பக்கங்கள்

26 டிசம்பர் 2016

மூதாளர்களை அவமானப்படுத்திய நத்தார் பரிசு!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் மூதாளர்கள் பலரை அவமானப்படுத்தும் செயல் இடம்பெற்றுள்ளது. நத்தார் தின நிகழ்வில் மூதாளர்களுக்கு உதவும் நோக்கில் பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதாக அறிவித்து குறித்த கிராமத்தில் வாழ்கின்ற 136 மூதாளர்களை பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளி மாவட்ட அமைப்பும் இணைந்து பொதிகளை மூதாளர்களுக்கு வழங்கினர். குறித்த பொதிகளை பிரித்து பார்ப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூதாளர்களுக்காக வழங்கப்பட்ட பொதிகளில் ஆடைகளே காணப்பட்டதாகவும், அவை எந்த வகையிலும் தமக்கு பொருத்தமில்லாத ஆடைகள் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பரிசுப் பொதிகளில் மேலைத்தேய பெண்கள் அணியக்கூடிய உள்ளாடை களே காணப்பட்டுள்ளன. மேலும் கிழிந்த புடைவைகளும் குறித்த பொதிகளில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உபயோகிக்க முடியாத ஆடைகளை பரிசாக வழங்கியது எந்த விதத்தில் நியாயம் என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கிராமத்தில் வாழ்கின்ற மூதாளர்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே தாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும், குறித்த செயலினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவொளி எனும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்ததாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.