பக்கங்கள்

18 மே 2022

இனப்படுகொலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்!

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். ”இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்” என்றார்.

27 பிப்ரவரி 2022

சிறீலங்காவிற்கு கொத்துக் குண்டுகளை கொடுத்ததா உக்ரெய்ன்?

சிங்களம் வீசிய கொத்துக்குண்டு 
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி மக்களை கொன்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது உக்ரைன் நாடு இலங்கை ராணுவத்திற்கு இதே வகை கிளஸ்டர் குண்டுகளை கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் எதிர்த்து நின்று களமாடி வருகின்றனர்.உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதால் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்த நிலையில் சில ராணுவ வீரர்கள், தற்கொலைப் படையாக மாறி ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகின்றன. போர் காரணமாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள்.​ வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள்,​​ நாபாம் குண்டுகள் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்தி வருதாகவும் புகார் எழுந்துள்ளது.இதேபோல கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை கிளஸ்டர் கொத்துக் குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைப் போரின்போது சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்த நிலையில் , இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நாளிதழான தி கார்டியன் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.இந்த நிலையில் இலங்கை இறுதிகட்ட போரின் போது அமெரிக்க கூட்டணியில் இருந்த உக்ரைன் ராணுவம் இலங்கை அரசுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசுக்கு உதவியதன் மூலம் இன அழிப்பில் பங்கெடுத்ததாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது உக்ரைன் மீதும் அதே கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு நேரடியாக ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவியை உக்ரைன் வழங்கியதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

26 பிப்ரவரி 2022

"இறந்தாலும் ஒன்றாக இறப்போம்"உக்ரெய்னில் துப்பாக்கி ஏந்திய திருமண ஜோடி!

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய இந்த ஜோடி திருமணமான அடுத்த சில மணிநேரத்தில் நாட்டை பாதுகாக்க கைகளில் துப்பாக்கி ஏந்திய சம்பவம் நடந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் உக்ரைன் உதவி கேட்டு வருகிறது. இந்நிலையில் தான் உறவினர்கள் சூழ, அச்சதை தூவி, வாழ்த்து மழையில் நனைந்தபடி இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய ஜோடி ஒன்று உக்ரைனில் வெடித்து சிதறும் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே திருமணம் செய்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:உக்ரைன் கீவ் நகரை சேர்ந்தவர் யார்னா அரிவா (வயது 21). கீவ் நகர கவுன்சில் துணை தலைவர். சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்விடோஸ்லவ் புரிசின்(24). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ரஷ்யாவின் வால்டை மலையில் பிறந்து ஓடும் டினைபர் ஆற்றங்கரையோரம் உள்ள சொகுசு ரெஸ்டாரண்ட்டில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே தான் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் போர் துவங்கியது. அன்று முதல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முன்னேறி செல்கின்றன.இந்நிலையில் தான் யார்னா அரிவா. ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. போரின் 2ம் நாளான நேற்று வெடிகுண்டுகள் சத்தங்களுக்கு நடுவே கீவ் நகரில் உள்ள தூய மைக்கேல் தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரின் குடும்பத்தினர், சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதுபற்றி யார்னா அரிவா இவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் நிலவும் சூழல் பயங்கரமானதாக உள்ளது. இது கடினமான காலக்கட்டம். நாங்கள் இறந்தாலும் இறக்கலாம். இதனால் அதற்கு முன்பு இருவரும் சேர வேண்டும் என திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் மக்களையும், நாட்டையும் பாதுகாக்க விரும்புகிறோம் '' என உருக்கமாக கூறினார்,இதையடுத்து இருவரும் கீவ் நகரில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு மையத்துக்கு சென்றனர். நாட்டுக்காக ரஷ்ய படையை எதிர்த்து போரிட உள்ளதாக பெயர்களை பதிவு செய்தனர். அதன்பிறகு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை துவக்கினர். இதன்மூலம் திருமணம் முடிந்த கையோடு கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவை எதிர்த்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்தோடு, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ‛‛ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடும்போது நாடு இயல்பு நிலைக்கு வரும். ரஷ்ய வீரர்கள் இல்லாத உக்ரைன் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்குவர். இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அனைவரையும் அழைத்து எங்கள் திருமண விழாவை கொண்டாடுவோம்'' என துப்பாக்கி ஏந்திய கையோடு யார்னா அரிவா-ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



30 ஜனவரி 2022

கிட்டுபூங்கா பிரகடனம்!

13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம் 'தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்' என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது. சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும். இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க - இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது. இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர். இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள். இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது : • தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள். • வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் - அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக - ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது. • தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம். • இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம். • தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் - அதனுடைய தனித்துவமான இறைமையையும் - சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய 'சமஸ்டி' அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) 
தமிழ்த் தேசியப் பேரவை 
30.01.2022

31 டிசம்பர் 2021

நாமலுடன் இணைந்து பட்டத் திருவிழா - இனத்திற்கு இழைக்கும் வரலாற்றுத் தவறு!

சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது என கனடா ஒருங்கிணைந்த ப்ளூஸ் விளையாட்டுக் கழகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரசின் தமிழர் இனப்படுகொலைக்கு திட்டமிட்டு வெள்ளையடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தமிழின துரோக செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையினை பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம். பெருமையும் வீரமும் செறிந்த வல்வை மண் இவர்களின் செயற்பாட்டால் வேதனை கொண்டுள்ளது. சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனக்குழுமம். எங்களை யாரின் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கவிடாமல், எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாமல் எமது விடுதலைப் போராட்டத்தை கொண்டு நடத்திய மாபெரும் தலைவன் அவதரித்த மண்ணில் இனப்படுகொலை அரசு காலூன்றுவது என்பது மாவீரர்களையும், அவர்களின் நிகரில்லா ஈகத்தையும் கொச்சைப்படுத்துவதே அன்றி வேறேதுமில்லை. வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையின் படி, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினுடாக எமது பாரம்பரியகலாசார நிகழ்வான இந்த சித்திரப்பட்டப் போட்டி பன்முகப்படுத்தப்பட்டு , பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் முன்னிலையில் இலங்கை அரசின் மிகப்பெரிய நல்லிணக்க நாடகத்தின் கடைசிக் காட்சியாக இடம்பெறப் போகின்றது என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. விடுதலைப்போராட்டம் தொடங்கிய இடத்திலேயே இதனை நடத்திக் காட்டுவதன் மூலம் எமது இனத்திடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் அடித்து நொறுக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம். இலங்கை அரசின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புகளை கனடா வாழ் வல்வை மக்களின் அங்கமாகிய டொரோண்டோ ப்ளூஸ் மற்றும் மொன்றியல் ப்ளூஸ் விளையாட்டு கழகங்கள் ஆகிய நாம் ஒன்றிணைந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விடயத்தை எக் காரணத்தை கொண்டும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றோம். பாரம்பரியம் மிக்க விளையாட்டுக் கழகமான உதய சூரியன் கழகத்தின் நிகழ்கால இளம் தலைவர்களின் சிறிலங்கா அரசுடனான இணைக்கப் போக்கே இனவழிப்பு அரசை எமது பெருமை மிகு வல்வை மண்ணில் இந்த நாடகத்தை நடத்த இடம்கொடுத்துள்ளது. இச் செயலானது ஒரு பெரும் அரசியல் மற்றும் உளவியல் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய அங்கீகாரத்தினை பெறுவதற்கு உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், எம் வல்வை மக்களின் இன்ப துன்பங்களில் தொடர்ந்து பங்கெடுத்து, தங்களின் உழைப்பினால் அவர்களை தினமும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த மக்களின் மனங்களை இந்நிகழ்வானது மிகவும் புண்படுத்தி உள்ளது. இவ் விடயத்தின் பாரதூரமான விளைவுகளை புரிந்து கொண்டு, ஏற்பாட்டாளர்கள், போட்டியாளர்கள், மற்றும் எம் இனிய வல்வை மக்கள் முன்வந்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறும் அவர்கள் மறுக்குமிடத்து இந்நிகழ்வை புறக்கணிக்குமாறும் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 நவம்பர் 2021

கனடா கூட்டத்தில் பதற்றம் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பினார் சுமந்திரன்!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார். இவர்கள் நேற்று கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சுமந்திரனை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

13 நவம்பர் 2021

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்!

13-11-2021 மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம். எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும். இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும். இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும். எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம். 
நன்றி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தலைவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

செல்வராசா கஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

நன்றி!முகநூல் சுகாஷ்.

07 அக்டோபர் 2021

ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் இந்தியா முன் வைக்கக் கூடாது!

தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது. என்று அந்நாட்டு வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் நலன்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் இந்திய வெளியுறவுச்செயலரிடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்கவேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருந்துவருவதாக இதன்போது தெரிவித்த இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதனை எதிர்வருங்காலங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டார். மறுபுறம் இந்திய வெளியுறவுச்செயலருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டோம். அதன்படி நாம் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு 11 வருடங்களுக்கு முன்னர் எம்.கே.நாராயணன் இலங்கை வந்தபோது வலியுறுத்தப்பட்ட அதே விடயங்கள்தான் இப்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, தமிழ்த்தேசியத்தைப் புறக்கணித்து, தமிழர்களின் அபிலாஷைகளைக் கைவிடுகின்ற கூட்டமைப்பின் போக்கு மீண்டும் மீள உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒற்றையாட்சியின் கீழான தீர்வை நிராகரிக்கின்ற பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்க்ததினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒற்றையாட்சியின்கீழ் தீர்வை வழங்குவது குறித்த சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இந்திய வெளியுறவுச்செயலருடனான எமது சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்களுக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்ப்பத்திரிகையொன்றில் (ஈழநாடு) ஆசிரியர் தலையங்கமொன்று எழுதப்பட்டிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று வெளியுறவுச்செயலர் வலியுறுத்தியபோது அதனை நாம் மறுக்கவில்லை என்றும் யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு, ஏனையோரைப்போன்ற முகவர்களாக செயற்படுகின்றோம் என்றும் பொருள்படும்வகையில் அந்த ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நாம் அப்பத்திரிகையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியருக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இனிவருங்காலங்களில் எமது கட்சியுடன் தொடர்புடைய விடயங்களை எழுதும்போது, அத்தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து எம்மிடம் கேட்டறிந்து தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

25 செப்டம்பர் 2021

கோத்தாவிற்கு எதிராக களம் கண்ட நாடுகடந்த தமிழீழ அரசு!

சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கோத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது. ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொலையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம். உகண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் ஒருமுறை இந்த அரங்கில் உரையாற்றினார் என்பதையும் அறிவோம். இந்நிலையில் இந்த அரங்கில் (.ஐ.நா) கோத்தா உரையாற்ற அனுமதிக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குரலெழுப்பியிருந்தார். சர்வதேச நீதிப்பொறிமுறையினை நிராகரித்து உள்ளகபொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை கோத்தா வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை என்பது தமிழர்களின் நிலைப்பாடு மட்டுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு என்பதனை வலியுறுத்தினார். சிறிலங்கா அரசு, அதன் அரசாங்க கட்டமைப்பு யாவிலும் ஆழவேரூன்றியுள்ள இனநாயகம், இனவெறியின் உண்மையினை உலகம் அறியும் என்பதோடு, இதன் ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமில்லை என்பதனை, சிறிலங்காவின் வரலாறு பல தசாப்தங்களாக நன்கு நிரூபித்துள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்திருந்தார். தமிழினத்தின் மீது நடந்தேறிய குற்றங்கள் என்பது ஒரு தனிநபராலோ அல்லது தனிப் பட்டாலியனாலோ அல்ல, மாறாக சிறிலங்கா அரசால் நிகழ்தப்பட்டது. குற்றத்தை புரிந்தவரே நீதிபதியாக இருக்க முடியாது என்பது பொது அறிவு மற்றும் அடிப்படை சட்டக் கொள்கையாகும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார். கோத்தபாயாவுக்கு தார்மீக தைரியம் இருந்தால், சிறிலங்காவின் தலைவராக ரோம் சட்டத்தில் கைச்சாத்திட்டு, பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்ததோடு, அவர் அதை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர் ஒரு கோழை என இடித்துரைத்தார். ஐ.நாவில் உரையாற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஐ.நாவின் நெறிமுறைகள் அனுமதித்தாலும், 1987ம் ஆண்டு ஐநாவில் பொதுச்சபைக்கு வருவதற்கு அப்போதைய ஒஸ்திரிய அதிபர் கர்ட் வால்ட்ஹெய்முக்கு விசா வழங்க மறுத்ததைப் போலவே, கோதாவுக்கும் அமெரிக்கா அனுமதி மறுத்திருக்கலாம் என்பதையும் கூற வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் மறுக்கப்பட்டதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை, கோத்தாவை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் அவர் நுழைவதை மறுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் கோரியிருந்த வி.உருத்திரகுமாரன், இன்று கோத்தாவுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் இங்கிருந்து ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். பஷீருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவருடைய அணியில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளே உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் கோத்தபாயவை நோக்கி இடித்துரைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர் 2021

அரசியல் கைதிகளை மிரட்டிய அமைச்சர்,கஜேந்திரகுமார் கண்டனம்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை முழந்தாளில் இருக்க செய்துள்ளார். பின்னர் அவர் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இதனை உறுதிப்படுத்த முடியும், இராஜாங்க அமைச்சரின் கொடுரமான நடவடிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது. உலகின் மிகவும் பயங்கரமான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,சிலர் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவர்களிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன்களை கவனிக்க வேண்டிய அமைச்சர் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளமை அவர்களது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கும். குறிப்பிட்ட அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் அவரது பொறுப்புகளை பறிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது. ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐநா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது எனவும், அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

08 செப்டம்பர் 2021

புலமைப்பித்தனின் இல்லத்தை மறு தாயகம் என புலிகள் கூறினார்கள்!

உடல்நலக் குறைவால் காலமான அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது புலமைப்பித்தனின்  மனைவி கதறி அழுதார். அவரது கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார்.அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன். அண்மையில் மருத்துவமனையில் புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திருமுருகன் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.முன்னதாக புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டு நேற்று நேரில் சென்று சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி சேகரித்து வழங்கியவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

05 செப்டம்பர் 2021

ஜோர்ஜ் மாஸ்ரர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் பருத்தித்துறையில் இன்று காலமானார். பருத்தித்துறையில் 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நடைபெற்ற அனைத்து பேச்சுக்களின் போதும், பிரதான மொழிபெயர்ப்பாளராக அவர் செயற்பட்டிருந்தார். இறுதிப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பருத்தித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று அவர் காலமானார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

01 ஆகஸ்ட் 2021

இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டனர் என ஒரு தாயார் தெரிவிப்பு!

யாழ். பரியோவான் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டதாக தடுப்பூசியை பெற்ற தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். 'குறித்த நிலையத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காகச் சென்றிருந்தேன். எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு தடுப்பூசியை வழங்கிய பெண் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் இரண்டு தடவைகளுக்கு மேல் எழுந்து செல்லலாமா எனக் கேட்டேன் அவர் பதிலளிக்காமல் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபடி சென்றார். நான் அவ்விடத்திலேயே இருக்க மறு பக்கத்தில் இன்னொரு உத்தியோகத்தர் கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த வைத்தியர்களிடம் சொன்னேன்,நீங்கள் சற்று அமர்ந்திருந்து விட்டுச் செல்லுங்கள் என பதில் கூறினார்கள். எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன் எனது மகள் அவ்வாறு ஊசி போடக் கூடாது எனக்கூற நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தேன். தடுப்பூசி ஒன்றா இரண்டா ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக் கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காகச் சென்றேன். முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின் வைத்தியரைச் சந்திக்க அனுமதித்தார்கள் நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார். எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார். எனக்கு ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறியதுடன் மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்துப் பார்வையிட்டு சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.

10 ஜூலை 2021

இலங்கை இராணுவ ஆடசியை நோக்கி நகர்வதாக சுகாஷ் கண்டனம்!

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியாதைக்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு முறையற்ற விதத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்தக் கைதையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கின்ற சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலம் என்பது இலங்கையை சட்டரீதியாக இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு சட்டமூலம். இந்த சட்டமூலத்தை ஜனநாயக வழியிலே எதிர்த்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் ஒரு சட்டமூலத்திற்கு ஜனநாயக வழியிலே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட்டு தற்சமயம் கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டதாகக்கூறி அடைக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இது ஒரு கடத்தல் பாணியிலேதான் அவருடைய தனிமைப்படுத்தல் அமைந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. குறித்த சட்ட மூலமானது ஒரு பல்கலைக்கழகத்தை இராணுவ மயப்படுத்தி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளியேறுகின்றவர்களை இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தி அதற்கு பழக்கப்படுத்தி வெளியேற்றுகின்ற செயற்பாட்டிற்கு அனுமதிக்கின்ற ஒரு சட்டமூலமே இதுவாகும். இந்தக் கல்லூரி இலங்கையினுடைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். ஆகவே இது ஒரு தனியான சட்டத்தின்கீழ் ஆளப்படுகின்ற ஒரு கல்லூரியாக இருக்கிறது. இதனுடைய தாற்பரியத்தை உணர்ந்து ஜோசப் ஸ்டாலின் அவர்களும் சகோதர மொழி பேசுகின்ற நபர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு முரணானதாக இருந்தது . கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதும் நீதிமன்றத்தினால் இவர்களை தனிமைப் படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தினுடைய அனுமதியையும் மீறி நீதிமன்றத்தினுடைய கட்டளையையும் பெறாமல் எந்தவித பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது ஆன்டிஜன் பரிசோதனையோ மேற்கொள்ளாமல் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது கேப்பாபிலவு வான்படை முகாமிலே அடைக்கப்பட்டிருக்கிறார். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாது முறையற்ற விதத்தில் இந்த தனிமைப்படுத்தலானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவருடைய கைது ஒரு ஜனநாயக படுகொலை அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் இலங்கை ராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது,கோட்டாபய அரசினுடைய எதேச்சதிகார சர்வாதிகார ஆட்சி எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் ஊடாக இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உற்பத்தி செய்கின்ற பிரசவிக்கின்றதாகவே இந்த சட்டமூலம் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07 ஜூலை 2021

தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை மக்களுக்கு இல்லை-சபையில் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன். 17 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக அரசியல் அமைப்பு சபை இயக்கத்தில் இருக்கவே இல்லை. இப்போதும் இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றமை முக்கியமானது, ஆனால் நீதிமன்ற சுயாதீனம் என்ற விடயத்தில் சந்தேகம் உள்ளது. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது. இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறியது. முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக்கொண்டது. எவ்வாறு இருப்பினும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது. அதேபோல் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என சிங்கள அரசியல் வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னைய அரசாங்கமும் இதனை சாதகமாக பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்தது. இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கையே முன்னெடுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டது. இராணுவ அதிகாரிகள்தான் அதனை செய்தனர் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

06 ஜூலை 2021

நாரந்தனை வடக்கும் முடக்கப்பட்டது!

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் படைத்தளபதி தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாரந்தனை வடமேற்கு பிரதேசமும், மாத்தறை மாவட்டத்தில், உயன வத்த, உயன வத்த வடக்கு பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில், புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பிரதேசமுமே முடக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

26 ஜூன் 2021

தடைகளைத் தாண்டி இறுதிவரை மக்களுடன் இருப்போம்-கனகரத்தினம் சுகாஸ்!

இம்முறை #கொரோனா #நிவாரணப் #பணியை ஆரம்பித்து இன்றுடன் #ஒரு #மாதம் நிறைவடைகின்றது! கடந்த ஆண்டு 2020 கொரோனா நிவாரணப் பணி, 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுகிய கால இடைவெளியில் இம்முறை எவ்வாறு கொரோனா நிவாரணப் பணியை மேற்கொள்வது? எமது பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? உதவும் தமிழ்ச் சொந்தங்கள் மீண்டும் உதவுவார்களா? உதவ அவர்களுக்கு மனமிருந்தாலும் அவர்களின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன், எப்படியென்றாலும் எமது மக்களோடு இறுதிவரை பயணிக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆரம்பித்த நிவாரணப் பணி இன்று #உங்கள் #அனைவரது #பேராதரவோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கின்றது என்பது #ஆச்சரியமான #உண்மை! உங்களின் ஆதரவின்றி நிச்சயமாக இது சாத்தியமாகியிருக்காது! பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் #கொடையாளர்கள், சேவை நோக்கோடு பணியாற்றும் #களப் #பணியாளர்கள், #சக #பணியாளர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள்! எத்தனை சவால்களைச் சந்தித்தாலும் இறுதிவரை மக்களுடன் இருப்போம் என்பதில் உறுதியாகவுள்ளோம்! பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும் இறுதிவரை எம்மவர்கள் வழிகாட்டிச் சென்ற #கஞ்சித் #தொட்டித் #திட்டத்தை நடைமுறைப்படுத்தி என்றாலும் #எம்மக்களோடு #தொடர்ந்து #பயணிப்போம்! “#நாங்கள் #சாப்பிடும்வரை #எமது #மக்களையும் #சாப்பிட #வைப்போம்” என்ற வாசகம் வெறும் உதட்டிலிருந்து பிறந்ததல்ல, அது உள்ளத்திலிருந்து பிறந்தது! ஆதரவளிக்கும் அனைவருக்கும் #கோடி #நன்றிகள்! தடைகளைத் தாண்டி #இறுதிவரை மக்களுடன் இருப்போம்!!!

23 ஜூன் 2021

படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன-பாராளுமன்றில் கஜேந்திரன்!

வடக்கு,கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெளிநாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்கக்கூடாது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளில் சில பகுதி சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ். கீரிமலைப் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் குத்தகைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2021

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

08 ஜூன் 2021

சிவசங்கர் பாபா கைது செய்யப்படவேண்டும்-சீமான் கண்டன அறிக்கை!

பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:"செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. அப்பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர்.‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலைதூக்கவும், மேலெழுந்து உயரவும் உதவும் ஒற்றைப்பேராயுதம் கல்வியே என்பதையுணர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்துமீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல இச்சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாததத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை. பணபலமும், அரசியல் செல்வாக்கும், அதிகாரப்பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.பள்ளி எனும் கல்விக்கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன்மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமுமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது. சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப்பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது.அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும்.பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது. சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது என்பது இதுவரை புரியவில்லை.ஆகவே, இனிமேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.