பக்கங்கள்

10 மே 2016

சுவிஸ் குமார் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு நீதிபதி கடும் உத்தரவு!

யாழ்,புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார், யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படும் நிலையில், அவர் என்ன அடிப்படையில் கொழும்பு சென்றார்? அவர் யாருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்? என்பது பற்றியும், அவர் தொடர்பான தகவல்கள் தொடர்பிலும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேகநபர்கள் 10 பேர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் முன்னிலைகியிருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர். அங்கு சமர்ப்பணம் செய்த சட்டத்தரணி கே.சுகாஸ், "வழக்கில் சந்தேகநபராகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் எனவும், பின்னர் கொழும்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் எனவும் அறிந்தோம். குறித்த நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தல் சரணடைந்திருந்தால் பின்னர் எவ்வாறு கொழும்புக்குச் சென்றார்? கொழும்பில் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார்? இவை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட வேண்டும்" - என்று கோரினார். சட்டத்தரணி வி.மணிவண்ணன், "வித்தியாவின் குடும்பத்தினர் நீதிமன்றுக்கு வந்து செல்லும்போதெல்லாம் சந்தேக பர்களின் உறவினர்கள் வித்தியாவின் குடும்பத்தினரை இகழ்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அதனால் நீதிமன்றுக்கு வருவதற்கு அச்சமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்" - என்று கோரினார். அதன்பின்னர் நீதிவான் பல கட்டளைகளைப் பிறப்பித்தார். அதில், "சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நின்றமையானது, கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? அவர் தானாகச் சென்று சரணடைந்தாரா? அல்லது வேறு யாராவது பாரப்படுத்தினார்களா? வேறு நபர்கள் பாரப்படுத்தியிருப்பின் அவர்களின் பெயர் விவரங்கள் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்களுக்கும் சுவிஸ் குமாருக்கும் இடையிலான சம்பந்தம் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்கள் இந்த வழக்கில் அவ்வாறு செயற்பட வேண்டிய சட்ட தேவைப்பாடு அல்லது காரணம் உள்ளனவா? சுவிஸ் குமார் சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எவ்வாறு கொழும்பு சென்றார்? அதற்கு யாராவது உதவியிருந்தால் அவர்களது பெயர் விவரங்கள் என்ன? யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்திருந்தால் அதற்கான சட்ட ரீதியான குறிப்புக்கள் உள்ளனவா? அந்தக் குறிப்புக்கள் பேணப்பட்டனவா?சரணடைந்திருந்தால் அவர் ஏதாவது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டாரா? அவர் கொழும்புக்குச் சென்றது பொலிஸ் கட்டுக்காவலிலா அல்லது சாதாரணமாகவா? சாதாரணமாகச் சென்றிருந்தால் அவர் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டாரா? அவர் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் யாரால், எந்தச் சட்டப்படி, எந்த ஏற்பாட்டில் விடுதலை செய்யப்பட்டார்? சுவிஸ் குமார் எத்தனை அலைபேசிகள் பயன்படுத்தினார்? அவரது அலைபேசிக்குரிய அறிக்கைகள் பொலிஸாரால் பேணப்பட்டுள்ளதா? சம்பவம் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் வரையும் சம்பவம் நடந்த பின்னரான ஒரு வாரம் வரைக்கும் அவர் தொடர்பு கொண்டிருந்த அலைபேசிகளின் ஒலிப்பதிவு, ஆவணங்கள் பொலிஸாரால் திரட்டப்பட்டதா? யாராவது அவருடன் தொடர்புகள் கொண்டிருந்துள்ளனரா? அவ்வாறான தொடர்புகள் இருந்திருப்பின் சாதாரண வழக்குப் போன்று பொலிஸார் குறித்த அலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அந்தத் தகவல்களைப் பெற்றிருந்தனரா? இந்த விடயங்கள் தொடர்பில் அதன் பின்னர் பொலிஸாரால் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டிருப்பின் பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவ்வாறு ஏதாவது இருப்பின் அவற்றை அடுத்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தனித்தனியே பதிலளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" - என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் உத்தரவிட்டார். தவிர வித்தியாவின் குடும்பத்தினர் அச்சுறுத்தப்படும் விடயத்துக்கு அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். பொலிஸார் அந்த விடயத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் நீதியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிவான் அதில் தெரிவித்தார். அதனையடுத்துச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, மாணவி வித்தியா படுகொலை முதலில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களினதும் விளக்கமறியலை நீடிப்பது தொடர்பான விசாரணை யாழ்.மேல்நீதிமன்றில் நாளை புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.