பக்கங்கள்

04 நவம்பர் 2014

இலங்கையின் பாதுகாப்பில் ஐ.நா.தலையிடக்கூடாது என எச்சரிக்கை!

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்திருக்கிறது இலங்கை அரசு. மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிடக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்த 18 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அண்மையில் அரசிடம் கோரியது. இந்தக் கோரிக்கையை மறுத்துள்ள இலங்கை அரசு, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்துள்ளது. இந்த தகவலை கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு கிடையாது என அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் - 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உள்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவனமொன்று ஐ.நா.மனித உரிமை கவுன்ஸிலுக்கு சமர்ப்பித்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.