பக்கங்கள்

07 ஜூலை 2021

தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை மக்களுக்கு இல்லை-சபையில் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன். 17 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக அரசியல் அமைப்பு சபை இயக்கத்தில் இருக்கவே இல்லை. இப்போதும் இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றமை முக்கியமானது, ஆனால் நீதிமன்ற சுயாதீனம் என்ற விடயத்தில் சந்தேகம் உள்ளது. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது. இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறியது. முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக்கொண்டது. எவ்வாறு இருப்பினும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது. அதேபோல் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என சிங்கள அரசியல் வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னைய அரசாங்கமும் இதனை சாதகமாக பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்தது. இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கையே முன்னெடுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டது. இராணுவ அதிகாரிகள்தான் அதனை செய்தனர் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.