக்கடமைக்காக சென்ற போது ரிசிகரன் அலுவலகம் அமைந்திருந்த வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். உடனடியாக சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதேவேளை தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் க.கணபதிப்பிள்ளையிடம் தெரிவித்ததை தொடர்ந்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றத்தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.