பக்கங்கள்

08 செப்டம்பர் 2021

புலமைப்பித்தனின் இல்லத்தை மறு தாயகம் என புலிகள் கூறினார்கள்!

உடல்நலக் குறைவால் காலமான அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது புலமைப்பித்தனின்  மனைவி கதறி அழுதார். அவரது கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார்.அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன். அண்மையில் மருத்துவமனையில் புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திருமுருகன் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.முன்னதாக புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டு நேற்று நேரில் சென்று சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி சேகரித்து வழங்கியவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.