![]() |
| கோத்தபாய |
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
12 ஆகஸ்ட் 2019
அடுத்த ஜனாதிபதி ராஜபக்சக்கள் இல்லை-மங்கள!
09 ஆகஸ்ட் 2019
இரு பண மலைகளுக்கு மத்தியில் ஜொலித்த தீபலட்சுமி!
அதிமுக, திமுக என்ற இரு பெரும் பண மலைகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஒளிர் விட்டு ஜொலித்தபடி ஸ்டெடியாக வாக்குகளை பெற்றார்! ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் நம்மால் உடனே வர முடியவில்லை. இதற்கு நடுவில் நாம் தமிழர் உள்ளே புகுந்து டஃப் கொடுத்து, அதிமுக, திமுகவுக்கு கொஞ்ச நேரம் அள்ளு கிளப்பியதுதான் சூப்பர்! அமமுக, மநீம போன்ற கட்சிகளே போட்டியிடாத நிலையில், இரு ஜாம்பவான்களுக்கு நடுவில் ஜிகுஜிகுவென ஒளிர்விட்டு ஜொலித்தார் தீபலட்சுமி. தீபலட்சுமி வேலூரில், அதிமுக, திமுக இரு கட்சிகளின் மீதும் பணப்புகார் போன முறையும் வந்தது, இந்த முறையும் வந்தது. ஆனால் வெறும் கொள்கைகளை வைத்து வாக்கு கேட்டு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர்! அந்த வகையில் இப்போது இவர் தோற்று விட்டாலும், அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நாம் தமிழர் வளர்ந்துள்ளதைதான் இது நமக்கு காட்டியது. நாம் தமிழர் கட்சி திமுகவும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு பைசா கூட கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை வறள கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி. இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளதை மறுக்க முடியாது. கூடுதல் வாக்கு திமுகவுக்கு நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆரம்பத்திலிருந்தே மெதுவாக முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி தற்போது நகர்ப்புற வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கூடுதல் வாக்குகளையும் பெற்றது. சீமான் அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சீமான் சொல்லுவார், "நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க?" என்பார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை. கடின உழைப்பு இந்த வேலூர் தேர்தலில் நாம் தமிழர் தோற்று இருந்தாலும் சரி, சீமானின் மதிப்பு மேலும் உயர்ந்துதான் தென்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி தொடர்ந்து, பத்து பைசா தராமல், அதே இடத்தைதான் தற்போதும் தக்க வைத்துள்ளது என்பது ஊர்ஜிதமாகி உள்ள. இது அத்தனையும் சீமான் என்ற ஒற்றை மனிதனின் கடின முயற்சியே என்பதை தமிழக மக்கள் மறுக்கவே மாட்டார்கள்.19 ஜூலை 2019
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனந்தி சசிதரன் சந்திப்பு
வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அந்தக் கட்சியை இணைத்துக் கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லை எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் திடீரென நேற்று பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டு அமைப்பது தொடர்பான இந்தச் சந்திப்பானது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் என இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.07 ஜூலை 2019
புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை!
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக க.துளசி குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.நன்றி:பிபிசி தமிழ்
21 ஜூன் 2019
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்ய அழைக்கிறார் அங்கஜன்!
நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பதவிகளை மக்கள் வழங்குவது அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவேயன்றி பிரச்சினை வரும் போது வீர வசனம் பேசி விட்டு அதன் சொகுசுகளை அனுபவிக்கவல்ல. கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக எனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இப்போதே தூக்கியெறிந்து செல்லத் தயார் என்ற போதிலும் தனியொருவருடைய இராஜினமா எந்தவொரு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்ற வரலாற்று பூர்வ யதார்த்தத்தை அறிந்துள்னேன்.
எனவேதான் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டு மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் ஊடாக கல்முனை மக்களின் நீண்ட நாள் கனவான நனவாக்க, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்ந்த முடியும்.
இந்த வரலாற்று திருப்புமுனையை யதார்த்தமாக்க வடக்கு கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் என்றால் அவர்களுடன் இணைந்து தமது இராஜினாமா கடிதத்தினையும் தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க தாம் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார்
எனவே தமிழர்களின் ஒருமித்த பலத்தினை முழுதேசத்திற்கும் எடுத்துக் காட்டி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயகப்போரின் முதல் அத்தியாத்தை எழுதுவதற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்க்க வேண்டும் என அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகு வைக்காமல் மக்களின் போராட்டங்களோடு ஒன்றிணைந்து வெற்றிபெற செய்ய தமிழர் பிரதிநிதிகள் இராஜினாமா கடிதத்தை வழங்க முன்வரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் தலைமைகளின் பிரிவினால் கடந்த காலங்களில் பல மக்கள் போராட்டங்களை வெற்றி பெறச்செய்ய முடியாமல் போன யதார்த்தத்தை உணர்ந்து இதனை சிறந்த தருணமாக எண்ணி மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு பலம் சேர்க்க அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தம்முடைய இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.16 ஜூன் 2019
கஜேந்திரகுமார் இணைந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை-விக்கினேஸ்வரன்!
கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவிக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
'எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது தம்பி கஜனுக்கு ஆறுதல் தான். கட்டாயம் நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார் தர்மராஜா அவர்கள்! காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் தர்மராஜா நன்றாக அறிந்திருந்தவர். வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார்.
கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிநதிருந்தார். காணிகள் பற்றிய சட்ட அறிவைக் கொண்டிருந்த அவர் நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய்விடும் என்பதைப் பலதடவைகள் கூறியும் வந்துள்ளார். நிலைமை கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை தமது அந்திமகாலத்தில் கூறி அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் தர்மராஜா அவர்கள். பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்த காரணத்தால் எனக்கு சார்பாக தம்பி கஜனிடம் சிபார்சு செய்திருப்பார் என்று கூறுகின்றேன்.
கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நண்பர் தர்மராஜா அறிந்திருந்ததால் கஜனிடமும், கஜனின் தாயாரிடமும், அவர் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார். கீரியும் பாம்புமாக இருந்த தமிழ்த் தலைவர்கள் முன்னர் தமிழ் மக்கள் நலம் கருதி ஒன்று சேர்த்ததை அவர் மறந்திருக்கவில்லை. அவரின் மறைவு என்னைப் பலம் இழக்கச் செய்து விட்டது என்று கூறலாம்.
கஜேந்திரகுமார் மீது அவருக்கு அலாதியான பாசமும் மரியாதையும் இருந்தது. ‘இந்தப் பிள்ளை நல்லதொரு சட்டவல்லுநர் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு என்னதான் இல்லை? ஏன் தான் கட்சி அரசியலுக்குள் சென்று சீரழிகின்றாரோ தெரியவில்லை’ என்று கூறுவார். கஜேந்திரகுமார் தனது தந்தை போல் பாட்டனார் போல சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் கஜனின் அரசியல் பிடிவாதம் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பாசத்தையே கூட்டியது. தொடர்ந்து கஜேந்திரகுமார் அரசியலில் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து.” என்று கூறினார். இந்த நிகழ்வில் கஜேந்திரகுமாரும் பங்கேற்றிருந்தார்.15 ஜூன் 2019
கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் நீதியரசர்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
' திரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை.
முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது.
தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.09 ஜூன் 2019
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவ பெருவிழா!
புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ இராஜ மகாமாரியம்மன் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2019)ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் சிறப்புற நடைபெற உள்ளது.15ம் திருவிழாவான (28.06.2019)வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும்,16ம் திருவிழாவான சனிக்கிழமை (29.06.2019) தேர்த் திருவிழாவும் இடம்பெறும்,ஞாயிற்றுக்கிழமை(30.06.2019)தீர்த்தோற்சவமும் திங்கட்கிழமை(01.07.2019)பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று வருடாந்த பெருவிழா இனிதே நிறைவு பெறும்.
26 மே 2019
பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை?இந்துவாக நடித்த இஸ்லாமியர் கைது!
திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்தநபர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா? என்று பக்தர்கள் எழுப்பிய சந்தேகத்தையடுத்து அது தொடர்பில் ஆலய நிர்வாசபையினரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியளாராக கடந்த 02 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பூஜையின் போது பக்தர்களுக்கு வழங்கும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து கொடுத்து வந்துள்ளதாக பக்தர்கள் சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் கடையொன்றில் கையடக்க தொலைபேசிக்கான அட்டைகளை திருடி சேருவில பகுதியில் விற்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது மேற்படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலியான பெயரில் அங்கு பணிபுரிந்ததுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இவரை புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், இவர் ஏறாவூருக்கு தனது தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள பள்ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இதற்கிடையில் இவர் பற்றிய ஒரு தகவல் முகப்புத்தக நூலில் வெளிவந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்துரைத்து தன்மீது பொறாமை உள்ளவர்களே இந்த முகநூலை வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தனியார் நிறுவனமொன்றில் ஆசிரியராக கடமையாற்றி முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் முடித்ததற்காகவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்களையும் பரிபாலன சபையினரையும் நேற்று சனிக்கிழமை அழைத்து விசாரணைகளை செய்துள்ளனர்.
இதேவேளை கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் குருக்களாக பணியாற்றி வரும் குருக்களுக்கு உதவியாளராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வருடங்களாக இந்த ஆலயத்தில் பணியாற்றி வந்துள்ளதோடு மேற்படி குருக்களிடமிருந்தே குறிக்கப்பட்ட பணத்தை சம்பளமாக பெற்று வந்துள்ளார் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். இவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விநியோகித்துள்ளாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மூதூர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிவா, என்று அழைக்கப்படும் குறித்த நபரின் உண்மையான பெயர் புஹாரி முகமது லாபீர் கான் என்றும் இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவரென்றும் ஏலவே மூன்று திருமணங்கள் செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. மூத்த மனைவி ஓட்டமாவடி மீராவோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபாஹனி என்றும் இரண்டாவது மனைவி மட்டக்களப்பு கரடியனாற்றைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தியென்ற தமிழ் பெண் என்றும் மூன்றாவதாக திருமணம் செய்தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.25 மே 2019
கொள்கையோடு போராடிய புலிகளோடு குண்டுதாரிகளை ஒப்பிடவேண்டாம்-ரவூப் ஹக்கீம்!
23 மே 2019
வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி!
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர். சீமானின் வியூகம் ஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள். அரசியல் கட்சிகள் அதிர்ச்சி இம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் 3-வது இடம் குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது. சீமானின் பொதுக்கூட்ட பேச்சு சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள். கனவு மெய்ப்படுகிறது!01 மே 2019
நாட்டில் சுபீட்ஷம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வரவேண்டுமா என்கிறார் தேரர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.
அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.
தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது.
தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா?
புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.30 ஏப்ரல் 2019
யாழில் போராளிகளிடம் உதவி கோரியது படைத்தரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிறகு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போராளிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைபிரிவின் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மிலிந்த, "இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சந்திக்கவேண்டியுள்ளது.
குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வமத பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ்ப்பாணத்திலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். எனவே யாழ்ப்பாண மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது" என்று தெரிவித்தார்.
"வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் தொடர்பில் அவதானமாக இருந்தால் கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம் பெறாமல் தடுக்க முடியும். எனவே வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச் செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் "நாங்களும் மக்களுக்காகத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை" எனவும் தெரிவித்திருந்தனர். இதேவேளை இச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில்,
நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் போராளிகளை இணைத்துகொள்வது, அது தொடர்பில் துப்புகளை வழங்குவதற்கு போராளிகள் நாங்கள் தாயாரில்லை.
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளோடு சம்பந்தப்பட்ட விடயம். எங்களை குற்றவாளிகளாக நினைத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் நாங்கள் தற்பொழுது சமூகமயப்படுதப்பட்டுள்ளோம். நாங்கள் தற்பொழுது சாதாரண வாழ்கையையே வாழ்ந்து வருகின்றோம்.தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டினை பாதுகாத்து கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசாங்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு படையிடமே உள்ளது. இதனை அவர்கள் முன்னாள் போராளிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இலங்கை இராணுவம் நாட்டினை பாதுகாக்கின்ற வேலையை செய்தால் நல்லது. அரசியல் செய்கின்ற வேலையை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.நன்றி:பிபிசி தமிழ்
27 ஏப்ரல் 2019
சாய்ந்தமருதில் 15 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது!
இலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆறு சடலங்கள் தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர். தெமடகொடவில் நடந்தது போல, பாதுகாப்பு பிரிவினர் இவர்களது இடத்தினுள் நுழைய முயன்றபோது, குண்டை வெடிக்க வைத்து தங்கள் குடும்பத்தினரோடு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது.
கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார்.
தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரிக்காத அரசாங்கம், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர்.
சோதனை நடவடிக்கைகளின்போது ஐஎஸ் சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வீட்டை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் போலீஸார் கூறினர். ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி:பிபிசி தமிழ்
21 ஏப்ரல் 2019
கொழும்பு உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடிப்பு பலர் பலி!
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளனர்.
இதுவரை குறைந்தது 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்தார் என்று ஏஎப்பி செய்தி முகமை கூறுகிறது.
காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.இந்த குண்டு வெடிப்பில் தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.நன்றி:பிபிசி தமிழ்
18 ஏப்ரல் 2019
விக்கினேஸ்வரன் பொய்யுரைக்கிறார்-கஜேந்திரன்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி.அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். 40 ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும்.
ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.அப்படியிருக்கின்ற போது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை.
விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.
இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அவர் தன்னுடைய அரசியலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்து விட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும்.
எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம்.எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை.
இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம்.அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.16 ஏப்ரல் 2019
குப்பிளானில் மூவரை பலி எடுத்த மின்னல்!
யாழ்ப்பாணம்- குப்பிளானில இன்று பிற்பகல், மின்னல் தாக்கி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று மதியத்துக்குப் பின்னர், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போதே சுன்னாகம் குப்பிளான்,மயிலங்காடு பகுதியில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
புகையிலைத் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோர் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது, இதனால், அவர்கள் அருகில் இருந்த தென்னை மரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன் போது இடி மின்னல் அந்தத் தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்தமை தெரியவந்துள்ளது.
சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்..jpg)
15 ஏப்ரல் 2019
வேலணையில் தங்கியிருந்த கனடா பிரஜை விபத்தில் மரணம்!
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடாவில் இருந்து வந்த ஒருவர், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். கனடா பிரஜாவுரிமை பெற்றவரான செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் இலங்கை வந்து, வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் குறித்த நபர் காயமடைந்தார்.குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.14 ஏப்ரல் 2019
வவுனியாவில் இன்றும் தொடர்ந்தது உறவுகளின் போராட்டம்!
புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.02 ஏப்ரல் 2019
கலப்பு பொறிமுறை பற்றி பேசினால் விக்னேஸ்வரனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!
சுமந்திரனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றும், கலப்பு விசாரணைப் பொறிமுறையை சி.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், எச்சரித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில், இலங்கை அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது.
அதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம்.
இந்நிலையில் நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளார். மேலும் அதனை அமைக்கலாமா? இல்லையா? என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டுவர முயல்கின்றார். ஸ்ரீலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவாராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

